சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

ஒலிகளின் உன்னதம் ‘ஸ்வரம்’

பாம்பூ குரோவ்
பிரீமியம் ஸ்டோரி
News
பாம்பூ குரோவ்

இசை

கிழக்குக் கடற்கரைச் சாலையெங்கும் வேகவேகமாகச் சாலையைக் கடக்கும் பாதசாரிகள்போல, காற்று வீசிக் கடந்தபடியிருந்தது.அந்தச் சாலையில் புதுச்சேரிக்கு 10 கி.மீ முன்பாக சிறிய சாலை வலப்புறம் திரும்பியது. ஐந்து நிமிடங்கள் வாகனத்தில் பயணிக்க, சாலை நம்மை ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் கொண்டுபோய் நிறுத்துகிறது.

ஒலிகளின் உன்னதம் ‘ஸ்வரம்’
ஒலிகளின் உன்னதம் ‘ஸ்வரம்’

நெருக்கமான மரங்களால் படர்ந்த நிழல் நம்மையும் நிலத்தையும் குளிர்விக்க, அந்த கிராமத்தினுள் நுழைய அனுமதி பெற வேண்டியிருந்தது. அனுமதி பெற்றுக்கொண்டு நுழைந்தோம். செம்மண் சாலைகள், மின்சாரக் கம்பிகள் இல்லாத ஆகாயம், நகரின் கூச்சல்களுக்கு இளைப்பாறுதல் தரும் பறவைகளின் சத்தம், காலடிச் சத்தங்களுக்கு ஓடி ஒளியும் சிறு சிறு விலங்குகள், புதிய முகங்கள் என்ற வித்தியாசமில்லாமல் சிநேகபாவம் காட்டிச் சிரிக்கும் அந்நிய தேசத்து முகங்கள், ‘வெல்கம் டு ஆரோவில்...’ என்று நம்மை வரவேற்றன.

1954-ம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீ அன்னை’ என்று தம் சீடர்களால் போற்றப்படும் மிரா அல்பாசா, தன் கனவு நிலம் பற்றிய ஒரு கருத்தை வெளியிட்டார். அதன்படி, `இந்த உலகிலிருக்கும் எந்த நாடும் சொந்தம் கொண்டாடாத ஒரு நிலம் வேண்டும். அங்கு வாழும் மக்கள், உலகாயதமான விஷயங்களை விட்டுவிட்டு விழுமியங்களுக்காக வாழ வேண்டும். அங்கு கல்வி என்பது வேலைவாய்ப்புக்கானதல்ல.

ஒலிகளின் உன்னதம் ‘ஸ்வரம்’
ஒலிகளின் உன்னதம் ‘ஸ்வரம்’

அங்கு கற்பது என்பது தேர்வு எழுதிப் பட்டம் பெறுவதற்கானதல்ல. அது, தன் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், இந்த உலகுக்குச் சேவை செய்யவும் பயன்படும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் அந்தச் சமூகம் மனித உறவுகளால் செழித்து வளர்ந்து, ஓர் ஆரோக்கியமான சமூகமாக இருக்கும். அதுவே என் கனவு’ என்று அன்னை உயர்வுதாழ்வற்ற உன்னதமான சமூகம் குறித்த தன் கனவை வெளிப்படுத்தினார். ஆரோவில் தொடங்கப்பட்டதும் அந்தக் கனவு மெள்ள மெள்ள மெய்ப்பட ஆரம்பிப்பதையும் அவரே உணர்ந்தார்.

ஒலிகளின் உன்னதம் ‘ஸ்வரம்’
ஒலிகளின் உன்னதம் ‘ஸ்வரம்’

இயற்கையோடு இணைந்த வாழ்வை முன்னிலைப்படுத்தும் ஆரோவில் கிராமத்தில் பிரமாண்டமான மாத்ரி மந்திர், சூரிய சக்தியால் இயங்கும் மிகப்பெரிய சமையற்கூடம், தேர்வுகளற்ற பள்ளிகள், மது விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கான தடை என்னும் பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று, ‘ஸ்வரம்’ - இசைக்கருவிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். ஆரோவில் கிராமத்துக்குள் சுமார் இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்து ஸ்வரத்தை வந்தடையலாம்.

சீங்கிங் ஸ்டோன்
சீங்கிங் ஸ்டோன்

இயந்திரங்களின் இரைச்சலை மட்டுமே கேட்டுக் கேட்டுச் சலித்த தலைமுறைக்கு, ஒலியின் உன்னதங்களை அறிமுகம் செய்துவைக்கும் ஓர் இடம் ‘ஸ்வரம்.’ இன்று இசை வணிகமயமாகிவிட்டது. ஸ்வரம் அதிலிருந்து விலகி, இசையின் அந்தராத்மாவான ஒலியின் பரிணாமங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. ஒருபுறம் கருவிகள் செய்யும் தொழிற்கூடம். மறுபுறம் கருவிகளைப் பார்வைக்கு வைத்திருக்கும் விற்பனைக்கூடம் மற்றும் இசைச் சிகிச்சை அறை. இரண்டுக்கும் நடுவில் ஒரு பூங்கா. அதில் நவீனக் கலைச் சிற்பங்கள் போன்ற சில அமைப்புகள். அவை அனைத்தும் காட்சிப்பொருள்கள் அல்ல, இசைக்கருவிகள் என்பது அவற்றைச் சிலர் சோதித்துப் பார்த்தபோது புரிந்தது.

பாம்பூ குரோவ்
பாம்பூ குரோவ்

அங்கு அரைவட்ட வடிவில் இருந்த பிரமாண்ட யாழ் போன்ற அமைப்பிலிருந்த ஒரு கருவியின் முன்பு நின்றிருந்த ஒருவர் அதில் முறுக்கியிருந்த தந்தியை மெள்ள மீட்டினார். அதன் அதிர்வின் ஒலியில், மேலே மரத்திலிருந்த சில பறவைகள் ஒரு கணம் படபடத்து அமர்ந்தன. அடுத்தடுத்து இருந்த தந்திகளையும் அவர் மீட்ட, மெல்லொலியிலிருந்து வல்லொலிவரை எழுந்து அடங்கின. அந்தக் கருவியின் பெயர் ‘போ ஹார்ப்’ (Bow Harp). இப்படி அந்தப் பூங்கா முழுவதும் உலோகத்தால், மரத்தால் செய்யப்பட்ட ஏராளமான கருவிகள். குறிப்பாக உலோகக் குழாய்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஆர்கன்கள், முரசம்போல ஒலிக்கும் பெரிய உலோகத்தட்டு, கற்கள், உலோகங்கள், மரங்கள், மூங்கில்களால் செய்யப்பட்ட ஸைலோபோன்கள் (Xylophone) போன்ற பல்வேறுவிதமான இசைக்கருவிகள் அங்கு அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து வெளிப்படும் ஒவ்வோர் இசையும் செயற்கைத் தன்மையின்றி இயற்கையின் ஏதோ ஓர் ஒலியை நகல் செய்வதாகவே இருந்தது.

குறிப்பாக, உயரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது ஒரு டிரம். அதில் ஸ்பிரிங் போன்ற பெரிய தொங்கும் கம்பி. அந்தக் கம்பியைச் சுழற்றிவிட, புயல் காற்றுச் சுழன்றடிக்கும் சத்தம் எழுகிறது. இதற்குப் பெயர், `ஸ்ட்ராம் டிரம்’ (Strom Drum). இப்படிப் பிரபஞ்சத்தின் பல்வேறு ஒலிகளைப் பிரதி செய்யும் இந்த இசைக்கருவிகளைக் கண்டு வியந்தபடி அந்தத் தொழிற்கூடத்துக்குள் நுழைந்தோம்.

ஒலிகளின் உன்னதம் ‘ஸ்வரம்’

அங்கு பணியாற்றும் பெரும்பான்மையானவர்கள் உள்ளூர் இளைஞர்கள். ஒரு சிற்பியின் லாகவத்தோடு அவர்கள் அந்தக் கருவிகளை மெருகேற்றிக்கொண்டிருந்தார்கள். `அவற்றில் பல மிகவும் நுட்பமானவை. ஒரு சிறு தவறுகூட அந்தக் கருவியின் தன்மையைச் சிதைத்துவிடும்’ என்றார் உடன்வந்தவர். அதனால் அவர்கள் மிகுந்த கவனத்தோடு வேலை செய்துகொண்டிருந்தனர். தொழிற்கூடத்தைப் பார்வையிட்டுவிட்டு எதிரிலிருக்கும் விற்பனைக் கூடத்துக்குள் வந்தோம். அங்கே நம்மை அன்புடன் வரவேற்றார் அந்த இசைக்கூடத்தின் இயக்குநர்களில் ஒருவரான அரோலியோ (Aurelio).

``ஸ்வரம் உருவானது எப்படி?’’ - கேள்வியை அவர் முன்வைத்தோம். 

“பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் இளைஞர்களைக்கொண்டு இங்கு கலாசார மையம் ஒன்றைத் தொடங்கினோம். அந்தக் கலாசார மையத்தின் மூலம் இந்த மண்ணின் நாட்டுப்புற நிகழ்த்துகலை வடிவங்களான இசை, நாடகம்,  நடனம் ஆகியவற்றை இளைஞர்களுக்குப் பயிற்றுவித்தோம். அந்தக்காலத்தில் உள்ளூர் இளைஞர்கள் பெரும்பான்மையானவர்கள் வேலைவாய்ப்பில்லாதவர்களாக இருந்தார்கள். `அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்; அதே நேரம் கலைகள் சார்ந்த புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று முடிவுசெய்து இந்த அமைப்பை ஏற்படுத்தினோம்.

பவ் ஹார்ப்
பவ் ஹார்ப்

இந்தக்காலத்தில் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலை குறித்த எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாறுகிறார்கள். இந்தியாவின் கலைகள் 2,000 ஆண்டுப் பாரம்பர்யம் கொண்டவை. சிற்பங்களைச் செய்வதற்கென்று இங்கு கலைப் பரம்பரையினர் இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரும் பாதுகாப்போர் இல்லாமல் இந்தக் காலத்தில் வேறு வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள். நாங்கள் கலையை நோக்கி இந்தத் தலைமுறை இளைஞர்களைத் திருப்ப முயன்றோம். அதுதான் ஸ்வரமாக மலர்ந்தது.

வேலைவாய்ப்பு, கலைகளை முன்னெடுப்பது ஆகியவற்றோடு முக்கியமாக இசையின் மூலம் நோய்களை குணப்படுத்தும் ஹீலிங் தெரப்பியை முன்னெடுக்க விரும்பினோம். தமிழ் இசையின் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பர்யத்தில் ஒளிந்திருக்கும் சில ரகசியங்களை ஆய்வு செய்தோம். தமிழ் இசை அறிஞர்களோடு கலந்து பேசினோம். பழங்காலங்களில் இசை, கோயில்களிலும் பிற இடங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டது. அவற்றில் பல மருத்துவ நன்மைகளும் இருந்தன. இன்று அத்தகைய இசை நிகழ்த்துதல்கள் மிகவும் குறைந்துவிட்டன. நாங்கள் சிலவற்றை மீட்டுருவாக்கம் செய்ய விரும்பினோம். புதிய இசைக்கருவிகளை வடிவமைத்தோம். அவற்றின் மூலம் குணப்படுத்தும் சிகிச்சை முறையை உருவாக்கினோம்.

மெட்டல் ஸைலோபோன்
மெட்டல் ஸைலோபோன்

இங்கு மேலே ஓர் அறையிருக்கிறது. அங்கு புத்துணர்ச்சியூட்டும் இசை சிகிச்சையைக் கொடுக்கிறோம். குறிப்பாக, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசைச் சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதைக் கண்டிருக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இங்கு எங்களோடு கைகோத்துச் செயல்படும் கார்த்திக், ஞானவேல், மகேஷ் மற்றும் உள்ளூர் இளைஞர்களின் வாழ்க்கை மேம்பட்டுவருகிறது. இது முக்கியம் என்று நினைக்கிறேன். இங்கு நாங்கள் முன்னெடுப்பது இந்த மண்ணின் மரபைத்தான். வளமான அந்த மரபு எங்களைப் போன்ற வெளிநாட்டு மக்களோடு இணைந்து இயங்கும்போது அவை மேன்மேலும் செழித்து வளர்கிறது. ஒருவிதத்தில் சொல்வதென்றால் கலாசாரப் பகிர்வுகளே மேன்மேலும் ஆரோக்கியமான கலை மற்றும் மானுட வாழ்வை வளப்படுத்தும். அதைத்தான் ஸ்வரம் செய்துவருகிறது” என்றார். 

ஸ்ட்ராம் டிரம்
ஸ்ட்ராம் டிரம்

விற்பனைக் கூடத்துக்குள் நுழைந்தோம். சிறிதும் பெரிதுமான இசைக்கருவிகள். எல்லாமே பல்வேறு பொருள்களால் தயாரானவை. மரங்களால் ஆன கம்பிக்கருவிகளும் உலோகங்களால் ஆன இசைக்கருவிகளும் கலை உணர்வுடன் வடிவமைக்கப் பட்டிருந்தன. குறிப்பாக ‘சிங்கிங் ஸ்டோன்’ எனப்படும் கல்லால் ஆன கருவி அனைவரின் கருத்தையும் கவர்கிறது. பெரும் வீணை போன்ற ஒரே கிரானைட் கல்லாலான சிங்கிங் டோன் கருவி ஒன்றிருந்தது. அந்தக் கருவியை இசைத்துக் காட்டும்படி அங்கே நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் கார்த்திக் என்பவரிடம் கேட்டுக்கொண்டோம். மெள்ள அதிரும் ஒலியோடு ஒரு வனப் பறவையின் கீதம்போல அந்தக் கருவி நாதம் எழுப்பி அசத்தியது. 

நேர்த்தியான இந்தக் கருவிகளுக்கான கற்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது குறித்து அங்கு கார்த்திக்கிடம் கேட்டோம்.

“கற்களில் இசைக்கருவிகள் செய்வது என்பது நம் பாரம்பர்யத்திலுள்ள தொழில்நுட்பம்தான். பண்டைய கோயில்களில் இசைக் கற்றூண்கள் பலவற்றைக் காண முடியும். அவற்றிலிருந்துதான் நவீனக் கருவிகளை உருவாக்கும் யோசனைகள் உருவாகின. 

எந்தக் கருவியாக இருந்தாலும் கல்லில் செய்வதானால் அவை ஒரே கல்லாலானதாக இருக்க வேண்டும். சரியான கல்லைத் தேர்ந்தெடுத்து லாகவமாக வெட்டுவதன் மூலம் அவற்றை இசைக் கருவிகளாக மாற்ற முடியும். எல்லாக் கற்களையும் அப்படி மாற்ற முடியாது. கற்களின் பழைமை, இருக்குமிடம் ஆகியவற்றுக்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் சிறப்பாக இருக்கும். 

அரோலியோ
அரோலியோ

அருகிலிருக்கும் மலைப்பகுதிகளிலிருந்து இந்தக் கற்களை வாங்குகிறோம். சில நேரங்களில் பெரும் பணம் கொடுத்து வாங்கிவரும் கற்கள் பயன்படாமலும் போய்விடலாம். எனவே, கற்களைத் தேர்ந்தெடுப்பது கொஞ்சம் கடினமான பணி. அனுபவத்தின் மூலமே அது சாத்தியப்படும்” என்றார். விற்பனை அறைக்கு மேலேயிருக்கும் இசைச் சிகிச்சை அறைக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

மெருகேற்றப்பட்ட மரக்கட்டில். அதன் கீழ்ப்புறம், யாழில் பூட்டப்பட்டிருப்பது போன்ற பல தந்திகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கட்டிலின் மேல் சிகிச்சை எடுத்துக்கொள்பவர் படுத்துக்கொள்ள கீழ்பகுதியிலுள்ள தந்திகளை மீட்டி இசையை எழுப்புகிறார்கள். கம்பிகளின் அதிர்வும் ஒலியும் மனதுக்கு உற்சாகமூட்டுகின்றன. அந்தக் கட்டிலைச் சுற்றிப் பல்வேறு கருவிகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

``அந்தக் கருவிகள் ஒவ்வொன்றும் இயற்கைப் பிரதி செய்த  ஓர் ஒலிப் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன. சிகிச்சையின்போது அருவிகளில் நீர் விழும் ஓசை, பெருங்காற்றின் சுழன்றடிக்கும் சப்தம், நிலமதிரும் ஒலி, கடல் அலைகளின் ஓசை என... இயற்கையின் ஒப்பற்ற ஒலிகளைத் தொடர்ந்து உருவாக்குகிறார்கள். `சிகிச்சை எடுத்துக்கொள்பவர் அந்த ஒலிகளில் மனம் லகுவாகி நினைவுகள் அற்ற தளத்தில் சஞ்சரிப்பார். சிகிச்சை முடிந்து எழும்போது அவர்கள் தங்களின் பழைய மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டவர்களாகப் புத்துணர்ச்சியோடு கண்விழிப்பார்கள். தொடர்ந்து இந்த இசைச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளும்போது நோய்களும் விரைவாக குணமாகின்றன’’ என்கிறார் அங்கிருந்த பணியாளர் ஒருவர்.

இயற்கை வாழ்வியலை மையப்படுத்தும் ஆரோவில்லில் அமைந்திருக்கும் `ஸ்வரம்’ இசைக்கருவிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தத் துறையில் இன்னும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. உலகெங்கும் இந்தக் கருவிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் ஏற்றுமதியும் நிறைய நடக்கிறது. புதுச்சேரி செல்பவர்கள் கட்டாயம் ஒருமுறை ஆரோவில்லையும் அதிலிருக்கும் ஸ்வரம் வளாகத்தையும் பார்வையிடுங்கள். அது, ஒலிப் பிரஞ்சத்தில் வாசம் செய்த மாறுபட்ட மறக்கவியலாத அனுபவமாக இருக்கும்.