Published:Updated:

``உலகின் எந்த விளிம்புக்கும் செல்வேன்!" - சீலா பாஸில் வடித்த நெகிழ்ச்சிக் கண்ணீர் I Back பேக் 24

Back பேக்

தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்ட நான், தனியனாக இந்தியாவைச் சுற்றி வருகிறேன். குளிர்பானம்கூட அருந்தக்கூடாது என்கிற அறிவுறுத்தலின் விளைவாக எனக்குள் சூழ்ந்த இருளை இமயமலையின் உயரமான விளிம்புகளில் ஒன்றான சீலா பாஸில் பெய்த பனிப்பொழிவின் வெண்மையில் ஒளியூட்டினேன்

``உலகின் எந்த விளிம்புக்கும் செல்வேன்!" - சீலா பாஸில் வடித்த நெகிழ்ச்சிக் கண்ணீர் I Back பேக் 24

தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்ட நான், தனியனாக இந்தியாவைச் சுற்றி வருகிறேன். குளிர்பானம்கூட அருந்தக்கூடாது என்கிற அறிவுறுத்தலின் விளைவாக எனக்குள் சூழ்ந்த இருளை இமயமலையின் உயரமான விளிம்புகளில் ஒன்றான சீலா பாஸில் பெய்த பனிப்பொழிவின் வெண்மையில் ஒளியூட்டினேன்

Published:Updated:
Back பேக்

சோனம், எனது சிறுகதைத் தொகுப்பின் கடைசிப் பிரதியைத் தனக்குக் கொடுக்கும்படி கேட்டாள். உனக்குதான் தமிழே தெரியாதே என்றதற்கு, உன் நினைவாக வைத்துக் கொள்கிறேன் என்றாள். மறுக்கவே முடியாத காரணம் என்பதால் அவளுக்கு அப்பிரதியைக் கையளித்தேன்.

அடுத்தநாள் காலை வெகு சீக்கிரம் கிளம்ப வேண்டியிருக்கும் என்பதால் அன்றைய இரவே விடுதிக் கணக்கை முடித்து விடும்படி சோனத்திடம் சொன்னோம். அவள் நாங்கள் தங்கியிருந்த நாள்களுக்கான அறை வாடகை மற்றும் உணவு மற்றும் ரம் பாட்டிலுக்கான தொகையை எழுதினாள். நீ கொடுத்த தக்காளி சாப்பாட்டுக்கெல்லாம் இத்தனை தர முடியாது என்று சிரித்துக் கொண்டே சற்று உரிமையோடு பேரம் பேசினேன். வெந்நீர் கொடுக்காததால், நான்கு நாள்களாய் குளிக்கவில்லை. அந்த அறைக்கு 500 ரூபாய் வாடகை அதிகம் என்றதும் 400 ரூபாயாகக் குறைத்துக் கொண்டாள். இரவே எங்களுக்கான பில் தொகையைச் செலுத்திவிட்டுத் தூங்கச் சென்றோம்.

