Published:Updated:

மூங்கில் வீடுகள்... விதவிதமான முகமூடிகள்... மறக்க முடியாத மஜ்ஜுலி! - Back பேக் 17

Back பேக்

ஒரு கதையைப் போல இப்பயணத்திலும் புதுப்புதுக் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டே வந்தன. அனுபம் அவனது தேஸ்பூர் நண்பனான அபினவின் எண்ணைக் கொடுத்தான். அப்புதிய கதாபாத்திரத்தைச் சந்திக்கும் ஆவலோடு நான் அதைப் பதிந்துகொண்டேன்.

மூங்கில் வீடுகள்... விதவிதமான முகமூடிகள்... மறக்க முடியாத மஜ்ஜுலி! - Back பேக் 17

ஒரு கதையைப் போல இப்பயணத்திலும் புதுப்புதுக் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டே வந்தன. அனுபம் அவனது தேஸ்பூர் நண்பனான அபினவின் எண்ணைக் கொடுத்தான். அப்புதிய கதாபாத்திரத்தைச் சந்திக்கும் ஆவலோடு நான் அதைப் பதிந்துகொண்டேன்.

Published:Updated:
Back பேக்

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் நதியால் சூழப்பட்ட தீவு என்றால் அது ஶ்ரீரங்கம்தான். காவிரியும் கொள்ளிடமும் சூழ உருவாகியிருக்கும் ஒரு குறு நிலப்பரப்புதான் ஶ்ரீரங்கம். மஜ்ஜுலி அதைவிட சற்று பெரிய தீவாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். என் எதிர்பார்ப்பைக் காட்டிலும் மிகப்பெரிய நதித்தீவாக இருந்தது மஜ்ஜுலி. இந்த சைக்கிள் பயணத்தின் வழியே மஜ்ஜுலியை முழுமையாகப் புரிந்துகொள்வது சாத்தியமல்ல.

இருந்தும், மஜ்ஜுலிக்கென ஒதுக்கியிருந்த 2 நாள்களில் அத்தீவின் ஒரு பகுதியைச் சுற்றிவர இந்த சைக்கிள் பயணம் ஏதுவாக இருந்தது. அந்த மாவட்டத்திலேயே கராமரும், கமலாபரியும்தான் குறுநகரங்கள். மற்றவை எல்லாமே கிராமங்கள்தான். கராமரில் இருந்து புறப்பட்டபோது அந்நிலப்பரப்பின் சில காட்சிகள் எனக்கு தெற்கு கோவாவுக்குள் சுற்றித்திரிந்த அனுபவத்தைக் கொடுத்தன.

மூங்கில் வீடுகள்... விதவிதமான முகமூடிகள்... மறக்க முடியாத மஜ்ஜுலி! - Back பேக் 17

வழிநெடுக மரங்களும், குறைந்த ஜன ஓட்டமும் கொண்ட அச்சாலை அப்படியான ஓர்மையை உண்டாக்கியிருக்கலாம். டி ஷர்ட்டும், ஷார்ட்ஸும் அணிந்திருந்தேன். இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவை என்னவெனில் மஜ்ஜுலி வரும் வரையில் ஜீன்ஸும், ஜெர்க்கினுமே அணிந்து சலித்திருந்த எனக்கு ஷார்ட்ஸ் போட்டுச் சுற்றுவது ஒருவித ஆறுதலைக் கொடுத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மஜ்ஜுலியில் இருந்து கமலாபரி வந்து அங்கிருந்து இடது புறம் பிரியும் சாலையில் சென்றால்தான் சமகுரி சத்ராவை அடைய முடியும் எனக் கூகுள் மேப் வழி சொன்னது. கராமரிலிருந்து கமலாபரி வருகிற அப்பிரதான சாலையிலேகூட பெரிய அளவுக்கான போக்குவரத்து இல்லை. சன்னமாக வெயில் ஏறியிருந்தது. அச்சாலையின் இரு புறங்களிலும் பயிர் செய்யப்படாத விளைநிலங்கள். மஜ்ஜுலி மாவட்டத்தின் முக்கியத்தொழில் வேளாண்மை.

குறிப்பாக, நெல் உற்பத்தி அங்கு அதிக அளவில் நடைபெறுகிறது. கராமரைத் தாண்டிய பிறகு, கமலாபரிக்கு முன்னரே ஓர் ஆற்றுப்பாலத்தைக் கடந்தேன். ஆற்றில் தண்ணீர் நிறைந்தோடிக்கொண்டிருந்தது. அத்தீவுக்குள் ஊடுருவிச் செல்லும் பிரம்மபுத்திரா நதியின் கிளை அது. அந்த ஆற்றின் கரையில் சிறிய மரப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. பாலத்தின் மேல் நின்றபடி ஆற்றைப் பார்த்துக்கொண்டு நின்றேன். மீண்டும் கிளம்பி கமலாபரி வந்ததும் இடது புறச் சாலையில் பிரிந்து சமகுரி சத்ராவை நோக்கிப் பயணப்பட்டேன்.

மஜ்ஜுலி பாரம்பரிய வீடுகள்
மஜ்ஜுலி பாரம்பரிய வீடுகள்

இந்தச் சாலையில் பல கிராமங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். சாலை ஓரத்திலேயே வீடுகள் இருந்தன. அவையனைத்தும் மூங்கில் மஜ்ஜுலியின் பாரம்பர்ய மூங்கில் வீடுகள்தான். மேடை அமைப்பதைப்போல மூங்கில் கம்பங்களை நட்டு உயர்த்தி அதன் மேல் மூங்கிலாலேயே தளம் அமைத்து சுற்றுச்சுவரும் எழுப்பி விடுகின்றனர். காய்ந்த ஒரு வகையான புற்களைக் கொண்டு மேற்கூரை அமைத்திருக்கின்றனர்.

நான் பார்த்த வீடுகள் பெரும்பாலும் இப்படியாகத்தான் இருந்தன. ஆங்காங்கே சில இடங்களில் சிமென்ட் வீடுகள் தென்பட்டன. அச்சாலையில் நீண்ட தூரம் கடந்த பிறகும், ஓர் உணவகம்கூட தென்படவில்லை. அதிசயமாக ஒன்றிரண்டு தேநீர்க்கடைகள் மட்டும் தட்டுப்பட்டன. பசி உச்சத்துக்குப் போனபோது சமகுரி சத்ராவுக்கு கொஞ்ச தூரம் முன்பிருந்த ஒரு கிராமத்தில் உணவகம் ஒன்று தென்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்கு சாப்பாடு மட்டும்தான் இருந்தது. இங்கு பிரியாணி கிடைக்குமா? என்று உணவக உரிமையாளரிடம் கேட்டேன். ``இங்கெல்லாம் பிரியாணி கிடைக்காது. நல்ல பிரியாணி வேண்டுமென்றால் நீங்கள் கொல்கத்தாவுக்குதான் போக வேண்டும்" என்று சொல்லிவிட்டு சாப்பாடு போட்டார். நல்ல பிரியாணிக்காக கொல்கத்தா வரை செல்ல வேண்டும் என அவர் சொன்னது வியப்பாகத்தான் இருந்தது.

பிரியாணி
பிரியாணி
சித்திரிப்புப் படம்

பிரியாணிகாக்காக 1,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தை நினைக்கையில் சிரிப்பு வந்தது. 2016-ம் ஆண்டு பிரியாணி சாப்பிடும் நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு ஹைதராபாத்துக்குச் சென்றிருக்கிறேன். பாரடைஸ் தொடங்கி ஹைதராபாத்தின் புகழ்பெற்ற பல கடைகளில் பல விதமான பிரியாணிகளை சாப்பிட்டு வந்தேன். அந்நினைவுகள் அப்போது எழவே, பெரும் ஏக்கத்தோடு தால் ஊற்றிச் சோறு தின்றேன்.

சமகுரி சத்ராவுக்குள் நுழைந்து முகமூடிகள் தயாரிக்கும் சங்கீத் கலா கேந்திராவுக்குச் சென்றேன். அக்கூடத்துக்கு வெளியே மூங்கிலைப் பட்டையாக சீவி எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் தயாரிக்கப்பட்ட முகமூடிகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அக்கூடத்தின் முகப்பில் முகமூடிகளைத் தொங்கவிட்டு அலங்கரித்திருந்தனர். கூடத்துக்குள் நுழந்தால் வரிசையாக முகமூடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

முகமூடி
முகமூடி

கடவுளர் முகங்களும், அரக்கர்களின் முகங்களும் இருந்தன. பல்வேறு விதமான பாவனைகள் அவற்றிலிருந்து வெளிப்பட்டன. பெரும்பாலும் உக்கிரமான தோற்றத்தைக் கொண்ட முகமூடிகள் அதிக அளவில் இருந்தன. நரசிம்மரை ஒத்திருந்த ஒரு கடவுளின் உருவத்தின் முன்பு அங்கு வருகிறவர்கள் விழுந்து வணங்கிவிட்டு அதற்கான காணிக்கை யையும் செலுத்துவதைப் பார்த்தேன்.

முகமூடிகள் தயாரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் அதன் விற்பனை சாத்தியங்கள் பற்றிக் கேட்க ஆவல் கொண்டிருந்தேன். சங்கீத் கலா கேந்திராவின் உரிமையாளருக்கு ஆங்கிலம் புரியவில்லை என்பதால், அவரின் உறவினரான இளைஞனை அழைத்து வந்தார். அவனது பெயர் அனுபம். இங்கு தயாரிக்கப்படும் முகமூடிகள் முதலில் மூங்கில்களால் பின்னப்பட்டு அதன் மேல் க்ளே ஊற்றப்பட்டு வடிவம் கொடுக்கப்பட்ட பின்னர் வண்ணம் பூசப்படுகின்றன. பெரும்பாலும் இம்முகமூடிகள் அலங்காரத்துக்காகவே வாங்கப்படுகின்றன.

முகமூடி
முகமூடி

நாடகங்களுக்காகவும் இம்முகமூடிகள் வாங்கப்படுகின்றன என்றாலும், அதன் எண்ணிக்கை குறைவுதான். இங்கு தயாரிக்கப்படும் முகமூடிகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிக அளவில் வாங்கப்படுகின்றன என்கிற தகவல்களை எல்லாம் அனுபம் சொன்னான். நான் அங்குள்ள இரண்டு முகமூடிகளை எடுத்து அணிந்து பார்த்தேன். மிகச் சன்னமாக இருந்த அந்த முகமூடிகளைக் கவனமாகக் கையாள வேண்டியிருந்தது.

முகமூடி
முகமூடி

அனுபம் இளங்கலை படித்து முடித்த மாணவன். தற்போது சங்கீத் கலாகேந்திராவை நிர்வகிப்பதில் தன் மாமாவுக்கு உதவியாக இருக்கிறான். அன்றோடு மஜ்ஜுலி பயணம் முடிவடையும் நிலையில் அடுத்ததாக அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங்குக்குச் செல்ல வேண்டும் என்கிற திட்டம் என்னுள் உறைந்திருந்தது. சிக்கிம் மாநிலத்தின் கேங்க்டாக் நகருக்குச் செல்வதாகத்தான் முன்பு திட்டமிட்டிருந்தேன். தவாங் செல்லும் யோசனை இடையில்தான் வந்தது. கேங்டாக்கா... தவாங்கா... என்கிற இரு தெரிவுகள் என் முன் இருந்தன.

அனுபம் உடனான உரையாடலின் மூலம் கேங்டாக்கைத் தவிர்த்துவிட்டு தவாங் செல்வதென உறுதியாக முடிவெடுத்தேன். மஜ்ஜுலியிலிருந்து ஜோகர்ட் சென்று அங்கிருந்து தேஸ்பூர் செல்லுங்கள். அங்கே என் நண்பன் இருக்கிறான். அவன் நீங்கள் தவாங் செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுப்பான் என அனுபம் சொன்னான். ஒரு கதையைப் போல இப்பயணத்திலும் புதுப்புதுக் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டே வந்தன. அனுபம் அவனது தேஸ்பூர் நண்பனான அபினவின் எண்ணைக் கொடுத்தான். அப்புதிய கதாபாத்திரத்தைச் சந்திக்கும் ஆவலோடு நான் அதைப் பதிந்துகொண்டேன். அன்றைய இரவோடு மஜ்ஜுலியின் அத்தியாயம் நிறைவுற்றது.

- திரிவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism