Published:Updated:

நீங்கா நினைவுகளுடன் நிறைவுற்ற நெடும் பயணம்! - Back பேக் 25

Back பேக்

பழகிப்போய் விட்ட ரயில் பயணத்தின் இடர்களைக் கடந்து, சென்னை வந்து சேர்ந்தேன். வலசை சென்ற பறவை கூடடைவதைப் போன்ற உணர்வு சென்னைக்குத் திரும்பியதும் ஏற்பட்டது. பயணத்தைப் போலவே அதன் முடிவும் பேரற்புதமானது.

நீங்கா நினைவுகளுடன் நிறைவுற்ற நெடும் பயணம்! - Back பேக் 25

பழகிப்போய் விட்ட ரயில் பயணத்தின் இடர்களைக் கடந்து, சென்னை வந்து சேர்ந்தேன். வலசை சென்ற பறவை கூடடைவதைப் போன்ற உணர்வு சென்னைக்குத் திரும்பியதும் ஏற்பட்டது. பயணத்தைப் போலவே அதன் முடிவும் பேரற்புதமானது.

Published:Updated:
Back பேக்

எனது இந்த வடகிழக்குப் பயணத்துக்கு ஆதாரப்புள்ளியாக இருந்ததே மேகாலயாதான். பள்ளத்தாக்குகளும் அவற்றில் வீழும் அருவிகளும் நிறைந்த மேகாலயாவின் பூரண எழிலைக் கண்டு திளைக்க, நாங்கள் சென்ற பிப்ரவரி மாதம் ஏற்றதாக இல்லை. கவுஹாத்திக்கு வந்ததுமே ஆளுக்கு 500 ரூபாய் வீதம் கொடுத்து காரில் ஷில்லாங் சென்றோம்.

வடகிழக்கு மாநிலங்களிலேயே அனைவராலும் அறியப்பட்ட முக்கிய சுற்றுலாத்தலங்கள் கொண்ட மாநிலம் மேகாலயா. அதன் தலைநகரம் ஷில்லாங். மெல்லிய மழைத்தூறலுடனான ஷில்லாங் நோக்கிய அதிகாலை மலைப்பயணம், அற்புதமாக இருந்தது. அதனை முழுமையாக ரசிக்கவியலாதபடி தூக்கம் என்னை ஆட்கொண்டிருந்தது. ஆங்காங்கே விழிப்பு தட்டுகையில் மழைச்சாலையின் அழகைக் கண்டு நெகிழ்வதும் பின்னர் தூங்குவதுமாக இருந்தேன்.

ஷில்லாங்கின் புகழ்பெற்ற போலீஸ் பஜாரில் எங்களை இறக்கி விட்டனர். ஷில்லாங் நகரின் அமைப்பும், குளிரும், ஊட்டியை ஒத்திருந்தன. மலைப்பிரதேச நகரங்களுக்கே உரித்தான ஓர்மை அது. போலீஸ் பஜார் ரவுண்டானாவில் இருந்து கீழிறங்கும் சாலை ஒன்றில் அறை தேடி அலைந்தோம்.

மேகாலயா
மேகாலயா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

களைப்பு மிகுந்திருந்தபடியால் ஏதேனும் ஒரு விடுதியில் சொல்கிற விலைக்கு அறை எடுத்து விடலாம் என்ற நிலையில்தான் இருந்தேன். 1500 ரூபாய்க்கு குறைவாக விடுதிகளே இல்லாத நிலையில் ஆயிரம் ரூபாய்க்கு விடுதி ஒன்று கிடைத்ததும் அங்கேயே தங்கலாம் என்றேன். ஆஷு இன்னும் குறைவான வாடகையில் தேடலாம் என்றான். விசாரித்தவரையில் இதற்கும் குறைவாக விடுதி கிடைப்பது சந்தேகம்தான் எனக்கூறி அந்த விடுதியிலேயே அறை எடுத்தோம்.

ஒரு மணிநேர தூக்கத்துக்குப் பிறகு, எனக்குப் பசிக்க ஆரம்பித்தது. ஆஷு தூங்கிக் கொண்டிருந்ததால் நான் மட்டும் தனியாக போலீஸ் பஜார் ரவுண்டானாவுக்குச் சென்றேன். வழியில் டாக்சி ஓட்டுநர்கள், சிரபுஞ்சி செல்ல அழைத்துக் கொண்டிருந்தனர். நான் ஓர் உணவகத்துக்குச் சென்று இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டுவிட்டுத் திரும்புகையில் டாக்சி ஓட்டுநர்களிடம் சிரபுஞ்சி செல்வதற்குண்டான தொகையை விசாரித்தேன். 2500 ரூபாய்க்கு ஷில்லாங்கிலிருந்து சிரபுஞ்சி வரை உள்ள முக்கியமான 7 இடங்களுக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினர். நான் விடுதி வந்து ஆஷுவிடம் சொன்னபோது வாடகை அதிகமாக இருக்கிறது என்றான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேகாலயாவில் எங்களுக்கு இருந்தது, அந்த ஒருநாள் மட்டுமே. அடுத்தநாள் மாலைக்குள் நாங்கள் கவுஹாத்திக்குச் சென்றாக வேண்டும் என்பதால், இந்த ஒரு நாளில் சிரபுஞ்சி வரையிலும் போய் வர, இது நற்தேர்வாக இருக்கும் என, ஆஷுவிடம் சொன்னேன். எங்கள் முன், இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று சிரபுஞ்சி செல்வது, மற்றொன்று டபுள் ரூட் பாலம் மற்றும் டவ்கி நதிக்குச் செல்வது. சிரபுஞ்சி செல்வதைக் காட்டிலும் டவ்கி செல்வதற்கான வாடகை அதிகம். பள்ளி நாள்களில் உலகில் அதிக அளவில் மழை பெய்யும் ஊர் சிரபுஞ்சி என்று படித்திருந்ததால் அங்கே செல்லலாம் என்று சொன்னேன்.

கார் வாடகையை 500 ரூபாய் குறைத்து 2 ஆயிரம் ரூபாய்க்குப் பேசி முடித்தேன். ஆஷு இந்தப் பயணத்தில் ஈடுபாடற்றவனாக இருந்தான். எனக்குமே கூட அப்பயணத்தில் முழுமையான ஒட்டுதல் இல்லை. மழைக்காலத்தில்தான் மேகாலயாவின் பூரணத்துவ அழகு வெளிப்படும். நாங்கள் சென்ற குளிர்காலத்தில் அருவிகளில் நீர் ஒழுகிக்கொண்டிருந்தது. செவன் சிஸ்டர்ஸ் அருவியில் தண்ணீர் கோடு கோடாய் விழுந்து கொண்டிருந்தது. சில இடங்களுக்கு ஆஷு காரை விட்டு இறங்கிக் கூட வரவில்லை.

சுண்ணாம்பு குகை
சுண்ணாம்பு குகை

மாவ்ஸ்மாய் சுண்ணாம்புக்குகைக்குச் சென்றது மட்டுமே அந்தப் பயணத்தில் சிறு ஆறுதலாக இருந்தது. சுண்ணாம்புக் கல்லால் ஆன அந்த குகை, நம்மை எங்கு அழைத்துச் செல்கிறது என்கிற புதிரோடே பயணப்படுவது புதுவித அனுபவத்தைக் கொடுத்தது. சுண்ணாம்புக் கற்கள் சில இடங்களில் வழுவழுப்பாகவும், சில இடங்களில் சொரசொரப்பாகவும் இருந்தன. நாங்கள் சென்ற போது லேசாக மழைபெய்தது மற்றுமோர் ஆறுதல். சிரபுஞ்சி இப்போது சோரா என்றழைக்கப்படுகிறது. அது சிறியதொரு கிராமமாக இருந்தது. நான் உருவகப்படுத்தியிருந்ததைப் போல எதையும் காணவில்லை. மேகாலயா குறித்த சித்திரம் முற்றிலும் கலைவதை நான் விரும்பவில்லை.

2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில், மேகாலயா செல்லத் திட்டமிட்டிருந்தேன். அப்போது அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து வீழ்ந்து அதன் சாரல் மேலெழும் அழகினைக் காண முடியாதது சிறு ஏமாற்றமாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டேன். பேசாமல் டவ்கி நதிக்காவது சென்றிருக்கலாம் என்று ஆஷு சொன்னான். டவ்கி என்பது மிகத்தூய்மையான ஒரு நதி. பச்சை படர்ந்த படிகத்தைப் போன்றிருக்கு அந்நதியில் படகு சவாரி செய்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். அது பற்றி யோசிப்பது இனி அர்த்தமற்றது என்றே எனக்குப்பட்டது.

மேகாலயாவில் மாட்டுக்கறியும், பன்றிக்கறியும் முக்கிய உணவுகளாக இருக்கின்றன. சிரபுஞ்சியைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் ஓர் உணவகத்துக்கு டிரைவர் அழைத்துச் சென்றார். நான் சாப்பாட்டுடன் பன்றிக்கறி வாங்கிச் சாப்பிட்டேன். எல்லாம் முடிந்து மீண்டும் எங்கள் விடுதிக்கு வரும்போது மாலை ஆகியிருந்தது. கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுத்த பிறகு இரவு சாப்பாடு வாங்க வெளியே வந்தேன். மழை கொட்டிக்கொண்டிருக்க நனைந்தபடியே போலீஸ் பஜார் ரவுண்டானாவுக்குச் சென்றேன். அங்கே வரிசையாக சாலையோரக்கடைகளில் மாட்டுக்கறி, பன்றிக்கறி, ரொட்டி விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த மழையிலும் போர்க் பார்பிக்யூ தயாரித்துக் கொண்டிருந்தனர். நான் பன்றிக்கறி, மாட்டுக்கறியுடன் ரொட்டி வாங்கிச் சென்று சாப்பிட்டேன். ஆஷு எதுவும் சாப்பிடவில்லை. அவன் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியிருந்தது தெரிந்தது.

டவ்கி நதி
டவ்கி நதி

அடுத்த நாள் காலை எழுந்து குளித்துத் தயாராகி விடுதியைக் காலி செய்தோம். போலீஸ் பஜார், ஷில்லாங்கின் புகழ்பெற்ற வணிகத் தலம். வரிசையாக கடைகள் நீண்டிருக்கும் போலீஸ் பஜாரில் உலவிய போது, நண்பர்களுக்காக 10 கீ செயின்கள் வாங்கினேன். இருவருமே களைத்திருந்தோம். சிரபுஞ்சி பயணம் தந்த ஏமாற்றம் எங்களை மேலும் சோர்வாக்கியிருந்தது. வந்தோம் பார்த்தோம் என்று நினைத்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வு எங்கள் இருவரிடமும் நிலை கொண்டிருந்ததை உணர்ந்தேன். போலீஸ் பஜாரில் வெறுமனே சுற்றி நேரத்தைக் கடத்திய பிறகு, ஜீப் ஒன்றில் 300 ரூபாய் கொடுத்து ஷில்லாங்கிலிருந்து கவுஹாத்திக்குச் சென்றோம்.

கவுஹாத்தியில் இருந்து ஆஷு, அசாம் மாநிலத்தின் டிபுஹருக்குச் செல்ல ரயில் முன்பதிவு செய்திருந்தான். நான் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரிக்குச் செல்ல, ரயில் முன்பதிவு செய்திருந்தேன். எனக்கு முன்னரே இரவு 9 மணிக்கு ஆஷுவுக்கு ரயில் என்பதால், அவனை ரயிலில் ஏற்றிவிட்டு கட்டியணைத்து விடை கொடுத்தேன். 5 நாள்கள் உடன் பயணித்த துணைவனைப் பிரிகிற அத்தருணத்தில், மனம் சற்றே கனமாகியிருந்தது. அடுத்த நாளான 27ம் தேதி மதியம், ஜல்பைகுரியில் இருந்து சென்னைக்கு ரயில் முன்பதிவு செய்திருந்தேன். சிக்கிம் மாநிலம் கேங்டாக் செல்வதோடு பயணத்தை நிறைவு செய்வதாகத் திட்டமிட்டு இருந்ததால், ஜல்பைகுரியில் இருந்து சென்னைக்கு ரயில் முன்பதிவு செய்திருந்தேன்.

மேகாலயா
மேகாலயா

பயணத்தினூடே திட்டம் மாறிவிட்ட படியால், சிக்கிமுக்கு பதிலாக அருணாசல பிரதேசத்துக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. கவுஹாத்தியில் இருந்து ஜல்பைகுரிக்கு அதிகாலையிலேயே சென்று விட்டதால், ஜல்பைகுரியை ஒட்டியுள்ள மாநகரான சிலிகுரியில் மதியம் வரைக்கும் சுற்றித்திரிந்தேன். சென்னையை நோக்கிய பயணத்துக்கும், எனக்கு RAC தான் உறுதியாகி இருந்தது. பிறகென்ன சொல்வது, பழகிப்போய் விட்ட ரயில் பயணத்தின் இடர்களைக் கடந்து, சென்னை வந்து சேர்ந்தேன். வலசை சென்ற பறவை கூடடைவதைப் போன்ற உணர்வு சென்னைக்குத் திரும்பியதும் ஏற்பட்டது. பயணத்தைப் போலவே அதன் முடிவும் பேரற்புதமானது.

முற்றும்