Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `அட்டாரி - வாகா எல்லையும் சிறுவனின் பலூன் விளையாட்டும்!’ |பகுதி 21

நாடோடிச் சித்திரங்கள் | அட்டாரி - வாகா எல்லை
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் | அட்டாரி - வாகா எல்லை

நாங்களும் மிகுந்த பரவசத்துடன் ``ஜெய் ஹிந்த்" என்று முழங்கினோம். சற்று முன்பு உணவகத்தில் ஓர் இந்தியர் இன்னோர் இந்தியருடன் கடுமையாகச் சண்டையிட்டுக்கொண்டோம் என்ற குற்றவுணர்வை மனதில் புதைத்துவிட்டு ``ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்’’ என்று முழக்கமிட்டோம்.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `அட்டாரி - வாகா எல்லையும் சிறுவனின் பலூன் விளையாட்டும்!’ |பகுதி 21

நாங்களும் மிகுந்த பரவசத்துடன் ``ஜெய் ஹிந்த்" என்று முழங்கினோம். சற்று முன்பு உணவகத்தில் ஓர் இந்தியர் இன்னோர் இந்தியருடன் கடுமையாகச் சண்டையிட்டுக்கொண்டோம் என்ற குற்றவுணர்வை மனதில் புதைத்துவிட்டு ``ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்’’ என்று முழக்கமிட்டோம்.

நாடோடிச் சித்திரங்கள் | அட்டாரி - வாகா எல்லை
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் | அட்டாரி - வாகா எல்லை
"எத்தனை கோடி கண்ணீர் மண்மீது விழுந்திருக்கும்... அத்தனை கண்ட பின்பும் பூமி இன்னும் பூ பூக்கும்."
- நா. முத்துகுமார்.

பொற்கோவில் மற்றும் ஜாலியன் வாலா தோட்டத்தில் பெற்ற அனுபவங்களோடு அடுத்து நாங்கள் அட்டாரி- வாகா எல்லைக்குப் பயணப்பட்டோம். ரோஸி மற்றும் குடும்பத்தினர் முன்பைவிட உற்சாகமாக இருந்தனர். அவர்கள் ஏற்கெனவே ஓரிரு முறை வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க வைபவத்தைக் கண்டிருந்தனர் என்பதால், அதைக் குறித்த விவரணைகளும் உணர்ச்சி பொங்கும் நாட்டுப்பற்றுக் கதைகள் கூறுவதுமாக ரோஸியின் குடும்பம் எங்களுக்குப் பயணக் களைப்பு தோன்றாவண்ணம் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்தனர்.

நாங்கள் அவ்விடம் செல்வதற்குச் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னால் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை அழிக்க இந்திய விமானப்படை மேற்கொண்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் பங்காற்றியபோது, அவரின் விமானம் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டது. அவரை இரண்டு நாள்கள் சிறைவைத்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு இடமளிக்கா வண்ணம், சமாதான முயற்சியாக அவரை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்புவதாக வாக்களித்தது. நிகழவிருந்த போர் ஒன்று அன்று தடுக்கப்பட்டது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

அட்டாரி-வாகா எல்லையில் இரு நாடுகளின் இரும்புக்கதவுகளும் எப்போது திறக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியர்கள், விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் கதவுகளைக் கடந்து இந்திய எல்லைக்குள் நுழையும் காட்சியை உணர்ச்சிப் பெருக்குடன் கண்டனர். போர் வியூகங்களின் முதற்படியான சமாதான முயற்சியாக அந்நிகழ்வு அரங்கேறியது. ஒரு முறை அட்டாரி- வாகா எல்லைக்குச் சென்று வர வேண்டுமென்று மனம் அப்போது விரும்பியது.

எல்லைகளுக்குத்தான் எவ்வளவு மதிப்பு. நிலங்களின் எல்லைகள், மனதின் எல்லைகள் என எவ்வளவு பரிமாணங்கள். எல்லை மீறுவது, எல்லை வகுப்பது, எல்லை விரிவது இம்மூன்றில் எல்லைகள் விரிவடைவதையே நான் விரும்புவேன்.

எல்லைகளற்ற உலகம் பிறக்க வேண்டும். எல்லைகள் மனிதன் உருவாக்கிய கற்பனை கட்டுப்பாடுகள். மாயக் கோடுகள்.

அம்ரித்சரிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் 'அட்டாரி' கிராமம் இருக்கிறது. அதுவே இந்திய எல்லைக்குள் இருக்கிறது. 'வாகா' பகுதி பாகிஸ்தான் பகுதிக்குட்பட்ட இடம். நாங்கள் அட்டாரியை நோக்கிப் புறப்பட்டோம். இடைப்பட்ட தூரத்தில் மதிய உணவை முடித்துக்கொள்வதாகவும் திட்டமிருந்தது. உலகெங்கும் புகழ்பெற்றுள்ள பஞ்சாபி தாபாவின் உண்மையான தரத்தையும் சுவையையும் குர்தாஸ்பூரின் தாபாவில் சுவைத்துவிட எண்ணி நெடுஞ்சாலையோரத்தில் அமைந்திருந்த பல தாபாக்களில் ஒன்றைத் தேர்வுசெய்து அங்கு சென்றோம்.

எங்களுக்குவேண்டிய உணவை தாபா ஊழியரிடம் பட்டியலிட்டுவிட்டு காத்திருந்தோம். எங்களைத் தொடர்ந்து வேறு சிலரும் அப்போது தாபாவுக்கு வந்தனர். நாங்கள் முதலில் ஆர்டர் செய்திருந்தபோதும் தாபா ஊழியர்கள் எங்களுக்குப் பிறகு வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறினர். எங்களுக்கு உணவு வர தாமதாகிக்கொண்டேயிருந்தது. காரணம் வினவியபோதும் சரியான பதில் வரவில்லை அவர்களிடமிருந்து. நாங்கள் முதலில் குழம்பினோம். ரோஸியின் கணவரும், என் கணவரும் அவர்கள் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டினர். தன்னைப் போன்ற சீக்கியர் ஒருவர் கடிந்துகொண்டதைப் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த தாபா ஊழியரால் வேற்று மாநிலத்து ஆள் கூறும் அறிவுரையைக் கேட்க முடியவில்லைபோலும். அவர் மிகவும் கோபமடைந்தார். "நீங்கள் மதராஸிகள். எங்களுக்கு விருந்தோம்பல் பற்றியும், நன்னடத்தைப் பற்றியும் அறிவுரை கூற வேண்டாம். உங்கள் ஊரில் வெளி மாநிலத்தவரை நீஙகள் எவ்வளவு கேலி செய்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்" என்றார். மதராஸிகளின் குணத்தைப் பற்றி ஒருவன் இழிவாகப் பேசிவிட்டானே என்றதும், என் கணவருக்குச் சினம் தலைக்கேறிவிட்டது. "நீ எவனடா தமிழனை இகழ்ந்து பேச, கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியடா நாங்கள்" என்று அவர்களும் நாங்களும் எதிரெதிர் அணியானோம். ரோஸியும், அவருடைய கணவரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர். அங்கு காரசாரமான விவாதம் தொடர்ந்தது. பொறுமையிழந்த என் கணவர் நாற்காலியைத் தூக்கியெறிந்தார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

தாபாவின் ஊழியர்கள் ஒன்று திரண்டுவிட்டனர். எனக்கு அவரைத் தடுக்க வேண்டுமென்ற எண்ணம் துளியும் எழவில்லை. தவறு செய்தது அவர்கள், மரியாதைக் குறைவாக பேசியதும் அவர்கள், அதனால் நான் சமாதானம் பேச முற்படவில்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நின்றிருந்தேன். ரோஸி என்னை வற்புறுத்தினார். "ஷாலு அவரை அமைதியடையச் சொல்லுங்கள், இல்லையென்றால் நிலைமை மோசமடையும். பஞ்சாபிகள் கோபக்காரர்கள்" என்றார். "நீங்கள் இப்படிக் கூறிவிட்டதாலேயே நான் அவரைக் கட்டுப்படுத்தப்போவதில்லை" என்றேன்.

சண்டை வலுத்தது. இரு பக்கமும் வாக்குவாதம் அதிகரித்தது. வெளிமாநிலத்தில் அவர்களிடம் தனியாகச் சிக்கிக்கொண்டால் அவர்கள் நம்மை எளிதில் வீழ்த்திவிடுவார்கள் என்று தெரிந்தும், நாங்கள் அங்கு சண்டையிட்டுக்கொண்டிருந்தோம். இருபுறமும் வசைமொழிகள் பறந்தன. ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினோம். "நான் தமிழன்டா" என்று மீசையை முறுக்கினார் என் கணவர். அந்த ஊழியன் "அஞ்சு நதியோட தண்ணி குடிச்சு வளர்ந்த பஞ்சாப்காரன்டா நான்" என்றார். தாரிவால் இருவருக்குமிடையே நின்று சண்டையை நிறுத்துமாறு மன்றாடினார். "நானும் பஞ்சாப்காரன்தான் பாருங்கள்... நான் உங்களிடம் அவர் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன். தயவு செய்து சண்டையை நிறுத்துங்கள்’’ என்றார். சண்டை ஒருவழியாக முடிவடைந்தது. வெவ்வேறு மாநிலங்களில் பயணிக்கும்போது இத்தகைய அனுபவங்கள் நேர்வது சாதாரணம்தான் என்றாலும், அது பெருங்கலவரமாக மாறக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதும் நிதர்சனம்.

ஒருவருடைய மொழி, இனம், நிறம், பண்பாடு, உணவு, உடை ஆகிய விஷயங்களில் மற்றொருவர் வரம்பு மீறி தலையிடுவதும், இகழ்ந்து பேசுவதும் இந்தியா போன்ற வெவ்வேறு பிரதேசங்களின் கூட்டமைப்பில் முற்றிலும் ஏற்கவியலாத செயல். "தமிழர்கள் நீங்கள் இந்தியாவைத் துண்டங்களாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் ஒரே இந்தியாவை உருவாக்க நினைக்கிறோம்" என்றார் என்னுடன் பணியாற்றிய ஒடிசாவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். அவர் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பண்டாக்களின் வழிவந்தவர். "சரியாகக் கூறினீர்கள் நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள், இல்லாத ஒன்றை உருவாக்க நினைக்கிறீர்கள். நாங்கள் எப்போதும் எப்படியிருந்ததோ அப்படியே இருக்கட்டுமே, அவரவர் சிறப்போடும் செழிப்போடும் என்கிறோம்" என்றேன். அவ்வளவு நேரம் எங்களுடன் நட்புடனும் பரிவுடனும் நடந்துகொண்ட தாரிவால் மற்றும் ரோஸி தம்பதியரின் அன்பையும் மறக்கச் செய்தது எது என்று பின்னர் யோசித்துப் பார்த்தேன். எதன்மீது தீவிரப் பற்று கொண்டிருக்கிறோமோ அதன் பொருட்டே வீழவும் செய்கிறோம்.

ரோஸியிடம் "மன்னித்து விடுங்கள்" என்றேன். அதன் பிறகு நெடுநேரம் நாங்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. அட்டாரி நெருங்குவதை வழிநெடுகும் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டிப் பலகைகள் உணர்த்தின.

"நீஙகள் இந்தியாவின் ஓர் எல்லைக்கோட்டை நெருங்குகிறீர்கள். எல்லைகளில் நாங்கள் அயராது கண்விழித்திருக்கிறோம், நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென்பதற்காக”
-இப்படிக்கு, எல்லை பாதுகாப்புப் படை(BSF)

என்று ஆங்காங்கே பலகைகளும் சுவரோவியங்களும் காணப்பட்டன. இனம்புரியாததோர் இணக்கம் எங்கள் மத்தியில் தோன்றியது. நாங்களும் ரோஸி குடும்பத்தினரும் இயல்புநிலைக்குத் திரும்பினோம்.

1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அட்டாரி வாகா எல்லை கொடியிறக்க வைபவம், அனுதினமும் கோலாகலமாக அரங்கேறும் ஒரு நிகழ்வாகும். மாலை மூன்று மணியிலிருந்து பார்வையாளர்கள் அரங்கினுள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கிருந்தபடியே முதன்முறையாக பாகிஸ்தான் பகுதியை கண்டபோது மனதில் வெவ்வேறு உணர்வலைகள் எழும்பின. சுதந்திரத்துக்கு முன்புவரை அவர்களுக்கும் நமக்குமிடையே இந்த மதில்கள் இருக்கவில்லையே என்று பெருமூச்சுடன் பேசிக்கொண்டே அரங்கினுள் பிரவேசித்து இருக்கைகள் பிடித்து அமர்ந்துகொண்டோம். நேரம் மாலை ஐந்து நெருஙகுவதற்குள் அரங்கமே நிறைந்து வழிந்தது. அனைவரின் கைகளிலும்தேசியக்கொடி மற்றும் தலையில் தேசியக்கொடி பொறிக்கப்பட்ட தொப்பியும் இருந்தன. சரியாக ஐந்து மணி பதினைந்து நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கியது.

இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் வீரர்களும் பாகிஸ்தானின் பாக் ரேஞ்சர்ஸ் படையின் வீரர்களும் அணிவகுப்பில் பங்கெடுத்தனர். முரசொலி முழங்க இரு நாட்டு வீரர்களும் தத்தமது எல்லைகளிலிருந்தபடியே வெவ்வேறு வகையான அணிவகுப்பு முறைகளைச் செய்து காட்டினர். அரங்கமே அதிரும்படியான கரவொலி நிற்கவே இல்லை. வழக்கமான அணிவகுப்புகளின்படி இல்லாமல் Goose march அல்லது Goose Parade என்ற சிறப்புமிக்க அணிவகுப்பை அப்போது வீரர்கள் நிகழ்த்திக் காட்டுவர். கால்களை நேராக உயர்த்தி, வேகமாகச் சென்று எதிர்ப்படையின் முன் கம்பீரமாக நின்று தமது வீரத்தை வெளிப்படுத்துவர். சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடைபெறும் இந்நிகழ்வு தேசிய கீதம் முழங்க கொடியிறக்கி மரியாதை செய்த பிறகு நிறைவடைகிறது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

அன்று நாங்களும் மிகுந்த பரவசத்துடன் "ஜெய் ஹிந்த்" என்று முழங்கினோம். சற்று முன்பு உணவகத்தில் ஓர் இந்தியர் இன்னோர் இந்தியருடன் கடுமையாகச் சண்டையிட்டுக்கொண்டோம் என்ற குற்றவுணர்வை மனதில் புதைத்துவிட்டு "ஜெய் ஹிந்த்,ஜெய் ஹிந்த்" என்று முழக்கமிட்டோம். பாகிஸ்தான் படைகளைவிட இந்தியப் படைகளே வீரமாகத் தெரிவதாகப் பேசிக்கொண்டோம். அப்புறத்தில் அவர்களும் அதையே கூறியிருப்பர். அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு சிறுவன் அரங்கிலிருந்து அணிவகுப்பு திடலில் பிரவேசித்தான். அவன் கைகளிலிருந்த பலூன் பறந்து மைதானத்தின் நடுவே சென்றுவிட்டது. அவனும் வேகமாக அணிவகுப்பினிடையே புகுந்து சென்று அந்த பலூனை விரட்டிப் பிடிக்க முயன்றுகொண்டிருந்தான். அணிவகுப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க அச்சிறுவன் தனது விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருந்தான். ஒருவழியாக பலூனை அவன் கைப்பற்றவும், கொடியிறக்கும் வைபவம் நிறைவடையவும் சரியாக இருந்தது. நாங்கள் இரண்டுக்கும் சேர்த்து கரவொலிகள் எழுப்பினோம். `எல்லைக் கோடுகளெல்லாம் உங்களுக்குத்தான்... எனக்கல்ல’ என்று அச்சிறுவன் கூறுவதுபோலிருந்தது. ஒலிபெருக்கியில் லதா மங்கேஷ்கரின் தேன் குரலில் `ஏ மேரே வதன் கி லோக்...’ பாடல் ஒலித்தது.

நாங்களும் அப்பாடலை முணுமுணுத்தபடி அங்கிருந்து வெளியேறினோம். மனம் அமைதியானது.

`` `'ஹீர்-ராஞ்சா' கதை தெரியுமா ஷாலு?’’ என்றார் ரோஸி.

பயணம் தொடரும்..!