Published:Updated:

ஆசியாவின் முதல் பசுமைக்கிராமம்; கொனோமாவில் ஒரு நாள்! - Back பேக் - 7

Back பேக்

அந்நினைவுத் தூணில் இருந்த கல்வெட்டில் `நாகாக்கள் இந்தியர்களோ இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியினரோ அல்லர்' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாகாலாந்து மக்கள் தங்களைத் தனி நாடாகவே அறிவித்துக்கொண்டு `Federal government of Nagaland' என ஓர் அரசாட்சியே நிகழ்த்தியிருக்கின்றனர்.

ஆசியாவின் முதல் பசுமைக்கிராமம்; கொனோமாவில் ஒரு நாள்! - Back பேக் - 7

அந்நினைவுத் தூணில் இருந்த கல்வெட்டில் `நாகாக்கள் இந்தியர்களோ இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியினரோ அல்லர்' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாகாலாந்து மக்கள் தங்களைத் தனி நாடாகவே அறிவித்துக்கொண்டு `Federal government of Nagaland' என ஓர் அரசாட்சியே நிகழ்த்தியிருக்கின்றனர்.

Published:Updated:
Back பேக்

இப்பயணத்தின் 5-ம் நாளான அன்று சனிக்கிழமை. செவ்வாய்க்கிழமை சென்னையில் ரயில் ஏறியவன் வியாழன் இரவு கோஹிமா வந்தேன். வெள்ளிக்கிழமை கிசாமா கிராமத்துக்குச் சென்று வந்த பின்னர், சிறப்பான தூக்கம் வாய்க்கப்பெற்றது. சனிக்கிழமை காலை எழுந்ததுமே இன்றைக்குத்தான் கோஹிமாவில் எனது இறுதி தினம் என்பதை எனது பயணத்திட்டத்தில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். நாகாலாந்து மக்களை கோஹிமா என்னும் தலைநகரிலிருந்து மட்டுமே புரிந்துகொள்ள முடியாது என்பதால் இம்மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஒரு சமூகத்தின் அசலான முகம் துல்லியமாக வெளிப்படுவது கிராமங்களில்தான் என்று நினைக்கிறேன். சரி, எந்த கிராமத்துக்குச் செல்வது என்கிற கேள்வி அடுத்தபடியாக எழுந்தது. கூகுளில் தேடியபோது கொனோமா என்கிற கிராமத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆசியாவின் முதல் பசுமைக்கிராமம் என கொனோமா கிராமம் குறிப்பிடப்படுகிறது. கோஹிமாவிலிருந்து கொனோமா 20 கி.மீ தொலைவில் இருக்கிறது. அக்கிராமத்துக்குச் செல்வது எனத் தீர்மானித்தேன்.

கொனோமா
கொனோமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னை கிசாமா கிராமத்துக்குக் கூட்டிச் சென்ற பைக் டாக்சி டிரைவர் சாலமனுக்கு போன் செய்து மும்முனைச் சந்திப்புக்கு வரச் சொன்னேன். ஒரு நாள் பயணத்திலேயே சாலமன் எனக்கு சற்று அணுக்கமானவனாகிவிட்டான். போக, அவனைக் கையாள்வதும் எளிதாக இருந்ததால் அவனையே திரும்ப அழைத்தேன். அவன் வர இயலாத காரணத்தால் அவனின் நண்பனை அனுப்பி வைத்திருந்தான். அந்த நண்பன் சொன்ன பெயர் நினைவில் நிற்கவில்லை. ஆகவே அவன் பெயரை ஜான்சன் என்று வைத்துக்கொள்வோம். கொனோமா கிராமத்துக்குக் கூட்டிச் செல்ல ஜான்சன் என்னிடம் 700 ரூபாய் கேட்டான். எத்தருணத்திலும் நான் பேரம் பேசாமல் இருந்ததில்லை. அது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருக்கிறது. ஜான்சனிடம் 600 ரூபாய்க்குப் பேசி முடித்தேன். நாங்கள் கோஹிமாவிலிருந்து கிளம்பும்போதே மணி நண்பகல் 12-ஐ கடந்துவிட்டது. உச்சிவெயில் ஏறியிருந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. மென்மையான கதகதப்பைக்கூட அவ்வெயில் அளிக்கவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நகரைத் தாண்டுகிற வரையில் இரண்டு கி.மீ தொலைவுக்கு சாலை நல்ல நிலையில் இருந்தது. கொனோமா கிராமத்துக்குச் செல்லும் மலைப்பாதை முழுக்கவே எங்கும் தார்ச்சாலை இல்லை. சீரற்ற மண் சாலையில் டியோ பைக்கில் நாங்கள் சென்றோம். சாலை நெடுக கற்களில் முட்டி ஏறுகையில் உடலே குலுங்கும். நான் 83 கிலோ... ஜான்சன் எப்படியும் 95 கிலோ இருப்பான் என்று தோன்றியது. எங்கள் எடையைத் தாங்கிக்கொண்டு, குண்டும் குழியுமான அம்மலைப் பாதையில் கியர் இல்லாத டியோ பைக் பயணப்பட்டது சற்று வியப்புக்குரியதாக இருந்தது. கற்கள் மிகுந்த இடங்களிலும், உயரமான பகுதிகளிலும் ஏறும்போது வண்டி திணறியது. அப்போது நான் இறங்கிவிட்டு கொஞ்ச தூரம் கடந்த பிறகு, ஏறிக்கொள்வேன். இப்படியாகத்தான் அம்மலைப்பாதை முழுவதும் பயணப்பட்டோம். வண்டி தூக்கித் தூக்கி அடித்ததில் முதுகுவலி ஏற்பட ஆரம்பித்தது. இடையில் சில இடங்களில் மண் சாலை சேறாகக் கிடந்தது. செல்கிற வழியில் ஒரு காட்டாற்றைக் கடந்தோம். அதைக் கடப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாலத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்துகொண்டிருந்தன.

கொனோமா கிராமத்தில் காணப்பட்ட கல்வெட்டு
கொனோமா கிராமத்தில் காணப்பட்ட கல்வெட்டு

வழி நெடுக எங்கும் மரங்கள் வெட்டப்பட்டுக் கிடந்தன. கொனோமா கிராமத்தின் நுழைவாயிலுக்குச் செல்கையில் மணி 1 ஐ தாண்டிவிட்டது. பனி மூட்டம் வேகமாகப் பரவி வந்தது. கொனோமா உங்களை வரவேற்கிறது என்கிற வளைவுக்கு முன்னே ஓர் நினைவுத்தூணும், காட்சி முனையும் அமைக்கப்பட்டிருந்தன. அந்நினைவுத் தூணில் இருந்த கல்வெட்டில் `நாகாக்கள் இந்தியர்களோ இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியினரோ அல்லர்' என ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. நாகாலாந்து மக்கள் தங்களைத் தனி நாடாகவே அறிவித்துக்கொண்டு `Federal government of Nagaland' என ஓர் அரசாட்சியே நிகழ்த்தியிருக்கின்றனர். அதன் முதல் அதிபரின் பெயரும் 1956 - 1959 வரையிலான அவரது பதவிக்காலமும் அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு தமிழகத்தில் தி.மு.க அரசு, மத்திய அரசு என்கிற சொல்லுக்கு மாற்றாக `ஒன்றிய அரசு' என்கிற பதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். 60 ஆண்டுகளுக்கு முன்னரே நாகாலாந்து மக்கள் தாங்கள் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியினர் அல்ல என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த நினைவுத்தூணை அடுத்து இருந்த காட்சி முனைக்குச் சென்றேன். அதன் முகப்பில் நாகா மக்களின் பண்பாட்டுச் சின்னங்கள் மரத்தால் செதுக்கப்பட்டு பொருத்தப்பட்டிருந்தன. அம்முனையிலிருந்து பனி படர்ந்திருக்கும் மலைக்காட்சியைப் பார்க்க முடிந்தது. பனி வேகமாக இறங்கி வருவதாக ஜான்சன் சொன்னான். நேரத்தைக் கடத்தாமல் 4 மணிக்கெல்லாம் கோஹிமாவை அடைந்து விடுவது நல்லது என்றான். ஏனென்றால் அதற்கு மேல் இருட்டத் தொடங்கிவிடும். படுமோசமான அச்சாலையில் இருளில் பயணம் செய்வதன் சாத்தியத்தை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அம்மலைப் பாதையின் பக்கவாட்டில் பெரும்பாலான இடங்களில் எந்தத் தடுப்பும் இல்லை. கொஞ்சம் தவறினாலும் சரிவில்தான் விழ வேண்டும். நாம் எங்கு பயணம் செய்தாலும் முன் தீர்மானங்களையெல்லாம் தூக்கி வீசிவிட்டு அங்குள்ள சூழலுக்கேற்ற முடிவுகளை எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும். ஜான்சன் சொன்னது சரிதான் என்று எனக்குப் பட்டதும் உடனே அங்கிருந்து கிராமத்துக்குள் பயணம் செய்தோம். கொனோமா நுழைவாயிலில் இருந்து 5 கி.மீ தொலைவில் கொனோமா கிராமம் இருக்கிறது.

கொனோமா கிராம வீடுகள்
கொனோமா கிராம வீடுகள்

நாகாக்கள் வேட்டையாடும் தொழிலை முதன்மையாகக் கொண்டிருந்தவர்கள் என முன்னரே சொல்லியிருந்தேன். இந்த கொனோமா கிராமத்தைச் சேர்ந்த அங்கமி பழங்குடிகள்தான் முதன்முறையாக வேட்டையாடும் தொழிலை முற்றிலுமாகக் கைவிட்டு விவசாயத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். வேட்டைச் சமூகத்திலிருந்து உற்பத்திச் சமூகத்துக்கு பரிணமித்த முதல் கிராமம் என்பதாலேயே கொனோமா, ஆசியாவின் முதல் பசுமைக் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. 50 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி அக்கிராமத்துக்குள் சென்றோம். கொனோமாவில் சிமென்ட் கட்டடங்கள் குறைந்த அளவிலேயே இருந்தன. பெரும்பாலான வீடுகள் மரத்தாலும், தகர ஷீட்டாலும் அமைக்கப்பட்டிருந்தன. சாலை ஓரத்தில் எங்கும் மரக்கட்டைகள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. வீடு கட்டுவது மற்றும் இன்ன பிற தச்சு வேலைகளுக்கும், சமையல் அடுப்புக்காகவும் மரங்களை அவர்கள் வெட்டிப் பயன்படுத்துகின்றனர்.

அக்கிராமத்தின் சரிவுப் பகுதியில் விளைநிலத்தைப் பார்க்க முடிந்தது. மலைப்பகுதிகளில் அமைக்கப்படும் வீடுகளைப் போலவே மேலிருந்து கீழே பல அடுக்குகளாக அவை அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் நெற்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. நான் சென்றது நடவுக்கு உகந்த காலம் அல்ல. பனியில் பயிர்கள் கருகிவிடும் என்பதால் நடவு மேற்கொள்ளப்படாமல் அவை வெற்று நிலங்களாக இருந்தன.

இதுவே பயிர்க்காலத்தில் சென்றிருந்தால் அந்நிலக்காட்சி முழுவதும் பச்சையாகத் தெரிந்திருக்கும். ஊரின் மையத்தில் ஒரு தேவாலயம் இருந்தது. அங்கேயும் சில நினைவுத்தூண்கள் இருந்தன. நாகாலாந்து தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தின் பொருட்டு 1956-ம் ஆண்டிலிருந்து 1992-ம் ஆண்டு வரையிலும் உயிர்த்தியாகம் செயத 46 பேரின் பெயர்கள் பதிக்கப்பட்ட நினைவுத்தூணும் அவற்றில் அடக்கம்.

மணி 2 ஐ தாண்டிவிட்டதால் பசிக்க ஆரம்பித்தது. சாப்பிடலாம் என்றால் அங்கே உணவகம் என்று ஏதுமில்லை. ஒரே ஒரு டீக்கடை மட்டுமே இருந்தது. அங்கே டீ சொல்லிவிட்டு, சிப்ஸ் பாக்கெட் வாங்கிச் சாப்பிட்டு கொஞ்சம் பசியாறினேன். மக்கள் நடமாட்டத்தையே அக்கிராமத்தில் பெரிதாகப் பார்க்க முடியவில்லை. கொனோமாவிலிருந்து திரும்புகிற வழியில் ஒரு மூதாட்டி கூடையில் மரக்கட்டைகளைச் சுமந்து செல்வதையும், சிறுவர் கூட்டமொன்றையும் பார்க்க முடிந்தது.

நினைவுத்தூண்
நினைவுத்தூண்

திரும்புகிற வழியிலும் அதே வாதையைத்தான் எதிர்கொண்டோம். அச்சாலையில் இறங்கி கோஹிமா வந்து சேர்வதற்குள் முதுகுவலி மிகையாக இருந்தது. உண்மையில் அந்தப் பாதையில் என்னைக் கூட்டி வந்தமைக்காக ஜான்சனுக்கு நான் நன்றிக்கடன்பட்டே தீர வேண்டும். கோஹிமா நகருக்குள் நுழைந்து மும்முனைச் சந்திப்புக்குச் செல்வதற்கு 2 கி.மீ முன்னரே வண்டி சடாரென நின்றது. என்னவென்று ஜான்சனிடம் கேட்க, அவன் இறங்கி முன் டயரை பார்த்துவிட்டு பஞ்சர் என்று சொன்னான். சாலமனுக்கு கால் செய்து அவனை வரச்சொன்னான். நான் 600 ரூபாய் பணத்தை அவனுக்குக் கொடுத்து விட்டு `நம்ம நேரம் நல்லாவே இருக்கு... வர்ற வழியில பஞ்சர் ஆகியிருந்தா நம்ம நிலைமை என்னவாகியிருக்கும்" என்று சொன்னேன். அவனும் அதை ஆமோதிப்பதைப் போலச் சிரித்தான். விடுதிக்கு நடந்தே செல்லலாம் என அவனிடமிருந்து விடைபெற்று நடக்க ஆரம்பித்தேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism