Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: ``ஈவா காதலை உணர்த்தினாள்... பார்வதி (நதி) இயற்கையை உணர்த்தினாள்” | பகுதி 41

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

வெந்நீர் ஊற்றுகளில் நீர் கொதித்துக்கொண்டிருந்தது. பூமியின் பலவீனமான தட்டுகளினுள் பிரவேசிக்கும் நீரானது பூமியின் வெப்பத்தால் சூடாகி கொப்பளித்துக்கொண்டு மேலெழும்பி ஊற்றாக வெளிவருகிறது.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: ``ஈவா காதலை உணர்த்தினாள்... பார்வதி (நதி) இயற்கையை உணர்த்தினாள்” | பகுதி 41

வெந்நீர் ஊற்றுகளில் நீர் கொதித்துக்கொண்டிருந்தது. பூமியின் பலவீனமான தட்டுகளினுள் பிரவேசிக்கும் நீரானது பூமியின் வெப்பத்தால் சூடாகி கொப்பளித்துக்கொண்டு மேலெழும்பி ஊற்றாக வெளிவருகிறது.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

அனுபவங்களின் விசைக்கு ஆட்படும் மனம் ஒருபோதும் அது முன்பிருந்த நிலைக்குத் திரும்புவதில்லை. அனுபவத் தெளிவால் புதுப் பரிமாண எல்லையை எட்டும் ஒவ்வொரு முறையும் மனமானது தன்னைக் குறித்த சுயபரிசோதனையை நிகழ்த்திப் பார்க்கிறது. அதன் விளைவாக நிகழும் மாற்றம் அந்த மனிதனை முற்றிலும் புதியதோர் கோணத்தில் வாழ்வை அணுகச் செய்கிறது. அதேநேரத்தில், அனுபவமென ஒரு நிகழ்வைப் புரிந்துகொள்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமாகி விடுவதில்லை. 'காதுள்ளவன் கேட்கக் கடவன்' என்கிறது திருவிவிலியம். ஒரு நிகழ்வை, ஒரு சந்திப்பை, ஓர் இயற்கைக் காட்சியை, ஒரு சவாலான நேரத்தை அனுபவமாகக் கருதி அதன் மூலம் ஞானம் பெறுவதென்பது அனைவருக்கும் சாத்தியமாகிவிடுவதில்லை. "உண்மை இங்குதான் இருக்கிறது வெகுகாலமாக, நீங்கள்தான் அதை உணராதிருக்கிறீர்கள்" என்கிறது ஜென் மொழி.

சில நாள்களை வாழ்வில் என்றும் மறக்கவியலாது. தேதி குறிப்பிட்டு நிகழும் சுபதினங்கள் அல்ல அவை. பேருண்மை ஒன்று புலப்படும் நாள் அது. அது நிகழும் வரை அது மற்ற நாள்கள்போலவே இருந்திருக்கும். முரசொலி முழங்க அரங்கேறுபவையல்ல அதிசயங்கள்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

அன்று மதியம் இஸ்ரேலி உணவகத்தில் உணவருந்தத் திட்டமிட்டிருந்தோம். கசோல் மார்க்கெட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருந்த அவ்வுணவகத்தின் வாசலில் மனிதர்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். முன்பதிவு செய்யாமல் வந்திருந்தவர்களுக்கான வரிசை அது. நாங்கள் அன்று காலையே முன்பதிவு செய்திருந்ததால் எங்களுடைய இருக்கைகள் காலியாகவே இருந்தன.

இஸ்ரேலிய உணவு மட்டுமே கிடைக்குமிடமாக இருந்தபோதிலும் இந்தியர்களே பெரும்பாலும் உணவருந்திக்கொண்டிருந்தனர்.

குறிப்பாக பஞ்சாபிகள், அதாவது தலைப்பாகை அணிந்தவர்கள் அதிகம் தென்பட்டனர். அது தவிர சில அயல்நாட்டவரும் இருந்தனர்.

இஸ்ரேலிய உணவு வகைகள் குறித்த அறிமுகம் இல்லாததால் எங்கள் மேசையருகே வந்த உணவக ஊழியரிடம் இஸ்ரேலிய உணவு வகைகளில் சிலவற்றைக் குறித்து விளக்குமாறு கூறினோம். அவரும் தனக்குத் தெரிந்த சொற்ப ஆங்கில சொற்கள் கொண்டு எங்களுக்கு விளக்கினார். நான் அப்போது அவரைக் கூர்ந்து கவனித்தேன். அவரின் உடலமைப்பில் பல்வேறு விஷயங்கள் எனக்கு ஆச்சரியமளித்தன. நார்னியா தொடர்கதைகளில் (Chronicles Of Narnia) வரும் குதிரை மனிதனை நினைவுப்படுத்தியது அவரின் உடலமைப்பு. பெரிய முகம், நீண்ட காதுகள் மற்றும் உடற்பகுதி சிறிதாக இருந்து. குதிரையின் பின்புறத்தை அவருக்கு பொருத்தினால் அப்படியே பொருந்திவிடும் உடலமைப்பு அது. எங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை என்பதை அவரின் முகபாவங்கள் சுட்டின. அதனால் நாங்கள் மேற்கொண்டு அவரை வற்புறுத்தாமல் Basic Israeli உணவு தருமாறு கூறினோம்.

நாடோடிச் சித்திரங்கள்: ``ஈவா காதலை உணர்த்தினாள்... பார்வதி (நதி) இயற்கையை உணர்த்தினாள்”  | பகுதி 41

அவர் சென்ற சிறிது நேரத்திலேயே வேறொரு மனிதர் என் எதிர் இருக்கையில் வந்தமர்ந்தார். ஆறடிக்கும் அதிக உயரமும், பெரிய நெற்றி மற்றும் கூர் நாசி உடையவராக அவர் இருந்தார். கொரோனா முதல் அலை ஓயந்திருந்த நாள்கள் அவை. அவரும் கொரோனா பெருந்தொற்று குறித்தே பேசினார். "நீங்கள் இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு வந்த நேரம் கொரோனா பரவியதால் இங்கேயே தங்கிவிட்டீர்களா?’’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே மறுத்தார். "இல்லை, எனது காதலி இங்கே இருக்கிறாள். அவளுடன் வசிக்கிறேன்” என்றார்.

``இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இங்கு வந்து அவளுடன் ஒரு வருடம் வசிப்பேன்" என்றார்.

"உங்கள் சொந்த ஊர் எது?" என்றேன். "நான் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவன். தூய ஆரிய இனம்" என்றார். அவர் அப்படிக் கூறியது என்னுள் பல கேள்விகளைத் தூண்டியது. இருப்பினும் அமைதி காத்தேன். அவரே தொடர்ந்தார். "என் மனைவி, மகன், மகள் ஜெர்மனியில் வசிக்கிறார்கள். அமைதியான குடும்ப வாழ்க்கை. பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்புக்கான ஆராய்ச்சி ஒன்றுக்காக இங்கு வந்திருந்தபோது நான் ஈவாவைச் சந்தித்தேன்.

இது ஈவா நடத்தும் உணவகம்தான். அவள் மாபெரும் ரசனைக்காரி.

அவள் தோட்டத்தைப் பராமரிப்பதை நீங்கள் பார்க்க வேண்டும். நான் இங்கு வசித்த நாள்களில் இங்குதான் வந்து உணவருந்துவேன். அப்போது மிகவும் எளிமையான உணவு விடுதியாக மட்டுமே இவ்விடம் இருந்தது. ஈவாவின் உழைப்பால் இன்று கசோல் பகுதியின் மிக முக்கியமான இடமாக மாறியிருக்கிறது" என்றார்.

அவர் பேசும்போது ஒரு கேள்வி மட்டும் மனதில் மீண்டும் மீண்டும் உதித்தது. உரையாடலின் ஒரு புள்ளியில் அதை அவரிடம் கேட்டுவிட்டேன்.

"நீங்கள் ஜெர்மானியர், உங்கள் காதலி யூதர், காதல் எப்படிச் சாத்தியமாயிற்று?" என்றேன்.

அவரது பார்வை என் பார்வையோடு நேருக்கு நேர் சந்தித்தது. "எப்படியும் அவளை வீழ்த்தியே இருக்கிறேன் அல்லவா... என் மேல் கொண்ட காதலால் அவள் வேறொரு வாழ்வைத் தேர்ந்தெடுக்கவில்லை. நான் மணமானவன் என்று தெரிந்தபோது அவள் என்மீது சினங்கொள்ளவில்லை. மாறாக, என்னை என் குடும்பத்துடன் வாழவே வற்புறுத்தினாள். அவளது அழகுக்கும் அறிவுக்கும் ஆண்கள் போட்டியிட்டுக் காத்திருந்தனர்.

நாடோடிச் சித்திரங்கள்: ``ஈவா காதலை உணர்த்தினாள்... பார்வதி (நதி) இயற்கையை உணர்த்தினாள்”  | பகுதி 41

ஆனால் அவள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நான் வரும்வரை காத்திருப்பாள். அந்த ஒரு வருடம் நாங்கள் இந்த இமயமலைத் தொடரின் ஒவ்வோர் ஏற்ற இறக்கத்திலும் நடந்து செல்வோம். ஓடைகளில் நீராடுவோம். டியோடர் மற்றும் பைன் மரங்களின் ஊசி இலைகளில் உறங்கும் பனித்துகள்களை கைகளிலேந்தி விளையாடுவோம். உணவகத்தைச் சேர்ந்து நிர்வகிப்போம். அமைதியான ஒரு வருடம் கழிந்ததும் நான் என் குடும்பத்தினரிடம் திரும்புவேன். அவள் காத்திருப்பாள். கடந்த இருபது வருடங்களாக இது தொடர்கிறது.

ஈவாவைப் புணரும்போதெல்லாம் அவள் மேல் காதல் பெருக்கெடுத்தாலும், மனதின் அடி ஆழத்தில் சிறிது வன்மம் வெகுண்டெழவே செய்யும்.

அதை என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஈவா என்மேல் கொண்ட காதலுக்காக வீழ்ந்தாள்" என்றார்.

"உங்களுக்கும் ஈவாவுக்கும் குழந்தைகள் பிறந்தனவா?" என்றேன். அவர் ஒரு நொடி என்னை முறைத்துப் பார்த்தார். "காதல், உடலுறவு இதெல்லாம் குழந்தையில்தான் முடிய வேண்டுமா?" என்றார். "அவசியமில்லை. ஆனால் காதல் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவு உண்டு, அதிலும் குறிப்பாக இனக்கலப்பை தவிர்க்கும் எண்ணமாக அது இருந்துவிடக் கூடாது" என்று அவரிடம் அழுத்தமாகக் கூறினேன். அவர் சூழலை சுமுகமாக்க, ஈவாவின் கவிதைகள் பற்றிப் பேசினார். நான் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன். ஈவாவைத் தேடினேன். அதைப் புரிந்துகொண்ட அந்த மனிதர், "ஈவாவைத் தேடுகிறீர்களா... அவள் இங்கு வருவதில்லை. நான் இருக்கும் வரை அவள் வீட்டில்தான் இருப்பாள். எனக்காக மட்டும் காத்திருப்பாள்" என்றார். "கொடுத்துவைத்த மனிதர்" என்று மனதோடு கூறினேன்.

நாடோடிச் சித்திரங்கள்: ``ஈவா காதலை உணர்த்தினாள்... பார்வதி (நதி) இயற்கையை உணர்த்தினாள்”  | பகுதி 41

அவர் பேசுவதை நிறுத்தவில்லை. "நீங்கள் அனைவரும் திராவிட இனத்தவரல்லவா?" என்றார். ``உலகத்தின் மூத்த இனம் திராவிட இனம் என்கின்றன ஆய்வுகள்" என்றார். "தூய திராவிடர்களா என்பது தெரியாது. ஆனால் நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் திராவிடர்களே" என்றேன். அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். "தன் இனம் குறித்தான தெளிவு ஒவ்வொரு மனிதனுக்கும் இருத்தல் அவசியம்" என்றார். தொடக்கத்தில் அவர் பேசியது ஆர்வத்தைத் தூண்டுவதுபோலிருந்தாலும் நேரம் போகப்போக அவரது இனவாதப் பேச்சு பெரும் அயர்ச்சியைக் கொடுத்தது.

அவரைத் தவிர்க்க எண்ணி நான் என் இருக்கையைவிட்டு எழுந்து உணவகத்தைச் சுற்றிவந்தேன். அப்போது மீண்டும் அந்தக் குதிரை மனிதன் போன்ற தோற்றம்கொண்ட மனிதரைக் கண்டேன். அவரின் தோற்றம் எனது கற்பனை உணர்வைத் தூண்டியது. அவ்விடம் ஒரு மாய உலகமாக மாறுவதைப்போல் கற்பனை செய்து பார்த்தேன். அது சுவாரஸ்யமாக இருந்தது.

ஒரு பெண் குரல் என் கவனத்தை மீட்டது. "நீங்கள் மணிகரன் சென்றிருக்கிறீர்களா?" என்றது அந்தக் குரல். நான் அப்பெண்மணியை நோக்கி "இல்லை மதிய உணவை முடித்துக்கொண்டு அங்கு செல்வதாகத் திட்டம். இன்றிரவு மணிகரனில் வாசம் செய்யவிருக்கிறோம்" என்றேன். "நல்லது பொங்கிப் பெருகும் பார்வதியில் ஆங்காங்கே வெந்நீர் ஊற்று கொப்பளிப்பதை அங்கு காண்பீர்கள்.

இன்று முழுநிலவு நாள். நீங்கள் அங்கு காணப்போகும் காட்சிகள் உங்கள் கால்களையும் மனங்களையும் அவ்விடத்திலேயே கட்டிப்போட்டாலும் வியப்பில்லை.

நானும் அவ்வாறு இவ்விடத்தோடு கட்டுண்டவள்தான். இங்கு வந்த பிறகு வேறு எங்கு சென்று வாழவும் மனம் ஒப்பவில்லை" என்றார். "நீங்கள் ஈவா அல்லவா..." என்றேன். "ஆம்" என்று புன்முறுவல் செய்தார் ஈவா. உலகின் மொத்த அழகையும் அவரது புன்னகை ஏந்தியிருந்தது. மனிதர்களின் புன்னகை எனக்கு மயக்கம் தரும் விஷயங்களில் ஒன்று. நேர்மையான புன்னகை தவழும் முகங்களை நான் என்றுமே மறப்பதில்லை.

நாடோடிச் சித்திரங்கள்: ``ஈவா காதலை உணர்த்தினாள்... பார்வதி (நதி) இயற்கையை உணர்த்தினாள்”  | பகுதி 41
சித்தரிப்புப் படம்

ஈவாவின் புன்னகை அந்த ரகம். "ஆனால் நீங்கள் அவரிருக்கும்போது இங்கு வர மாட்டீர்கள் என்றாரே... உங்கள் காதலர்" என்றேன். "கார்ல் அவ்வாறு கூறினாரா... அவர் என்னை அறிந்துகொண்டது குறைவு. கற்பனை செய்துகொண்டதுதான் அதிகம். நானும் அவரை அனுமதித்தேன். அவர் என்னிடம் சுதந்திரமாக உணர வேண்டும் என்பது எனது காதலின் வெளிப்பாடு மட்டுமல்ல, சுதந்திரத்தின் விலை என்ன என்பதை நன்கறிந்தவள் நான். அவரும் அதை உணர்ந்துகொள்வார். இது அவருடனான எனது உடன்பாடு" என்று சாந்தமாகப் பேசிய ஈவாவை ஆதுரமாக அணைத்துக்கொண்டேன்.

அன்று மாலை மணிகரன் சென்றடைந்த நேரம் முழு நிலவு வானில் ஏறியிருந்தது. மலைச் சிகரமொன்றின் உச்சியில் அது அரியணையிட்டு அமர்ந்திருப்பதுபோலிருந்தது. முழு நிலவின் ஈர்ப்பு விசைக்கு இசைந்து பார்வதி நதி களி நடம் புரிந்தாள். வெண்ணிறப் புரவிபோல் பாய்ந்தோடிய பார்வதி நதியில் ஆங்காங்கே புகை மண்டலம் எழுந்தது. முதன்முதலாக அத்தகைய காட்சியைக் கண்டதால் மனதளவில் மிகவும் குழம்பினேன். "வெந்நீர் ஊற்றுகள் அவை" என்றார் எங்களுடன் பயணித்த ஒருவர்.

இயற்கையின் அனைத்து அற்புதங்களும் ஒரே நேரத்தில் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தன.

முழு நிலவு இளஞ்சிவப்பாகவும், பார்வதி நதி தூய வெண்ணிறமாகவும், வெந்நீர் ஊற்றின் நீராவி வெளிர் நீலமாகவும் அங்கு ஒரு வர்ணஜாலம் அரங்கேறியது. பேருவகையின் மிகுதியில் அப்போது நான் அழுதேன். அந்நேரத்தில் என்னை ஆட்கொண்ட உணர்ச்சியின் அழுத்தத்தால் நான் அழுதேன். கூடுவிட்டு ஆவி பிரிந்து பறக்கத் துடிக்கும் வலி அது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

அங்கு சிவன் கோயில் ஒன்றும், சீக்கியர்களின் குருத்துவாராவும் அருகருகே இருந்தன. அம்ரித்ஸர் பொற்கோயிலை அடுத்து சீக்கியர்களின் பிரதான புனிதத் தலமாக மணிகரன் குருத்துவாரா விளங்குகிறது. சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு குருத்துவாராவுக்குச் சென்றோம். வழிநெடுகிலும் பூமியின் வெப்பத்தை நன்குணர முடிந்தது. வெந்நீர் ஊற்றுகளின் வெப்பம் அது என்பதை உணர்ந்தபோது மனம் வியப்பிலாழ்ந்தது. வெந்நீர் ஊற்றுகளில் நீர் கொதித்துக்கொண்டிருந்தது. பூமியின் பலவீனமான தட்டுகளினுள் பிரவேசிக்கும் நீர், பூமியின் வெப்பத்தால் சூடாகிக் கொப்பளித்துக்கொண்டு மேலெழும்பி ஊற்றாக வெளிவருகிறது. வெந்நீரின் தன்மைக்குப் பல்வேறு தாதுப் பொருள்களும் காரணமாகின்றன என்கிறது அறிவியல். குறிப்பாக சல்ஃபர் எனும் கந்தக வேதிப்பொருள் வெந்நீர் ஊற்றுகளில் அதிகமிருப்பதால் பல வகையான தோல் நோய்களுக்கு அருமருந்தாக வெந்நீர் ஊற்று கருதப்படுகிறது.

முழு நிலவின் அழகைப் பருகியபடி சிவன் கோயிலுக்குள் பிரவேசித்தேன். மஹாகாலனாக சிவன் அங்கு காட்சியளித்தார். அவரின் காலடியில் பார்வதியின் விரகம் வெந்நீராகக் கொப்பளித்தது.

வெந்நீர் ஊற்றுகளில் வேகவைத்து தயாரிக்கப்பட்ட அரிசிச் சோறு அங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அதேபோல் பல்வேறு வகையான தானியங்களையும், சிறு பைகளில் கட்டி வெந்நீர் ஊற்றில் சில நிமிடங்கள் மூழ்கவைத்து வேகவைக்கின்றனர். சில நிமிடங்களிலேயே பஞ்சுபோல் மென்மையாக வெந்துவிடுகின்றன தானியங்கள்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

குருத்துவாராவில் வழங்கப்படும் லங்கர் எனும் அன்னதான பிரசாதமும் வெந்நீர் ஊற்றின் நீர் கொண்டே தயாரிக்கப்படுகிறதாம். ஆச்சர்யங்கள் நிரம்பிய பயணத்தின் முடிவில் குருத்துவாராவினுள் நுழைந்தோம். சுற்றியெங்கும் அமைதி மட்டுமே நிலவியது. மூதாட்டி ஒருவர் அங்கு அமர்ந்து புனித கிரந்தம் வாசித்துக்கொண்டிருந்தார். நாங்கள் வழிபாடு செய்துவிட்டு வெளியேறும்போது வாசலில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். அவரின் இடது கால் கெண்டைப் பகுதியிலிருந்து கீழ்ப்பகுதி வரை சரும நோய் பீடித்திருந்தது. அந்த முதியவரின் மனைவி வெந்நீர் ஊற்றின் நீரை ஒரு வாளியில் பிடித்து வந்து அவரின் கணவரின் கால்களைக் கழுவினார். அந்த மனிதர் அமைதியாக வலியைப் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். கண்களில் மட்டும் தாரைத் தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவருக்காக மீண்டுமொரு முறை ஆலயத்துக்குள் சென்று பிரார்த்தனை செய்தேன்.

உடல், மனம், ஆன்மா என இம்மூன்றையும் சுத்திகரிக்கும் வல்லமை இயற்கைக்கும் காதலுக்கும் மட்டுமே உண்டு. ஈவா காதலை உணர்த்தினாள். பார்வதி நதி இயற்கையை உணர்த்தினாள். பூமியில் தோன்றிய முதல் கதைசொல்லி ஒரு பெண். அவளை அறியும் பயணம் தொடரும்.