Published:Updated:

மதுரை: மூலிகைக் காற்று, மிதமான குளிர், மலைப்பழங்கள்... சித்தர்கள் உலவிய சிறுமலைக்கு ஒரு விசிட்!

சிறுமலை

கிழக்குத்தொடர்ச்சி மலையின் குட்டி இளவரசி சிலு சிலு சிறுமலை...!

மதுரை: மூலிகைக் காற்று, மிதமான குளிர், மலைப்பழங்கள்... சித்தர்கள் உலவிய சிறுமலைக்கு ஒரு விசிட்!

கிழக்குத்தொடர்ச்சி மலையின் குட்டி இளவரசி சிலு சிலு சிறுமலை...!

Published:Updated:
சிறுமலை

வெய்யில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்ச்சியை தழுவவும், அழகிய இடங்களை கண்ணுக்கு விருந்தாக்கவும், இயற்கை கெடாத சூழலை அனுபவிக்கவும் தொலை தூர இடங்களுக்கு செல்லவே விரும்புவோம்.

அதே நேரம், நமக்கு அருகில் இருக்கும் இயற்கை கெடாத அற்புதமான இடங்களை ரசிக்க மறந்து விடுவோம்... வெளியூர் மனிதர்கள் அதைத் தேடி வரும்போதுதான் அதன் மதிப்பே நமக்குத் தெரியும்.

அப்படியொரு அருமையான சுற்றுலாத்தலம்தான் சிறுமலை. சிறுமலை என்றதும் உங்களுக்கு மலைவாழைப்பழம் ஞாபகம் வந்திருக்கும். உலகம் முழுவதும் பிரபலமான இந்த மலைப்பழம், ரசாயன உரம் இல்லாமல், அதிக நீருமில்லாமல் சிறுமலையில் விளைகிறது.

அப்படி பெருமை வாய்ந்த சிறுமலைக்குத்தான் இப்போது செல்லப் போகிறோம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறுமலை, குளிர் அதிகமாக இல்லாமல், வெயிலும் அதிகமாக இல்லாமல் மிதமான தட்பவெப்ப நிலையில் இயற்கை அழகுக் கொட்டிக்கிடக்கும் பிரதேசம்.

சிறுமலை
சிறுமலை
மதுரையிலிருந்து குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சென்று ஒரு நாளில் சுற்றி பார்த்துவிட்டு திரும்பி வரக்கூடிய சிறப்பான இடம் சிறுமலை.

மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். அதிக சிரமம் கொடுக்காத வழி இதுதான்.

திண்டுக்கல்லிலிருந்து சிறுமலைக்கு அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த வாகனங்களில் சென்றால் இன்னும் நேரம் மிச்சமாகும்.

திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். கிழக்குத் தொடர்ச்சி மலையின் 'குட்டி இளவரசி' என்று அழைக்கப்படும் சிறுமலை புராணத்திலும் மன்னர்கள் வரலாற்றிலும் இடம் பெற்ற பெருமைக்குரியது.

அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிs சென்றபோது அதிலிருந்து விழுந்த பகுதிதான் சிறுமலையானது என்றும், கோவலனும் கண்ணகியும் இந்த மலை வழியாகத்தான் மதுரைக்குச் சென்றார்கள் என்றும் நம்பப்படுகிறது. அகஸ்தியர் வழிபட்ட சிவலிங்கம் இங்குள்ளது.

பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய தெப்பமும் இங்குள்ளது. மழை பெய்தால் இதில் தேங்கும் நீர்தான் மலையில் நீராதாரத்தை நிரந்தரமாக வைத்துள்ளது.

சிறுமலை
சிறுமலை

சிறுமலையில் காய்கறிகள், மிளகு, ஏலம் போன்ற பணப்பயிர்களும் விளைகின்றன. அதேபோல பலா, எலுமிச்சை என விளைந்தாலும் இங்கு விளையும் வாழைப்பழம் உலகம் முழுக்க பிரபலமானது.

சிறுமலை வாழைப்பழம் பிரிட்டிஷ் அதிகாரிகளால் அதிகம் விரும்பப்பட்டது. இன்றும் பழனி முருகன் கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் சிறுமலை வாழைப்பழம் சேர்க்கப்படுகிறது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறுமலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. மக்கள் வசித்து வரும் சிறுமலைக்கு 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து பயணிக்க வேண்டும்.

போகிற வழியில் பலா, வாழைத் தோட்டங்களைப் பார்த்து செல்லலாம். காய்கறித் தோட்டங்களையும் பார்க்கலாம்.

சிறுமலை வாழைத் தோட்டம்
சிறுமலை வாழைத் தோட்டம்
17-வது கொண்டை ஊசி வளைவுப்பகுதியில் வியூ பாயிண்ட் கோபுரம் உள்ளது. அதில் ஏறிப் பார்த்தால் திண்டுக்கல் நகரம் குட்டியூண்டாக தெரியும். அருகிலுள்ள மலைகளும் அருமையாக காட்சி தரும்.

வியூ பாயிண்ட் அருகில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடக்கும் என்றார்கள்.

சிறுமலை வரும் ஆன்மிக மக்கள் இங்குள்ள வெள்ளிமலை முருகன் கோயிலுக்கும், அகஸ்தியர் மலை மீதிருக்கும் சிவன் கோயிலுக்கும் செல்லலாம்.

சித்தர்கள் வாழ்ந்த மலை என்பதால் இங்கு அதிகமான மூலிகைச் செடிகள் உள்ளன.

சிறுமலை பலா
சிறுமலை பலா

18வது கொண்டை ஊசி வளைவு கடந்ததும் சிறுமலை ஊராட்சி நம்மை வரவேற்கும். இங்கு நிறைய வீடுகள் உள்ளன. எல்லோரும் தோட்ட விவசாயம் செய்கிறார்கள்.

இப்பகுதியில் சிறிய கடைத்தெரு ஒன்று உள்ளது. தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். அதைக்கடந்து சென்றால் இயற்கையை வியந்து ரசிக்கலாம்.

காட்டு மரங்களோடு பலா மரங்கள் எங்கும் காட்சி தருகின்றன. மிளகு, ஏலம் விளைவிக்கும் எஸ்டேட்டுகளும் மலையில் உள்ளன. அவர்களிடம் அனுமதி பெற்று எஸ்டேட்டை சுற்றிப் பார்க்கலாம்.

கொடைக்கானல், ஊட்டி போல சிறுமலை கான்கிரீட் காடாகவில்லi. ஆனாலும், குட்டி குட்டி ரிசார்டுகள் உள்ளன. சிறு வீடுகளில் பேயிங் கெஸ்டாகவும் தங்கலாம்.

பெரிய அளவுக்கு சைட் சீன்கள் இல்லாவிட்டாலும், மரங்களும், தோட்டங்களும், தெப்பமும், சில்லென்ற இயற்கையும், அதனுடன் கலந்து வீசும் மூலிகை வாசத்தையும் நாள் முழுவதும் அனுபவிக்கலாம்.

அகஸ்தியர் புரம் உச்சியில் வெள்ளிமலைக் கோயில் உள்ளது. இங்குதான் அகஸ்தியர் வணங்கிய சிவ லிங்கம் உள்ளது. மலைப்பாதையில் அரை மணி நேரம் நடந்து செல்ல வேண்டும்.

இங்கு காணும் இடமெல்லாம் மூலிகைச் செடி கொடிகள் வளர்ந்துள்ளன. இங்கு மூலிகை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மலையில் நடந்தும், மரங்களைப் பார்த்து வியந்தும், சுத்தமான காற்றை சுவாசித்தும் ஒரு நாளை கழித்துவிட்டு, வரும்போது அங்கு விளைந்த ரசாயணம் கலக்காதப் பழங்களையும், தோட்டத்தில் விளைவித்த பயிர்களையும் வாங்கி வரலாம்.

சிறுமலை
சிறுமலை

எப்படிச் செல்வது?

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல். அங்கிருந்து சிறுமலைக்கு பேருந்துகள் உண்டு.

பயண தூரம் 90 கிலோ மீட்டர்.

2.30 மணிநேரப் பயணம். (சொந்த வாகனம் வைத்துள்ளவர்களுக்குப் பயண நேரம் குறையும்.)

தங்கும் விடுதிகள், வீடுகள் உள்ளன. சிறு உணவகங்கள் உள்ளன.

ஒரு நபர் பொது போக்குவரத்தில் சென்று வர உணவுடன் சேர்த்து ரூ.500 செலவாகும்.