Published:Updated:

சிவப்புக் கூரைகள், படிக்கட்டுகளாக 16 நதிகள்... GoT கிங்க்ஸ்லேண்டிங்குக்கு ஒரு பயணம்!

கேம் ஆஃப் த்ரோன்ஸின் பிரமாண்ட கோட்டைகள் படமாக்கப்பட்ட குரோஷியாவுக்குச் சென்று குதூகலித்திருக்கிறோம்.

குரோஷியா என்று சொன்னால் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியலின் கிங்ஸ்லேண்டிங்தான் ஞாபகத்துக்கு வரும். இது இந்தியாவிலிருந்து 6,360 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாடு. `Game of Thrones’-ன் பிரமாண்ட கோட்டைகளின் காட்சிகள் குரோஷியாவில்தான் படமாக்கப்பட்டன. குரோஷியாவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால், குரோஷியா நாட்டின் இன்னொரு பெயர் ‘ஹ்ரவாத்ஸ்க்கா’. இந்தச் சொல் 'சரஸ்வதி' என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது என்று பல மொழியியல் ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.

New Town, Dubrovnik
New Town, Dubrovnik

என்னது? ஒரு ஐரோப்பிய நாட்டின் பெயர் ‘சரஸ்வதி’யா? என்ற வினாவுக்கு, கல்வியாளர்கள் ''ஹ்ர்வத் என்ற பெயர் இந்தோ/ஸ்லாவிக் ஹார்வத் என்பதில் இருந்து உருவானது. பெர்சியர்களுக்கு ‘எஸ்’ எனும் உச்சரிப்பை ‘எச்’ என்று மாற்றும் பழக்கம் இருந்தது, எனவே ஹரவைதி என்ற சொல் உண்மையில் சரஸ்வதியின் சிதைந்த பெயர்’’ என்கிறார்கள்.

இப்படி இந்த நாட்டின் பெயரில் தொடங்கி சுற்றலாத் தளங்கள் வரை அனைத்தும் சுவாரஸ்யம் மிகுந்தவை.

மிலானில் மேற்படிப்பு படித்து வரும் தமிழ் நண்பர்கள் சித்தார்த் வெங்கட்ரமணி, வர்ஷா வெங்கடேஷ் மற்றும் டாக்டர் கார்த்திகேயன் பழனிநாதன் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் பல நினைவுகளுடன் குரோஷியா நாட்டுக்குச் சென்று வந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

Game of Thrones Museum, Split
Game of Thrones Museum, Split

"நாங்கள் மிலான் நகரிலிருந்து விமானம் மூலம் பயணத்தைத் தொடங்கினோம். நம் ஊர் வெள்ளை போர்டு MTC போல ஐரோப்பியாவில் Volotea ஏர்லைன்ஸ் விலை ரொம்பவே குறைவு அதில்தான் பயணித்தோம். பிற்பகலுக்குள் அட்ரியாடிக் கடலின் ஓரமாக இருக்கும் நகரமான டப்ரோவ்னிக்கை சென்றடைத்தோம்.

GOT ரசிகர்கள் மிக எளிதில் அடையாளம் காணக்கூடிய இடம்தான் டப்ரோவ்னிக் சிட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பழைமையான நகரம் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு கூரைகளைக் கொண்டு ஓவியம்போல இருந்தது. இந்த ஊரின் கடல் அருங்காட்சியகத்தில் கடந்த நூற்றாண்டுகளில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்யப்பட்ட வரலாற்று விவரங்கள் உள்ளன. 1979–ம் ஆண்டு முதல் டப்ரோவ்னிக், யுனெஸ்கோவின் (UNESCO) பாரம்பர்ய நகரங்களில் பட்டியலில் இருக்கிறது. மாலை தாமதமானாலும் அட்ரியாடிக் கடலில் குளித்து குத்தாட்டம் போட்டு அன்றைய நாளை அட்டகாசமாக முடித்தோம்.

Guarded walls of the old town, Dubrovnik
Guarded walls of the old town, Dubrovnik

அடுத்த நாள் குரோஷியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ஸ்ப்ளிட் (Split)-க்குப் புறப்பட்டோம். இந்த நகரத்தின் டியோக்லீடியன் அரண்மனை யுனெஸ்கோவின் பாரம்பர்ய தளங்களில் ஒன்று.

இப்போது நம் வீடுகளில் பயன்படுத்தும் AC மின்சாரத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி நிகோலா டெஸ்லா (Nikola Tesla) ஸ்பிளிட் அருகேதான் பிறந்தார்.
The Bell Tower, Split
The Bell Tower, Split

இப்பகுதியைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், இது காஸ்ட்லி நாய் இனங்களில் ஒன்றான டால்மேஷனின் தாயகம்.

இந்த நகரத்தில் ஆண்டுதோறும் அல்ட்ரா ஐரோப்பா எனும் விமரிசையான திருவிழாவை கோடைக்காலத்தில் நடத்துகிறார்கள். இளம் டூரிஸ்ட்டுகளுக்கு இந்த விழா ஒரு ஜாலி ஸ்பாட். நாங்கள் குளிர் காலத்தில் சென்றதால் விழா மிஸ்ஸிங்.

Zagreb Cathedral
Zagreb Cathedral
இங்கு வயதானவர்கள் 'Bocce' என்ற விளையாட்டை ஆர்வமாக விளையாடுகிறார்கள். அது வேறொன்றும் இல்லை கிட்டத்தட்ட நம்மூர் 'கோலி' விளையாட்டுதான்.

அடுத்த ஸ்பாட் - பிளிட்விஸ். இந்த நகருக்குச் செல்ல இரவு 8 மணி ஆகிவிட்டது. எங்களை 75 வயதான ‘டோப்ரா பாட்டி’ அவரது விருந்தினராக வரவேற்றார். டோப்ரா என்பது அவர் பெயர் அல்ல. குரோஷியாவில் டோப்ரா என்றால் நல்லது என்று அர்த்தமாம். அந்த வார்த்தையைத் திரும்பத் திரும்ப கூறியதால் அவருக்கு 'டோப்ரா பாட்டி’ என்று புனைப்பெயர் வைத்தோம். மிக உற்சாகத்துடனும் இனிமையாக எங்களைக் கவனித்துக் கொண்டார்.

City Theatre, Split
City Theatre, Split

மறுநாள் காலை 10 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்து அருகில் உள்ள தேசிய பூங்காவை அடைந்தோம். லாக்கர் அறையில் லக்கேஜை வைத்த பிறகு, மேல் ஏரியை நோக்கி சென்றோம். இந்தத் தேசிய பூங்காவில் பல நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏரிகள் இருக்கின்றன. இதில் மேல் ஏரி என்பது உச்சியில் இருப்பது.

Vikatan
Lake View
Lake View
Sidharth

இந்த மேல் ஏரி அடுத்தடுத்து இருக்கும் 16 ஏரிகளுக்குத் தண்ணீரை மாற்றுகிறது. இங்கே ஒரு ஆச்சர்யம், நீரின் நிறம் மஞ்சள், பச்சை, நீலம் என ஒவ்வொரு ஏரியிலும் ஒவ்வொன்று. தொடர்ந்து மாறிவரும் தாதுக்கள், நீரில் உள்ள உயிரினங்கள் மற்றும் சூரிய ஒளியின் கோணத்தைப் பொறுத்து நிறம் மாறுகிறதாம்.

16 ஏரிகளையும் பார்க்க விரும்பியதால் 'K' என்ற பாதையில் ட்ரெக்கிங் தொடங்கினோம். பாதையின் அழகில் மயங்கி சில பல செல்ஃபிக்களைக் க்ளிக் செய்துவிட்டு 20 நிமிடம் படகு மூலம் ஏரியில் பயணித்து பூங்காவின் மறுபுறத்தை அடைத்தோம். கடைசியாக 'வெலிகி ஸ்லாப்' என்ற 78 மீட்டர் உயர நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். எங்கள் 6 மணிநேர ட்ரெக்கிங் களைப்பை அந்தக் கண்கவர் நீர்வீழ்ச்சி போக்கிவிட்டது. நாட்டின் அடுத்த நகரான ஜாக்ரெப்புக்கு எங்கள் பயணம் தொடர்ந்தது.

Scenic walking route, Plitvice Lakes National Park
Scenic walking route, Plitvice Lakes National Park

ஜாக்ரெப் நகரதில் நடந்துகொண்டிருக்கும்போது, ஸ்லாட்கோ லூக்ஸ் என்ற வரலாற்று பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தோம். இந்தி, சம்ஸ்கிருதம் உட்பட 10 மொழிகளைப் பேசத் தெரிந்து வைத்திருந்தார் இவர். `ஹர்வத்ஸ்கா-சரஸ்வதி கனெக்‌ஷன் பாரசீக மன்னர் டேரியஸின் ஆட்சியில் எழுந்த கலாசார பரிமாற்றத்தின் காரணமாக இருக்கலாம்’ எனச் சில கதைகளைக் கதைத்தார்.

``Dracarys!" சாம்பல் காடுகளையும், மண்டை ஓடுகளையும் யார் ஆண்டால் என்ன? #GameOfThronesS08E05
View from entrance 1, Plitvice Lakes National Pasrk
View from entrance 1, Plitvice Lakes National Pasrk

பேராசிரியரிடம் விடைபெற்று நகரத்தின் கதீட்ரலை நோக்கிச் சென்றோம், இது நகரத்தின் முக்கிய இடம். கதீட்ரலின் கூரையில் நகரக் கொடி மற்றும் நாட்டின் கொடி வண்ணமயமான கலவையில் பதிக்கப்பட்டிருந்தது. ஜாக்ரெப்பின் உணவுத் தெருவில் உலகில் உள்ள பல உணவு வகைகளைப் பார்க்க முடிந்தது. எங்கள் இரவு உணவைத் தேர்ந்தெடுப்பதற்கான கடினமான முடிவை நாங்கள் எடுக்க வேண்டியிருந்து.

Vikatan

பல நாள்களுக்குப் பிறகு, ஒரு இலங்கை கொத்து பரோட்டாவை இந்த காஸ்மோ பாலிட்டன் நகரத்தில் கொத்திவிட்டு, பேருந்து மூலம் மீண்டும் மிலனுக்குக் கிளம்பினோம். அன்று இரவு தூங்கும்போது கனவு காண்பதற்குப் பதிலாக ஒரு அழகான கனவு முடிந்து தூங்குவதுபோல் உணர்ந்தேன். என் கனவுக்கு குரோஷியா எனப் பெயரிடலாம்!" என்று பெருமூச்சுடன் தன் கிங்ஸ்லாண்டிங் அனுபவத்தைச் சொல்லி முடித்தார் சித்தார்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு