ஸூகு பள்ளத்தாக்குக்குச் செல்வதென தீர்மானித்ததுமே பைக் டாக்சி டிரைவர் சாலமனுக்கு கால் செய்தேன். அழைப்பை ஏற்றவர் ஒரு பெண். சாலமன் தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்ன அவர், ஏதேனும் சொல்ல வேண்டுமா எனக் கேட்டார். ஸூகு பள்ளத்தாக்குக்குச் செல்ல வேண்டும் என்றேன். ஒரு நிமிடம் என்றவள், பக்கத்தில் இருந்த நபரிடம் ஏதோ அங்கமியில் பேசிவிட்டு 2,000 ரூபாய் ஆகும் என்று சொன்னார். காலை 6 மணிக்கு என் விடுதிக்கு வரச் சொல்லும்படி கூறினேன்.
அடுத்தநாள் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சாலமன் என் விடுதி வாசலுக்கு வந்தான். நான் என் அறையைக் காலி செய்து விட்டு பேக் பேக்கை மேலாளர் பூபு அறையில் வைத்தேன். திரும்பி வந்த பிறகு, வாடகை மற்றும் உணவுக்கான தொகையைச் செலுத்துவதாகக் கூறி விட்டுக் கிளம்பினேன். ஸூகு பள்ளத்தாக்கு பயணம் குறித்த துல்லியமான திட்டமிடல் ஏதுமில்லை. காலை நேரத்தில் கிளம்பிச் சென்று பள்ளத்தாக்கைப் பார்த்துவிட்டு மாலைக்குள் கோஹிமா திரும்பி விடுவதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. ஆகவே போன், பர்ஸ் மட்டுமே எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கோஹிமாவில் இருந்து ஸூகு பள்ளத்தாக்கின் விளிம்புக்குச் செல்வதற்கு விஷ்வமா, ஜக்கமா என இரண்டு வழிகள் உள்ளன. விஷ்வமா வழியில் நாம் செல்லப்போகிறோம் என சாலமன் சொன்னான். கோஹிமாவிலிருந்து விஷ்வமா 24 கிலோ மீட்டர். விஷ்வமா பிரிவு வரை தார்ச்சாலை சீராக இருந்தது. விஷ்வமா சாலைக்குள் பிரிந்து சென்றதும் மோசமான பயணத்தை மேற்கொள்ள வேண்டி வந்தது. தார் காணாத மண் சாலை கொனோமா கிராமத்துக்குச் செல்கிற சாலையைப் போலவே இருந்தது. குலுங்கிக் குலுங்கிச் சென்றதில் மீண்டும் முதுகுவலியை உணர முடிந்தது. சாலமன் அச்சாலை முடிகிற இடத்தில் வண்டியை நிறுத்தி லாக் செய்தான். அங்கு வேறெந்த வாகனங்களும் இல்லை. இதற்கு மேல் நடந்துதான் ஏற வேண்டும் என்றான்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஸூகு பள்ளத்தாக்குக்குச் செல்வதென்பது மலையேற்றம்தான். விஷ்வமா பாதையைப் பொறுத்தவரை கொஞ்ச தூரம் செங்குத்தாக மலையேற வேண்டியிருக்கும். அதன் பிறகு, நடந்தே செல்லலாம் என்று சாலமன் சொன்னான். அவன் டாக்சி டிரைவராக மட்டுமல்லாமல் என்னை அழைத்துச் செல்லும் வழிகாட்டியாகவும் வந்திருந்தான். ஒத்தையடிப் பாதையில் ஆங்காங்கே அமைந்திருந்த கற்படிகளில் கால்வைத்து ஏறிச்சென்றோம். கொஞ்ச