Election bannerElection banner
Published:Updated:

லாங் டிரைவ் போலாமா? - 4 | குற்றாலம் போனா... மேக்கரையையும் மணலாறையும் மறந்துடாதீங்க!

மணலாறு
மணலாறு

மிளா மான்... கண்ணாடி விரியன் பாம்பு... யானைகளின் சேட்டை... ஆற்றுக் குளியல்... மணலாறு த்ரில்லிங் டூர்!

திருநெல்வேலியில் லாங் டிரைவ் பிரியர் ஒருவர் இருக்கிறார். இந்த லாங் டிரைவ் பகுதிக்குப் பொருத்தமான நபர். நமது மோட்டார் விகடனின் பயங்கரமான வாசகர் இந்த நவாஸ். ‘‘இந்த வார லாங் டிரைவ் கிரேட் எஸ்கேப்புக்கு என்ன கலர் கார்ல போலாம்’’ என்று ரொம்ப மாசத்துக்கு முன்பே கேட்டிருந்தார். ‘ஓவர் பில்டப்பா இருக்கே’ என்றுதான் நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டம் அடித்தது நீல நிற பிஎம்டபிள்யூ X5 எஸ்யூவிக்கு.

மோகன் ரெஸார்ட்
மோகன் ரெஸார்ட்

‘‘கேரளா பார்டர்ல அச்சங்கோயில் போலாமே!’’ என்றார். ‘'பேரு நவாஸ்... போற ஊரு அச்சங்கோயிலா’ என்று சிரித்தேன். ‘‘அச்சங்கோயில் போற வழியில மேக்கரையில் தங்கிட்டு, ஓர் அருமையான ஃபால்ஸ் போய் குளிக்கலாமா... பேரு மணலாறு அருவி. வாரியளா?’’ என்று திருநெல்வேலி பாஷையில் பேசி குதூகலப்படுத்திவிட்டார். கூடவே தனது நண்பர் ராஜசரவணனையும் போன் அடித்து, ‘‘எல, வாலே மச்சி!’’ என்று உடன் ஏற்றிக்கொண்டார். மணலாறு அருவி நோக்கிப் பறந்தது ஒரு கோடி ரூபாய் பிஎம்டபிள்யூ X5.

மேக்கரை
மேக்கரை
மேக்கரை
மேக்கரை

அச்சங்கோவில் என்பது கேரளா பார்டர். மணலாறு அருவியும் கேரளாவில்தான் வரும். குற்றாலம் வழிதான் மேப் சொல்லியது. குற்றாலத்துக்குப் போய் தண்ணி விழவில்லை என்றால் ஏமாற்றத்தோடு திரும்பும் வெளியூர்வாசிகள் இருக்கிறார்கள். ஆனால், லோக்கல் வாண்டர்லஸ்ட்டுகள் பாலருவி, மணலாறு, கும்பவுருட்டி, குண்டாறு, பண்பொலி, கண்ணுப்புளிமெட்டு என்று வெரைட்டியாக எதையாவது கண்டுபிடித்து என்ஜாய் பண்ணுவார்கள்.

திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்துக்குப் போகும் சாலை, பீக் அவர்ஸ் மவுன்ட்ரோடுபோல எப்போதுமே நெருக்கியடிக்கிறது. அதுவும் வீக் எண்ட் என்றால் யாரைக் கேட்டாலும், ‘‘குத்தாலத்துக்குத்தேன்... குலதெய்வத்துக்குப் பொங்க வைக்கப் போறோம்... அஞ்சருவியில தண்ணி ‘பொத பொத’னு வுழுகுதாம்லா; டி.வியில காண்பிச்சானுவ... எண்ணெய்க் குளியல் போட்டாத்தானுங் உடம்பு ஃப்ரீயாகும்ங்’’ என்று பலவித தென்மாவட்ட பாஷைகளில் பேசி சொக்க வைக்கிறார்கள்.

தென்காசி, செங்கோட்டையில் பச்சைப் பசேல் சாலைகள் செம பசுமை காட்டின. புகைப்பட நிபுணர் காரை நிறுத்தி நிறுத்தி டயர்டு ஆக்கினார். செங்கோட்டை என்றாலே பார்டர் கடை புரோட்டாதானே? இன்னோர் அருமையான ஆப்ஷன் இருக்கிறது. செங்கோட்டை போகும் வழியில் ‘நந்தினி கூரைக்கடை’ எனும் கூரை வேய்ந்த ஓட்டலில், ‘மட்டன் சுக்கா, சிக்கன் ஃப்ரை, இறால் வறுவல்’ என்று இலை நிறைய பல உயிரினங்களைப் பக்குவமாகச் சமைத்து, அசைவப் பிரியர்களுக்கு ஜென்ம சாபல்யம் கொடுக்கிறார்கள்.

