Published:Updated:

`பயணிகளின் கனிவான கவனத்திற்கு; வடகிழக்கை நோக்கி சுவாரஸ்யப் பயணம்; ஆரம்பிக்கலாங்களா?' - Back பேக் - 1

Back பேக்

ஸ்பாட்டிஃபையில் இளையராஜா பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். அதுவும் 80களில் அவர் இசையமைத்த பாடல்கள். நம் மனதின் சலனங்களைத் தளர்த்தி இலகுவாக்கும் தன்மை கொண்ட அந்த இசையும், ஜன்னலோரக் காற்றும் ஒன்று சேர்ந்து என்னை தூக்கத்தில் ஆழ்த்தியது.

`பயணிகளின் கனிவான கவனத்திற்கு; வடகிழக்கை நோக்கி சுவாரஸ்யப் பயணம்; ஆரம்பிக்கலாங்களா?' - Back பேக் - 1

ஸ்பாட்டிஃபையில் இளையராஜா பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். அதுவும் 80களில் அவர் இசையமைத்த பாடல்கள். நம் மனதின் சலனங்களைத் தளர்த்தி இலகுவாக்கும் தன்மை கொண்ட அந்த இசையும், ஜன்னலோரக் காற்றும் ஒன்று சேர்ந்து என்னை தூக்கத்தில் ஆழ்த்தியது.

Published:Updated:
Back பேக்

மூன்றாயிரம் கிலோ மீட்டர் தொலைவு கொண்ட 50 மணி நேர ரயில் பயணத்துக்கு RAC டிக்கெட்தான் கிடைத்தது. பயணத்தேதிக்கு முந்தைய இரண்டு நாள்களில் PNR Status-ஐ மணிக்கொரு முறை பரிசோதித்துக் கொண்டிருந்தேன். காத்திருப்புப்பட்டியல் எண் குறையக் குறைய மகிழ்ச்சி பிரவாகமெடுத்தது. எப்படியும் RAC கிடைத்து விடும் என்கிற நம்பிக்கை இருந்தாலும், confirm டிக்கெட் கிடைக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையை எனக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருந்தேன். செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணிக்கு ரயில் என்கிற நிலையில் திங்கள் இரவு 11 மணிக்கு மேல் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட செய்தி வந்தது. உற்சாகம் பெருக்கெடுக்க மெசேஜைத் திறந்து பார்த்தபோதுதான் RAC என்று தெரிந்தது. `சிலர் அழுவார்... சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்' என்பது போல் கலவையான உணர்ச்சிதான் என்னிடமிருந்து வெளிப்பட்டது. டிக்கெட் கன்ஃபர்ம் ஆகாதது ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், கேன்சல் ஆகாமல் RAC ஆவது கிடைத்ததே என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். எதையும் நேர்மறையாக அணுகப் பழகி விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆக மொத்தத்தில் என் பயணம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்கிற நிறைவோடு தூங்கினேன்.

Train Platform
Train Platform
Photo by Ashwini Chaudhary on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயணம் என்று வருகையில் உடலும் மனதும் ஒத்திசைவோடு தயாராகி விடுகின்றன. காலை 09.15 மணி ரயிலுக்காக 8 மணிக்கெல்லாம் பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து விட்டேன். எதிரே இருந்த சைவ உணவகத்துக்குச் சென்று காலை உணவைச் சாப்பிட்டேன். அடுத்த 7 வேளை உணவை ரயில்வே கேன்டீனில்தான் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயத்தை நினைக்கையில் சலிப்பாக இருந்தது. ரயில்வே கேன்டீன் உணவை ஒரு வேளை சாப்பிட்டால் போதும். விக்கிரவாண்டி டோல்கேட் உணவகங்களைக் கூட கும்பிடத் தோன்றும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமென்றால் எதற்கும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை ஒரு மந்திரம் போல் மனதுக்குள் பதித்துக் கொண்டுள்ளேன். பயணத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சூழலில் இதனை நினைக்கையில் எதையும் சமாளிக்கத் தயாராகி விடுவேன். 10 நிமிடங்கள் தாமதமாக எனது ரயில் முதல் நடைமேடைக்கு வந்தது. வடகிழக்கு மாநிலங்களை நோக்கிய நெடும்பயணத்துக்கான வாசலில் ஏறி ரயிலுக்குள் சென்றேன். எனது படுக்கையில் ஏற்கெனவே இருவர் உட்கார்ந்திருந்தனர். அவர்களில் ஒருவன் என்னோடு அப்படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடியவர். எனக்கான பாதி படுக்கையை ஆக்கிரமித்திருக்கும் இன்னொருவரைக் கண்டறிந்து கிளப்பி விட்டால்தான் நான் உட்கார முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வட இந்திய ரயில் பயணங்கள் மேற்கொண்டவர்களுக்குத் தெரியும். வட இந்தியர்கள் ரயில்வே விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று. பலரும் அந்தக் கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனக்கும் அப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டு. முதன்முறையாக கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்த போது தூங்கி விழித்துப்பார்க்கையில் எனது படுக்கையில் நான்கு பேர் உட்கார்ந்திருந்ததைக் கண்டு விதிர்த்துப் போயிருக்கிறேன். வட இந்தியர்கள் ரயில்வே விதிகளை மதிப்பதில்லை. டிக்கெட் பரிசோதகர் கூட அவர்களைக் கேள்வி கேட்பதில்லை. இந்தப்போக்கு ஆரம்பத்தில் எனக்கு கடும் கோபத்தை விளைவித்தது. ஒன்றிரண்டு பயணங்களுக்குப் பிறகு சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டதோடு அவர்களைக் கையாளவும் கற்றிருந்தேன்.

