பசி. நடு இரவில் விழித்துவிட்டதால் அதிகாலையிலேயே பசிக்க ஆரம்பித்தது. சமையலறைக்கென்று எந்தக் கதவும் இல்லாததால் அது திறந்தே கிடந்தது. உள்ளே சென்று பார்க்கையில் பன்றிக்கறி வைக்கப்பட்டிருந்த பாத்திரம் காலியாக இருந்தது. இரவே அதனை முழுமையாகத் துடைத்து விட்டனர். சாப்பாடு, தாலை தட்டில் போட்டு பிசைய ஆரம்பித்தபோது விரல்கள் விரைத்து வலிக்க ஆரம்பித்தன. அக்குளிர், சாப்பாட்டை பனிக்கட்டிபோல் கடினமாக்கியிருந்தது. சாப்பிடவே முடியவில்லை. பனிக்கட்டியைக் கடித்து மெல்வதைப் போல அதனைத் தின்று கொண்டிருந்தேன். அதனைப் பார்த்த ஒரு மணிப்பூரி ஏதோ இந்தியில் சொல்லிவிட்டுச் சென்றான். அநேகமாக பழைய சோற்றை ஏன் தின்கிறாய் என்று கேட்கிறான் என நினைத்துக் கொண்டேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பசி அடங்கும் வரையிலும் அதனை சலிப்போடு தின்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் முடியவில்லை. கைகள் முழுவதுமாக விரைத்து விட்டிருந்தன. பாதி சோற்றைக் கீழே கொட்டிவிட்டு மீண்டும் காட்சிமுனைப் பகுதிக்கு வந்தேன்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅசாம் மாணவர்கள் எல்லோரும் அவர்களது டென்டை விட்டு வெளியே வந்திருந்தார்கள். ரஞ்சன் கையில் தண்ணீர் கேனுடன் டென்டுக்கு வெளியே நின்றிருந்தார். என்னைக் கண்டதும் "நேரத்திலேயே எழுந்து விட்டீர்களே" என்றார். நான் பாதி இரவு தூங்காத கதையை கவலை படிந்த குரலில் அவரிடம் சொன்னேன். தனது உறக்கத்துக்கு எவ்வித இடையூறுமில்லை என்றார். டார்மெட்ரியிலிருந்து வெளியே வந்த மணிப்பூரிகள் குழுக்குழுவாக பள்ளத்தாக்கை நோக்கி இறங்க ஆரம்பித்தார்கள். வழிகாட்டி, அசாம் மாணவர்களை பள்ளத்தாக்குக்கு எதிரே இருந்த மலைப்பகுதிக்குக் கூட்டிச் செல்ல தயார்படுத்திக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அவர்கள் அம்மலையின் விளிம்பை நோக்கிப் புறப்பட்டனர். அங்கிருந்து காண்கையில் சூரியன் இன்னும் அற்புதமாய் தெரியும் என்று வழிகாட்ட்டி சொன்னார். நான் ரஞ்சனிடம் என்ன செய்யலாம் என்று கேட்டேன். இதோ கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடலாம் என ரஞ்சன் ஆயத்தமானார்.

கொஞ்சம் தாமதமாகக் கிளம்பியதால் அசாம் மாணவர்களைப் பின்தொடர முடியவில்லை. கோஹிமாவிலிருந்து வந்த பாதை வழியாகவே இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தும் அவர்கள் சென்ற மலையின் விளிம்பைக் கண்டறிய முடியவில்லை. தோல்வி கண்டு திரும்ப டார்மெட்ரிக்கு வந்தபோது அசாம் மாணவர்களும் வந்திருந்தனர். சூரியன் முழுமையாக எழுந்துவிட்ட படியால் இனி அம்மலைக்குச் செல்வதைக் காட்டிலும், பள்ளத்தாக்கை நோக்கிச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்று ரஞ்சனிடம் சொன்னேன். அவரும் அதற்கு உடன்பட்டார். அசாம் மாணவர்கள் பள்ளத்தாக்குக்கு வரும் திட்டத்தில் இல்லை என்பதால் நானும் ரஞ்சனும் பள்ளத்தாக்கை நோக்கி அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கினோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வழியெங்கும் தாவரங்கள் மேல் உறைந்திருந்த பனிக்கட்டிகளைத் தொட்டுணர்ந்தபடியே சென்றேன். அச்சரிவில் வேகமாக இறங்க முடிந்தது. "திரும்ப ஏறும்போதுதான் தெரியும்" என்று ரஞ்சனிடம் சொன்னேன். சரிவில் இறங்கி சமதளப்பரப்புக்கு வந்திருந்தோம். பனி படர்ந்திருந்த அப்பரப்பில் சூரிய ஒளி பரவத் தொடங்கியிருந்தது. ஒற்றையடிப்பாதையில் இருந்து இடப்புறம் கொஞ்ச தூரம் சென்றதுமே ஒரு பெரும்பள்ளத்தில் காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது. விளிம்பில் இருந்த ஒரு பாறையில் மிகக்கவனமாக அமர்ந்தபடி அந்த ஆற்றினைப் பார்த்தேன். படிகம்போல் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்பாறையில் வெயிலை நுகர்ந்தபடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். உள்ளூர அச்சம் உறைந்திருந்தது. அத்தகு உயரத்தில் இருந்து ஒரு பள்ளத்தைப் பார்க்கையில் இயல்பாகவே எவருக்குள்ளும் அச்சம் கிளர்ந்தெழும். நான் எழுந்ததும் ரஞ்சன் சிறிது நேரம் உட்கார்ந்தார். அப்போது வந்த மணிப்பூரிகள் எங்களிடம் சரளமாக இந்தியில் பேசி சிரித்த வண்ணம் இருந்தனர். எடுத்த எடுப்பிலேயே பலநாள் பழக்கம்போல அவர்கள் பேசுவது எல்லோரிடமும் எளிதாகக் கலந்து விடுகிறார்கள் என்று நினைக்க வைத்தது.

அங்கிருந்து கிளம்பி இன்னும் கொஞ்சதூரம் சென்றால் சிறிய ஓடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதன் மேற்பரப்பில் தண்ணீர் உறைந்த நிலையில் இருந்தது. ஒரு மணிப்பூரி கல் ஒன்றை எடுத்து அதன்மீது எறிந்தபோது ஓடை நீரின் மேற்பரப்பு கண்ணாடியைப் போல் விரிசலுற்றுக் கல் உள்ளே சென்றது. இதைப்பார்க்கையில் இயல்பாகவே எனக்குள் ஆவல் பிறக்க நானும் ஒரு கல்லை எடுத்து ஒட்டுமொத்த வலுவையும் திரட்டி எறிந்தேன். அது 'டொபுக்' என்கிற ஓசையெழுப்பியபடி படிகத்தை உடைத்துச் சென்றது.
முழுவதுமாக உறைந்திருந்த ஓடை, சூரிய உதயத்துக்குப் பிறகு உருகத் தொடங்கியிருந்தது. ஆகவே, அதன் மேற்பரப்பு மிக வலுவாக இல்லை என்பதால் அதன் மேல் நடப்பது சாத்தியமற்றது. குனிந்து உட்கார்ந்து அந்த ஓடையைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு உறைந்துகிடக்கும் மேற்பரப்பில் கால் வைக்க வேண்டும் என்று தோன்றியது. எனக்குப் பின் நின்றிருந்த மணிப்பூரியிடம் என் வலது கையை நீட்டி கெட்டியாகப் பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வலது காலை ஓடையின் மேற்பரப்பில் அழுத்தமாக வைத்தேன். இன்னும் கொஞ்ச அழுத்தம் கொடுத்தாலும் பனிக்கட்டி உடைந்துவிடும் என்பதால் மிகக்கவனமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் எழலாம் என முடிவெடுத்து உந்தி எழுந்தேன்.

எனது வலது கையைப் பிடித்திருந்த மணிப்பூரிக்கு என் எடையைத் தாங்கும் வலு இல்லாததால் பிடியைத் தளர விட்டான். இதன் காரணமாக நான் அவன் மேல் சாய இருவரும் பின்னால் இருந்த தாவரப் பரப்பில் விழுந்தோம். முதலில் நான் சிரித்தேன், அடுத்ததாக அந்த மணிப்பூரி என எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.
அங்கிருந்து திரும்புகையில் வெயில் ஏறியிருந்தது. சரிவிலிருந்து மேல்நோக்கி ஏறுகையில் மூச்சிரைத்தது. டார்மெட்ரியை அடைந்ததுமே கோஹிமாவுக்குத் திரும்புவதுதான் திட்டமாக இருந்தது. ரஞ்சனின் திட்டம் குறித்து மீண்டும் கேட்டேன். விஷ்வமா வழியில் இறங்கப்போவதாகக் கூறினார். நான் ஜக்காமா வழியில்தான் செல்லப்போகிறேன் என்றேன். அசாம் மாணவர்கள் நாங்கள் சென்றடைந்தபோது கிளம்பும் யத்தனிப்போடு தயாராக இருந்தார்கள். நானும் அவர்களுடன் வருவதாகக் கூறினேன். நான் தங்கியதற்கும், சாப்பாட்டுக்கும் மொத்தமாக 500 ரூபாய் வாங்கினார் கென்னி. அசாம் மாணவர்களை வழிகாட்டி கூட்டிச்சென்றார். நானும், ரஞ்சனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம்.

விஷ்வமா பாதையில் இருந்து இடப்புறம் ஜக்காமா பாதை பிரிந்தது. நான் ரஞ்சனுக்குக் கைகொடுத்து "மீண்டும் சந்திப்போம்" என்று சொன்னேன். அவர் "நிச்சயமாக" என்று புன்னகைத்தார். நான் சொன்னது வெறும் சம்பிரதாயமான வார்த்தை அல்ல. ரஞ்சனும் அவ்வண்ணமேதான் அதனைச் சொல்லியிருப்பார் என நினைத்துக்கொண்டேன். அசாம் மாணவர்கள் ஜக்காமா பிரிவில் இருந்த மலையை நோக்கி ஏறிச் சென்று கொண்டிருந்தனர். நான் வேகமாக அவர்களைப் பின் தொடர்ந்தேன்.
திரிவோம்...