Published:Updated:

`பனி விழும் இரவும் ரைஸ் பீரும்...’ Back பேக் - 11

Back பேக்

சிறு தீப்பொறி காட்டையே பொசுக்கும் விபரீதம் இருப்பதால் அங்கே நெருப்பை மிகக்கவனமாக கையாள வேண்டிய தேவை இருந்தது. அதனை உணர்ந்து அந்த வழிகாட்டி செயல்பட்டதாகத் தெரியவில்லை.

`பனி விழும் இரவும் ரைஸ் பீரும்...’ Back பேக் - 11

சிறு தீப்பொறி காட்டையே பொசுக்கும் விபரீதம் இருப்பதால் அங்கே நெருப்பை மிகக்கவனமாக கையாள வேண்டிய தேவை இருந்தது. அதனை உணர்ந்து அந்த வழிகாட்டி செயல்பட்டதாகத் தெரியவில்லை.

Published:Updated:
Back பேக்

மணிப்பூரிகள் அந்த டார்மெட்ரியை தங்கள் வசமாக்கியிருந்தனர். மேட் விரித்து படுத்தபடியே உரையாடிக் கொண்டும், ப்ளூடூத் ஸ்பீக்கரில் இந்திப்பாடல்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தனர். டார்மெட்ரியே இரைச்சலாக இருந்தது. அவர்கள் பெருங்குழுவாக வந்திருந்தபடியால் அவர்களுக்குள்ளேயே உரையாடிக் களிப்புற்றிருந்தனர். அந்த எல்லையைத் தாண்டி அவர்கள் வெளியே வரவில்லை. எனவே அவர்களுடன் உரையாடும் தருணம் இயல்பாக அமையப் பெறவில்லை.

டார்மெட்ரி நிர்வாகி கென்னியிடம் கேட்டு ஒரு மேட், ஒரு தலையணை, ஒரு போர்வை வாங்கிக் கொண்டேன். "ஒரு போர்வை போதுமா" என்று அவர் என்னிடம் கேட்டார். குளிரின் கடுமையை நான் உணரவில்லை, போக ஜெர்க்கினும் அணிந்திருக்கிறேன் என்பதால் ஒரு போர்வையே போதும் என்றுதான் நினைக்கத் தோன்றியது. "தேவைப்பாட்டால் இன்னொன்று வாங்கிக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு மேட்-ஐ டார்மெட்ரியின் வலப்புற மூலையில் விரித்து தலையணை, போர்வையை அதன் மேல் வைத்து விட்டு வந்தேன். பேருந்தில் துண்டு போட்டு சீட் பிடிப்பதைப் போல இந்த இடம் எனக்கானது என்று முன்பதிவு செய்தேன்.

மலை
மலை

வெளியே வந்தபோது முழுமையாக இருட்டியிருந்தது. சமையலறையில் ஒரே ஒரு விளக்கு மட்டும் சோலார் மூலம் எரிந்து கொண்டிருந்தது. இரவு உணவு குறித்து கென்னியிடம் விசாரித்தேன். சாப்பாடு, பன்றிக்கறி வறுவல் அதுவே சைவம் என்றால் சாப்பாடு, தால் என்று சொன்னார். சமையலறையின் அடுப்புக்கு மேலே பன்றிக்கறித்துண்டுகளைக் மெலிதான கம்பியில் குத்திப் பிணைத்துத் தோரணமாகக் கட்டியிருந்தார்கள். அடுப்பின் அனல் பட்டுப்பட்டு அது இறுகியிருந்தது. அந்தத் தடப்வெப்பநிலைக்கு கறி கெட்டுப்போகாது. தால் வாங்கினாலும் சரி பன்றிக்கறி வாங்கினாலும் சரி சாப்பாடு 250 ரூபாய். 8 மணிக்கெல்லாம் உணவு தயாராகி விடும் என்று கென்னி சொன்னார். மணி 6-ஐ தொட்டிருந்தது. அங்கிருந்து கிளம்பி டென்டுகள் போடப்பட்டிருக்கும் பகுதிக்கு வந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரஞ்சன் டென்டுக்குள் படுத்துக்கொண்டிருந்தார். "களைப்பாக இருக்கிறீர்களா" என்று கேட்டேன். "ஜக்காமா வழியில் படியேறி வந்த களைப்பு கொஞ்சம் இருக்கிறது" என்று சொன்னவர் வெளியே வந்தார். நான் விஷ்வமா வழியில் வந்தேன் என்று சொன்னதும், தான் திரும்பிச் செல்கையில் விஷ்வமா வழியில்தான் செல்லப்போவதாகக் கூறினார். விஷ்வமா பாதை எப்படிப்பட்டது என்று கேட்டார். தன்முனைப்பு அதிகம் கொண்ட பயணிகளைப் பொருத்தவரை எளிது, கடினம் என்கிற பிரிவினையே இல்லை. அப்பாதை கடினமாக இருக்கும் என்றாலும் அத்திட்டத்திலிருந்து அவர்கள் பின் வாங்கப்போவதில்லை.

இன்னொரு பாதை இருக்கையில் வந்த பாதையிலேயே திரும்புவதில் என்ன அர்த்தம் இருந்து விடப்போகிறது.

இது போன்ற விசாரிப்புகள் என்பது அதற்கான மன அமைப்பை முன்கூட்டியே வகுத்துக் கொள்வதற்காகத்தான். ஜக்காமா வழியைப் பற்றி சொல்லுங்கள் என்றேன். 8400 சமச்சீரற்ற கற்படிகளை 4 மணி நேரங்களில் ஏறி வந்ததாகக் கூறினார். அதனுடன் ஒப்பிடுகையில் விஷ்வமா வழி கடினம் இல்லை என்று சொன்னேன். "நீங்கள் எந்தப் பாதையில் திரும்பப் போகிறீர்கள்" என்றார். இன்னொரு பாதை இருக்கையில் வந்த பாதையிலேயே திரும்புவதில் என்ன அர்த்தம் இருந்து விடப்போகிறது. நான் ஜக்காமா வழியில்தான் திரும்பலாம் என்றிருக்கிறேன் என்று சொன்னதும் "நன்றாக இருக்கும்... ஆனால் கொஞ்சம் கவனமாக இறங்க வேண்டி வரும்" என்று சொன்னார்.

மலை
மலை

பௌர்ணமி முடிந்து 5 நாள்கள் ஆகியிருந்த நிலையில் சற்று தேய்ந்திருந்த வட்ட நிலவு நடுவானில் நின்று அந்நிலப்பரப்புக்கு ஒளியூட்டிக் கொண்டிருந்தது. அந்த ஒளியில் ஜூகு பள்ளத்தாக்கைப் பார்த்துக் கொண்டு நின்றோம். "இந்த சன்னமான ஒளியில் பார்க்க இன்னும் அழகாக இருக்கிறதல்லவா" என்று சொன்னதும் ரஞ்சன் அதனை ஆமோதித்தார். தவளைக் கூட்டத்தைப் போலத் தெரிந்த அச்சிறு குன்றுகளில் படிந்திருந்த நிலவொளியும் நிசப்தமும் மனதை மேன்மேலும் இலகுவாக்கின. எதுகுறித்த பிரக்ஞையுமற்று அந்நிலப்பரப்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் நின்றிருந்த இடத்துக்கும் காட்சி முனைக்கும் இடையே மரத்தாலான மூன்று இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இருபுறம் மரக்கட்டையை நட்டு அதன் மேல் மரப்பலகையை வைத்திருந்தார்கள். உயரம் குறைவான இரு இருக்கைகள் எதிரெதிரே ஆட்கள் அமர்ந்து பேசும் இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன. அசாம் மாணவர்கள் அங்கு உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எங்களை அழைத்தனர். நான் அவர்களுக்கு ரஞ்சனை அறிமுகப்படுத்தி வைத்தேன். அவர்கள் எங்களுக்கும் அந்த இருக்கையில் இடம் கொடுத்தனர். இருக்கையின் விளிம்பில் கிடைத்த குறுகிய இடத்தில் உட்கார்ந்தோம். அவர்கள் என் பணி குறித்து கேட்டபோது நான் ஓர் இலக்கியச் சிற்றிதழை நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறியதும் ஒரு மாணவன் மிகுந்த ஈடுபாட்டோடு "நான் ஆங்கில இலக்கிய மாணவன்... கவிதைகள் எழுதும் ஆர்வம் உண்டு" என்று சொல்லி எனக்கு அணுக்கமானான். அவன் பெயர் சௌரவ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவனுக்குள் இலக்கியம் குறித்து உரையாடும் ஆவல் நிறைந்திருந்ததை உணர்ந்தேன். அவன் பிறப்பால் தான் ஒரு பெங்காலி என்று சொன்னான். இந்திய நவீன இலக்கியத்தின் பெரும் சாதனைகள் பெங்காலியில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று சொன்னேன். வங்க எழுத்தாளர் சுநீல் கங்கோபாத்தியாய் எழுதிய 'தன் வெளிப்பாடு' நாவலின் மொழிபெயர்ப்பை வாசித்திருக்கிறேன். அதீன் பந்தோபாத்தியாய் எழுதிய 'நீலகண்ட பறவையைத்தேடி' நாவல் இந்திய இலக்கியத்தின் மைல்கல் என விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது என்றும் அதன் வங்கப்பெயர் எனக்குத் தெரியாது என்றும் சொன்னேன்.

நான் சொன்ன எழுத்தாளர்கள் பெயரை அவன் மொபைலில் குறித்துக் கொண்டான். "நிச்சயமாகப் படிக்கிறேன்... இந்திய நவீன இலக்கியத்தில் பெரும் சாதனைகள் வங்க மொழியில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் சொன்னது பெங்காலியாக எனக்குப் பெருமிதமாக இருக்கிறது" என்று சொன்னான். எனது மொபைலை எண்ணைக் கேட்டு வாங்கிப்பதிந்து கொண்டான். தமிழ் நவீன கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். இந்த உரையாடலைத் தொடர்ந்து அம்மாணவர் குழுவினருள் ஒருவனாகக் கலந்தேன். ரஞ்சன் சற்று இடைவெளியைக் கடைப்பிடித்தார்.

மலை
மலை

அசாம் மாணவர்கள் / மாணவிகளைப் பார்க்கையில் ஒன்று தெரிந்தது. அவர்களிடம் மங்கோலியச் சாயல் முழுவதுமாக இல்லை. உயரம், முகவெட்டு என எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டிருந்தார்கள். சிலரிடம் மட்டும் அச்சாயல் இழையோடியது. நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோம். இலக்கணப்பிழையோடு பேசுகிறேன் என்பதில் எனக்கு எவ்விதத் தாழ்வுணர்ச்சியும் இல்லை. அவர்களும் அதனை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு வேற்று மாநிலத்தவருடன் உரையாடுகிறோம் என்கிற எண்ணமே வரவில்லை.

இவர்களை அழைத்து வந்த வழிகாட்டி 'கேம்ப் ஃபயர்' உருவாக்குவதற்காக நான்கைந்து கட்டைகளைக் கொண்டுவந்து இரண்டு இருக்கைகளுக்கு நடுவே போட்டார். தீ மூட்டிக் குளிர் காய்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவலைத் தெரிவித்த அவர் மிகக் கவனமாக இதனைக் கையாள வேண்டும் என்று சொன்னார். சில மாதங்களுக்கு முன்பு அங்கே உருவான காட்டுத்தீயினைத் தொடர்ந்தே இத்தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். வருகிற வழியில் எரிந்து கரிக்கட்டையாக நிற்கும் மரங்களைப் பார்த்தபோது காட்டுத்தீ வந்தது குறித்து சாலமன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

சிறு தீப்பொறி காட்டையே பொசுக்கும் விபரீதம் இருப்பதால் அங்கே நெருப்பை மிகக்கவனமாக கையாள வேண்டிய தேவை இருந்தது. அதனை உணர்ந்து அந்த வழிகாட்டி செயல்பட்டதாகத் தெரியவில்லை. முதலில் செய்தித்தாளைப் பற்ற வைத்து அக்கட்டைகளுக்கு நடுவே வைத்து அதில் நெருப்பைப் பரப்பும் முயற்சியில் இறங்கித் தோல்வியுற்றார். பின்னர் பாலிதீன் பைகளைக் கொண்டு வந்து எரித்தபோது நான் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டேன். பின்னர் முட்டைகளை அடுக்கி வைத்திருக்கும் அட்டையைப் பிய்த்து அதைப் பற்ற வைத்து முயற்சித்தார். அட்டையில் மட்டுமே நெருப்பு புகைந்து கொண்டிருந்தது. நாங்கள் அதனைப் பரப்புவதற்காக ஊதினோம். எல்லோரும் சேர்ந்து ஊதினால் மொத்தமாக அணைந்து விடும் எனக்கூறி ஒரு குவியத்தில் சீரான வேகத்தில் ஊத வேண்டும் என்று சொன்னேன்.

`கேம்ப் ஃபயர்'
`கேம்ப் ஃபயர்'

அவர்களில் ஒரு மாணவி கச்சிதமாக அதனைச் செய்தாள். அணையவிருந்த நெருப்பு மீதமிருந்த அட்டையில் சற்றுப் படர்ந்த நேரம், பாட்டிலில் நிரைக்கப்பட்ட பெட்ரோலோடு வந்த வழிகாட்டி தடாரென அக்கட்டைகளின் மீது பெட்ரோலை ஊற்ற உள்ளிருந்த நெருப்பு பேருயிர் கொண்டெழுந்து வாட்டர் கேனுக்குள் புகவே அவர் அதனை விட்டெறிந்தார். உருண்டோடிய பாட்டில் காய்ந்து போன புற்பரப்பில் நெருப்பைக் கொட்டி விட்டுச் சென்றது. பிறகு ஓடிப்போய் காலால் அந்நெருப்பினை மிதித்து அமர்த்தினோம். அப்போது எனக்குள் விழுங்க முடியாதபடி சிரிப்பு வெடித்தெழுந்தது. அவர்களும் சிரித்தனர். நல்ல வேளையாக பெட்ரோல் கேனை அவர் பள்ளத்தாக்கினை நோக்கி வீசவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

வழக்கமாக எதிர்கொள்ளும் "ஏன் உங்களுக்கு இந்தி தெரியாது" என்கிற கேள்வி அங்கேயும் எழ அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

மரக்கட்டைகளில் நெருப்பு பற்றியெரியத் தொடங்கியது. எல்லோரும் ஒரு சேர கைகளை நீட்டிக் குளிர்காய்ந்தோம். கைகளைச் சூடேற்றி கன்னத்தில் வைத்து வெப்பத்தைக் கடத்தினார்கள். குளிரை வென்று கதகதப்பை உணர்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தோம். வழக்கமாக எதிர்கொள்ளும் "ஏன் உங்களுக்கு இந்தி தெரியாது" என்கிற கேள்வி அங்கேயும் எழ அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்படியாக என் பயண அனுபவங்கள் வரை பலவற்றைக் குறித்தும் பேசிக்கொண்டிருக்கையில் இடையே ஒரு மணிப்பூரி தட்டில் மூன்று டம்ளர்களோடு வந்து அவற்றை அம்மாணவிகளுக்குக் கொடுத்து "நாங்கள் தயாரித்தது... குடித்துப் பாருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அந்த மூன்று டம்ளர்களை அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் பங்கிட்டுக் குடித்தனர். நான் மௌனசாட்சியாக அதனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். "என்ன இது?" என்று கேட்டதற்கு "ரைஸ் பீர்" என்று சொன்னார்கள். ஆம், வட கிழக்கு மாநிலங்களில் ரைஸ் பீர் பிரசித்தி பெற்றது. நாகாலாந்தில் நாய்க்கறி கிடைக்கும் என்று ஒரு நண்பர் சொன்னதைப்போல "ரைஸ் பீர் அங்க கிடைக்கும்டே... மறக்காம வாங்கி குடிச்சுப்பாரு" என்று வடகிழக்கு மாநிலங்கள் குறித்த பரிச்சயம் உள்ள நண்பர் சொல்லியிருந்தார். சோற்றில் இருந்து வடித்தெடுக்கப்படும் கஞ்சி போலதான் அது இருந்தது. "பாவிப்பயலே... எனக்கு ஒரு டம்ளர் கொடுக்காம போயிட்டியேடா" என்று மனதுக்குள் அவனை கருவினேன்.

திரிவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism