Published:Updated:

`நாம் சகோதரர்கள்; ஏனென்றால் நாம் இந்தியர்கள்!' - ஆச்சர்யப்பட வைத்த மணிப்பூர்வாசி - Back பேக் - 10

Back பேக்

இந்தியா என்கிற அமைப்புக்குள் தன்னை உட்புகுத்திக்கொள்ள மறுத்தவர்களுக்காக வழங்கப்பட்டதே சிறப்பு அந்தஸ்து. இச்சூழல் முற்றிலுமாக மாறி இந்தியாவின் அங்கத்தினர் என்கிற உணர்வுக்குள் வடகிழக்கு மாநில மக்கள் சென்றது எப்படி என்பது குறித்து, அறிந்து கொள்ளும் தேடலும் உருவானது.

`நாம் சகோதரர்கள்; ஏனென்றால் நாம் இந்தியர்கள்!' - ஆச்சர்யப்பட வைத்த மணிப்பூர்வாசி - Back பேக் - 10

இந்தியா என்கிற அமைப்புக்குள் தன்னை உட்புகுத்திக்கொள்ள மறுத்தவர்களுக்காக வழங்கப்பட்டதே சிறப்பு அந்தஸ்து. இச்சூழல் முற்றிலுமாக மாறி இந்தியாவின் அங்கத்தினர் என்கிற உணர்வுக்குள் வடகிழக்கு மாநில மக்கள் சென்றது எப்படி என்பது குறித்து, அறிந்து கொள்ளும் தேடலும் உருவானது.

Published:Updated:
Back பேக்

ஸூகு பள்ளத்தாக்கின் விளிம்பில் அமைக்கப்பெற்றிருக்கும் அதை டார்மெட்ரி என்று சொன்னாலும், அது ஒரு தகரக்கொட்டகைதான். மூட்டைகளை அடுக்கி வைக்கும் குடோன் போல இருந்தது. அதனுள் சராசரியாக 40 - 50 பேர் வரையிலும் படுத்துறங்கலாம். கட்டில், மெத்தையெல்லாம் கிடையாது. சிமென்ட் தரையில் பாய் விரித்து படுத்து, போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்க வேண்டும். பாய், போர்வை உள்ளிட்டவற்றை அவர்களே வாடகைக்குத் தருகிறார்கள். டார்மெட்ரியில் தங்குவதற்கு ஒரு நபருக்கு 100 ரூபாய் வாடகை. போர்வை மற்றும் தரை விரிப்புக்கும் தலா 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்பதை வெளிச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த விவரப் பட்டியலில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். டார்மெட்ரியின் முகப்புக்கு எதிரே சிறிய பெட்டிக்கடை. நொறுவைகள், சோப்பு, ஷாம்பூ மற்றும் பீடி அங்கே விற்கப்படுகின்றன. டார்மெட்ரியை ஒட்டி இடப்புறத்தில் சமையலறை. அச்சமையலறைக்கு முன்பக்கத்தில் இளைப்பாறுவதற்கு நிழற்குடை அமைத்திருந்தார்கள். டார்மெட்ரி முகப்பிலிருந்து வலப்புறத்தில் கொஞ்ச காலி இடம்… அங்கிருந்து ஸூகு பள்ளத்தாக்கைத் தெளிவாகப் பார்க்கலாம். அதன் முனையில் மரக்கட்டைகளாலான காட்சிமுனை அமைக்கப்பட்டிருந்தது. டார்மெட்ரியின் பின்புறத்தில் கழிவறை. டார்மெட்ரிக்கு எதிரே 100 மீட்டர் தொலைவுக்கு இறங்கிப் போனால் அங்கே ஒரு காட்டேஜ் இருப்பதாகவும் அதன் வாடகை 1,500 - 2,000 என்றும் சொன்னார்கள்.

டார்மெட்ரி
டார்மெட்ரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமையலறை முன்பிருந்த நிழற்குடையில் நானும் சாலமனும் உட்கார்ந்திருந்தோம். அங்கு மொபைல் சிக்னல் கிடையாது. மின்சாரம் கிடையாது. எந்த அரவமும் இல்லாத அந்த அமைதியான சூழல் என்னைத் தளர்த்தி இலகுவாக்கியிருந்தது. இருந்தும் பசி கொடூரமாக என்னைச் சாப்பிட்டது. சமையலறைக்குச் சென்று டார்மெட்ரி நிர்வாகியிடம் தின்பதற்கு ஏதாவது கொடுங்கள் என்று இரைஞ்சும் தொனியில் கேட்டேன். அங்கு அவரோடு சமையல்காரரும் இருந்தார். அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரில் நூடுல்ஸ் பாக்கெட்டை உடைத்துப் போட்டு கூடவே இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றித் தயார் செய்து கொடுத்தார்கள். என் டைனோசர் பசிக்கு அது கொஞ்சம்தான். சாலமனைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளச் சொன்னேன். அவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் நான்கு வாய் அள்ளிப்போட்டு காலி செய்தேன். அதற்குத் தொகை கொடுக்கச் சென்றபோது ``பசி என்று கேட்டதால் செய்து கொடுத்தோம்… இதற்கு பணம் வேண்டாம்” என்று அந்த நிர்வாகி கூறினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீரற்ற அளவிலான மரக்கட்டைகளைக் கொண்டு எழுப்பப் பட்டிருந்த அக்காட்சி முனைக்குச் சென்றேன். குளிர்க்காற்று முழுவீச்சோடு என்னைத் தாக்கிச் சென்றுகொண்டிருந்தது. பன்றிக்கூட்டத்தைப் போல சிறு சிறு குன்றுகளால் நிறைந்திருந்த அப்பள்ளத்தாக்கைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றிருந்தேன். அக்குளிரும், பச்சைப் பரப்பென விரிந்திருந்த பள்ளத்தாக்கின் காட்சியும் அதி உன்னதத்தை எனக்குள் நிகழ்த்தின. நிழற்குடைக்கு மீண்டும் வந்தமர்ந்ததும் சாலமன் கிளம்ப வேண்டும் என்றான். காதலர் தினக் கொண்டாட்டத்துக்கான மனத்தயாரிப்பில் அவன் இருந்தான். நான், அன்றைய தினத்தை ஸூகு பள்ளத்தாக்குக்கு முழுமையாக ஒப்படைத்துவிடும் எண்ணத்துக்கு ஆட்பட்டிருந்தேன்.

dzukou valley
dzukou valley
Photo by Arindam Saha on Unsplash

அங்கு நிலவிய சூழலே என்னை அம்முடிவுக்கு இழுத்து வந்தது என்றும் சொல்லலாம். இத்தனை தூரம் பயணப்பட்டு வந்தது அப்பள்ளத்தாக்கைக் கொஞ்ச நேரம் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லத்தானா என்கிற கேள்வி, அங்கிருந்து உடனே கிளம்புவது பேரபத்தம் என எண்ணத் தோன்றியது.

சாலமனைத் திரும்ப தனியாக அனுப்புவதற்கு சங்கடமாக இருந்தாலும், வேறு வழியில்லை. ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு மீதி ஆயிரத்தை நாளை கோஹிமா வந்ததும் தருகிறேன் என்று சொன்னேன். 2,000 ரூபாய்க்குத் திட்டம் வகுத்திருந்தவனுக்கு அது ஏமாற்றத்தைக் கொடுத்தது. கைக்கெட்டும் தொலைவில் எந்த வசதிகளும் கிடைக்கப்பெறாத இக்காட்டில் எனக்குக் கையிருப்பு இருந்தாக வேண்டியதன் அவசியம் பற்றி அவனுக்குச் சொன்ன பிறகு, அப்பணத்தைப் பெற்றுக்கொண்டு சாலமன் கிளம்பிச் சென்றான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிழற்குடையிலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அப்போது நீளமான கனத்த பேக் பேக்கை மாட்டிக்கொண்டு நாங்கள் வந்த பாதை வழியாக ஒருவர் வந்தமர்ந்து முகமன் தெரிவித்தார். டெல்லியிலிருந்து வருவதாகக் கூறிய அவர் பெயர் ரஞ்சன் என்றும் ஐ.டி ஊழியர் என்றும் தெரிவித்தார். கோஹிமாவிலிருந்து ஸூகு வந்தடையும் இன்னொரு வழியான ஜக்காமா வழியில் வந்ததாகக் கூறினார். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். ரஞ்சன் வந்த சிறிது நேரத்தில் அதே பாதையில் கல்லூரி மாணவர் குழு ஒன்று வந்தது. நான்கு மாணவர்கள், நான்கு மாணவிகள் அடங்கிய அக்குழுவினரும் அந்நிழற்குடையில்தான் வந்து இளைப்பாறினர். அவர்களில் ஒரு மாணவி `நமஸ்தே ஜி' என்றாள். நான் `ஹாய்' சொன்னேன். அவர்கள் எல்லோரும் தங்களை அறிமுகபப்டுத்திக்கொண்டனர். அஸ்ஸாம் மாநிலத்தில் ஜோகர்ட் நகரில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படிப்பதாகவும், கல்லூரிப் பருவத்தின் இறுதிக் குழு பயணம் இது என்றும் தெரிவித்தனர். அவர்களுடனேயே மத்திம வயதில் ஒருவர் வந்திருந்தார். அவர்தான் வழிகாட்டி.

ஸூகு பள்ளத்தாக்கு
ஸூகு பள்ளத்தாக்கு

ஸூகு பள்ளத்தாக்குக்கு கூட்டி வருவதோடு தங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் வழிகாட்டிகள் செய்து கொடுப்பார்கள். இப்பணிக்காக அவர்கள் 3,000 ரூபாய் வசூலிக்கிறார்கள். அவர் வந்ததுமே சமையலறைக்குச் சென்று இம்மாணவர்களுக்கு தேநீர் தயாரிக்கும்படி கூறினார். அம்மாணவர்கள் காட்சிமுனையில் ஏறி குழுவாகப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். டார்மெட்ரி முகப்பின் வலப்புறத்தில் பள்ளத்தாக்கை நோக்கிய மண் தரையில் அந்த வழிகாட்டி அவர்களுக்காக டென்ட் அமைக்கும் பணியில் இறங்கினார். ஒரு டென்டின் வாடகை 500 ரூபாய். அவர்களுக்கு மொத்தம் நான்கு டென்ட்கள் அமைத்தார். ரஞ்சன் தனது கனத்த பேக் பேக்கில் சொந்தமாக டென்டை மடித்துச் சுருட்டிக் கொண்டு வந்திருந்தார். இவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த டென்டிலிருந்து கொஞ்ச தூரம் விலகி ரஞ்சன் டென்ட் அமைத்தார். இதுவரையிலான என் பயணத்தில் ஒரு நாள்கூட டென்ட் அமைத்துத் தங்கியதில்லை. அதற்கான தேவையும் இருந்ததில்லை. என்னைப் போன்றே ரஞ்சனும் தனிப்பயணி. அவரின் தேவை நிமித்தம் சொந்தமாக 3,000 ரூபாய்க்கு இந்த டென்ட் வாங்கியதாகக் கூறினார்.

ரஞ்சனுடன் இயல்பாக உரையாடிக்கொண்டே அவர் டென்ட் அமைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சூரியன் மறைகிற தருவாயில் செங்கலைப் பொடியாக்கி நிரவியதைப்போல வானம் சிவந்து கிடந்தது. அப்போது பள்ளத்தாக்கில் இருந்து மேலேறி ஒரு பெருங்கூட்டமே வந்துகொண்டிருந்தது. அநேகமாக அவர்கள் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்கிற எண்ணம் தானாக எழுந்தது. ஏனென்றால், வருகிற வழியில் சந்தித்த மணிப்பூர்வாசிகள் ஸூகு பள்ளத்தாக்குக்கு மணிப்பூரிலிருந்து வருவதற்கு வழி இருக்கிறது என்று சொல்லியிருந்தார்களே அந்த வழியாக இவர்களும் வந்திருக்கக்கூடும் என நினைத்தேன். ஆம், அவர்கள் மணிப்பூரிலிருந்துதான் வந்திருந்தார்கள். நெடுங்காலத்துக்குப் பிறகு, சந்திக்கும் பால்ய கால நண்பனைப் போல அவர்கள் எங்களிடம் வெகு இயல்போடும், அணுக்கத்தோடும் உரையாடினர். பள்ளத்தாக்கில் இருந்து மேலே வரும் அந்த ஒற்றையடிப்பாதை வழியாக வரிசையாக அவர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ஆண்கள் - பெண்கள் என எப்படியும் 30 - 40 பேர் வந்திருந்தனர். அவர்களில் ஒரு மணிப்பூர்வாசி என்னிடம் எங்கிருந்து வருகிறாய் என்று விசாரித்த பிறகு, ``நீ என் சகோதரன்... ஏனென்றால் நாம் இந்தியர்கள்" என்று சொன்னான். இந்தப் பயணம் நான் உருவகித்து வைத்திருந்த சித்திரத்தைக் கலைத்து விளையாடிக்கொண்டே இருந்தது.

dzukou valley
dzukou valley
Photo by Varun Nambiar on Unsplash

பள்ளிக்காலத்தில் தமிழ்த் தேசிய அமைப்புகளில் இணைந்து செயல்பட்டதன் தொடர்ச்சியாக இந்தியா என்பது ஒரு நாடல்ல என்கிற கருத்து எனக்குள் வலுப்பெற்றிருந்தது. வட கிழக்கு மாநிலம் ஒவ்வொன்றும் தனித்தேசியத்தை முன்னிறுத்துபவை என்கிற கருத்தை எனக்குள் விதைத்தவர்கள் உண்மையில் வடகிழக்கைப் பார்த்திருப்பார்களா என்கிற கேள்வி எனக்குள் அப்போது பெரிதாய் எழுந்து நின்றது. இந்தியா என்கிற அமைப்புக்குள் தன்னை உட்புகுத்திக்கொள்ள மறுத்தவர்களுக்காக வழங்கப்பட்டதே சிறப்பு அந்தஸ்து. இச்சூழல் முற்றிலுமாக மாறி இந்திய தேசத்தின் அங்கத்தினராகத் தங்களை முன் நிறுத்திக்கொள்ளும் உணர்வுக்குள் வடகிழக்கு மாநில மக்கள் சென்றது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளும் தேடல் எனக்குள் உருவானது. தமிழக அரசியலின் பொதுப்புத்தியில் பா.ஜ.க-வுக்கு ஓட்டுப்போடும் மக்கள் அறிவிலிகளாக விமர்சிக்கப்படுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கொங்கு மண்டலம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இன்றைக்கு பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளால் ஆளப்படுகின்றன. இதை எப்படிப் புரிந்துகொள்வதெனத் தெரியாமல் நின்றேன்.

- திரிவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism