Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `கடவுள் ஒரு வழிப்போக்கன்’ | பகுதி - 9

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

சக்ஸேனா வர்ணித்த தேவதை நிலம் அதிகாலையில் கண்முன்னே விரியத் தொடங்கியிருந்தபோது சிரபுஞ்சியை மழை நனைத்திருந்தது.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `கடவுள் ஒரு வழிப்போக்கன்’ | பகுதி - 9

சக்ஸேனா வர்ணித்த தேவதை நிலம் அதிகாலையில் கண்முன்னே விரியத் தொடங்கியிருந்தபோது சிரபுஞ்சியை மழை நனைத்திருந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

`அப்போது அவ்வழியே சென்றுகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன்...’ என்னும் வரியை எண்ணற்ற கதைகளில் நாம் வாசித்திருப்போம். கதைக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. ஆனால், அவர்களால் கதையின் போக்கு மாறும். ஒருவேளை வந்தவர் கடவுள்தானோ என்று கதாபாத்திரங்கள் தங்களுக்குள் மகிழ்வதாக அக்கதைகள் முடியும்.

தன் கால்களை மட்டும் நம்பிப் பயணிக்கும் ஒருவன் பெறும் அனுபவங்கள் அவன் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக மாறும் அளவுக்கு அவனைப் பக்குவப்படுத்துகின்றன. தூரங்களுக்குச் சலித்துக்கொள்ளாத கால்கள், ஞானத்தின் திறவுகோல்கள். மலைகளையும் வனாந்திரங்களையும் கடந்து சென்று இயேசு பிரசிங்கித்தார். அவரது பாதங்களை பரிமள தைலங்களால் சுத்தம் செய்த மகதலேனா மரியாள், ``ரபீ, உங்கள் கால்கள் சோர்வடைவதில்லையா?" என்று கேட்டாள். அதற்கு இயேசு ``ஞானத்தின் அழைப்புக்கு செவிசாய்க்கும் மனிதனின் கால்கள் என்றும் சோர்வடைவதில்லை" என்றார். பயணங்கள் வழிகாட்டிகளை அடையாளம் காட்டுகின்றன. ஒரு வகையில் வழிகாட்டிகளே பயணங்களைத் தீர்மானிக்கின்றனரோ என்றெண்ணுமளவுக்கு எனக்கு வழிகாட்டிய சில மனிதர்கள் உணர்த்திச் சென்றிருக்கின்றனர்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

சிரபுஞ்சியை நோக்கி எங்களது பயணம் தொடர்ந்தது. உமியம் ஏரியின் ஏகாந்தமும், கின்ரெம் அருவியின் பிரமாண்டமும் மனதை ஒருவாறு சமநிலைப்படுத்தியிருந்தன. எண்ணங்கள் அலைமோதாத மனதில் ஆழ்கடல்போல் அர்த்தங்கள் மட்டும் நிரம்பியிருந்தன. எதுவுமே அது நிகழ்ந்து முடிந்து கடந்து போகும் வரை புரிவதில்லை.

டாக்கி (Dawki) நதி நோக்கிப் பயணம் தொடர்ந்தது. இரவு உணவுக்கு சோஹ்ரா (சிரபுஞ்சி) சென்றடைய வேண்டுமென்பது இலக்கு.

இந்திய-வங்கதேச எல்லையில் அமைந்திருக்கும் இந்நதி இரண்டு நாடுகளினூடே பாய்ந்தோடி, வங்கக் கடலை அடைகிறது. இந்தியப் பகுதி நீரை தக்கைகள் கொண்டு குறியிட்டு வைத்திருக்கிறார்கள். அதற்கு மறுபுறம் வங்க தேசம் தொடங்குகிறது.

எல்லைகள் மனிதர்கள் விதித்தவையே... நதிநீர் இருபக்கமும் சலசலத்துக்கொண்டு கலந்தோடியது.

ஆசியாவின் தூய்மையான நதிகளுள் ஒன்றாக டாக்கி (வுமன்கோட் நதி) நதியின் பளிங்கு போன்ற தூய்மை அதன் படுகையில் பரவிக்கிடக்கும் பலவண்ண கற்களையும், நதிநீர்த் தாவரங்களையும், துள்ளியோடும் சிறு மீன்களையும் கண்ணாடிபோல் காட்டியது. பாறைகளின் மேல் அமர்ந்து சிலர் தூண்டிலிட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். நித்திய தவத்தில் வீற்றிருக்கும் முனிவர்கள்போல் கவனத்தைக் குவித்து அவர்கள் அமர்ந்திருந்தனர். நதியின் கூழாங்கற்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி நிறுத்தும் ஜென் பயிற்சியைச் சிலர் புகைப்படம் பிடிப்பதற்காக அடுக்கி முயன்றுகொண்டிருந்தனர். கற்கள் சரிந்து விழுந்தபடி இருந்தன. கற்கள் அசையாது நிற்பதற்கும், நமது மனநிலைக்கும் தொடர்பிருப்பதாக அவ்வழியே படகோட்டிச் சென்ற ஒருவர் கூறினார்.

சில மணி நேரம் டாக்கி நதியின் கரையில் கழித்தோம். தூரத்து அக்கரையில் வங்கதேசப் பகுதியில் ஏராளமான மனிதர்கள் சிறு புள்ளிகள்போல் தெரிந்தனர். நதிக்கரையில் மீன் சந்தை நடப்பதாகத் தெரியவந்தது.

ஆர்வமாக முன்னேறிச் சென்று, இந்திய நாட்டு எல்லையில் நின்றுகொண்டு, வங்க தேச சந்தையை வேடிக்கை பார்த்தோம். பிறகு அங்கிருந்து மாலின்னாங் சென்றோம். உயிருள்ள வேர்கள் பின்னிப் பிணைந்து இயற்கைப் பாலங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.

ஆசியாவின் தூய்மையான கிராமம் என்று அறியப்படும் மாலின்னாங் பகுதியை, பெண்கள் அரசாள்வது போன்ற தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

காரணம் எங்கெங்கு காணினும் பெண்களாக இருந்தனர். விடுதி நடத்துபவர்கள், படகோட்டிகள், தேநீர்க் கடைகள் என அனைத்தையும் பெண்களே நடத்தினர். கூந்தலில் பல செம்பருத்தி மலர்களை சூடிக்கொண்டு, மும்முரமாக வேலை பார்த்த அவர்களைக் கண்டதும் அவர்களின் பரவசம் நம்முள்ளும் பரவுவதுபோலிருந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

வியப்புகள் அணிவகுத்து நின்ற பயணம் சிரபுஞ்சியை நோக்கித் தொடர்ந்தது.

உலகின் அதிக அளவு மழை பொழியும் இடம் சிரபுஞ்சி என்பதும், வருடம் முழுவதும் சுற்றுலாவாசிகள் வருகை புரியும் இடமென்பதும் அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாக மட்டும் நான் அங்கு செல்ல விரும்பவில்லை.

சிரபுஞ்சியை ஒருவர் தன் அனுபவத்தால் எனக்கு படம்பிடித்துக் காட்டினார். அவர் திரு.சக்ஸேனா.

சோஹ்ரா மேட்டுநிலப் பகுதியின் மழை நாள்கள் குறித்து நானும் சக்ஸேனாவும் சில மாதங்களுக்கு முன்பே பேசியிருந்ததாக ஞாபகம். அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக நான் இரண்டு முறை சோஹ்ராவுக்குச் செல்வேன் என்றும், அதற்கு சக்ஸேனாவின் ஐந்து நிமிட வர்ணனை காரணமாக அமையும் என்றும் அப்போது நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்போது அப்படியல்ல. காலத்தின் அளவுகோல்களை மீறி வாழ்கிறேன் என்பதாலோ என்னவோ, வருங்காலத்தைக் குறித்த சமிக்ஞைகளைக் காலம் இன்றே வழங்குவதை கணித்துவிட முடிகிறது. நாளை வருபவற்றை காலம் நேற்றே உணர்த்திவிட்டதைப் போன்றதொரு மனநிலையின் பயனாக இப்போதெல்லாம் அதிக நேரம் நேற்றைய நிகழ்வுகளைத் திரட்டியெடுத்து அவற்றில் சப்தமான நினைவுகளை மட்டும் தனியே சேகரித்து வைத்துக்கொள்கிறேன். கைப்பையில் வைத்திருக்கும் சொல்லகராதிபோல் அவற்றையும் என் விரல் நுனிகளில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறேன். நாளை குறித்த குறியீடுகள் அல்லவா, அதனால் சுட்டிக்காட்டவேண்டிய கவனத்தோடு அவற்றை விரல்களோடு பொருத்திவைத்திருக்கிறேன்.

சக்ஸேனா மிகவும் வேடிக்கையாகப் பேசுவார். ஒரு விகடகவியின் தோரணை தெரியும் அவரிடம். சமயங்களில் நகைச்சுவையாகவே ஆழமான தத்துவங்களையும் பேசக்கூடியவர். சக்ஸேனா ஒரு தேர்ந்த சமையற்கலை வல்லுநர். பகல் நேரம் முழுதும் அதிகாரிகளிடம் முதுகு வளைந்து குறிப்பெடுத்துக்கொள்ளும் வேலைதான் என்றாலும், அலுப்பின் யாதொரு சுவடும் அவர் உணவு சமைக்கும்போது தெரிந்ததில்லை. ஒரு முறை எனக்கு வீட்டிலேயே எஸ்ப்ரெஸ்ஸோ தரத்தில் காபி தயாரிக்கும் ரகசியம் சொல்லிக் கொடுத்தார். அவர் அச்செயலினுள் மூழ்கித் திளைத்து, காபி தயாரித்துக் கொடுத்த அந்தச் சில நிமிட நேரங்களில் சக்ஸேனா எனக்கு நண்பரானார்.

இதில் ரசனையான விஷயம் எதுவென்றால், எனக்கு சமையல் கலையில் ஆர்வம் தோன்ற ஓர் ஆண் காரணம் என்பதுதான்.

இத்தனைக்கும் அவருடைய மனைவி வீட்டில்தான் இருந்தார். `பீம்லா... பீம்லா...’ என்று சக்ஸேனா அழைத்தபடியே இருப்பார். அவரும் தன் அறையில் இருந்தபடியே, `சொல்லுங்க, சொல்லுங்க’ என்றபடியே இருப்பார்.

`அவங்கள ஏன் கூப்ட்டுட்டே இருக்கீங்க சக்ஸேனா?’ என்றேன்,

`அதுவா... அது பழகிருச்சு’ என்று வெள்ளந்தியாகச் சிரித்தார் சக்ஸேனா. அவர் என்னளவில் ஒரு பேரழகன். பணியிலிருந்து ஓய்வு பெற இரண்டு வருடமே இருந்த நிலையில் உடலில் ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் ஏகத்துக்கும் உயர்ந்துவிட்ட நிலையில் அவருக்குக் கட்டாய ஓய்வளிப்பதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகம் மும்முரமாக இருந்தது. இடைப்பட்ட ஒரு மாத இடைவெளியில்தான் சக்ஸேனாவும் பீம்லாவும் என் அண்டை வீட்டில் குடிபுகுந்தனர். பீம்லா தன்னை 'அக்கா' என்று மட்டுமே அழைக்க வேண்டுமென்று என்று தொடக்கத்திலேயே கட்டளையிட்டுவிட்டார். `` `அக்கா' என்பது உங்கள் வயதைக் குறைப்பதாக இருந்தாலும் என் வயதை மிகவும் கூட்டிவிடுமே’’ என்றேன். அதைப் பற்றி அவர் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் சக்ஸேனாவும் அதையே கூறியபோது என்னால் அவரை மீற முடியவில்லை. ``அவ சந்தோஷப்படுவா’’ என்றார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நானும் சக்ஸேனாவும் ரேஷன் கடைக் கூட்டாளிகள் எனலாம். அவர் எனக்காகவும், நான் அவருக்காகவும் செய்திருந்த அன்பின் உடன்படிக்கையில் முக்கியமான அம்சமானது, யார் முந்திச் சென்றாலும் மற்றொருவருக்கு இடம்பிடித்துக் காத்திருக்க வேண்டும் என்பதுதான். பெரும்பாலும் அவர்தான் எனக்காக இடம்பிடித்துக் காத்திருப்பார். வேலை முடிந்து திரும்புகையில் சக்ஸேனாவால் தொடர்ந்து வெகுநேரம் நடக்க முடியாது. உடல் வியர்த்து சோர்ந்து அமர்ந்துவிடுவார். அங்கிருந்து என்னுடைய உடன்படிக்கைக் கொள்கை அமலுக்கு வந்துவிடும். முதல் சுற்றில் அவருடைய பொருள்களையெல்லாம் வீட்டில் சேர்த்துவிட்டு, இரண்டாம் சுற்றில் அவரையும் கைப்பிடித்து அழைத்து வர வேண்டும். வழியில் ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் சிறிது தெம்பு வரும் அவருக்கு. நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்றே கூற வேண்டும். பீம்லா அக்காவும் மகிழ்ச்சியாக இருந்தார். திரைப்படங்களில் வருவது போலல்லாமல் எந்தத் திருப்புமுனைகளுமின்றி நாங்கள் மூவரும் சில மாதங்கள் வரை எங்கள் பாதைகள் மாறும் வரை இன்பமாகவே வாழந்தோம் என்றே கூறலாம்

ஒரு முறை சக்ஸேனா, பீம்லாவுக்கு உணவளித்துக்கொண்டிருந்தார். அந்நேரம் நானும் அவர்கள் அறைக்குள் சென்றேன்.

அப்போது சக்ஸேனா தன் வாயிலிருந்து பாதி மென்ற ரொட்டியை எடுத்து பீம்லாவுக்கு ஊட்டியதைக் கண்டேன்.

அசூயை மிகுந்த தொனியில் `ஐயோ’ என்று முகம் சுளித்தேன். `அவ சந்தோஷப்படுவா அதான் இப்படிச் செய்றேன்' என்றார். `இது அன்பின் முட்டாள்தனங்களில் சேரும் சக்ஸேனா’ என்றேன். அவரும் ஆமோதிப்பதுபோலத் தலையாட்டினார். ஆனால் மீண்டும் அப்படியே செய்தார். தான் பாதி மென்று சுவைத்த ரொட்டியை பீம்லாவுக்கு ஊட்டினார். `இதற்கு பதிலாக, உணவைக் கூழாக்கிக் கொடுத்துவிடலாமே’ என்றேன். `அது எனக்குத் தெரியாமலா நான் இப்படிச் செய்கிறேன்’ என்பதுபோல் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

நாடோடிச் சித்திரங்கள்: `கடவுள் ஒரு வழிப்போக்கன்’ | பகுதி - 9

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சக்ஸேனாவும் பீம்லாவும் இரு சக்கர வாகனத்தில் புறப்படும் நேரத்தில், வண்டியில் அமர்ந்த பீம்லா நிலை தடுமாறி சாலையின் மறுப்பகத்தில் விழுந்துவிட, பின்னால் வந்த மினி வேன் ஒன்றின் இரும்புத்தட்டு பீம்லாவின் முகத்தைக் கிழித்துச் சென்றுவிட, முகத்தில் மட்டுமே சிறிதும் பெரிதுமாக முப்பத்தி நான்கு தையல்களுடன்... பீம்லா அதன் பின் சக்ஸேனாவின் காதலியாகிவிட்டார். மனைவி, காதலியான தருணங்களை சக்ஸேனா விவரிக்கும் ஒவ்வொரு வரியும் உலகக் காவியங்களில் இடம்பெறாத கவிதை வகையில் சேரும்.

சக்ஸேனாவுடனான சில மாத கால நட்பு சில அரிதான உண்மைகளை எனக்கு வழங்கியதென்றே கூற வேண்டும். ``மரணமும் வாழ்வும் இரண்டுமே மனிதனுக்கு அவன் ஒப்புதலில்லாமல் நிகழ்வதில்லை’’ என்றார். சக்ஸேனா உணவு சமைத்துக்கொண்டே இவ்வாறான தத்துவங்களை உதிர்ப்பார்.

``உடலிலிருந்து மூச்சுப் பிரிவதை மட்டும் மரணமென்று கொள்வது அபத்தம். மனிதன் அதற்கு முன்னரே சில முறைகள் மரணித்துவிடுவான்.

அதை அவனால் நன்குணர முடியும். மரணித்த மறு நொடியிலிருந்து அவன் வேறொருவனாக மாறிவிட்டதையும் அவனால் உணர முடியும். அப்படி உணரும்போது அவன் மீண்டும் சில முறை மரணிக்க ஆயத்தமாகிறான். அவன் அதை விரும்பிச் செய்கிறான். அந்த விருப்பமே அவனது பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிவிடுகிறது" என்றார்

``ஓ... சக்ஸேனா, இதெல்லாம் எனக்குப் புரியும்னு நெனைக்குறீங்களா? நான் இன்னும் ஒரு முறைகூட மரணிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அதில் எனக்கு விருப்பமுமில்லை.’’

``அது, அப்படியிருக்க முடியாது. என் பார்வையில் நீ மிகுந்த வலியுடன் மரணிக்கக்கூடியவள்,

அப்படியான நேரங்களில் என் சொற்கள் உனக்கு நினைவு வரும், இந்தக் கிழவனை அப்போது நினைத்துக்கொள் சரியா?" என்றார்.

``அட போங்க சக்ஸேனா, ஏதாவது இளமை ததும்பும் விஷயங்கள் பேசலாமே, உணவின் சுவை கூடும் என்பார்கள்" என்றேன். அன்று அவர் அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. ``பீம்லாவுடன் நேரம் செலவிட வேண்டும் நீ போ" என்று சட்டென எனக்கு விடை கொடுத்துவிட்டார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

மனிதர்கள் நம்மைவிட்டு ஒதுங்குவதும் அல்லது ஒதுக்குவதும் இதற்கெல்லாம் வெறுப்போ, விரோதமோ மட்டும் காரணங்களாயிருந்துவிட முடியாது. அதீத அன்பும் அப்படியானதொரு விளைவையே தரும் என்பதும் சக்ஸேனாவின் பார்வையிலிருந்து அன்று எனக்குப் புரிந்தது.

அதற்குப் பிறகு பல நாள்கள் சக்ஸேனா என்னை உணவருந்த அழைத்தும் நான் செல்லவில்லை. அவர் அன்று என்னுடனான உரையாடலைக் கிள்ளியெறிந்தார். காய்ந்து, பழுத்துப்போன இலைகளைக் கிள்ளியெறிவது போன்ற அசட்டையான செயலாக எனக்கு அது தோன்றியது. நான் அவருடனும் பீம்லாவுடனும் செலவழித்த நேரங்கள் நான் வற்புறுத்தி தேர்வு செய்தவை. அந்த நேரத்தில் நான் வேறெதும் செய்திருக்கலாம். நானும் டேவிட்டும் வைன் குடித்துவிட்டு நடனமாடியிருக்கலாம் அல்லது எனது மாணவர்களுக்கான தேர்வுப் பயிற்சி வினாத்தாள்களை நான் தயாரித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விடுத்து என் நேரத்தை சக்ஸேனாவுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று யோசிக்காமல் அவருடன் பழகியதுதான் அவருக்கு செளகரியமாகிவிட்டதுபோலும் என்று எனக்குத் தோன்றாமலில்லை. அவரைத் தவிர்க்கவேண்டிய காரணம் மிக அற்பமானதுதான் என்றாலும், அற்பத்தனங்களில் குளிர்காயும் பருவத்தில் அப்போது இருந்தேன் என்றே கூற வேண்டும்.

``இரவு உணவுக்கு 'லிட்டி செளக்கா' செய்யப்போறேன், நீங்க வர்றீங்களா இல்லையா?’’ என்று சாலையிலேயே என்னை வழிமறித்துக் கேட்டார் சக்ஸேனா. ``வர்றேன்’’ என்று கூறிவிட்டு அவரைத் தாண்டிச் செல்ல முற்பட்டேன். அவருக்கும் அந்த ஒரு வார்த்தை போதுமானதாக இருந்ததுபோல் என்னுடன் அதற்குமேல் வேறெதும் பேசாமல் தன் வழியில் சென்றுவிட்டார்.

அன்று மாலையே அவர் வீட்டின் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்ததை வராந்தாவில் சிந்திய ஒளிச் சிதறல்களிலிருந்துத் தெரிந்துகொள்ள முடிந்தது.

``நல்லாப் பேசிட்டு, திடீர்னு போகாம இருந்துட்டே... அதான் அவங்க ரெண்டு பேரும் வருத்தமா இருக்காங்கபோல’’ என்றான் டேவிட்.

டேவிட் பேசும்போது நான் அப்படியே கேட்டுக்கொள்வேன். அதைக் குறித்த ஆழமான சிந்தனையெல்லாம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. வானொலியில் கேட்கும் காலைச் செய்தியைக் கேட்டுக்கொள்ளுமளவுக்கு கவனம் செலுத்தினால் போதும். டேவிட் செய்திகளால் தன்னை நிரப்பிக்கொள்பவன். அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் அவன் பேசுவதும் தட்டையான பார்வையோடு மட்டுமே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

'லிட்டி செளக்கா' தயாரிப்பது நினைத்ததைவிட கடினமாகவே இருந்தது. வெகு நாள்கள் சந்தித்திராததால் சக்ஸேனாவின் பேச்சிலும் நடவடிக்கையிலும் சிறு பதற்றம் வெளிப்படவே செய்தது. நானும் சற்று தாமதமாகவே சூழ்நிலைக்குப் பழகினேன். பீம்லாவின் முகத்தழும்புகள் முன்பைவிட சற்றுப் புடைத்து விட்டிருப்பதுபோலிருந்தன. குளிர்காலத்தில் தசையிறுக்கம் ஏற்படும்போது அப்படி ஆகிவிடுமாம். பீம்லாவின் முகம் முதன்முறையாக விகாரமாகத் தெரிந்தது எனக்கு.

சக்ஸேனா வழக்கத்தைவிட நிதானமாக வேலை செய்தார். அவருடைய இயல்பான நகைச்சுவையும் இல்லாமலிருந்தது.

"சக்ஸேனா, இன்னும் ரெண்டு நாளில் கெளம்பணும். அதனால இவ்வளவு வருத்தமா?"

"இல்லை" என்பதுபோல் வேகமாகத் தலையசைத்தார்.

"இதெல்லாம் தெரியும்தானே, நமக்கென்ன இதெல்லாம் புதுசா?"

அவர் சிறிது நேரம் ஏதும் பேசவில்லை. பீம்லாவுக்கு உணவளித்துவிட்டு வருவதாக சைகையில் கூறிவிட்டுச் சென்றார். வழக்கமான அதே முறையில் அவர் பாதி சமைத்த உணவை பீம்லாவுக்கு ஊட்டினார். பீம்லாவும் நானும் சக்ஸேனாவும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களுடைய மகன் மறுநாள் வருவதாகக் கூறியபோது பீம்லாவின் தழும்புகள் இறுக்கத்தையும் மீறி புடைத்துச் சிரித்தன. "ரொம்ப நல்ல பையன், அவங்க அப்பவை மாதிரியே" என்று மிகவும் பிரயத்தனப்பட்டு பீம்லா கூறினார். அதிகம் பேசினால் வலிக்கும் என்பதுபோல் சக்ஸேனா சைகையில் அவரை அமைதிப்படுத்தினார்.

அருவி
அருவி

நேரம் நள்ளிரவைத் தொட்டுவிடும் தூரம். நானும் சக்ஸேனாவும் உணவருந்த அமர்ந்தோம். அவர் உணவு பரிமாறினார். அதுவும் கவிதைபோலிருந்தது. பச்சை மிளகாயை வினிகரில் ஊறவைத்து, அதன் காரத்தின் அளவைக் குறைத்திருந்தார். உவர்ப்பும் புளிப்பும் சிறிது காரமுமாக பச்சை மிளகாய் அத்தனை ருசியாக இருந்தது.

"சோஹ்ரா போயிருக்கீங்களா?" என்றார் திடீரென்று.

"இல்லையே, சோஹ்ரா? கேள்விப்பட்டதேயில்லை."

"சிரபுஞ்சி கேள்விப்பட்டிருக்கீங்களா?"

"ஆமா, உலகின் மிக ஈரமான இடமல்லவா? அதிகமான மழை பொழியுமிடமல்லவா, நல்லாத் தெரியுமே, ஆனா போனதில்ல."

"நிச்சயமா அங்க நீங்க போய்ட்டு வாங்க, அழகான மேட்டு நிலம் அது. மேகங்கள் தரையில் தவழும் காட்சியைக் காணலாம்."

"அப்படியா? வாய்ப்பு அமையணுமே?"

"வாய்ப்பு ஏற்படுத்திட்டுப் போங்க, நான் சொல்றேன்.

திருமணத்திற்கு முன் இரண்டு வருஷம் அங்க வேலை செய்யப் போயிருந்தேன். அப்போ மனிதர்கள் தீண்டாத இடமா அது இருந்தது.

காசி இன மக்கள் மட்டுமே அதிகம் இருந்தனர். இப்போ நெறைய மாறிடுச்சுன்னு சொல்றாங்க. சுற்றாலாத்தலமா ஆக்கிட்டாங்கல்ல..."

"சரி.. பார்ப்போம் சக்ஸேனா, போகும்படி இருந்தா போறேன்.’’

எனது ஆர்வமின்மை அவருக்கு எரிச்சலூட்டியதுபோலும், சிறிது நேரம் மெளனமாக உணவருந்தினார். மீண்டும் சட்டென்று முகம் முழுதும் பிரகாசம் நிரம்பியது. பேசத் தொடங்கினார்.

``அப்ப என் அறைக்கு அருகே ஒரு பள்ளிக்கூடமும் தேவாலயமும் இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் என் அறையின் சன்னலருகே அமர்ந்து வெகு நேரம் வேடிக்கை பார்த்திருப்பேன். கண்ணுக்கெட்டும் தூரம் வரை மேகங்கள் கண்ணாமூச்சி ஆடுவது போலிருக்கும். மேகம் விலகும்போது அங்கு மனித முகங்கள் தெரியும், மீண்டும் மேகங்கள் மறைத்துக்கொள்ளும். மனிதர்களும் மறைந்துவிடுவர். சில மேகச் சிறகுகள் வேண்டுமென்றே என் அறைக்குள்ளும் தவழ்ந்து வரும். கடந்து செல்லும் மேகம்,

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

முகத்தை முழுதும் ஈரமாக்கிவிட்டிருக்கும். மழை பொழிவதை மட்டுமே அதுவரை அறிந்திருந்த எனக்கு மழை படர்வதென்பது பெரும் பரவசமளிப்பதாக இருந்தது. அப்போதுதான் அந்தக் காட்சியைக் கண்டேன். மேட்டுப் பகுதியிலிருந்து இறங்கி வந்த சில கால்களைக் கண்டேன்."

"என்னது கால்களையா?" என்று இடைமறித்தேன். சக்ஸேனா இம்முறை சலனமில்லாமல் தொடர்ந்தார்.

"ஆம்! கால்கள் மட்டும்... உடல்களின் மேற்பகுதி மேகங்களில் ஒளிந்திருக்கக் கால்கள் மட்டும் இறங்கி வந்தன.

ஒன்றன் பின் ஒன்றாக நான்கு ஜோடிக் கால்கள் இறங்கி வந்தன. வெண்மையான தோல் நிறத்தாலான காலுறைகள் அணிந்திருந்த கால்கள் அவை. தேவதைகளின் கால்கள். பிஞ்சுக் கால்கள் என்றுமல்லாமல், முதிர்ந்த தடிமனுமல்லாமல் மிகுந்த நேர்த்தியோடு சிற்பியொருவன் செதுக்கிய யெளவனத் தூண்கள் அவை. அவை படியிறங்கி என்னைக் கடந்து செல்லும் வரை அந்தக் கால்களுக்குச் சொந்தமான முகங்களை மேகங்கள் எனக்குக் காண்பிக்கவேயில்லை. எனக்கும் முகம் பார்க்கவேண்டிய தேவையிருக்கவில்லை. அந்த நான்கு ஜோடிக் கெண்டைக் கால்களின் வனப்பிலேயே என் மோகம் தளும்பியது. அவற்றின் முகங்களைக் காணும் துணிவை நான் பெற்றிருக்கவில்லை என்றே கூற வேண்டும். தேவதைக் கால்கள் அவை. தேவாலய ஆராதனைக்குச் சென்றுகொண்டிருந்தத் தேவதைக் கால்கள் அவை."

"சக்ஸேனா... என்ன ஆச்சு? போதும் போதும்"ம்என்றேன்.

அவர் கனவு கலைந்ததுபோல் சற்றுத் திகைத்துப்போனார்.

"ஆனா நல்லா பேசுனீங்க, சக்ஸேனா, அற்புதம்" என்றேன்.

"ஏதோ சொல்லணும்னு தோணுச்சு, கெளம்பிருவேன், இன்னும் ரெண்டு நாளுதான். நாளைக்கு மகனும் வந்துருவான். அதுதான்..." என்றார்.

"அதனால என்ன?’’

"இந்தாங்க" என்று ஒரு மரப்பெட்டியை என்னிடம் அளித்தார். மூங்கிலால் செய்யப்பட்ட அழகான சிறி்ய பெட்டி அது. அதனுள் வெண்ணிறப் பஞ்சுத்துணியின் மென்மையினூடே மினுங்கின நீலக் கற்கள் பதித்திருந்த ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசுகள்.

சக்ஸேனா வர்ணித்த தேவதை நிலம் அதிகாலையில் கண்முன்னே விரியத் தொடங்கியிருந்தபோது சிரபுஞ்சியை மழை நனைத்திருந்தது.

(பயணம் முடிவதில்லை...)