Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `டெல்லி தரிசனம்.... கரீம் ஹோட்டல் பிரியாணியும் தமிழ்ச் சங்கமும்’ | பகுதி - 12

நாடோடிச் சித்திரங்கள்

அந்நேரத்தில் உணவகத்தில் அமர்ந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன அந்த நான்கு பெண்களின் வருகையும், அவர்களது ஒய்யாரமும், சிரிப்பும், பேச்சும். காஜல், புஷ்பா, ரேகா, சலோனி என்று ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.

நாடோடிச் சித்திரங்கள்: `டெல்லி தரிசனம்.... கரீம் ஹோட்டல் பிரியாணியும் தமிழ்ச் சங்கமும்’ | பகுதி - 12

அந்நேரத்தில் உணவகத்தில் அமர்ந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன அந்த நான்கு பெண்களின் வருகையும், அவர்களது ஒய்யாரமும், சிரிப்பும், பேச்சும். காஜல், புஷ்பா, ரேகா, சலோனி என்று ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.

Published:Updated:
நாடோடிச் சித்திரங்கள்
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

"டெல்லிக்கு போறேன்" என்பதை தனி கௌரவமாகக் கருதிய கடைசி தலைமுறையைச் சேர்ந்த நான், வாழ்வின் ஒரு சமயத்தில் தப்பிப் பிழைத்த அகதியைப்போல் டெல்லிக்கு ரயிலேறினேன். மேற்கத்திய த்ரில்லர் திரைப்படங்களில் வருவதுபோல் உடல்மீது படர்ந்து பின்னிக்கொண்டிருந்த மர வேர்களை அறுத்துவிட்டு ஓடிய என்னைத் துரத்திக்கொண்டு வந்த சங்கிலிகளெல்லாம் நான் டெல்லி -தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் ஏறியதும், ரயிலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தண்டவாளத்திலேயே சோர்ந்து மடிந்துபோயின.

என்னைச் சுற்றியிருந்தவர்கள் நான் எடுத்த முடிவுக்கு ஆயிரம் பெயர் சூட்டினார்கள். சிலர் காதல் என்றனர், சிலர் திருமணம் என்றனர், இன்னும் சிலர் துரோகம் என்றனர், வேறு சிலர் தோல்வி என்றனர். ஆனால் எனக்கிருந்த காரணம் ஒன்றுதான். அது விடுதலை. என் ஓவியத்துக்கான தூரிகையும் வண்ணங்களும் அதற்கேற்ற எண்ணங்களும் என்னிடமிருக்கையில், எவரிடமும் என் வாழ்க்கையில் வண்ணம் சேர்க்குமாறு மன்றாடவேண்டிய தேவையிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

புது டெல்லி என்னை அன்புடன் வரவேற்றது!

தன் சொந்த நிலத்தைவிட்டு ஆர்வமாக வெளியேறுகிறவர்கள், அயலூர் சென்றடைந்ததும் முதலில் தேடுவது தன் சொந்த ஊரின் அடையாளங்களைத்தான். அந்த விசித்திரமான உளவியலின் காரணம் இன்றுவரை எனக்குப் புரியவில்லை. கூட்டைவிட்டுப் பறப்பதற்காகவே சிறகுகளை வளர்க்கும் பறவைகள் வானில் வட்டமிடும்போதும் கூடடைதலைப் பற்றியே சிந்தித்திருக்குமாம். அதுபோல் டெல்லியில் வாழ்ந்த நாள்களில்தான் தமிழ்நாட்டின் அடையாளங்களை அதிகம் தேடினேன் எனலாம். அதில் முக்கியமானவை தமிழ் உணவும் தமிழ்க் கலையும்.

டெல்லியின் தமிழ்ச் சங்கங்கள் அப்போது மிகவும் பிரசித்திபெற்றவை.

புகழ்பெற்ற பல கலைஞர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அப்போது எனக்கு அமைந்தது. அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளென்றால் வார இறுதி நாள்களைத் தமிழ்ச் சங்கத்தில் கழிப்பதை என் வழக்கமாக்கிக்கொண்டேன். அப்படி ஒரு சமயம் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் ஒருவர், சிலப்பதிகார மாதவி, தன்னைப் பிரிந்து சென்ற கோவலனை நினைத்து இயற்றிய பாடலை நடன நிகழச்சியாக வழங்கவிருப்பதாக அழைப்பிதழ் ஒன்று வந்தது.

"தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்".
- மாதவிக் கூற்று( சிலம்பு)

'நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்.’ ஓரிரு முறை அவ்வரிகளை முணுமுணுத்தபடி அழைப்பிதழ் மீது விரல்களைப் படரவிட்டேன். புது டெல்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகப் பதிந்ததிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு தமிழ் நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்தது. பெரும்பாலும் கர்னாடக இசைக் கச்சேரிகளும், புத்தக வெளியீட்டு விழாக்களுமே நடைபெறும். நடன நிகழ்ச்சிகள் அரிதாகவே நிகழ்ந்தன.

டெல்லி
டெல்லி

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வரை இம்மாதிரியான கலை நிகழ்ச்சிகளின் வாயிலாகவே இலக்கியத்தோடு என்னால் இணைந்திருக்க முடிந்தது. மெய்நிகர் வாழ்க்கை அப்போது சாத்தியப்படவில்லை. விரல் சொடுக்கில் உலகம் விரியவில்லை. வாய்ப்புகளும் தேடல்களும் கடினமாகவே இருந்தன. அதனாலேயே தேடல்களின் மீதான காதல் தீவிரமாக இருந்தது. ஏதொன்றையும் அடைவதற்கான முயற்சிகளும் சிக்கல்களும் இலக்கின் சுவையைக் கூட்டித் தந்தன என்றே கூற வேண்டும்

சனிக்கிழமை மாலைகளுக்காக ஆர்வமாகக் காத்திருக்கத் தொடங்கினேன். வேற்று மொழி மனிதர்களிலிருந்து விலகி வந்து எனது மொழி பேசும் மனிதர்கள் கூடும் இடமாகத் தமிழ்ச் சங்கம் இருந்தது. அங்கு சென்றால் காதும் மனமும் குளிர தமிழில் கதைத்துவிட்டு வரலாம். அறிமுகமில்லா மனிதர்கள்கூட உற்ற நண்பர்களாகச்ச் சில பொழுது உரையாடிக் களித்து, மீண்டும் தத்தமது வழிகளில் பிரிந்து செல்வது எனது தனிமைக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது

சனிக்கிழமை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான நடனக் கலைஞரின் பெயர் நினைவில்லை. ஆனால் அப்போது அவர் சின்னத் திரையிலும் பிரபலம். நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராக மிகவும் பிரபலமடைந்திருந்தார். நவநாகரிகத் தோற்றமும், அதற்கேற்ற மொழியும் பேசிய அந்தப் பெண்மணி சிலப்பதிகாரத்தின் மாதவியாக மாறி நடனமாடவிருக்கிறார் என்பதில் சிறிது வியப்பும் இருக்கவே செய்தது. அதிலும் முக்கியமாக

`நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்னும் வரிகளை அவர் எவ்வாறெல்லாம் அபிநயத்தில் வெளிப்படுத்துவார்

என்று எனக்குள்ளேயே பல்வேறுவிதமாக கற்பனை செய்து பார்த்துக்கொண்டேன்.

நடனம், இசை பயில்வதெல்லாம் ஒழுக்கத்துக்கு இழுக்கு என்று நம்பியிருந்த நடுத்தரவர்க்கத்தின் பிடியில் படிப்பைத் தவிர மற்ற அனைத்துமே ஆடம்பரமாக கருதப்பட்டன. நடனம் மனதில் ஆழப் பதிந்திருந்த ஓர் ஆசை.

சீக்- கபாப் கதை:

`இன்ஸான் கிஸி ஸே துனியா மே

ஏக் பார் மொஹபத் கர்தா ஹே

இஸ் தர்த் கோ லேகர் ஜீதா ஹே

இஸ் தர்த் கோ லேகர் மர்த்தா ஹே

ப்யார் கியா தோ டர்னா க்யா

ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா.’

- ( முகல்-ஏ-ஆசம்)

ஜும்மா மசூதியின் முதல் நுழைவாயிலின் முன்னே அமைந்திருந்த நெரிசல் மிகுந்த தெருவில்தான் முகலாய பிரியாணியின் அசல் சுவையை ஒருவர் ருசிக்க முடியும். கரீம் ஹோட்டல் அதற்கு பிரசித்திபெற்றது. சுற்றுலாப்பயணிகள் தேடிக் கண்டுப்பிடித்து அங்கு செல்வது வழக்கம். சனிக்கிழமை மதியங்களில் தவறாமல் அங்கு சென்றுவிடுவேன். மதிய உணவை அங்கு முடித்துக்கொண்டு, பேருந்தில் பயணம் செய்து தமிழ்ச் சங்கம் வந்தடைய நேரம் சரியாக இருக்கும். மாதவிக் கூற்று நடனத்தைக் காணவேண்டிய பரவசமும், முகலாய பிரியாணியின் வாசமும் ஒருசேர பரவசமூட்டின.

பாரம்பர்ய முகலாய பிரியாணியும் `சீக் கபாப்’ எனப்படும் ஆட்டுக்கறி கோலா வறுவலும் எனது விருப்ப உணவு.

வெண்ணிறப் பீங்கான் தட்டில் பிரியாணியுடன் சில துணைக் கறிகளும் பரிமாறப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் சேர்க்காது பிரியாணியை மட்டுமே சுவைத்து உண்பது அலாதி சுகம். வாழ்வின் மூலைகளில் கிடைக்கும் இன்பங்களுக்குச் சுவை அதிகம்.

அந்நேரத்தில் உணவகத்தில் அமர்ந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன அந்த நான்கு பெண்களின் வருகையும், அவர்களது ஒய்யாரமும், சிரிப்பும், பேச்சும். காஜல், புஷ்பா, ரேகா, சலோனி என்று ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.

இறுக்கமான நைலான் சுடிதார்களில் அவர்களது உடல்களின் உபயோக அயர்ச்சி நன்றாக விளங்கியது.

அளவுகள் மீறிய சதைத் துருத்தல்களை நினைத்து அங்கலாய்க்காமல் அவற்றையும் காட்சிப்படுத்தத் தயங்கவில்லை அவர்களது வறுமை. பளீரென்று முகத்திலறையும் நிறங்களில் உடைகளும், உலர்ந்து போகாத உதட்டுச்சாயப் பொலிவும், ஓயாத சிரிப்பும் மற்ற மேசைகளில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து எளிதாக அழைப்பதுமாக இருந்தனர்.

டெல்லி
டெல்லி

என் கவனம் பிரியாணியின் சுவையையும் மீறி எதிர் மேசையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்கள் மேல் குவிந்தது. உணவகத்தில் நுழைந்ததிலிருந்தே அவர்களிடம் ஓர் அவசரம் தெரிந்தது. பசியின் அவசரம் அது. நுழையும்போதே நால்வரும் அவரவர் உணவை ஆர்டர் செய்துவிட்டு ரவிக்கை மடிப்பிலிருந்து வியர்வையில் தோய்ந்த நோட்டுகளை எடுத்து மேனஜர் மேசையில் வைத்துவிட்டே உள்ளே வந்தனர்.

உழைத்துச் சம்பாதித்த காசு என்று மேனஜருக்கும் புரிந்திருக்கும்.

அதையும் சாமி படத்தின் முன்னால் காட்டிவிட்டு கல்லாபெட்டியில் வைத்தார்.

காஜல், ரேகா இருவரும் உலகின் கண்களைப் பார்க்க விரும்பாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். ஆனால், புஷ்பாவும் சலோனியும் இயங்கியவிதம் ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அவர்களிடம் தேர்ந்த நடனக்கலைஞர்களின் தோரணை மிளிர்ந்தது. ஆனால் நால்வரின் பார்வையும் சமையலறையிலிருந்து வெளிவரும் உணவுத் தட்டுகளின் மீதே பதிந்திருந்தன.

