``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.
எவ்வளவுதான் திட்டமிட்டு, காலம் வகுத்து, பயணங்களை அணுகினாலும் சற்றும் எதிர்பாரா நேரத்தில் முற்றிலும் புதிய கோணத்தில் புரியத் தொடங்கும் பயணங்கள்தான் கதைகளாகவும் காவியங்களாகவும் உருமாறுகின்றன.
ஆர்வ மிகுதியில் நெடுநேரம் அங்குமிங்கும் சுற்றித் திரிந்த பிறகு சிரபுஞ்சியைச் சென்றடைய இரவு எட்டு மணிக்குமேல் ஆகிவிட்டது. தங்கும் விடுதியையும் உணவையும் ஏற்பாடு செய்யும் பொறுப்பு என்னுடையதாகயிருந்தது. நானும் அனைத்தையும் திட்டமிட்டு முன்பதிவு செய்துவைத்திருந்தேன். பிரபல சுற்றுலா வர்த்தக இணையதளத்தில் முன் பணம் செலுத்தி, பதிவு செய்து தங்கும் விடுதியை தேர்வு செய்திருந்தேன். அதனால் எந்தவிதப் பதற்றமோ, ஐயமோ இல்லாமல் எங்கள் பயணம் தொடர்ந்தது. சிரபுஞ்சியை நெருங்கியதும் விடுதி மேலாளரை அழைத்து நாங்கள் வருவதை அறிவித்துவிடலாமென்று எண்ணி அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவரது எண் செயல்பாட்டில் இல்லையென்பது தெரிந்தது. பலமுறை அழைத்தும் பயனில்லாமல் விடுதிக்கே சென்றுவிட்டோம். முன்பதிவு செய்திருந்ததால் சிறு நம்பிக்கை மிச்சமிருந்தது. ஆனால் எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணம் விடுதியின் வாயிற்கதவில் பெரிய பூட்டு தொங்கியது. ரிசார்ட் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தது.

இரவு நீண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் குழந்தைகள் பசியில் அரற்ற தொடங்கியிருந்தன. விடுதியில் உணவுக்கான முன்பதிவும் செய்திருந்ததால் நாங்கள் வேறு எங்கும் உணவருந்துவதற்காக நிற்கவுமில்லை.
எல்லாம் சுமுகமாகவும் தன் வசத்தில் இருக்கும் வரையிலும் மனிதன் நல்லவனாகவே இருக்கிறான். இன்னல்களுக்குள் சிக்கும்போதுதான் அவனது உண்மையான முகம் வெளிவரத் தொடங்கும். அன்றிரவு அப்படியான ஓர் அனுபவம் எனக்கு நேர்ந்தது.
புதிய இடங்களையும், அவை கொடுத்த ஆச்சர்யங்களையும் திணறத் திணற ரசித்தவர்களுக்கு, அன்றிரவு ஏற்பட்ட அசெளகரியம், கடந்துவந்த அத்தனை இன்பங்களையும் மறக்கச் செய்துவிட்டது. அனைத்துமே தவறாக ஆகிவிட்டதுபோல் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர். திட்டமிடலில் பெரிய அனர்த்தம் நடந்துவிட்டதாக அனைவரின் பார்வையும் என்மேல் திரும்பின. "நீங்க இன்னுமே கொஞ்சம் நல்லா விசாரிச்சிருக்கலாம். இப்ப பாருங்க எப்படி ஆகிருச்சுன்னு..." என்று ஒவ்வொருவரும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறினர். நேரம் கூடக் கூட அனைவரின் உடலும் மனமும் அயர்ச்சி மிகுதியில் சோர்வடைந்திருந்தன.
அவர்களின் வருத்தம் கோபமாக உருமாறத் தொடங்கியிருந்தது. அனைவரும் பபூலை சாடத் தொடங்கினர்.
என்று ஒவ்வொருவரின் குரூரமும் வெவ்வேறு வகையில் சொற்களாக வெளிப்பட்டன. இவையெல்லாம் தான் எதிர்பார்த்ததுதான் என்பதுபோல் பபூல் நமட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தார். நானும் சில நண்பர்களும் நிலைமையை கையாளத் தொடங்கியிருந்தோம். அருகிலிருந்த மற்ற விடுதிகளை விசாரித்து வரலாம் என்று கிளம்பினோம். ஆனால், எதுவும் கைகூடவில்லை. பதற்றம் சூழும்போது மனம் சிந்திப்பதை நிறுத்திவிடுகிறது. என்னால் அதற்கு மேல் சிந்தித்து, செயலாற்ற முடியவில்லை.
பாதைகள் கடுமையாகும்போது வழிகாட்டிகள் தோன்றுவர் என்ற எனது நம்பிக்கை மட்டும் உயிர்ப்புடன் இருந்தது. பபூல் அலைபேசியில் யாருடனோ உரையாடுவது தெரிந்தது. சிறிது வெளிச்சம் கிடைத்தது.
தனது நண்பரின் ஹோம் ஸ்டே விடுதி ஒன்று இருப்பதாக கூறினார் பபூல். ஆனால் வசதிகள் பெரிய அளவில் இருக்காது. உறங்குவதற்கு இடமும் கழிவறை வசதியும் மட்டும் இருக்குமென்றார். உண்பதற்கு தேநீரும் மேகியும் மட்டும் கிடைக்கும் என்றார். அன்று இரவு மட்டும் அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் வேறு வசதியான இடம் தேடிக்கொள்ளலாம் என்றார்.
மீண்டும் தன்னிச்சையாக முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தால் அனைவரையும் துரிதப்படுத்தினேன். அதிருப்தியின் உச்சத்தில் நண்பர்கள் சிலர் வசவு மொழியால் சிரபுஞ்சியை சாடத் தொடங்கினர். ``ச்ச... என்ன இடம் இது... ஃபெசிலிட்டீஸ் இல்லாம இருக்கு. எல்லாம் காட்டுப் பசங்க. இவனுகளை மாதிரியே நாமளும் இருக்க முடியுமா" என்று அரற்றினர்.
ஹோம் ஸ்டே-வில் தனது நண்பரை அறிமுகம் செய்தார் பபூல். அவர் பெயர் எரிஸ். மலைவாழ் பழங்குடியினத்தின் சாயலும் உடலும் அவரைக் கண்டவுடன் என்னையும் மீறி ஓர் அச்ச உணர்வு தோன்றி மறைந்தது. எரிஸ் எங்கள் அனைவருக்கும் பால் சேர்க்காத சிவப்பு தேநீர் தயாரித்து தந்தார். பின்னர் மேகி செய்வதாகக் கூறி சமையலறைக்கு விரைந்தார். தலைக்கு மேல் கூரையும், சுற்றி நான்கு சுவர்கள் மட்டுமே இருந்த அந்தக் கட்டடம் அன்றிரவு எனக்கு அரண்மனை போல் தெரிந்தது.
எரிஸ் அனைவருக்கும் சூடான மேகி தயாரித்து தந்தார். அந்நேரத்தில் அது ராஜபோக உணவாக இருந்தது எனக்கு. உணவருந்திவிட்டு உறங்கவேண்டியதுதான் என்று அகமகிழ்ந்திருக்கையில் சமையலறையிலிருந்து பெருங்கூச்சலொன்று கேட்டது. எங்கள் குழுவிலிருந்த ஷர்மா தோழியின் குரல் அது. அனைவரும் சமையலறைக்கு விரைந்தனர். அவருடைய குணம் குறித்த புரிதல் ஓரளவு எனக்கிருந்ததால் நான் அங்கு செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை ஆசுவாசப்படுத்தி அழைத்து வந்தனர். "என்னவாம் ஏன் கத்துனாங்க" என்றேன் அவரது கணவரிடம். அவர் "அதுவா, கிச்சன்ல எரிஸ் நத்தை ஊறுகாய், மீன் துவையல் இதெல்லாம் வெச்சிருக்காரு, நாங்க ப்யூர் வெஜிடேரியன். அதனாலதான்..." என்று பணிவான குரலில் கூறினார்.

தங்கும் விடுதியின் முதல் தளத்திலிருந்த சிறிய அறையில் ஓர் அயல் நாட்டவர் தங்கியிருப்பது தெரிந்தது. எரிஸ் அவருடன் உரையாடினார். இருவரும் நன்கு பழகிய நண்பர்கள்போல் பேசிக்கொண்டிருந்தனர். அனைவரும் ஒருவழியாக உறங்கச் சென்ற பிறகு நான் முதல் தளத்துக்குச் சென்றேன். அது ஒரு சிறிய எளிமையான அறை. என்னைப் பார்த்ததும் எரிஸ் எதாவது தேவையாக இருக்குமோ என்று எழுந்தார். அப்படியெதுவுமில்லை என்று சைகையில் அவரை அமருமாறு கூறினேன். அந்த அயல்நாட்டவர் தாமாகவே அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரது பெயர் மிலோஸ்.
மிலோஸ் அமர்ந்திருக்கும்போதே என் உயரம் இருந்தார். எழுந்து நின்றபோது நான் சரியாக அவரது இடுப்பளவே இருந்தேன். அண்ணாந்து பார்த்து ஒரு மனிதரிடம் பேசுவது வேடிக்கையாக இருந்தது எனக்கு. மிலோஸ் மனித வள ஆய்வாளர். உலகின் பலவேறு பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்நிலையை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பொருட்டு அவர் அடிக்கடி பயணம் மேற்கொள்வதுண்டாம்.
அவரது இனப்பிரிவில் இன்னும் சிலரே உயிருடன் இருப்பதாகவும், அவர்களைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை உலக நாடுகளின் பார்வைக்கு எடுத்துச் செல்லவே மிலோஸ் இந்தப் பயணத்துக்கு வந்திருப்பதாகவும் தெரிந்தது.
எதற்காக வாழ்கிறோமென்றே தெரியாத மனிதர்கள் மத்தியில் தன் வாழ்வை ஓர் உன்னத நோக்கத்துடன் பிணைத்து வாழும் மனிதர்களைக் காணும்போதெல்லாம் மனம் சில இதழ்களை அதிகமாக விரித்து மலர்ந்துகொள்கிறது.
மிலோஸுடனும் எரிஸுடனும் சில மணி நேரம் ஆழமாக உரையாடக் கிடைத்த வாய்ப்பை இன்றளவும் மறக்க இயலாது. ஒருவிதத்தில் மனித உயிர்களின் வேர்களைத் தேடிப் பயணிக்கும் ஆர்வத்துக்கு அந்த உரையாடலே எருவூட்டி வளப்படுத்தியதென்பேன்.
"காசி இனத்தின் தொல்லியல் கதைகள் கேட்டதுண்டா?" என்றார் மிலோஸ். நான் இல்லையென்று ஏமாற்றம் தெரிவித்தேன்.
"வாசித்துப் பாருங்கள். நாம் நம் மரபியல் வேர்களை அறுத்துவிட்டு, செயற்கைச் சிறகுகள் பொருத்திக்கொண்டு பறக்க முயன்றுகொண்டிருக்கிறோம் என்பது புரியும்" என்றார் மிலோஸ்.
"எரிஸ் எங்களுக்கு ஏதாவதொரு கதை சொல்லுங்களேன்’’ என்றேன் ஆர்வமாக.
மறுப்பேதும் தெரிவிக்காமல் எரிஸ் கதை சொல்லத் தயாரானார். கதைக்குத் துணையாக நாட்டுக் கள்ளும், நத்தை ஊறுகாயும் பரிமாறினார். அற்புதமான அந்த இரவை எப்படி வர்ணித்தாலும் அது குறைவாகவே இருக்கும்.
"தெரியாது" என்றேன் ஆர்வமாக
"ஒரு காலத்துல மயிலோட சிறகுக்கு வண்ணங்களே கிடையாது. பழுப்பு நிறமான இறகுகளே இருந்துச்சு. மயில் யாரோடவும் கலந்து பழகாத சுயநலவாதியா இருந்துச்சு. தன்னைவிட சிறிய பறவைகளை ஏளனமா நடத்துச்சு. அதோட குணத்தால வருத்தமடைந்த மற்ற பறவைகள் கா-சிங்கி என்கிற தேவதையோட மாளிகைக்கு அந்த மயில அனுப்பிவெச்சுட்டாங்க. கா-சிங்கி உலகத்துக்கே ஒளி கொடுக்குற தேவதை. அவங்களுக்கு இந்த வண்ணமற்ற மயில மேல ஏனோ தெரியலை... காதல் வந்துருச்சு. சுயநலவாதியான மயிலும் அந்த தேவதையோட காதலை நல்லா அனுபவிச்சுக்கிட்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்துச்சு. தேவதையை வேலக்காரியா நடத்துச்சு. கா-சிங்கியும் தான் ஒரு தேவதைங்குறதை மறந்து,
அதனால உலகமே வெளிச்சமில்லாம தவிச்சுது. காட்டுப் பறவைகளுக்கு என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சுருச்சு. மேலே போன அந்த மயில்தான் தேவதையை வேல செய்யவிடாம துன்புறுத்திருக்கும்னு புரிஞ்சு, அந்த மயிலை திருப்பி அழைக்க முடிவு செஞ்சு அந்த ஊர் மூதாட்டிகிட்ட முறையிட்டுச்சு. அந்த மூதாட்டியும் பறவைகளுக்கு உதவ ஒத்துக்கிட்டு, நிறைய கடுகு விதைகளைப் பறவை மாதிரி வடிவத்துல விதைச்சுப் பயிரிட்டாங்க. பருவம் வந்ததும் கடுகுச் செடியெல்லாம் மஞ்சள் பூக்களா பூத்துச்சு. பார்க்க ஒரு பொன்னிறப் பறவை மாதிரி அது இருந்துச்சு. இந்த வடிவத்தை மேல இருந்து பார்த்த மயிலுக்கு பேராசை வந்திருச்சு. ஏதோ புதிய பறவை தன்னை அழைப்பதா நெனச்சுட்டு கா-சிங்கியவிட்டு புறப்பட தயாராச்சு. கா-சிங்கி எவ்வளவோ அழுது புலம்பியும் அந்த மயில் கேக்கலை. உலகத்துல இருக்குற அத்தனை அழகும் தனக்கே சொந்தமாகணும்னு சுயநலமா வானத்தைவிட்டுப் பறந்து வந்துருச்சு. பிரிவு தாங்காக கா-சிங்கி அழுதாங்க. அவங்களோட கண்ணீர்துளியில ஒரு துளி மயிலோட சிறகுல பட்டதும் அது பல வண்ணமா மாறிடுச்சு.

`என் காதலுக்காக உனக்கு இந்தப் பரிசு, இனிமேல் நீ திரும்பி வர வேண்டாம்’னு சொல்லி கதவை அடைச்சுட்டு போயிட்டாங்க கா-சிங்கி. மயிலும் ஒய்யாரமா புது வண்ணச் சிறகுகளோட பூமிக்கு பறந்து வந்து அந்தப் பொன்னிறப் பறவைகிட்ட வந்துச்சாம். அருகே வந்ததும்தான், அது பறவையில்லை, வெறும் பூச்செடின்னு தெரிஞ்சுதாம். அதிர்ச்சியான அந்த மயில் திரும்ப கா-சிங்கி கிட்டயே போயிரலாம்னு நெனச்சு வானத்தைப் பாத்துச்சாம். கா-சிங்கியோட கதவுகள் மூடியிருந்துச்சு. மயில் ஓங்கிக் குரலெடுத்து அழுதுச்சாம். அதைக் கேட்டு மற்ற பறவைகள், `எப்பவுமே நிலையற்ற மனமுடைய மயிலே... நீ காலத்துக்கும் அழுது கிடப்பாயாக! உன் குரலில் இனிமை இல்லாது போவதாக!" என்று சபிச்சிதுங்களாம். அதனாலதான் மயிலோட சிறகுகள் அழகா இருந்தாலும், அதோட குரல் கேவல்போல இருக்கு" என்று எரிஸ் ஒரே மூச்சில் கூறி முடித்தார்.
கா-சிங்கி காதல் முறிவிலும் பிரிவிலும் வண்ணங்களையே பரிசளித்தாள். அது எனக்கான புரிதலாக இருந்தது.
எத்திசையில் பயணிக்க வேண்டுமென்பது அவரவர் விருப்பமே. பாதைகளற்ற திசையில் பயணித்து, வழித்தடங்கள்விட்டு வருபவனது திசைகள் விரிந்துகொண்டேயிருக்கின்றன.
வடகிழக்கு திசையிலிருந்து வடக்கு நோக்கிய நமது பயணம் இனி வரும் அத்தியாயங்களில்...
- பயணம் தொடரும்.