தூரம் சென்றதுமே மூச்சு வாங்கியது. அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஏறிக்கொண்டிருந்தேன். சாலமன் இதற்கு பரிச்சயப்பட்டவன் என்பதால் அவன் எனக்கு முன்னே வேகமாகச் சென்றுகொண்டிருந்தான். அவனை நெருங்கக்கூட முடியாத அளவுக்கு மித வேகத்தில் நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது மொபைலுக்கு ஓர் அழைப்பு வந்தது. ஒன்றிரண்டு புள்ளிகள் மட்டுமே சிக்னல் இருந்த நிலையில் எதிர்முனையில் பேசிய பெண் குரல் என்ன சொல்கிறது எனப் புரியவில்லை. திரும்பக் கேட்ட பிறகு சாலமனிடம் பேச வேண்டும் என்று அப்பெண் கூறினார். நான் சாலமனைக் கூப்பிட்டு போனைக் கொடுத்தேன். அவன் பேசுகிற வரையில் ஓய்வெடுக்கலாம் என கூறி அப்படியே நின்று மூச்சை ஆழ இழுத்து வெளியேற்றி ஆசுவாசமடைந்தேன். அவன் பேசி முடித்துவிட்டு மொபைலை எண்ணிடம் கொடுத்தான். அழைத்தது சாலமனின் காதலி. சாலமன் அவனது போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருந்தான் என்பதால் எனது எண்ணுக்கு அழைத்திருக்கிறார். இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இன்றைக்குக் காதலர் தினம். சாலமனின் திட்டம் என்னவெனில், என்னை ஸூகு பள்ளத்தாக்குக்குக் கூட்டிச் சென்று வந்துவிட்டு நான் தரும் 2,000 ரூபாயைக் கொண்டு காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுதான்.

மீண்டும் ஏறத்தொடங்கினோம். சமதளப்பகுதியை அடைந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சாலமன் இயல்பான வேகத்தில் செல்வதுகூட எனக்கு அதிவேகமாகத் தோன்றியது. எனக்கும் அவனுக்கும் சராசரியாக 100 மீட்டர் இடைவெளி நிலவியது. நான் அணிந்திருந்த ஷூ மலையேற்றத்துக்குப் பொருத்தமானதாக இல்லாமல் ஆங்காங்கே இடறியது. குறிப்பாக, பாறைகள் மீது கால் வைக்கும்போதெல்லாம் அதிக கவனத்தோடு நடந்து செல்ல வேண்டியிருந்தது. நான் கற்பனை செய்திருந்த அளவுக்கு ஸூகு பள்ளத்தாக்குக்குச் செல்வது சுலபமானதாக இல்லை. எடையைக் குறைக்க, தசைகளை வலுவேற்ற உடற்பயிற்சிக்கூடத்தில் இணைகையில் இருக்கும் பெரும் தன்முனைப்பு 10 தண்டால் எடுக்கையில் சற்று விரிசல் கொள்வதைப் போலதான் எனக்கும் இருந்தது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது என்கிற அளவுக்கு இதயத்துடிப்பின் வேகம் கூட, மூச்சிரைத்தபடியே எங்கேனும் படுத்தால் போதும் என்றிருந்தது. அப்பாதையையொட்டி படுப்பதற்கு வாகாய் சற்றே வளைந்து வளர்ந்திருந்த மரத்தின் மீது கொஞ்ச நேரம் படுத்தேன்.
இதயத்துடிப்பின் வேகம் சராசரிக்குத் திரும்புகிற வரையில் மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டேன். அப்படியே தூங்கிவிடலாம் போலிருந்தது. அப்போது என் எண்ணுக்கு ஓர் அழைப்பு வந்தது. ஆம், சாலமனின் காதலியேதான். சாலமனிடம் போனை நீட்டினேன். அவன் அங்கமியில் ஏதோ பேசிவிட்டு கிளம்பலாம் என்றான். என் மனம் ஸூகு பள்ளத்தாக்கில் இருப்பு கொண்டிருந்தது என்றால், சாலமனின் மனம் காதலர் தினக் கொண்டாட்டத்தில் நிலைபெற்றிருந்தது. அத்தருணத்துக்கான எதிர்பார்ப்பு தரும் உத்வேகம் பெட்ரோல் போல் எரிந்து அவனை பற்ற வைத்திருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
1 மணி நேரத்துக்குப் பிறகு, சமதளப் பரப்புக்கு வந்தோம். அதை சமதளம் என்று சொல்வதுகூட பொருத்தமாக இருக்காது. செங்குத்தாக ஏறுவதற்குப் பதிலாக நீளவாக்கில் ஏறுவது. உதாரணத்துக்கு, மருத்துவமனைகளில் ஸ்ட்ரெச்சரை மேல்தளங்களுக்குக் கொண்டு செல்வதற்காக அமைக்கப் பட்டிருக்கும் சாய்வுதளம் போன்றது. ஒரு குன்றின் உச்சிக்குச் செல்ல 500 படிக்கட்டுகள் ஏற வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். செங்குத்தாக ஏறுவதற்கு மாற்றாக அக்குன்றைச் சுற்றிலும் சாய்வுதளத்தில் பாதை அமைத்துச் செல்லலாம். படிக்கட்டோடு ஒப்பிடுகையில் இப்பாதையில் செல்வது சற்று சுலபமானது என்றாலும், அதிக தொலைவு கொண்டது. விஷ்வமா வழி அத்தகையதுதான்.
சாய்வுதளப்பாதையில் ஏற்றமும் இறக்கமுமாகச் சென்று கொண்டிருந்தோம். பனிப்பொழிவுக்கான எந்தத் தடயமும் இல்லாமல் வெயில் முழுக்க வியாபித்திருந்தது. `ஸ்னோ இருக்குமா' என்று சாலமனிடம் கேட்டதற்கு அவனும் சற்று குழப்பத்துடன் முழித்தான். நாங்கள் இருவர் மட்டுமே பயணப்பட்டுக்கொண்டிருந்த அப்பாதையில் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பேர் எதிர்பட்டனர். வரவேற்கும் தொனியில் புன்னகை செய்து விட்டு சற்றே ஒதுங்கி எங்களுக்கு வழி விட்டனர். கொஞ்ச தூரம் கடந்ததும் சறுக்கிச் செல்வதைப் போலான இறக்கம். பாறைகளையும் செடிகளையும் பற்றியபடி மிகக் கவனமாக இறங்க வேண்டியிருந்து. எனது ஷூ வழுக்கவே நிலை தடுமாறி பிறகு, நிதானித்தேன். அப்போதே அதைக் கழற்றி வீச வேண்டும் போல் இருந்தது.

கீழே இறங்கியதுமே அதே போன்றொரு மேட்டில் ஏற வேண்டியிருந்தது. சூரியன் உச்சாணியில் நிற்க, கொஞ்ச நேரம் பொறு என சாலமனை நிறுத்தினேன். ஸூகு பள்ளத்தாக்கில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த ஒரு குழுவினர் இறங்கி வருவதைப் பார்த்தோம். அவர்கள் எங்களைப் பார்த்ததும் ஆரவாரமாக 'hi' சொன்னார்கள். அவர்கள் இறங்கிய பிறகு பரஸ்பரம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர்கள் மணிப்பூர் மாநிலத்திலிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஸூகு பள்ளத்தாக்கில் இருந்து இன்னொரு வழியில் மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்ல முடியும் என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும் அவர்களில் ஒருவன் "ரஜினிகாந்த்" என்று சொல்லிவிட்டு இன்னொருத்தனைக் கைகாட்டி "இவன் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன்" என்றான். "நானும்தான்" என்று அவர்களிடம் சொன்னேன். தென்னிந்தியத் திரையுலகில் இருந்து உருவாகிய முதல் பான் இந்தியா ஹீரோ ரஜினிதான் என்பது மேலும் மெய்ப்பட்டது. ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட செய்தியைக் கேட்டு என் சிறு வயதில் நெகிழ்ந்திருக்கிறேன். அதே நெகிழ்ச்சிக்கு மீண்டும் ஆட்பட்ட தருணமாக அது இருந்தது.
ஸூகு பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு இருக்கிறதா எனக் கேட்டதற்கு அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். எனக்குள் அது பெரும் ஏமாற்றத்தை உண்டு பண்ணியது. அதற்காகவெல்லாம் தொய்வடையக் கூடாது என நினைத்துக் கொண்டேன். சாலமனிடம், அவர்கள் இருந்தபோது பனிப்பொழிவு இல்லை. ஆனால், நாம் சென்றடையும்போது இருக்கலாம் அல்லவா என்று சொன்னேன். அதாவது, ஒரு பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், அக்கடைசிப் பந்து வைட் சென்று, அடுத்து வீசுகையில் சிக்ஸ் அடித்தால் வெற்றி பெற்று விடலாம்தானே என்று கணக்கிடுவதைப் போல அபார நம்பிக்கை என்னுள் இருந்து வெளிப்பட்டது. சாலமன் எதுவும் சொல்லாமல் சிரித்தான்.
மேட்டுப்பகுதியில் ஏறிச் சென்ற பிறகு, வழிநெடுக ஆங்காங்கே மண் தடம் ஈரமாக இருந்தது. அதில் கால் வைக்கையில் எல்லாம் எனது ஷூ வழுக்கியது. ஸூகு பள்ளத்தாக்கின் விளிம்பை அடைவதற்கு கொஞ்ச தொலைவு முன்னர், ஆங்காங்கே உறைந்த பனி (frost) தென்பட்டதும் சற்றே ஆறுதலாய் இருந்தது. அதைக் கையில் எடுத்து உருண்டையாக்கி விட்டெறிந்தேன். பனியைப் பார்த்துட்டோம் சாலமன் பனிப்பொழிவையும் பார்ப்போம் என உற்சாகம் பொங்கச் சொன்னேன்.

அவனும் பெருமகிழ்ச்சியுடன் அதை ஆமோதிப்பதைப் போல புன்னகைத்தான். அதன் பிறகு, என்னுள்ளும் ஓர் உத்வேகம் பிறக்க, நடையின் வேகம் கூடியது. கண்ணெட்டும் தொலைவில் ஓர் இடத்தைச் சுட்டி அதுதான் ஸூகு பள்ளத்தாக்கின் விளிம்பு என்று சாலமன் காட்டினான். மணி மதியம் மூன்றை நெருங்கியிருந்தது. பசி அக்காட்டையே ஒரே வாயில் தின்று விடத்துடிக்கிற மூர்க்கத்தில் உள்ளிருந்து கிளர்ந்தது. ஸூகு பள்ளத்தாக்கின் விளிம்பில் டார்மெட்ரி இருப்பதாக சாலமன் சொன்னதை அடுத்து, நிச்சயம் அங்கு சாப்பாடு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் நடந்தேன். சிற்றோடை ஒன்றைக் கடந்து அந்த டார்மெட்ரியை அடைந்தோம். அதன் நிர்வாகியிடம் சாப்பிட ஏதேனும் உணவு இருக்கிறதா எனக் கேட்டபோது அவர் இல்லை என்று கூறினார். அதைக் கேட்டதும் என்னை இருள் சூழ்ந்துகொண்டது. போரிடும் தேர்வு இல்லாமல் சரணடையும் வாய்ப்பு மட்டுமே இருந்த அச்சூழலில், தண்ணீரைக் குடித்தாவது கொஞ்ச நேரத்துக்கு பசியைக் கட்டுப்படுத்தலாம் என நாங்கள் கடந்து வந்த சிற்றோடையை நோக்கிப் போனேன்.
- திரிவோம்...