வேட்டைக்காகக் காத்திருக்கும் ஓநாய்கள்போல் பசியின் வெப்பம் வயிற்றிலிருந்து கண்களில் ஏறி கனன்றுகொண்டிருந்தது.

உலகத்து குரூரங்களின் பசியெல்லாம் சுமந்த உடல்களின் பசி அது. எனக்கு அவர்களைப் பார்க்கவே அசெளகரியமாக இருந்தது. அதிலும் ரேகா என்பவள் என்னை அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். நான் `என்ன...’ என்பதுபோல் புருவம் உயர்த்த, ரேகா சட்டென எனது நண்பரைக் கண்களால் சுட்டி, புருவங்கள் உயர்த்தி உதடு சுழித்து, புன்னகைத்து மீண்டும் என்னை ஏளனமாகப் பார்த்தாள்.

டெல்லி
டெல்லி

எனக்கு பயத்தில் சாப்பிட மறந்துபோனது. நண்பனின் பார்வை அவள்மீது விழுகிறதா என்பதை அவ்வபோது கவனித்துக்கொண்டேன்.

அந்நால்வருக்கும் உணவு வந்து சேர்ந்தது. அதோடு அவர்களின் பேச்சும் நின்றுபோனது. நான்கு மிருகங்கள் அருகருகே அமர்ந்து தத்தமது இரையை குத்திக் கிழித்துத் தின்பதுபோலிருந்தது அக்காட்சி. யாரும் யாரையும் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. பசியும் காமமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

சிறிது நேரம் ஆரவாரம் ஓய்ந்திருந்த ஓட்டலில் இரண்டு போலீஸ்காரர்களின் வருகையால் மீண்டும் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. அதிலொருவன் நேரே அப்பெண்களின் மேசையருகே வந்து நின்றான். வாயில் பான்பராக்கைக் குதப்பியவாறே புஷ்பாவின் முதுகில் கையால் அழுத்தினான். அடுத்த நொடி அவன் முகத்தில் எச்சில் சோற்றுப் பருக்கைகள் தெறித்தன.

``மாதர்ச்சோத் சாலே! தின்னுட்டிருக்கும்போதும் கூப்டுவியா?" என்று புஷ்பா அவன் முகத்தில் குத்தினாள்.

அவன் வேகமாக அவ்விடம்விட்டு வெளியேறினான். வெளியேறும்போது ஒரு நொடி திரும்பி புஷ்பாவையும் மற்ற மூவரையும் பார்த்துக்கொண்டான். ரேகாவும் காஜலும் அச்சத்தில் கலங்கினர். புஷ்பா மும்முரமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

நிலைமையின் பதற்றம் என்னை அவ்விடம்விட்டுக் கிளம்பிவிட அறிவுறுத்தியது. நாங்கள் சாப்பிட்டதற்கான பில் வருவதற்கு தாமதமானதால் அங்கேயே இருக்கவேண்டிய சூழல். மீண்டும் அந்நால்வரையும் கவனிக்கத் தொடங்கினேன். அவர்களும் சாப்பிட்டு முடித்திருந்தனர். சற்று முன்னர் நடந்த எந்த விஷயமும் அவர்களை பாதித்ததாகத் தெரியவில்லை. வயிறார உணவு உண்ட திருப்தியில் பெருஞ்சீரகத்தை மென்றபடி ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர். அப்போது ஒலிப் பெருக்கியில் `முகல்- ஏ- ஆசம்’ படத்திலிருந்துப் பாடல் ஒலித்தது

`ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா

ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா...’

புஷ்பா அமர்ந்துகொண்டே அவ்வரிகளுக்கு கண்களால் அபிநயம் பிடித்தாள்.

சற்று நேரத்துக்கு முன்பு ஓநாய்போல் வெறிகொண்டிருந்த புஷ்பா இல்லை இப்போது. அவள் தேவதைபோலிருந்தாள். முகத்தில் நிறைவுப் புன்னகை. அது அவளது அபிநயங்களிலும் வெளிப்பட்டது. விரல்கள், கண்கள், மந்தகாசப் புன்னகை இவை மூன்றும் கொண்டு அப்பாடல் முழுவதற்கும் நடனம் அமைத்தாள்.