சோனம் கேனா
சோனம் கேனா

காலை 6 மணிக்கெல்லாம் சுமோவில் ஏறி, தவாங் நோக்கிப் புறப்பட்டோம். ஏறுவதைவிட இறங்குகையில் கூடுதல் வேகத்துடன் செல்ல முடியும் என்பதால், எப்படியும் 5 மணிக்கெல்லாம் தேஸ்பூர் சென்று விடலாம் என்று டிரைவர் சொன்னார். தவாங்கில் ஞாயிறு, திங்கள் இரு நாள்கள் மட்டும்தான் பனிப்பொழிவு இருந்தது. மற்ற இரு நாள்கள் கடுங்குளிர் இருந்ததே தவிர, பனிப்பொழிவு இல்லை. தவாங்கில் இருந்து சீலா பாஸ், 72 கி.மீ. தேஸ்பூரில் இருந்து சீலா பாஸ் வரும்போது மாலையாகிவிட்டதால் கிட்டத்தட்ட இருட்டி இருந்தது. திரும்பச் செல்கையில் காலையிலேயே சீலா பாஸின் அழகைக் கண்டு ரசிக்க முடிந்தது. 10 மணிக்கெல்லாம் சீலா பாஸை நெருங்கிவிட்டோம். பனி பொழிந்து கொண்டிருந்தது. சீலா பாஸில், ஆண்டின் பெரும்பகுதி நாள்கள் பனிப்பொழிவு இருந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்தனர். சீலா பாஸில் உள்ள தவாங் மாவட்டத்துக்கு வரவேற்கும் ஆர்ச்சைக் கடந்ததும் வண்டியை சில நிமிடங்கள் நிறுத்தச் சொல்லி, இறங்கி பனி மழையில் நனைந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிரைவர், சுமோவின் பின்புற டயரில் இரும்பு சங்கிலிப் பின்னலைப் பொருத்தினார். அது டயரைச் சுற்றிலும் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு பனி கொட்டிக்கிடக்கும் சாலையில் ஒரு பிடிப்புக்காக இது போன்று சங்கிலி கட்டப்படுகிறது என்று டிரைவர் விளக்கம் கொடுத்தார். அங்கு வருகிற அனைத்து வண்டிகளிலும், இச்சங்கிலி பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்தேன். பனிப்பொழிவில் நனைவதை வீடியோ எடுக்கும்படி ஆஷுவிடம் சொன்னேன். அவன் 25 விநாடிகளுக்கு வீடியோ எடுத்தான்.

sela pass
sela pass

பிறகு 5 நிமிடங்களில் சுமோ புறப்பட்டது. சீலா பாஸைக் கடந்த பிறகு, ஆஷு எடுத்த வீடியோவைப் பார்த்தேன். பனிப்பொழிவில் நான் நடந்து வருகிற சிறு தருணம் அதில் நிலைத்திருந்தது. இத்தருணத்தை மேலும் அழகாக்க இசையால்தானே இயலும். ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் `நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே... இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே' என்கிற வரிகளுடனான பாடலை அந்த வீடியோவுடன் இணைத்துப் பார்த்தேன். பேருன்னதத்தில் திளைப்பதைப் போன்று தெரிந்தது. அந்த வீடியோவை பார்த்த பிறகு அழ ஆரம்பித்துவிட்டேன். இந்த அழுகை வேதனையின் வெளிப்பாடான அழுகையல்ல... பெரும் நெகிழ்ச்சியின் விளைவாக உண்டான அழுகை.

Epilepsy எனும் நரம்பு மண்டல பிரச்னை எனக்கு இருப்பது, எனது 16 வயதில் தெரிய வந்தது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் அது வலிப்பு நோய். ஈரோட்டில் ஒரு நரம்பியல் மருத்துவரிடம் பெற்றோர் என்னைக் கூட்டிச் சென்றனர். அவர் நான் என்னவெல்லாம் செய்யக்கூடாது எனும் பெரும் பட்டியலை நீட்டி முழக்கினார்.

அவற்றில் முக்கியமானது தனியாக எங்கும் செல்லக்கூடாது. அப்படிச் செல்வதாக இருந்தால் ஓர் அட்டையில் `நான் ஓர் வலிப்பு நோயாளி' என்றெழுதி அதை Tag ஆக கழுத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் வலிப்பு வந்து விழுந்து விட்டால் அந்த அட்டையைப் பார்த்து புரிந்து கொள்வர் என்று சொன்னார். வெளியே செல்வதற்குக்கூட யார் துணையேனும் வேண்டும் அல்லது டேகை கழுத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று சொன்னது வலிப்பைக் காட்டிலும் வாதையாக இருந்தது.

epilepsy
epilepsy

பத்திரிகையாளனாக வேண்டும், எழுத்தாளனாக வேண்டும் என்கிற லட்சிய நோக்கின் தொடக்க காலம் அது. அப்போது முதல்முறையாக வந்த வலிப்பும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலும் என் எதிர்கால வாழ்வை சூன்யமாக்கின. இரண்டு ஆண்டுகள், அச்சத்தில் உறைந்து கிடந்தேன். தொட்டதற்கெல்லாம் வலிப்பு வந்து விடுமோ என்கிற என் குடும்பத்தாரின் பதற்றம் என்னை மேலும் அச்சுறுத்தியது. அதன் பிறகு, பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் எழுதிக் கொடுத்த ஒற்றை மாத்திரை மூலம் மீண்டெழுந்தேன்.

முற்றிலும் குணமடையவில்லை என்றாலும் வலிப்பு வரும் episode குறைந்தது. Seizure (வலிப்பு) குறித்து பல மருத்துவ கட்டுரைகளைப் படித்தேன். முன்பு பயந்து நடுங்கிய வலிப்பை, தள்ளி நின்று ஆய்வுக்குட்படுத்தத் தொடங்கினேன். என் உடலின் தன்மையைப் புரிந்துகொள்ள முடிந்தது. நவீன மருத்துவ அறிவியல் என்னை மீட்டெடுத்தது. மனதளவில் உறுதியோடு Epilepsy-ஐ எதிர்கொள்ள ஆரம்பித்தேன். என்னவாயினும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற ஸ்திரமான நம்பிக்கையே எனக்கான மீட்சி. தனியாக எங்கும் செல்லக் கூடாது என்று எச்சரிக்கப்பட்ட நான், தனியனாக இந்தியாவைச் சுற்றி வருகிறேன்.

தவாங் மாவட்டத்தின் நுழைவாயிலான சீலா பாஸ் கடல் மட்டத்திலிருந்து 4,160 மீட்டர் உயரம் கொண்டது. குளிர்பானம்கூட அருந்தக்கூடாது என்கிற அறிவுறுத்தலின் விளைவாக எனக்குள் சூழ்ந்த இருளை, இமயமலையின் உயரமான விளிம்புகளில் ஒன்றான சீலா பாஸில் பெய்த பனிப்பொழிவின் வெண்மையில் ஒளியூட்டினேன் என்று தோன்றியதும், கண்ணீர் வழியத் தொடங்கியது. பெரு நெகிழ்ச்சியின் சிலிர்ப்பில் சுரந்து வெளியேறிய கண்ணீர் அது. ``நான் உலகின் எந்த விளிம்புக்கும் செல்வேன்... Tag மாட்டாமலேயே" என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ள, உடல் சிலிர்த்தது. ஆசை தீர அழுத முடித்த பிறகு மிகப்பெரும் விடுதலை உணர்வுக்குள் சென்றிருந்தேன். மனதின் கனம் குறைந்து லேசாகியிருந்தது.

sela pass
sela pass

எதிர்பார்த்தபடியே மாலை 5 மணிக்கு, தேஸ்பூரை அடைந்தோம். தேஸ்பூர் நண்பன் அபினவ், என்னையும் ஆஷுவையும் அவன் வீட்டுக்குக் கூட்டிச் சென்று, எங்களை ஓர் அறையில் ஓய்வெடுக்க வைத்தான். இரவு 10 மணிக்கு கவுஹாத்திக்கு பேருந்து முன்பதிவு செய்து, தேஸ்பூரிலில் இருந்து நானும் ஆஷுவும் கிளம்பினோம். அபினவை கட்டிப்பிடித்து அவனுக்கு விடை கொடுத்தேன். கவுஹாத்தியில் இருந்து ஷில்லாங் செல்வதுதான் திட்டமாக இருந்தது. மேகாலயாவை நோக்கிய எங்களது பயணம் அந்த நொடியில் இருந்து ஆரம்பமானது.

- திரிவோம்...