Published:Updated:

மடகாஸ்கர் – இயற்கைப் பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பல்லுயிர்ப் பெட்டகம்!

மடகாஸ்கர், ஒரு பல்லுயிர்ப் பெட்டகம். மற்ற கண்டங்களிலிருந்து தனித்து இருப்பதால், இங்குள்ள 90 சதவிகிதம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இத்தீவுக்கு மட்டுமே சொந்தமானவை.

மடகாஸ்கர்
மடகாஸ்கர்

இயற்கையை நேசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான கனவு தேசம் மடகாஸ்கர். இது, ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள உலகின் நான்காவது மிகப்பெரிய தீவு தேசம். இத்தீவின் வித்தியாசமான காலநிலை, தாவரங்கள் மற்றும் தனித்துவமான பிராணிகளின் காரணமாக, இந்தியப் பெருங்கடலின் அழகிய தீவுகளில் தனித்துத் தெரிகிறது. லெமூர் பிராணிகள், போபாப் மரங்கள், மழைக்காடுகள், பாலைவனம், மலையேற்றம், நீரில் குதித்து விளையாடுதல் என சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளிப்பதில் இந்தத் தீவுக்கு நிகர் இதுதான்.

மடகாஸ்கர் – இயற்கைப் பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பல்லுயிர்ப் பெட்டகம்!

காலநிலை

மடகாஸ்கரில், இரண்டு மாறுபட்ட காலநிலைகள் நிலவுகின்றன. இங்கு, நவம்பர் முதல் ஏப்ரல் வரை வெப்பம் மற்றும் மழைக் காலமாகவும், மே முதல் அக்டோபர் வரை வறட்சி மற்றும் குளிர் காலமாகவும் இருக்கிறது. மழைக் காலங்களில், கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக கடுமையான மழையுடன், புயல் காற்றும் வீசுகிறது. அதனால் சுற்றுலா பயணிகள், நவம்பர் முதல் ஏப்ரல் வரை மடகாஸ்கர் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை இங்கு பயணம்செய்ய ஏற்றதாக இருக்கும்.

தாவரங்கள் மற்றும் விலங்குகள்

மடகாஸ்கர், ஒரு பல்லுயிர்ப் பெட்டகம். மற்ற கண்டங்களிலி ருந்து தனித்திருப்பதால், இங்குள்ள 90 சதவிகித தாவரங்கள் மற்றும் விலங்குகள், இத்தீவுக்கு மட்டுமே சொந்தமானவை. லெமூர் என்ற பிராணியும் போபாப் என்ற மரமும் இந்நாட்டின் அடையாளங்கள். லெமூர், மடகாஸ்கரில் மட்டுமே உள்ள விலங்கு என்பது அதன் தனிச்சிறப்பு. மிக அழகான லெமூர் பிராணியை மடகாஸ்கர் சுற்றுலாத் துறையின் சேல்ஸ் மேனேஜர் என்றே அழைக்கின்றனர், அந்நாட்டு மக்கள்.

லெமூர் பிராணி
லெமூர் பிராணி

ஈர்ரி போஸ்ஸா, கலர்ஃபுல் கேமலோன்ஸ், விவிட் பிராக்ஸ், ஆமைகள், சுறாக்கள், ஹம்ப்பேக் வேல் என்ற ராட்சத கடல் விலங்கு ஆகியவை பார்க்கவேண்டியவை. அடன்சானியா என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட போபாப் மரங்கள், ஒன்பது வகைப்படும். அவற்றில் ஆறு வகை மடகாஸ்கரில் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு வகையான போபாப் மரங்களுக்கும் சில தனித்துவமான குணங்களும் பயன்பாடுகளும் உள்ளன. மடகாஸ்கர் சுற்றுலாவில் போபாப் முக்கிய இடம் வகிக்கிறது.

நிலத்தோற்றங்கள்

மலைகள், மழைக்காடுகள், பாலைவனங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள், வளமான சமவெளிகள், கற்பள்ளத்தாக்குகள் எனப் பல்வேறு நிலத்தோற்றங்கள் ஒரே தீவுக்குள் இருப்பது மட்டுமல்ல, அருகருகே இருப்பது மடகாஸ்கர் தீவில்தான். பாலைவனத்துக்கும், அடர்த்தியான மழைக்காடுகளுக்கும் இடையேயான தூரம், 300 கி.மீ என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அதுதான் மடகாஸ்கரின் நிலத்தோற்றம். கற்பள்ளத்தாக்குகளுக்கும் சுண்ணாம்புச் சுரங்கங்களுக்கும், வளமான மலைகளுக்கும் அரிசி விளையும் செம்மண் வயல்களுக்கும் இடையே தூரம் அதிகமில்லை. இந்த கலைடாஸ்கோப் நிலத்தோற்றம், சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது.

மடகாஸ்கர் – இயற்கைப் பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பல்லுயிர்ப் பெட்டகம்!

கடற்கரை சுற்றுலாத்தளங்களான மனாபியாபை, சராபஞ்சினா, அஜஜாவி, நோஸி கொம்பா, நோஸி பி, இல்லே சான்டே மேரி, இல்லே ஆக்ஸ் நட்டஸ், அன்டோவோக் பே, நோஸி இரஞ்ஜா, மஹாலோனா ஆகிய மடகாஸ்கரின் 10 கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன.

வெள்ளை மணல், காடுகளோடு இணைந்த கடல், கண்ணாடி போன்ற தெள்ளத் தெளிவான கடல் நீர், மலைகளுக்கு அருகில் உள்ள கடற்கரைகள், வண்ண வண்ணப் பறவைகள் ஆகிய அம்சங்கள் உங்களை மெய்மறக்கச் செய்யும். கைட்-சர்பிங், ஸ்நோர்கிளிங், ஸ்கூபா-டைவிங், ஜெட்-ஸ்கையிங் போன்ற வாட்டர்ஸ்போர்ட் விளையாட்டுகளில் பங்கேற்கலாம். அழகிய நீலக்கடலில் படகுப் பயணம் மேற்கொண்டு, மெகா சைஸ் சுறா, திமிங்கிலங்களைக் கடலிலேயே கண்டுகளிக்கலாம்.

மடகாஸ்கர் பயணம்

மடகாஸ்கர், மக்கள் அடிக்கடி பயணம் செய்யாத நாடு என்பதால், சென்னையில் இருந்து நேரடி விமானங்கள் கிடையாது. ஆனால், டிரான்சிட் முறையில் பயணம் செய்யலாம். அதனால் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

மடகாஸ்கர் – இயற்கைப் பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பல்லுயிர்ப் பெட்டகம்!

இங்கிருந்து அந்நாட்டின் தலைநகர் அன்டநானரிவோ சென்று வர, மூன்று மாதங்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்தால், சுமார் 80,000 ரூபாய் செலவாகும். மற்றபடி உணவு, தங்குமிடம் ஆகியவை மற்ற பிரபல சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளைக் காட்டிலும் மிகவும் குறைவே.

இயற்கையை காதலிக்கும், அதை அனுபவிக்கத் துடிக்கும் பயணிகள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய இயற்கையின் கொடை, மடகாஸ்கர்.