Indian Railways
Indian Railways
Photo by Adhirej J R Nair on Unsplash

அப்படுக்கையில் உட்கார்ந்திருந்த இருவரிடமும் இதில் ஒரு பகுதி என்னுடையது என்பதை ஆங்கிலத்தில் கூறினேன். அவர்களுக்கு அது புரியவில்லை. அவர்கள் அறிந்திருக்கும் இந்தி எனக்குத் தெரியாது. இந்தியில் ஏதோ சொல்லிவிட்டு எந்தச் சலனமும் இல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்கள். என்னைப் பொருட்படுத்தாது `நீ வேண்டுமானால் நடுவில் உட்கார்ந்து கொள்ளேன்' என்பது போன்ற தொனியாக அது இருந்தது. இது போன்ற சூழலில் நாம் சற்றே குரல் உயர்த்திப் பேச வேண்டும் என்பதை என் பயண அனுபவத்தின் வழியே கற்றிருந்தேன். நமது பேச்சில் உள்ள உறுதி மட்டும்தான் அவர்களை அசைக்கும். அவர்கள் இந்தியில் பேசலாம் அல்லது திட்டக்கூட செய்யலாம். நாம் தமிழில் சற்றே உக்கிரமாகப் பேச வேண்டும். மொழி முக்கியமல்ல தொனிதான் முக்கியம். நமக்கு உரிமையான ஒன்றை யாசகம் கேட்கும் தொனியில் கேட்க முடியாதல்லவா? அக்கணத்தில் நான் டிடிஆர் ஆக உருவெடுத்தேன். எங்கே உனது டிக்கெட்டைக் காண்பி என இருவரிடமும் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்து, எனக்கான பாதி படுக்கையில் உட்கார்ந்திருந்தவனை இறங்கச் சொன்னேன். சிறு போராட்டத்துக்குப் பிறகு அவனைக் கிளப்பிவிட்டு என் இருக்கையில் உட்கார்ந்தபோது ரயில் புறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வடகிழக்குப் பயணத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்தது மேகாலயாதான். 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் என் பிறந்த நாளை சிரபுஞ்சியில் கொண்டாடத் திட்டமிட்டிருந்தேன். கொட்டும் மழை, ஈர நிலம், ஆர்ப்பரித்து வீழும் அருவி என அந்நிலக் காட்சிகளை மனதுக்குள் ஓட்டிப்பார்க்கையிலேயே உடல் சிலிர்த்தது. அப்பயணத்துக்காக சென்னையிலிருந்து கௌஹாத்திக்கு சென்று வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே விமான டிக்கெட்டை பதிவு செய்திருந்தேன். அப்பயணம் நிகழவிருக்கும் நாள்களை பேராவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தனிப்பட்ட காரணங்களால் அப்பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போனது. அதற்கடுத்த இந்த ஐந்து ஆண்டுகளில் மேகாலயா பயணத்தை மேற்கொள்ள முடியாமல்போனது என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.

தனியாகப் பயணம் மேற்கொள்வதற்கு ஈடுபாடும், தன் முனைப்பும் அத்தியாவசியம். அவை எனக்கு எப்போதும் உண்டு. பணம், நேரம் ஆகிய இரண்டும் இன்ன பிற அவசியத் தேவைகள். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து அதிகபட்சம் 5 நாள்கள் விடுமுறை கிடைப்பதே கடினம். பணம் இருக்கும், ஆனால் நெடும்பயணம் மேற்கொள்ளும் அளவுக்கான நேரம் இருக்காது. பணியில் இல்லாதபோது பொருளாதார நெருக்கடியில் சிக்கி உழன்று கொண்டிருப்போம். அப்போது நேரம் இருந்தாலும் பணம் இருக்காது. இந்த அடிப்படை முரண் காரணமாக சாத்தியப்படாமல் இருந்த நெடும்பயணத்துக்கான சாத்தியம் உருவான சூழலில்தான் இப்பயணத்தை மேற்கொள்வதெனத் தீர்மானித்தேன்.

Double Root Bridge - Meghalaya
Double Root Bridge - Meghalaya
Photo by Utkarsh B on Unsplash

மேகாலயா என்கிற புள்ளியில் தொடங்கிய திட்டம் அப்படியே விரிவடைந்து ஒரு வடிவம் பெற்றது. முதலில் நாகாலாந்து, அடுத்ததாக மேகாலயா, இறுதியாக சிக்கிம் செல்வதென ஒரு பயணத்திட்டத்தை வகுத்தேன். திட்டமிட்டபடி பயணம் நிகழப்போவதில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அத்திட்டம் ஓவியன் போடும் அவுட்லைன் போலதான். வரைய ஆரம்பித்த பிறகு ஓவியனின் மனப்போக்குக்கு இணங்க அந்த எல்லைகளை விரித்துக் கொண்டு செல்ல முடிவது போல நம் பயணத்திட்டமும் வேறொன்றாக திரிந்து விரிந்து செல்லும்.

நாகாலாந்து மாநிலம் முழுவதுமே மலைகளால் ஆனது. நாகாலாந்தின் நுழைவுவாயிலாக இருப்பது திமாபூர். அம்மாநிலத்தில் சமவெளியில் உள்ள நகரம் இது மட்டுமே. நாகாலாந்துக்கு ரயில் அல்லது விமானம் மூலம் செல்ல வேண்டுமென்றால் திமாபூருக்குதான் செல்ல வேண்டும். அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் அதுதான். சென்னையிலிருந்து திமாபூருக்கு ரயிலில் செல்ல வேண்டுமென்றால் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நியூ டின்சுகியா எக்ஸ்பிரஸ் மூலம்தான் செல்ல முடியும். பெங்களூரிலிருந்து அசாம் மாநிலம் டின்சுகியா வரை செல்லும் இந்த அதிவிரைவு ரயில் சென்னை, பெரம்பூர் வழியாகச் செல்கிறது. ஐந்து நிமிடங்கள் மட்டுமே பெரம்பூரில் நிற்கும் அந்த ரயிலில்தான் இப்போது ஏறியிருக்கிறேன்.

RAC என்பதன் உண்மையான பொருள் என்னவென்று எனக்கு விளங்கவே இல்லை. ரயிலின் பக்கவாட்டு கீழ் படுக்கையை இருவர் பகிர்ந்து கொள்வதுதான் RAC-ன் இலக்கணம் என்றுதான் புரிந்து வைத்திருக்கிறேன். எதிரிகள் எந்த ரூபத்திலும் வரலாம். எனக்கு அது பேக்பேக் வடிவில் வந்திருந்தது. 21 நாள் பயணத்துக்குத் தேவையான உடைகள், சில புத்தகங்கள், லேப்டாப் மற்றும் கீ போர்டு... சாப்பிடுவதற்கு பிரெட் பாக்கெட்டுகள், பீநட் பட்டர், ஷூ ஆகியவற்றால் என் உயரத்தில் பாதி இருக்கும் பேக்பேக் நிரம்பி கனத்தது. அதனை படுக்கைக்கு அடியில் வைக்கலாம் என்றால் ஏற்கெனவே அங்கே சில பைகள் வைக்கப்பட்டிருந்தன. வெளியே வைக்கலாம் என்றால் நடப்பதற்கான சிறிதளவே உள்ள பாதையை முழுமையாக அது அடைத்து விடும் என்பதால் என் படுக்கையில்தான் எடுத்து வைக்க வேண்டியதாயிற்று. ஓர் ஆள் உட்காரும் இடத்தை அதுவே ஆக்கிரமித்துக் கொண்டது. கிடைத்ததே பாதிப் படுக்கை அதிலும் பாதியை பேக்பேக்குக்கே கொடுக்க வேண்டிய பரிதாபகரமான சூழலில் சிக்குண்டிருந்தேன்.

Train
Train
Photo by Parichay Sen on Unsplash

அப்பெட்டி முழுவதும் வட இந்தியர்களே நிறைந்திருந்தார்கள். எனக்கு எதிரே அமர்ந்திருந்தவர் பெங்காலி. அவருக்கு நான் பேசுகிற ஆங்கிலம் சுத்தமாகப் புரியவில்லை. உரையாடலுக்கான எந்த வாய்ப்புகளும் அமையப்பெறாத சூழல். தனிப்பயணியாக 50 மணி நேரத்தை ரயிலில் கழிப்பதற்கு சற்றே கூடுதலான பொறுமை தேவைப்படும். ஜன்னல் வழியே பார்வையை இருத்தி விரைந்து செல்லும் நிலக்காட்சிகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. எடுத்து வந்த சில புத்தகங்களில் ஏதேனும் ஒன்றைப் படிக்கலாம் என்கிற எண்ணம் கூட வரவில்லை. ஸ்பாட்டிஃபையில் இளையராஜா பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். அதுவும் 80களில் அவர் இசையமைத்த பாடல்கள். நம் மனதின் சலனங்களைத் தளர்த்தி இலகுவாக்கும் தன்மை கொண்ட அந்த இசையும், ஜன்னலோரக் காற்றும் ஒன்று சேர்ந்து என்னை தூக்கத்தில் ஆழ்த்தின.

திரிவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism