Published:Updated:

உறையவைக்கும் பனி, மிரளவைக்கும் சாலை.. சண்டிகர் முதல் மணாலி வரை 1,200 கி.மீ த்ரில் பயணம்! #Vikatan360

ஸ்பிட்டி

உலகில் நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம். ஆனால், ஒருமுறையாவது இந்தச் சாலையில் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஓர் உணர்வை ஏற்படுத்திய அசாத்திய பயணம். எங்கே... எப்போது... எப்படி..?

உலகம் எனும் இந்த நிலப்பரப்பால் தீர்க்க முடியாத பிரச்னை என்று, இந்த உலகில் எதுவுமே இல்லை.
ஜான் மியூர்

9 நாள்கள், 36 சாகசப்பயணிகள், மலைப் பாதைகளில் 1,200 கிலோமீட்டர் பயணம்... ச்சும்மா ஜாலி ரைடு இல்ல ப்ரோ... ரோலர்கோஸ்டர் ரைடு! சவாலுக்குத் தயாரா என்று கேட்டது மஹிந்திரா நிறுவனம். உடனே லைக்ஸ் தட்டி தயாரானது விகடன் டீம்.

மஹிந்திரா நடத்திய `ஸ்பிட்டி எஸ்கேப் 2019' சாகசப் பயணம் சமீபத்தில் சண்டிகரில் தொடங்கியது. அங்கிருந்து சிம்லா, நார்க்கண்டா, சாங்லா, நாக்கோ, காஸா வழியாக காரில் பயணித்து மணாலியை அடைய வேண்டும். மீட்புக்குழு, மருத்துவர் குழு என மொத்தமாக 58 பேர் 30 மஹிந்திரா வாகனங்களில் பிஜோ மற்றும் ஹரி சிங் தலைமையில் தயாராயிருந்தோம்.

ஸ்பிட்டி பயணம்; SPITI Travel
ஸ்பிட்டி பயணம்; SPITI Travel

அனைத்து வாகனங்களிலும் ஒரே நேரத்தில் நான்கு வீல்களும் இயங்கும் 4X4 வசதி உண்டு. உள்ளேயே வாக்கி டாக்கி மற்றும் பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. பயணத்தின்போதே வாக்கி டாக்கி வாயிலாக மற்ற கார்களில் பயணிப்பவர்களோடு பேசலாம். ஆபத்து என்றால் எச்சரிக்கலாம். தூக்கம் வந்தால் மொக்கை போடலாம். குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளும் வாகனங்களும் தயாரா,க 'விர்ர்ர்ரூம்' 'விர்ர்ர்ரூம்'கள் விண்ணைப்பிளக்க 'ஸ்பிட்டி எஸ்கேப்' தொடங்கியது.

நார்க்கண்டா, இமாசலப் பிரதேசத்தில் இருக்கிற மிக முக்கியமான சுற்றுலாத்தளம். இங்கே பனிக்காலத்தில் பனிச்சறுக்கு மாதிரியான விளையாட்டுகள் மிகவும் பிரபலம். சட்லெஜ் ஆற்று பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிற இந்த மலைநகரம் அதிகமும் பிரபலமாகாத, அமைதியான சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற தளம்!

சிம்லா To நார்க்கண்டா

100 கிலோமீட்டர் பயணத்துக்குப் பிறகு சில்லென்ற சிம்லாவை அடைந்தோம். நுழையும்போதே கனிந்த ஆப்பிள்கள்தான் நமக்கு ஹாய் சொல்லி வரவேற்றன. ஆமாம்... இரண்டுபுறமும் ரம்மியமான ஆப்பிள் மரங்கள், அதற்கு நடுவே பயணிப்பது வேறோர் உலகத்தில் பயணிப்பதைப் போலிருந்தது. இவ்வளவு சூப்பரான இடத்தில் செல்ஃபி இல்லாமல் எப்படி... வாகனங்கள் பிரேக்கடிக்க... ஃப்ரண்ட் கேமராக்கள் ப்ளாஷ் அடிக்க... எங்கும் செல்ஃபி மயம். ஆப்பிள்கள் வெட்கத்தால் இன்னும் கொஞ்சம் சிவந்திருக்கும். சிலர் வீட்டுக்கு வீடியோ கால் போட்டு ''யம்மோவ் இங்க பார் ஆப்பிள் மரம்'' எனக் காட்டிக் காட்டி சிரித்துக்கொண்டார்கள். இங்குதான் ட்விஸ்ட்...

ஆப்பிள் கிண்ணம்
இமாசலப் பிரதேசத்தில் இருக்கிற சிம்லாவும் கின்னாவூரும் இந்தியாவின் ஆப்பிள் கிண்ணம் (Apple Bowl) என்று அழைக்கப்படுகிற இடங்கள். இங்கிருந்து உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பரின் இரண்டாவது வாரம் வரை ஆப்பிள்களுக்கான அறுவடைக்காலம். ஆப்பிள் தோட்டங்களை நல்ல கனிந்த ஆப்பிள்களோடு காண விரும்பினால் இதுவே சரியான தருணமாக இருக்கும்! சிம்லாவிலிருந்து சங்லா சொல்லும் வழியெங்கும் இந்த ஆப்பிள் தோட்டங்கள் அதிகம் உண்டு.
View this post on Instagram

ஸ்பிட்டி செல்பவர்கள் சிம்லா வழியாக சென்றால் இந்த அழகான ஆப்பிள் தோட்டத்துக்குள் சென்று கொத்துகொத்தான சிம்லா ஆப்பிள்களை ருசித்து விட்டு போகலாம். . . #spitivalley #himalayanspitiescape #spitiexpedition #mahindraadventure @mahindraadventure #motorvikatan #travel

A post shared by Motor Vikatan (@motorvikatan) on

மேக மூட்டம் சாலைகளே தெரியாதபடி சூழ்ந்து கொண்டது. இதுபோன்ற சமயங்களில் ஆமையைவிட குறைந்த வேகத்தில்தான் செல்லமுடியும். நார்க்கண்டாவில் நாங்கள் தங்கப்போகும் விடுதியை அடைய 10 கிலோமீட்டரே இருந்த நிலையில் முழுக்க இருட்டிவிட்டது. வெறும் பத்து கிலோமீட்டர்தானே என்று நினைக்கவேண்டாம். அது கரடுமுரடான ஒருவழிப்பாதை. அந்த 10 கிலோமீட்டரை கடக்க மூன்று மணி நேரம் ஆகிவிட்டது! இதுபோன்ற பயணங்களில் பொறுமையை சோதிக்கும் இதுமாதிரி அனுபவங்கள்தான் வரம். ஒரு வழியாக இரவு 10 மணிக்கு நார்க்கண்டா பகுதியில் 10,000 அடி உயரத்தில் இருக்கிற தனியார் விடுதியை அடைந்தோம்... அடைந்ததும், அப்புறம் என்ன ஸ்லீப்பிங்தான்... அவ்ளோ டயர்ட்.

பயணத்தைத் தொடர்வதற்கு முன்னால் சிம்லா டூ நர்க்கண்டா புகைப்படங்களைப் பார்த்துவிடுவோம்...

17,590
திபெத் எல்லையில் 17,590 அடி உயரத்தில் இருக்கிற குட்டி நகரம் இந்த ஷாங்லா. அழகான மலைத்தொடர்கள் கொண்ட பகுதி இது. ட்ரெக்கிங் பிரியர்களுக்கு சவாலான பல பகுதிகள் இங்கு உள்ளன. எனவே, நோட்பண்ணி ஒரு விசிட் அடிங்க! இங்கே கின்னாரி என்கிற மொழி பரவலாகப் பேசப்படுகிறது. இது ஒரு சினோ-திபெத்திய மொழி!

நார்க்கண்டா To ஷாங்லா

அதிகாலையில் நார்க்கண்டா, இரவெல்லாம் அணைக்கப்படாத ஏசிரூம் போல இருந்தது. இமாச்சலின் ஸ்பெஷல் டீ பயணத்தின் சுவைகூட்டியது. டீ குடித்த உற்சாகத்தோடு அங்கிருந்து ஷாங்லாவுக்குக் கிளம்ப ஆயத்தமானோம். மீண்டும் 'விர்ர்ரூம்'கள் கிளம்ப... 'தம்பி இந்த ரோடு வேற லெவல் விர்ர்ரூம்லாம் வேலைக்கு ஆகாது... பொறுமையா வாங்கப்பா' என்று அலறியது வாக்கி டாக்கி.

நார்க்கண்டா To ஷாங்லா
நார்க்கண்டா To ஷாங்லா

நார்க்கண்டா நகரத்தை அடுத்த ராம்பூர் மற்றும் கால்பா நகரப் பகுதிகளில் செல்லும்போது, பாறைகளை குடைந்தும், மலையோரங்ளை செதுக்கியும் அமைக்கப்பட்ட கற்பாறை சாலைகளில் குழுவினர் செல்வது மிகவும் கடினமாக இருந்தது. இப்பகுதியிலுள்ள கொண்டை ஊசி வளைவு பாதைகள் மிகவும் குறுகலாக காணப்பட்டன. இதனால் எதிரே வரும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி நிறுத்தி தங்களது பயணத்தைத் தொடர்ந்தோம். சாராஹன் நகர் மலைப் பகுதியின் மேலிருந்து கீழே பார்த்தால் சட்லெட்ஜ் ஆறு பல கிளைகளாகப் பிரிந்து செல்வது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. கண்கொள்ளா காட்சியைப் பார்த்துவிட்டால் அடுத்து என்ன செல்ஃபிதானே...

அங்கிருந்து பயணம் பாஸ்பா ஆற்றுக் கரையோராமாகத் தொடர்ந்தது... இப்பகுதியில் உள்ள நிலப்பரப்பில் தாவரங்கள் மிக அதிகம். அதனால் அதிகளவு கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த காட்சி கேமராவுக்குள் அடங்க முறுக்கு அளவுக்கு அழகு. பாஸ்பா நதிக்கரை சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. காருக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது, நமக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது... வண்டியும் போகவேண்டும். கடுமையான பயணமாக இருந்தாலும் வந்திருக்கிற பயணிகள் எல்லாம் சாகச விரும்பிகள் ஆச்சே... கஷ்டத்தையும் கலகலப்பாக எதிர்கொண்டு கார்களை ஓட்டினர். ஒரு நீண்ண்ண்ண்ண்ட... போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக நாளின் இறுதியில் ஷாங்லா நகர் கண்ணுக்கு தெரிந்த போது... சொர்க்கமே தெரிந்தது...

ஷாங்லா To சித்குல்

எந்தப்பக்கம் திரும்பினாலும் பசுமைதான் ஷாங்லாவில். அது எத்தனை குளிர்ச்சியோ அதே அளவு இங்குள்ள மக்களும் பழக இனிமையானவர்கள். காலையில் டீக்கு பதிலாக குளிருக்கு இதமாக சூப் ஒன்றை உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் பள்ளத்தாக்குகளுக்குள் தொடங்கியது நம் சாகசப்பயணம். நம்முடைய அடுத்த ஸ்டாப், சித்குல்.

இந்திய - திபெத் எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் கடைசி கிராமம்! இங்கு ராணுவ பாதுகாப்பு மிக மிக அதிகம்.

பள்ளதாக்குகளை செதுக்கி உருவாக்கப்பட்ட குறுகலான சாலைகளுக்குள் பயணித்தோம். முந்தைய நாள் கஷ்டங்களெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவுக்கு இந்த சாலைகள் நமக்கு குலுங்கல் மசாஜ் பண்ணி விட்டன. முதுகெலும்புகள் இடம்மாறுகிற அளவுக்கு சாலைகள் கரடுமுரடாக இருந்தன.

இப்பகுதியில் உள்ள மலையடிவாரங்களில் சோளப் பயிர்கள் ஏராளமாகப் பயிரிடப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் இருந்து இதைப்பார்க்க ரம்மியாக இருக்கிறது. ரம்மியமான இடம் என்றால் நம் கேமராக்கள் சும்மா இருக்குமா... கார்கள் அத்தனையும் நிறுத்தப்பட்டு புகைப்படங்களாக எடுத்துக்குவித்துவிட்டுத்தான் கிளம்பினோம். அடுத்த மூன்று மணிநேரம் ரக்‌ஷம் என்கிற கிராமத்தின் வழி நடந்து சென்று ஷாங்லா நகரின் பச்சாரா கேம்ப் பகுதியை வந்தடைந்தபோது... எங்கள் கால்கள் பேசின. 'அய்யா ஓய்வு குடுங்க ப்ளீஸ்... முடியலய்யா...'

இமயமலைத்தொடரின் பாஸ்பா நதிக்கரையில் அமைந்துள்ளது சித்குல். ராணுவத்தின் அனுமதி இல்லாமல் செல்லக்கூடிய இந்திய எல்லைப்பகுதி கிராமங்களில் சித்குல் ஒன்று. இந்த கிராம மக்கள் நகரத்திலிருந்து முற்றிலும் தொடர்பின்றியே இருக்கிறார்கள். ஒருசிலர் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறைதான் நகரங்களுக்கு சென்று வருகிறார்கள்

ஷங்லா To தாபோ - 177KM

ஷங்லாவில் இருந்து தாபோவுக்கு நம் பயணம் தொடர்ந்தது. ஏராளமான புத்த மடலாயங்கள் கொண்ட பகுதி இந்த தாபோ. சட்லஜ் ஆற்றங்கரையோரம் செல்லும் இந்த பயணத்தில் ஆங்காங்கே சாலைகளில் பெரிய பள்ளங்கள், துண்டிக்கப்பட்ட சாலைகள் என பல தடைகள். 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா' என பாட்டுப்போட்டு சென்றுகொண்டிருந்தவர்கள் 'ஏத்திவிடப்பா தூக்கிவிடப்பா' என்று தொடர்ந்து மூச்சை பிடித்துக்கொண்டு பயணமானோம். சில தாழ்வான பகுதியிலிருந்து மேலே வர முடியாமல் திண்டாடவும் வேண்டியிருந்தது. அந்த நேரங்களில் ஹரிசிங் தலைமையிலான குழுவினர் எங்களுக்கு உதவி செய்து வாகனங்களை மேலே கொண்டு வந்தனர். திபெத் எல்லை அருகே மலையைக் குடைந்து போடப்பட்ட ஒரு சாலையை கடந்து நெடுந்தூர பயணத்தை மேற்கொண்ட பிறகு, 12,014 அடி உயரத்தில் உள்ள நாக்கோ பகுதியை அடைந்தோம்.

இப்பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை தொடர்ந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கிராமமாமன ஹியூவை அடைந்தோம். இந்த கிராமம் சீனாவின் எல்லையோரத்தில் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான வீடுகள் கற்களை அடுக்கி கட்டப்பட்டுள்ளன. மேல் கூரைகள் வைக்கோல் மற்றும் மரங்களால் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளிலும் கழுதைகள் மற்றும் மாடுகள் வளர்க்கின்றனர். கழுதைகள், மாடுகளைப் பாதுகாக்க வீட்டின் அருகே சுற்று சுவர் எழுப்பி கூடாரங்கள் அமைத்துள்ளனர்.

95
"ஹியூ" வில் 95 சதவீதம் திபெத்தியர் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் வீடுகளில் வெளிப்புறம் மட்டுமே தாழ்ப்பாள்கள் உள்ளன. எந்த ஒரு வீட்டிலும் பாதுகாப்பிற்காக பூட்டுகள் போடுவதில்லை! செப்பு, பித்தளை மற்றும் சிறு சிறு மணிகள் செய்யப்பட்ட அணிகலன்களை மட்டுமே இங்குள்ள பெண்கள் அணிகின்றனர். இந்தியாவில் தங்கமே இல்லாத கிராமம் இது என்பது ஆச்சர்யம்.

இங்கு சில மணிநேரங்கள் சுற்றிவிட்டு... அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு இடத்திற்கு சென்றோம். சீன எல்லைப் பகுதியின் மிக மிக அருகிலுள்ள இந்த கோயிலில் 500 ஆண்டுக்கால பழமையான மம்மியை வழிபடுகின்றனர். ஒரு பெண் லாமா (புத்த துறவி) 45 வயதில் மறைந்த பிறகு அவரது உடலை பதப்படுத்தி அமர்ந்த நிலையில் மம்மியாக வைத்து இந்த கோயிலில் வழிபடுகின்றனர். புத்த மம்மிக்கு மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

வழியெங்கும் ராணுவக் கட்டுப்பாடுகள், நிறுத்தி நிறுத்தி விலக்கி விலக்கி... கிளம்பினோம். கூடவே குளிரும் கற்கள் நிறைந்த சாலைகளும் நம்மை வரவேற்க இத்தனை இடையூறுகளைக் கடந்து சிறப்புமிக்க பகுதிகளை பார்வையிட்டோம் என்கிற திருப்தியோடு தாபோ நகரை அடைந்தபோது இருட்டிவிட்டது. நெக்ஸ்ட்டு... ரெஸ்ட்டுதான்!

தாபோ To காஸா

ஐந்தாவது நாள் விடிந்தபோது தாபோவின் புத்தர்களுக்கெல்லாம் டாடா சொல்லிவிட்டு, பிரியாவிடை பெற்றுக்கொண்டு காஸாவை நோக்கி கிளம்பினோம். தாபோ நகரத்திலிருந்து தாங்கர், லாலுங், லிங்தி வழியாக காஸா நகரை நோக்கி கான்வாய் நகர்ந்தது.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்த சிறு நகரம் தான் காஸா. அதிக அளவில் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் சாலைகள் அனைத்தும் செங்குத்தாகவே இருந்தன. வாகனத்தில் செல்லும்போது கீழே பார்த்தால் எமதர்மன் எருமையோடு எட்டிப்பார்ப்பது தெரியும்! இந்த சாலைகளில் செல்லவேண்டும் என்பது எளிதான காரியம் அல்ல. நான்கு சக்கரங்களும் ஒரே நேரத்தில் சுழலும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மட்டுமே இங்கு செல்லமுடியும். இந்த சாலைகளில் பயணம் செய்வது 'கரணம் தப்பினால் மரணம்' என்ற பழமொழிக்கு இணங்க ஓட்டுநர்களின் சிறு தவறும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்தான் முடியும்!

உறையவைக்கும் பனி, மிரளவைக்கும் சாலை.. சண்டிகர் முதல் மணாலி வரை 1,200 கி.மீ த்ரில் பயணம்! #Vikatan360

இரண்டு மணி நேர பயணத்துக்கு பின் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புத்த மடாலயத்தை அடைந்தோம். இங்கு புத்த துறவிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையம் அமைந்துள்ளது. லாமாக்களிடம் ஆவிபறக்கும் தேநீரோடு சிறிது நேரம் உரையாடினோம்.பிறகு மீண்டும் பயணம் செங்குத்தான சாலைகளிலே தொடங்கியது. இங்கு மலை அடிவாரத்தில் காணப்படும் வீடுகள் அனைத்துமே மண்ணில் புதைந்த மாதிரியான வடிவில் கட்டப்பட்டுள்ளன. உலகளவில் மிகவும் செங்குத்தான பயணம் இங்கு மட்டுமே உள்ளது. 30 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து காஸா நகரத்தின் உயர் பகுதியை அடைந்தோம். 11,980 அடி.

இப்பகுதியில் இருந்து காஸா நகரத்தையும் அதனை சுற்றியுள்ள இடங்களையும் பார்க்கும்போது வேறோரு கிரகத்தை பார்ப்பது போல பிரமிப்பாக இருந்தது. புகைப்பட பிரியர்களுக்கு இந்த பகுதி கண்டிப்பாக பிடிக்கும். கேமராவை கொண்டு போய் வைத்து எங்கு படமெடுத்தாலும் எந்த அட்ஜெஸ்மென்டும் பண்ணாமலேயே அழகழகான படங்கள் கிடைக்கும்.

மலையின் இன்னொரு பகுதி வழியாக கீழே இறங்க ஆரம்பித்தோம். பல இடங்களில் ஆங்காங்கே கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பயணம் தடைப்பட்டது. மீண்டும் மாற்று வழியாக பல்வேறு கரடுமுரடான மலை சாலைகளை கடந்து காஸா நகரத்தின் ராங்கிரிக் பகுதியை அடைந்தபோது மாலை ஆகிவிட்டது. 90 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் கடந்தால் எப்படி இருக்கும்... நிற்க கூட முடியாத அளவுக்கு சோர்வாக இருக்கும்.

உலகின் மிக உயரமான பகுதிகளில் இருக்கிற கிராமங்களில் ஒன்று காஸா. அந்த சிறிய கிராமத்தை நோக்கிய பயணத்தின் முதற்கட்டமே பயணிகளை திகிலடைய வைத்தது. காஸாவை அடைய ஸ்பிட்டி ஆற்றை வாகனத்தில் கடந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்லவேண்டும். கரடு முரடான பாறைகளால் நிறைந்த ஸ்பிட்டி ஆற்றை வாகனத்தில் கடப்பது என்பது எளிதான காரியமல்ல. சாகசக்காரர்கள் ஒவ்வொருவராக பல போராட்டங்களுக்குப் பிறகு ஆற்றை வாகனத்தில் கடந்தனர். ஒரு சிலர் ஆற்றின் நடுவிலேயே வாகனத்தை இயக்க முடியாமல் சிக்கினர். அவர்களை மீட்புக் குழுவினர் தங்களது வாகனங்கள் மூலம் மீட்டனர். ஒரு கார் ஆற்றில் கிட்டத்தட்ட மூழ்கும் நிலையில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. இதற்கு மேல் பயணிக்க வேண்டாம் என பலரும் பேச ஆரம்பித்தது அப்போதுதான். ஆனால் உலகத்தின் உயரமான பகுதிகளை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

கடுமையான போராட்டத்துக்கு பிறகு உலகின் உயரமான கிராமம் 'கோமிக்' அடைந்தோம். 14,806 அடி உயரம். இந்த கிராமத்தில் புத்த மடாலயம், உணவு விடுதி உட்பட மொத்தம் 9 கட்டடங்கள் மட்டுமே உள்ளன. இங்குள்ள பழைமை வாய்ந்த புத்த கோயிலில் உள்ள பெண் லாமாக்கள் (பெண் புத்த துறவிகள்) திபெத் பாடலுக்கு நடனமாடி நம்மை வரவேற்றனர். இங்கிருந்து கீழே ஓடும் ஸ்பிட்டி நதியை பார்த்தால் ஆலமர விழுதுகள் போல் அற்புதம் காட்டுகின்றன.

அங்கிருந்து 12 கி.மீ தொலைவில் உலகின் உயரமான தபால் நிலையம் இருக்கிறதாம். வீட்டுக்கு ஒரு கடிதம் அனுப்புவோம் என புறப்பட்டோம். அங்குள்ள சாலையில் இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல முடியுமாம். நடராஜா சர்வீஸில் தபால் நிலையத்தை அடைந்தோம்.

இங்கே நம்மோடு வந்த பயணிகளும் நாமும் தபால் நிலையத்தில் தபால் கார்டுகளை வாங்கி குடும்ப உறுப்பினர்களுக்கு விதவிதமான வாசகங்களை எழுதி போஸ்ட் செய்தனர். இந்த தபால் நிலையம் 1983 ல் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை போஸ்ட் மாஸ்டராக ரிச்ஷோன் செர்ரிங் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் 15 முதல் 20 தபால் வரை வீடுகளில் கொண்டு சேர்க்கிறார். இவரோடு போட்டோ எடுத்தால் இன்ஸ்டாவில் லைக்ஸ் பிச்சுக்குமே... ஆளாளுக்கு செல்பி எடுத்து அவரை திக்குமுக்காட செய்தனர். அந்த மகிழ்ச்சியோடு மணாலியை நோக்கி நம் பயணம் தொடர்ந்தது!

மணாலி செல்ல கிட்டத்தட்ட 240 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்பதால் அதிகாலை 5 மணிக்கே கான்வாய் கிளம்பியது. மேலோங்கி செல்லும் கொண்டை ஊசி வளைவுகளை கடந்து 70 கிலோமீட்டர் பயணத்துக்கு பின்பு குன்ஷம் பாஸ் என்ற உயரமான பகுதியை அடைந்தோம். இந்தப் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 15,060 அடி உயரத்தில் உள்ளது. குன்ஷம் பாஸ்தான் இந்த சாதனை பயணத்தின் உயரமான பகுதி. இப்பகுதியில் உள்ள புத்த கோயிலில் திபெத்தியர்கள் தங்களது கொடியை அதிகளவில் வரிசையாக வைத்துள்ளனர்.

இங்கிருந்து புறப்பட்டு, மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு சந்திரத்தால் ஏரியை அடைந்தோம் இந்த ஏரியின் தண்ணீரானது கண்ணாடி போல் தெள்ளத்தெளிவாக காணப்பட்டது. நான்குபுறமும் மலைகள் சூழ நடுவில் இந்த ஏரியை காண்பது ஒரு தனித்துவமான அனுபவம்.

ஏரியிலிருந்து கிளம்பினோம். ஆங்காங்கே பல வண்ணத்தில் குதிரைகள் தென்பட்டன. பின்னர் திடீரென ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் சாரல் மழை மற்றும் கடுமையான மேக மூட்டத்துக்கு இடையே ரோத்தாங் பாஸ் பகுதியை கடந்தோம். சில நிமிடங்களில் அனைவருடைய மொபைல் போனும் ஒலிக்க ஆரம்பித்தன. காரணம் 5 நாட்கள் மலை பயணத்துக்கு பிறகு இங்குதான் நெட்வொர்க் சிக்னல் முதன்முதலாக கிடைத்தது. எல்லோரும் தங்களது குடும்பத்தினர் நண்பர்களுக்கு மொபைல் வாயிலாக தங்களது அனுபவங்களை பகிர ஆரம்பித்தனர்.

மணாலியை அடைந்தபின் ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் சண்டிகரை நோக்கி பயணம் தொடங்கினர். 'AUT' என்ற பகுதியில் உள்ள 2.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மலை குகைப் பாதையை கடந்து நீண்டதூர பயணத்துக்கு பிறகு சண்டிகரை அடைந்த அட்வென்சரர்ஸ் தங்களது சாதனை பயணத்தை நிம்மதியாக முடித்துக் கொண்டனர்.