Published:Updated:

பச்சைமலை: அடர் மரங்கள், இதமான காற்று, அழகிய அருவிகள் - பசுமைபோர்த்திய திருச்சி ஹேங்அவுட் ஸ்பாட்!

பச்சைமலை மங்களம் அருவி

அவசர அவசரமாக கேமராவை எடுத்ததும், அந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் நாமே பறப்பதுபோல் மனதில் ஒரு பரவசம் ஏற்பட்டது. அதனை ரசித்துக்கொண்டே நம்முடைய பயணத்தைத் தொடங்கினோம்.

பச்சைமலை: அடர் மரங்கள், இதமான காற்று, அழகிய அருவிகள் - பசுமைபோர்த்திய திருச்சி ஹேங்அவுட் ஸ்பாட்!

அவசர அவசரமாக கேமராவை எடுத்ததும், அந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் நாமே பறப்பதுபோல் மனதில் ஒரு பரவசம் ஏற்பட்டது. அதனை ரசித்துக்கொண்டே நம்முடைய பயணத்தைத் தொடங்கினோம்.

Published:Updated:
பச்சைமலை மங்களம் அருவி
திருச்சி மாவட்டத்தில் உள்ளது பச்சைமலை. பெயருக்கு ஏற்றாற்போல, கண்கள் காணும் இடமெல்லாமல் பசுமை போர்த்தியதுபோல் பச்சைப்பசேலென்ற மரங்கள், சில்லென்ற காற்று, மூலிகை வாசனை என மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கிறது.

"சின்ன பட்ஜெட்ல மனசு நிறைவா ஒரு டூர் போகணும்னு முடிவு பண்ணுனீங்கன்னா கண்டிப்பா பச்சமலையை மறக்காதீங்க” என்கிறார்கள் பச்சைமலையைச் சுற்றிப்பார்த்த சுற்றுலாப் பயணிகள்.

திருச்சி
திருச்சி

'பச்ச மலைப் பூவு, நீ உச்சி மலைத்தேனு... குத்தங்குறை ஏது... நீ நந்தவனத் தேரு...' இந்த சினிமாப் பாட்டைக் கேட்டுட்டாலே, நம் மனதை அந்த இசையும் வரிகளும் மயக்குகின்றன அல்லவா? அதுபோல்தான் இந்தப் பச்சைமலையும் நம்மை மயக்குகிறது. பட்டாம்பூச்சிக் கூட்டம், மலைவாழ் மக்கள், தேன், பலாப்பழம், பெரிய ஆலமரங்கள், அதில் விளையாடும் சிறுவர்கள் எனப் போகிற வழி முழுக்கவும் கட்டடங்கள் ஏதுவுமில்லாமல் ஆத்மார்த்தமான, இயற்கையோடு இணைந்த தூய்மையான மூலிகை வாசம் காற்றுடன் கலந்து வருகிற்து. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம்தான் இந்தப் பச்சைமலை. அப்படிப்பட்ட பச்சைமலையை நோக்கிப் பயணிக்கலாம் வாருங்கள்!

பச்சைமலை சுமார் 19,076 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் இருக்கிறது இம்மலை. இது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்புக்குக் கொஞ்சமும் குறைவில்லை என்கிறார்கள் சுற்றுலாப்பயணிகள். திருச்சி, பெரம்பலூர், சேலம் என மூன்று மாவட்டங்களை இணைக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் ’மகாராணி’யாக விளங்குகிறது இந்தப் பச்சைமலை.

பச்சைமலை
பச்சைமலை

திருச்சியிலிருந்து துறையூர் சென்று, அங்கிருந்து ஆத்தூர் சாலையில் சென்று உப்பிலியபுரம், அங்கிருந்து சோபனபுரம் வழியாகப் பச்சைமலையின் மேல் பயணிக்கலாம். இல்லையென்றால், பெரம்பலூர் சாலையில் சென்றால் செங்காட்டுப்பட்டி என்ற ஊரின் வழியாக மூலக்காடு என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து பச்சைமலை செல்லலாம். இரண்டு பக்கம் சென்றாலும் அருவிகள், பச்சைக்காடுகள், வயல்வெளிகள் எனக் கண்ணுக்கு விருந்தளிக்கும் விஷயங்கள் ஏராளம்.

நாம் உப்பிலியபுரம் வழியாகப் பச்சைமலைக்கு டூவிலரில் நம்முடைய போட்டோகிராபரோடு கிளம்பினோம். பச்சைமலை அடிவாரம் செல்லும்போதே நல்ல ஜில்லென குளிர்ச்சியான காற்று நம்மை வசீகரிக்க ஆரம்பித்தது. சோபனபுரத்திலிருந்து மலை ஏறும் இடத்தில் மலையோடையைக் கடக்கும் விதமாக ஒரு சிறிய பாலம் உள்ளது.

பச்சைமலை
பச்சைமலை

அதில், கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளைப் பார்த்ததும் நம்முடைய போட்டோகிரபர், ”அண்ணே… கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுங்க” எனச் சொல்லி, அவசர அவசரமாக கேமராவை எடுத்ததும், அந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் நாமே பறப்பதுபோல் மனதில் ஒரு பரவசம் ஏற்பட்டது. அதனை ரசித்துக்கொண்டே நம்முடைய பயணத்தைத் தொடங்கினோம்.

ரொம்பக் கரடு முரடாக இல்லாமல், வாகன இரைச்சல் ஏதும் இல்லாமல் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சிறப்புகள் நிறைந்த ஒரு மலைப்பகுதிக்குச் செல்கிறோம் என்பதே நமக்கு ஆகப்பெரும் நிம்மதியைக் கொடுத்தது. அடிவாரத்திலிருந்து மெல்ல மெல்ல மேலே செல்ல ஆரம்பிக்க, மேகங்களெல்லாம் கீழே இறங்கி நமக்கு மேலும் பரவசத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.

மாலைப் பொழுது - பச்சைமலை
மாலைப் பொழுது - பச்சைமலை

காலை பத்துமணியே, மாலை ஐந்து மணி ஆனதுபோல, ஓர் உணர்வைக் கொடுக்க, டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள மங்களம் அருவியை 11 மணி அளவில் அடைந்தோம். ஆனால், அங்கு பெரிதாகக் கடைகளோ, தங்குவதற்கு இடமோ இல்லை. அரசு சார்பில் குறிப்பிட்ட அளவில் தங்கும் விடுதிகள் உள்ளன. அங்கு வீட்டோடு இருக்கும் சிறிய கடையில் சமைத்துக் கொடுக்கச் சொன்னால், அதற்கு உண்டான தொகையை வாங்கிக் கொண்டு நாம் கேட்பவற்றைச் சமைத்துத் தருகிறார்கள்.

அருவிக்குச் செல்லும் முன் சமைக்கச் சொல்லிவிட்டு அருவிக்குச் சென்றால் திரும்பி வரும்முன் சூடான, சுவையான அறுசுவை உணவு தயாராக இருக்கும் எனக் கடையில் இருக்கும் பெரியவர் கூறுவதை நம்காதுகளில் கேட்க முடிந்தது. நாம் மீண்டும் அருவியை நோக்கிப் பயணித்தோம். ஓங்கி விழும் நீரின் சத்தத்தைக் கேட்டே, அருவியைக் கண்டுபிடித்து, அங்கு நம்முடைய டூவிலரை நிறுத்திவிட்டு அருவியை நோக்கி நடந்தோம்.

பச்சைமலை
பச்சைமலை

சிறிய நீரோடை அருவியாக அழகாக விழுந்து ஓடும் அழகைக் காண ரூபாய் 20-ஐ கட்டணமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். அதனைக் கொடுத்துவிட்டு உள்ளே நடந்தோம். சில பல படிக்கட்டுகளுக்குப் பின் அருவி நம் கண்ணுக்குத் தெரிந்தது. சிறியதாக, அழகாக, கவிஞர்களுக்குப் பிடிக்கும் ஓர் இடமாக இருந்தது மங்களம் அருவி.

ஜில்லென வந்த அருவித் தண்ணீரில் குளித்தது உடம்பு சூட்டைத் தணிந்தது.

மங்களம் அருவி
மங்களம் அருவி

இரண்டு மணிநேரம் மகிழ்ந்து கழித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தோம். வரும் வழியில மயில்கள், குயில்கள் அரிய வகைக் குருவிகள், பறவைகளையும், மான், காட்டுப்பூனை போன்ற விலங்குகளையும் மூலிகைச் செடிகளையும் நாம் பார்த்துவிட்டு இறங்கினோம்.

வாழ்க்கையில நாம் அனைவரும் ஏதோ ஒரு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவ்வாறான சூழ்நிலையில் மன நிம்மதி பெறுவதற்கு பச்சைமலை சென்று வரலாம், மனது மட்டுமல்ல சுத்தமான மூலிகைக் காற்று, நீர் என உடம்பும் ரிலாக்ஸாக இருக்கும்.

சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் மக்கள்
சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் மக்கள்

இங்கு தொலைபேசி நெட்வொர்க், தங்கும் விடுதிகள், உணவுக்கு ஹோட்டல்கள் இல்லாத காரணத்தால் இரவு தங்குவது ஏற்புடையதாக இருக்காது. அரசின் பயணியர் விடுதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதற்கு அனுமதி பெற வேண்டும்.

அரசு விடுதி
அரசு விடுதி

பச்சைமலையில் ’மங்களம் அருவி’ மட்டுமல்ல ’எருமைப்பள்ளி அருவி’, ’மயிலூற்றுஅருவி’, ’கோரையாறு அருவி’ எனப் பல அருவிகள் இருக்கின்றன. இதில் எருமைப்பள்ளி, கோரையாறு அருவிகளுக்கு வனத்துறையினரின் அனுமதி, பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்ய அனுமதியில்லை. இதனாலயே பச்சைமலையை ’அருவிகளின் மலை’ என்று கூடச் சொல்கிறார்கள். இவற்றைத் தவிர்த்து பேலூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இருக்கிறது. இதில் நாம் ட்ரெக்கிங்கும் போகலாம். ஆனால், இதற்கும் முன்னதாகவே வனத்துறையினரிடம் அனுமதி பெறவேண்டும்.

ஊட்டி, கொடைக்கானல் போல் இருக்கும் என்று நம்பி வராதீர்கள். மிதமான குளிர்தான். ஆனால், ரசிக்கும்படியாக இருக்கிறது. சாப்பாடு மற்றும் தங்கும் வசதிகள் சற்று குறைவு. சாலைகள் மிகமோசம். பச்சைமலையைச் சுற்றுலாத்தளமாக மாற்றவும் அதற்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரியும் பலரும் கோரிக்கை வைத்துள்ள நிலையில் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் - பச்சைமலை
சுற்றுலாப் பயணிகள் - பச்சைமலை

எப்படிச் செல்வது?

திருச்சியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துறையூர் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் நாம் பச்சைமலையை அடையலாம். பேருந்துகள் குறைவு என்பதால், சொந்த வாகனத்தில் செல்வது வசதியானது. பாதுகாப்பானதும்கூட!

பச்சைமலையின் மாலைப் பொழுது
பச்சைமலையின் மாலைப் பொழுது

முடிந்தால் ஒரு முறை பச்சைமலைக்குக் குடும்பத்துடனோ நண்பர்களுடனோ ஒரு விசிட் அடியுங்கள்!