அவள் ஆடி முடித்தபோது உணவகத்தில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

கண்ணிமைக்காமல் அவளையே பார்த்திருந்தேன் நான். அதுவரை நான் கண்ட அற்புத நடனங்களைவிட சிறந்த நடனம் அது. நேரே அவளது மேசைக்கே சென்று அவள் கைகளை இறுகப் பற்றி ``அற்புதம் புஷ்பா, அற்புதம்!’’ என்றேன். புஷ்பா குறுநகையொன்றைப் பரிசளித்தாள். அந்தக் கண்களில் எத்தனை மென்மை. சற்று முன் உக்கிரம் தெறித்தவையா அவை என்னுமளவுக்கு அவ்விழிகளில் தெய்விகம் மிளிர்ந்தது.

அவர்களை அவ்விடம்விட்டு செல்லும்படி யாரும் கூறவில்லை. பழரசம் அருந்தியபடி அவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது உணவக வாசலில் ஒரு சிறுமி வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் புஷ்பா வேகமாக எழுந்து சென்றாள். அவளை அவ்விடம்விட்டு விரட்டுவதுபோலிருந்தது புஷ்பாவின் உடற்மொழி. அச்சிறுமி பிடிவாதம் பிடிக்கவே புஷ்பா அருகிலிருந்த தந்தூரி அடுப்பில் பொசுங்கிக்கொண்டிருந்த கறித்துண்டங்களை எடுத்து பாலிதீன் பையில் அடைத்துக் கொடுத்துவிட்டு அவ்விடம்விட்டுச் செல்லுமாறு கண்டித்தாள். அவளது கைகளில் கெபாப் கம்பி சிவந்து கனன்று கொண்டிருந்தது. அதைக் கண்ட அச்சிறுமி அழுதுகொண்டே நடந்து சென்று விட்டாள்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

எனது மூளையில் ஏதோ இடித்ததுபோலிருந்தது. புஷ்பாவின் அச்செயல் அவள் மகளின் மனதில் நிரந்தரமாகப் பதிந்து அதன் விளைவுகளில் புஷ்பாவே பொசுங்கிவிடும் நிலை ஏற்படும் விபரீதம் புஷ்பா அறியவில்லை என்பது வேதனையாக இருந்தது. சிறுபிராயத்தில் இறுகிப்போகும் மனங்கள் அதன் பிறகு எப்போதும் இளகுவதில்லை.

ஆனால் புஷ்பாவின் உலகில் இவ்வகையான நியாயங்களுக்கு ஏது இடம்... அந்தந்த நொடிக்கான நியாயங்களுக்காக மட்டுமே வாழ்வதற்கு அவள் பணிக்கப்பட்டிருந்தாள். தான் பிழைத்திருப்பதுபோல் தன் மகளும் பிழைத்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை போலும்.

சிறிது நேரத்திலெல்லாம் அவர்கள் மீண்டும் உற்சாகமாகிவிட்டனர். கழிவறைக்குச் சென்று திரும்பிய அந்நால்வரும் புதுப்பொலிவுடன் வேளியேறினர். திருத்திய கேசம், உதட்டுச்சாயம் பளீரிட அஞ்சனம் தீட்டிய விழிகளில் தேடல் நிரப்பிக்கொண்டு வெளியேறினர். நான் அவர்களைப் பின்தொடர்ந்தேன். நால்வரும் ஜும்மா மசூதி வாயிலில் அமர்ந்திருந்த ரோகிகளுக்கும் முதியவர்களுக்கும் சில்லறைகளை வழங்கியபடி ஒரு நொடி நின்று பிரார்த்தித்துவிட்டுக் கிளம்பினர். அப்போது அங்கு அமர்ந்திருந்த ரோகியான முதியவர் புஷ்பாவின் உடையைப் பற்றி இழுத்தார். புஷ்பா அவரது தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள். புஷ்பா அப்போது எனக்கு எட்டாத புரிதலாகத் தெரிந்தாள்.

பேருந்துப் பயணத்தின்போது என் மனம் புஷ்பா, அவளுடைய தோழிகள், அச்சிறுமியைச் சுற்றியே வந்தது.

நால்வரில் எந்தவொரு மாதவியும் `எம்மை மறந்தாரை யாம் மறக்க மாட்டேமால்’ என்று பாடியிருக்கக்கூடும் என்று தோன்றவில்லை.

மணிமேகலைகளை உருவாக்கும் புனிதத்தையும் அடைந்திருக்கப்போவதில்லை என்பதும் தெளிவாகப் புரிந்தது. கண்ணகிகள் குறித்தோ எண்ணம் எதுவுமே எழவில்லை. கண்ணகிகளுக்கும் மாதவிகளுக்கும் தலைவிதிகள் வயிற்றால் எழுதப்படுபவை என்பதுதான் நிதர்சனம்

உணவகத்து நிகழ்வுகளெல்லாம் எதிர்பாராத நிறைவை மனதுக்குத் தந்திருந்தபடியால் தமிழ்ச் சங்க நடனம் குறித்த எதிர்பார்ப்பு பெரிதளவு குறைந்துவிட்டிருந்தது.

அரங்கத்தில் பார்வையாளர்கள் வந்தமர்ந்து வெகு நேரமான பின்னர் நடனக்கலைஞர் ஒய்யாரமாக மேடையில் தோன்றினார். பொன்னாடை மற்றும் பொற் கேடய பரிசளிப்பு நிகழ்வுக்குப் பின் அரங்கில் விளக்குகள் அணைக்கப்பட்டன. அவர்மீது ஃபோகஸ் லைட் படர்ந்தது, அவரின் நடனம் மட்டும் பார்வையாளர்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக. அவர் நின்றார், அசைந்தார் மீண்டும் நின்றார், கை கால்களை உயர்த்தித் தாழ்த்தி ஏதோ செய்தார். பிறகு `எம்மை மறந்தாரை யாம் மறக்க மாட்டேமால்" வரிகளுக்குச் செய்வதறியாமல் திகைத்தார். பின் எங்கோ பார்ப்பதுபோல் சிலையாகி நின்றார். வெகுநேரம் பாடல் முடியும் வரை அப்படியே நின்றார். அதற்கு மேல் அவருக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லையா அல்லது செய்யத் தெரியவில்லையா என்பது பலருக்கும் புரியவில்லை. பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியின் சலசலப்பு உண்டானது.

எனக்கோ மனமெங்கும் புஷ்பாவின் `ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா’ என்னும் வரிகளுக்கான நியாயத்தை அவள் செவ்வனே செய்து முடித்திருந்தது மீண்டும் மனதில் நிழலாடியது.

நிகழ்ச்சியின் முடிவாக அப்பெண்மணியின் நடனத்தை யாரோ ஒருவர் ஒலி பெருக்கியில் பன்மடங்கு விவரித்துப் புகழ்ந்துகொண்டிருந்தார், தமிழ்ச் சங்க நிர்வாகி, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. நான் எனது நண்பரை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு வெளியேறினேன்.

``ஏன் உங்களுக்கு டான்ஸ் புடிக்கலையா? அவங்க கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கலாம்னு இருந்தேன், எவ்ளோ அழகாருக்காங்க" என்றார் அவர்.

"போய் சிகரெட் வாங்கிட்டு வா. நான் இங்கேயே வெய்ட் பண்றேன்" என்று நடனக்கலைஞரைப் பற்றின உரையாடலைத் தவிர்த்துவிட்டேன்.

அன்றைக்கான மனநிறைவை புஷ்பா அளித்துவிட்டதாகவே எனக்குத் தோன்றியது.

அந்நாளின் நிகழ்வுக்குப் பிறகு ஜும்மா மசூதியைச் சுற்றியிருக்கும் உணவகங்களுக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். புஷ்பா போன்ற உன்னதக் கலைஞர்கள் உலவிய இடம் அது என்பதால்.

டெல்லியில் வாழ்ந்த நாள்களில் அத்தகைய நிறைய அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுத்த சாமானியர்களைப் பற்றி இனி வரும் பகுதிகளில்.

- டெல்லி தரிசனம் தொடரும்