நந்தினி மெஸ் அசைவப் பிரியர்களுக்கு அதிர்ஷ்டம்
நந்தினி மெஸ் அசைவப் பிரியர்களுக்கு அதிர்ஷ்டம்
நந்தினி மெஸ்
நந்தினி மெஸ்
ரெஸார்ட்டுக்கு கெஸ்ட்டாக வந்த சிங்க வால் குரங்குகள்
ரெஸார்ட்டுக்கு கெஸ்ட்டாக வந்த சிங்க வால் குரங்குகள்

பண்பொலி எனும் இடம். இங்குள்ள திருமலைக்கோவில் எனும் முருகன் கோவில், ஆன்மிக அன்பர்களுக்கு அற்புதமான ஆப்ஷன். மேற்குத் தொடர்ச்சி மலை மீது ஒய்யாரமாய் இருக்கும் முருகன், நாத்திகவாதிகளையும் தன் பக்கம் இழுக்கிறார். மாலை நேரங்களில் ‘பரான் பரான்’ என படா படா ஃபார்ச்சூனர், ஸ்கார்ப்பியோக்களையே படாத பாடுபடுத்தி ஆட வைக்கும் காற்றுதான் இங்கே ஸ்பெஷல்.

பச்சைப் பசேல் வயல்களுக்கு நடுவே பிஎம்டபிள்யூவை விரட்டினால், அடவிநயினார் எனும் அணை வந்தது. ‘‘அணையில் இப்போ தண்ணி இல்லை’’ என்று தகவல் கிடைத்தது. ஆனால், மேலே அருவி இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், இங்கே டூரிஸ்ட்கள் நுழைவதற்கு தடை போட்டுவிட்டார்கள்.

குற்றாலம் வருபவர்களுக்குத் தங்குவதற்குப் பஞ்சமே இல்லை. ஆனால், வீக் எண்டில் முன்பதிவு இல்லாமல் தெரியாத்தனமாக நுழைந்துவிட்டால், அவ்வளவுதான். அவர்களுக்கு சரியான டிப்ஸ் தருகிறேன். குற்றாலம் தாண்டி கொஞ்சம் தள்ளிப்போனால், மேக்கரை என்றொரு இடம் வரும். ‘வயலும் வயல் சார்ந்த இடம்’ என்று அச்சு அசல் மருதம்தான். மேக்கரையில் தங்குவதற்கு செமையான ஆப்ஷன்கள் உண்டு. எந்த ரெஸார்ட்டை நீங்கள் புக் செய்தாலும், அந்த ரெஸார்ட்டுக்குச் சொந்தமாக ஓர் அருவி விழுந்து கொண்டிருக்கும்.

மோகன் அருவி
மோகன் அருவி

நான் மோகன் ரெஸார்ட் என்றொரு ரெஸார்ட்டில் தங்கினேன். அப்படியே பின் பக்கம் மலையேறிப் போனால், மோகன் ரெஸார்ட்டுக்கும் ஓர் அருவி இருந்தது. ரெஸார்ட்டில் தங்குபவர்களை தள்ளுபடி அடிப்படையில் ஜீப்பிலும் அழைத்துப் போகிறார்கள். வெளியாட்கள் என்றால், 2,500 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள். அருவியை விடுங்கள்; அந்த ஆஃப்ரோடு பயணத்துக்காகவே 2,500 ரூபாய் கூகுள்பே அனுப்பலாம். வெள்ளையாக, மெல்லிசாக ஓர் அருவி விழுந்து கொண்டிருந்தது. மோகன் அருவியாம். ஜில்லென, நச்சென ஒற்றைக் கம்பிபோல் விழுந்த தண்ணீரைத் தலைக்கு வாங்கினால், அனுபவம் செம.

குற்றாலத்தில் பண்பொலி தாண்டி குண்டாறு எனும் அணைக்குப் பக்கத்திலும் இப்படி ஓர் ஆப்ஷன் உண்டு. ஜீப் மட்டும்தான் போக முடியும் என்கிற, வழியே இல்லாத வழியில் கூட்டிப் போகிறார்கள். போகும் வழியெல்லாம் அருவிகள் சலசலத்து மனசையும் உடம்பையும் நனைக்கின்றன. இதையும் நோட் செய்து கொள்ளுங்கள்.

ரெஸார்ட்டில் அதிகாலை, காணவே கிடைக்காத காட்டுக் கருங்குரங்குகள், ஆள்காட்டிக் குருவிகள் விருந்தாளிகளாக வந்து அட்டெண்டென்ஸ் போட்டார்கள். கருங்குரங்கு ஒன்று, பிஎம்டபிள்யூவின் சன் ரூஃபில் தாவித் தாவி விளையாடியது ஜாலியாக இருந்தது. இ்ந்நேரம் சன்ரூஃப் திறந்திருந்தால், பிஎம்டபிள்யூவின் இன்டீரியர்... அவ்வ்வ்வ்..!

Vikatan
மேக்கரையில் இது  வழியாக ஜீப் ட்ரெக்கிங் உண்டு
மேக்கரையில் இது வழியாக ஜீப் ட்ரெக்கிங் உண்டு
கும்பவுருட்டி செக் போஸ்ட்
கும்பவுருட்டி செக் போஸ்ட்

மேக்கரை தாண்ட மனசே இல்லாமல் பிஎம்டபிள்யூவைக் கிளப்பினோம். டச் ஸ்க்ரீன் நேவிகேஷனில் அச்சங்கோவிலுக்கு ரூட் மேப் செட் செய்தோம். மலைப்பயணம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. ஊட்டி, மசினகுடி, வால்பாறை போன்ற இடங்களை நினைவுப்படுத்தியது. தமிழ்நாடு, கேரளா என்று இரண்டு செக்போஸ்ட்டுகளிலும் கையெழுத்துப் போட்டோம். ‘‘ப்ளாஸ்டிக்லாம் கொண்டு போகலையே’’ என்று மலையாளத் தமிழில் ஓர் அதிகாரி காரைச் சோதனை போட்டார்.

ஆனால், ஏகப்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பீர் பாட்டில்கள் என்று நம் மக்கள், அமைதியான காட்டுக்குள்ளும் தங்கள் அதிரடியைக் காட்டியிருந்தது வருத்தமாகவே இருந்தது. நம் ஊரில் தெரியாத இடத்தில் போனால் திடீர் திடீரென ஸ்பீடு பிரேக்கர்கள், மேடு பள்ளங்கள் வருமே... அதுபோல், அச்சங்கோயில் போகும் பாதையில் திடீர் திடீரனெ அருவிகள், ஓடைகளின் சலசலப்புகள் அழகாய் இம்சை கூட்டின.

போகும் வழியில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, மான் எல்லாம் உண்டு என்றார்கள். நாம் ஃப்ரெஷ்ஷாக யானைச் சாணங்கள் பார்த்தோம். ‘பாகுபலி’ காட்டெருமை சைஸில் பாதி இருந்த மான் ஒன்று மிரண்டபடி வனத்துக்குள்ளிருந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது, ஆனந்தவிகடன் சொல்வனத்துக்கான விஷுவல். ‘‘எம்மாம் பெருசு... நான் சாம்பார்ங்கிறேன்... இல்ல மச்சி... மிளா மான்னு நினைக்கிறேன்’’ என்று பிஎம்டபிள்யூவுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வனத்துக்குள் புகுந்துவிட்டது அந்த மான்.

மிளா மானா... சாம்பார் மானா...?
மிளா மானா... சாம்பார் மானா...?
எண்ட்ரன்ஸில் கப்பக்கிழங்கு சுக்குக் காபி செம காம்பினேஷன்
எண்ட்ரன்ஸில் கப்பக்கிழங்கு சுக்குக் காபி செம காம்பினேஷன்

மானைப் பார்த்து முடித்ததும்.... அடுத்த விஷுவல். அட, போக்குவரத்து விதிகளை செக் செய்தபடி நீளமாக க்ராஸ் செய்து கொண்டிருந்தது 7 அடி நீள பாம்பு. நம் புகைப்பட நிபுணர் கேமராவை எடுப்பதற்குள், அது படம் எடுத்து பெப்பே காட்டிவிட்டுக் கிளம்பிவிட்டது. கண்ணாடி விரியனா... கட்டு விரியனா.. நல்ல பாம்பா... இதற்கும் பிஎம்டபிள்யூவுக்குள் சண்டை!

கொஞ்ச தூரம் தள்ளி கும்பவுருட்டி எனும் அருவி வந்தது. அருவியில் 2 பேர் அண்மையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இப்போதைக்குத் தடை போட்டிருப்பதாகச் சொன்னார்கள். கும்பவுருட்டிக்குச் சில கி.மீ தள்ளி ‘மணலாறு அருவி’ எனும் போர்டும், ‘கேரள வனத்துறை வரவேற்கிறது’ எனும் அறிவிப்புப் பலகையும் கொஞ்சம் டேமேஜ் ஆனபடி வரவேற்றன. ‘‘யானைங்களோட சேட்டை தம்பி... சுக்காப்பி சாப்பிடுறீயளா?’’ என்றார் டிவிஎஸ் 50 கடை வைத்திருந்த அண்ணாச்சி ஒருவர். கப்பங்கிழங்கும் சுக்குக்காபியும் செம டேஸ்ட்.

உள்ளே நுழைய 25 ரூபாய் கட்டணம். கார் பார்க்கிங்கிலேயே இரண்டு கிளைகளாக விழுந்து, நான்காகப் பிரிந்து, எட்டாகப் பரவி காடு முழுவதும் ஓர் அருவி சலசலத்துக் கொண்டிருந்தது. நீரோடையில் ஆண் குரங்குகள் பாதுகாப்பில் பெண் குரங்குகள் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தன. வெட்கப்படாமல் போஸும் கொடுத்தன.

600 மீட்டர் காட்டுக்குள் ட்ரெக்கிங். 6 மணிக்கு மேல் மணலாறுக்குள் அனுமதி கிடையாது. சும்மாவா பின்னே... காட்டெருமைத் தடங்கள், யானைச் சாணங்கள் என்று பகலிலேயே பீதியைக் கிளப்பியது ட்ரெக்கிங் ஏரியா.

மணலாறு ஸ்நாக்ஸ்
மணலாறு ஸ்நாக்ஸ்
நாலாகப் பிரிந்து எட்டாகப் பரவி... காடு முழுக்க இதுபோல் அருவிகள்...
நாலாகப் பிரிந்து எட்டாகப் பரவி... காடு முழுக்க இதுபோல் அருவிகள்...

மணலாறு அருவி பெரும்பான்மையானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால், ஓடாத படத்தை கூட்டமே இல்லாமல் தனித்துப் பார்ப்பதுபோல் பயமாக இருந்தது. ஆனால், மணலாறு அருவியை ஓடாத படம் என்று சொல்ல முடியாது. பாதையெங்கும் மணலாறு அருவி நீர் நிற்காமல் இசை மீட்டபடியே ஓடிக்கொண்டிருந்தது. போகும் வழியில் மணலாறின் கிளை என்று மினி வாட்டர் ஃபால்ஸ் ஒன்றைக் காட்டினார்கள். மினியே பிரமாதமாக இருந்தது.

300 மீட்டரிலேயே ஓர் அருவி வந்தது. ஆள் அரவமே இல்லை. அதைத் தாண்டி மேலே போகப் போக... எங்கோ தூரத்தில் இரவில் இளையராஜாவின் மெல்லிசையைக் கேட்டால் ஒரு மயக்கம் வருமே... அதுபோன்றதொரு மயக்கம். மணலாறு அருவி வந்துவிட்டதற்கான அடையாளம்.

கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் இருந்து, தனியாய்... தனித்துவமாய் விழுந்து கொண்டிருந்தது மணலாறு அருவி. ‘‘செங்கோட்டையில 3 வருஷமா வேலை பாக்கேன்... இப்படி ஒரு அருவி இருக்கிறதே இன்னிக்குத்தான் தெரியும்னா பார்த்துக்கிடுங்களேன்’’ என்று ஒரு நெல்லைவாசி மணலாறில் மசாஜ் செய்து கொண்டிருந்தார். லக்கேஜ் போன்ற விஷயங்களை குரங்குகளிடம் மட்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டு, அருவியின் அருகாமையில் போய் நின்றால், மயிரெல்லாம் நட்டுக்கொள்ளும் அளவு ஜில்னெஸ். ஜில்லென்று நீரை உடலில் வாங்கினால்... மனசும் சேர்ந்து நனைந்தது.

மணலாறு மினி வாட்டர் ஃபால்ஸ்
மணலாறு மினி வாட்டர் ஃபால்ஸ்
இந்த யானைப் பாதை வழியாகத்தான் ட்ரெக்கிங்
இந்த யானைப் பாதை வழியாகத்தான் ட்ரெக்கிங்

சும்மா வேடிக்கை பார்க்கும் ஐடியாவில் வந்தவர்களைக்கூட விடவில்லை மணலாறு. ‘இந்தப் படத்தை இன்று மாலைக்குள் 10 பேருக்கு ஷேர் செய்யுங்கள். அற்புதமான பலன் கிடைக்கும்’ என்று மணலாறு அருவியில் நனைந்தபடி எடுத்த செல்ஃபியை குறும்பாக ஒரு வாட்ஸ்–அப் ஸ்டேட்டஸ் போட்டுப் பரவ விட்டோம். ‘‘வாவ்... மணலாறா... அது எங்க இருக்கு’ என்று ஏகப்பட்ட மேல் ரிப்ளைகள் வந்து குவிந்திருந்தன.

மணலாறு
மணலாறு
காட்டுக்குள்...
காட்டுக்குள்...

நோட் பண்ணுங்க!

மணலாறு அருவி பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. காட்டுக்குள் இருப்பதாலும், முக்கால் கி.மீ ட்ரெக்கிங் போக வேண்டும் என்பதாலும் இங்கே கூட்டம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், வீக் எண்டில் வாண்டர்லஸ்ட்டுகள் மணலாற்றை வளைத்துவிடுகிறார்கள். மலைப்பாதை என்பதால் யானைகள், மான்கள் போன்ற காட்டு விலங்குகள் க்ராஸிங் அதிகமாக இருக்கும். வாகனங்களில் செல்வோர் லிமிட்டெட் வேகத்தில் செல்வது நல்லது. நாங்கள் போகும்போது பெரிய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சாலையை மெதுவாக க்ராஸ் செய்து கொண்டிருந்தது. மணலாற்றைத் தாண்டிப் போனால் அச்சன்கோயில். அதைத் தாண்டி சபரிமலை. ஒரே நேரத்தில் ஆன்மிகம் + த்ரில்லிங் டூரிங் அடிக்க, இந்த அச்சன்கோயில் மலைப்பாதை அற்புதமான சாய்ஸ். குற்றாலம் வந்தால், மணலாற்றுக்கு வண்டியை விட மறக்காதீர்கள்.

பார்க்க வேண்டியவை: (குற்றாலத்தில் இருந்து)

குற்றாலம் என்றால் அருவி, எண்ணெய்க் குளியல்தானே தெரியும். இங்கே அணைகள் எக்கச்சக்கம் உண்டு. அடவிநயினார், கடப்பாநதி, கடணாநதி, ராமநதி, மணிமுத்தாறு என்று குற்றாலத்துக்கு வந்தால், எல்லா அணைகளுக்கும் ஒரு ரவுண்டு போய் வந்துவிடுங்கள்.
ஐந்தருவி, மெயின் அருவி, சிற்றருவியைத் தாண்டி தனியார் அருவிகள் குற்றாலத்தில் அதிகம். எருமச்சாடி, கரிக்குளம், டைமண்ட், மோகன், கண்ணுப்புளி மெட்டு, மணலாறு, கரடி அருவி, ராஜா, காட்டாற்று அருவி என்று ஏகப்பட்ட தனியார் அருவிகளையும் மறக்காதீர்கள்.

* குண்டாறு (14 கி.மீ)
கீழே அணை. அணைக்கு மேலே உள்ள அருவிகளுக்கு, ஆஃப்ரோடு ஜீப் சவாரி உண்டு.

* கும்பவுருட்டி அருவி (29 கி.மீ)
குற்றாலத்துக்கு வருபவர்கள், கும்பவுருட்டிக்கு வந்து போகலாம். காட்டுக்குள் அமைந்திருக்கும் அற்புதமான அருவி.

* பாலருவி (27 கி.மீ)
பால் போல் விழுவதால், இதற்குப் பாலருவி என்று பெயர்.

* தென்மலை (35 கி.மீ)
கேரளா பார்டரில் அமைந்திருக்கும் தென்மலை, இயற்கை விரும்பிகளுக்குப் பிடித்த ஸ்பாட். அருவி, வியூ பாயின்ட், வனவிலங்குச் சரணாலயம் எஸ்டேட் என்று எல்லாமே உண்டு.

* செண்பகா தேவி அருவி (10 கி.மீ)
இங்கு அனுமதி வாங்கித்தான் போக முடியும். காட்டு விலங்குகள் அதிகம் உலவும் இடம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு