Published:Updated:

தேஸ்பூர் டு தவாங்... 330 கி.மீ டாடா சுமோ பயணம்! - Back பேக் 18

Back பேக்

தேஸ்பூரிலிருந்து தவாங் 330 கி.மீ. பயண நேரத்தை தொலைவை வைத்து மட்டும் முடிவு செய்து விட முடியாது. சமவெளியில் பயணிப்பதற்கும், மலைப்பிரதேசத்தில் பயணிப்பதற்கும் பெரிதளவில் நேர வேறுபாடு இருக்கும். தவாங் செல்ல குறைந்தபட்சமாக 12 மணி நேரம் ஆகும் என்று அபினவ் சொன்னான்.

தேஸ்பூர் டு தவாங்... 330 கி.மீ டாடா சுமோ பயணம்! - Back பேக் 18

தேஸ்பூரிலிருந்து தவாங் 330 கி.மீ. பயண நேரத்தை தொலைவை வைத்து மட்டும் முடிவு செய்து விட முடியாது. சமவெளியில் பயணிப்பதற்கும், மலைப்பிரதேசத்தில் பயணிப்பதற்கும் பெரிதளவில் நேர வேறுபாடு இருக்கும். தவாங் செல்ல குறைந்தபட்சமாக 12 மணி நேரம் ஆகும் என்று அபினவ் சொன்னான்.

Published:Updated:
Back பேக்

அடுத்த நாள் காலை மஜ்ஜுலியிலிருந்து கிளம்பி ஜோகர்ட் வருவதற்குள் மதியம் ஆகிவிட்டது. ஜோகர்ட் பேருந்து நிலையத்தைச் சுற்றி உணவகத்தைத் தேடியபோதுதான் பிரியாணிக் கடை ஒன்றைக் கண்டடைந்தேன். நெடுநாள் தவம்போல அக்கடையினைப் பார்த்ததுமே உள்நுழைந்து சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தேன். இந்த ஒட்டுமொத்த பயணத்தில் பிரியாணியின் வாசனையைக்கூட அதுவரை மோரவில்லை.

ரயிலில் முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி என்று விற்பனை செய்தார்கள் என்றாலும் அவற்றையெல்லாம் பிரியாணி என்கிற வகைக்குள் சேர்த்தால் ரைத்தா கூட கோபித்துக்கொள்ளும். கொல்கத்தாவுக்கே போகாமல் ஒரு பிரியாணிக்கடையைக் கண்டுபிடித்துவிட்டேன். தம் பிரியாணியிலிருந்து அது சற்றே வேறுபட்டிருந்தது. நிதானமாக ருசித்து சாப்பிடுகிற சூழலில் நான் இல்லை. கொஞ்சம் வேகமாக அள்ளிப்போட்டேன்.

பிரியாணி
பிரியாணி

நல்ல பிரியாணி சாப்பிட்டுவிட்ட பெரும் திருப்திகொள்ளாவிட்டாலும் நன்றாகவே இருந்தது. ஜோகர்டிலிருந்து நேரடியாக தேஸ்பூருக்கு பேருந்துகள் குறைவு என்பதால் கவுகாத்தி பேருந்தில் ஏறி தேஸ்பூர் பிரிவில் இறங்கிக் கொள்ளும்படி அபினவ் சொன்னான். அவன் சொன்னபடியே தேஸ்பூர் பிரிவுக்கு வந்து சேர்வதற்குள் இருட்டி விட்டிருந்தது. அபினவை நான் இன்னும் சந்திக்கக் கூட இல்லை. அலைபேசி உரையாடலிலேயே மிகவும் அணுக்கமான தோழமை உணர்வுடன் அவன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

அப்பிரிவில் இருந்து தேஸ்பூர் 15 - 20 கி.மீ தொலைவு. அபினவ் காரில் வந்து என்னை ஏற்றிக்கொண்டு அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது வீட்டைப் பார்க்கையில் தெரிந்தது. வீட்டுக்குள் நுழைந்ததுமே டைனிங் டேபிளில் உட்கார வைத்தான். எனக்காக கோழிக்குழம்பு தயார் செய்திருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவன் அம்மா 'நமஸ்தே' சொல்லிவிட்டு சாப்பாடு, கோழிக்குழம்பைப் பரிமாறினார். கொஞ்ச நேரத்தில் அபினவின் அப்பா வந்தார். தூங்கச் செல்லும் நேரமாகியிருந்தாலும் உங்களைப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று காத்திருந்தார் என்று அபினவ் சொன்னபோது எனக்கு சிலிர்த்தது. வணக்கம் சொல்லி விட்டு சம்பிரதாயமாக அவரிடம் சில வார்த்தைகள் பேசிய பிறகு அவர் தூங்கச் சென்றுவிட்டார்.

மஜ்ஜுலி நண்பன் அனுபமுக்கு வீடியோ கால் செய்து கொடுத்தான். நான் கறித்துண்டை கடித்தபடியே அவனுக்கு வணக்கம் சொன்னேன். அஸ்ஸாமிலும் விருந்தோம்பல் இருக்கிறது என அடியுரைத்துச் சொல்லிவிட்டான் அபினவ். அன்றைய இரவு தங்குவதற்கான விடுதி அறையை ஏற்பாடு செய்து வைத்திருந்தான். அந்த விடுதி தேஸ்பூரிலிருந்து தவாங் செல்லும் சாலையில் இருந்தது.

தவாங்
தவாங்

தவாங் செல்வதற்கான Inner land permit ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாகச் சொன்னான். காலை 5 மணிக்கெல்லாம் தயாராகி விடும்படியும், டாடா சுமோ டிரைவர் விடுதி வாசலிலேயே வந்து உங்களை ஏற்றிக்கொள்வார் என்றான். ILP (Inner land permit) சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்குள் நாம் நுழைவதற்கு அத்தியாவசியமானது.

2015-ம் ஆண்டு டார்ஜிலிங் சென்றிருந்தபோது, ILP உடன் சேர்த்து 300 ரூபாய்க்கு சிக்கிம் மாநிலம் கேங்டாக்குக்கு அழைத்துச் செல்வதாக டாடா சுமோ டிரைவர்கள் அழைத்தது நினைவுக்கு வந்தது. ஆன்லைனில் நாமாக விண்ணப்பிக்கும் பர்மிட் எளிதில் கிடைத்துவிடாது. காத்திருப்புப் பட்டியலில் வைக்க நேரிட்டால் பர்மிட் கிடைக்கும் வரையிலும் அருணாச்சல பிரதேசத்துக்குள் நுழையவே முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் பேசி காலி இருக்கைகளை வாங்கிக் கொள்வதைப்போல டாடா சுமோ ஓட்டுநர்கள் பர்மிட்டை நமக்கு எளிதாக வாங்கிக் கொடுத்துவிடுவர். தேஸ்பூரிலிருந்து தவாங் செல்ல நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு டாடா சுமோவில் செல்வதுதான். பொதுப்போக்குவரத்து அப்பாதையில் அறவே கிடையாது. தேஸ்பூரிலிருந்து தவாங் 330 கி.மீ. பயண நேரத்தை தொலைவை வைத்து மட்டும் முடிவு செய்து விட முடியாது.

சமவெளியில் பயணிப்பதற்கும், மலைப்பிரதேசத்தில் பயணிப்பதற்கும் பெரிதளவில் நேர வேறுபாடு இருக்கும். தவாங் செல்ல குறைந்தபட்சமாக 12 மணி நேரம் ஆகும் என்று அபினவ் சொன்னான். ஒரு நாளின் பகலை நாம் தவாங் சென்று சேரும் பயணத்துக்கே கொடுக்க வேண்டும். மனதளவில் என்னை அப்பயணத்துக்கு தயார்படுத்திக் கொண்டேன். விடுதிக்கு என்னைக் கொண்டு வந்து விட்ட பிறகு அபினவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

'அருணாச்சல பிரதேசம்
'அருணாச்சல பிரதேசம்

அபினவ், டூரிசத்தில் இளங்கலை பயின்றிருக்கிறான். டூர் ஏஜென்சி தொடங்கும் திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னான். தேஸ்பூரில் குறைந்த வாடகையில் தங்குமிடம் ஒன்றையும் ஏற்பாடு செய்யும் திட்டமும் இருப்பதாகச் சொன்னான். பெரும்பாலும் என்னைப் போன்ற தனிப்பயணிகள் டூர் ஏஜென்சியின் துணை இல்லாமல்தான் பயணம் செய்வோம். குழுவாக வருகிறவர்கள், குடும்பத்துடன் சுற்றுலா வருகிறவர்களுக்கு அது அத்தியாவசியமானது.

மிக முக்கிய சுற்றுலாத்தலமாக வடகிழக்கு மாநிலங்கள் உருவாகி வரும் இச்சூழலில் இது நல்ல தொழிலாக இருக்கும் என அவனுக்கு வாழ்த்துகள் சொன்னேன். தவாங் பயணத்துக்குத் தேவையானதை மட்டும் சிறிய சுருக்குப் பையில் எடுத்துக்கொண்டு என் கனத்த பேக் பேக்கை திரும்ப வரும்போது வாங்கிக் கொள்வதாகக் கூறி அபினவிடமே கொடுத்தனுப்பினேன். அடுத்த நாள் காலை எனக்கான டாடா சுமோ வந்து சேர்வதற்கு 7 மணியாகிவிட்டது. தவாங் செல்வதற்கு பர்மிட்டுடன் சேர்த்து 2,200 ரூபாய் என்று ஓட்டுநர் சொன்னதைக் கேட்டதும் மெல்லதிர்ச்சி உடல் முழுவதும் பரவியது.

இத்தனை ரூபாய் ஆகும் என எதிர்பார்த்திருக்கவில்லை. கொரோனாவுக்கு முன்பு வரையிலும் 1100 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், குறைவான நபர்களையே ஏற்றிச் செல்ல வேண்டும் என்கிற கொரோனா கட்டுப்பாட்டின் விளைவாக இரண்டு மடங்காக கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது என ஓட்டுநர் சொன்னார். வேறு தேர்வை நோக்கிச் செல்லும் வாய்ப்பே இல்லாத சூழலில் ஓட்டுநர் சொன்ன தொகையைக் கொடுத்துவிட்டு சுமோவில் ஏறினேன்.

ஓட்டுநரோடு சேர்த்து சுமோவில் மொத்தம் 6 பேர் இருந்தோம். இதில் எங்கிருக்கிறது கொரோனா கட்டுப்பாடு என்று தெரியவில்லை. இந்தப் பயணத்தைத் திட்டமிட்டபோது தங்குமிடத்துக்கு நாளொன்றுக்கு 500 ரூபாயும், சாப்பாட்டுக்கு 400 ரூபாயும் ஒதுக்கியிருந்தேன்.

அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசம்

அவற்றிலிருந்து குறைவாகக் கூட செலவாகியிருக்கிறது. உள்ளூர் போக்குவரத்துக்கான செலவு குறித்து நான் அறிந்திருக்கவில்லை. தங்குமிடம், உணவைக் காட்டிலும் உள்ளூர் போக்குவரத்துக்குதான் அதிகம் செலவு செய்ய நேரிட்டது.

ஈரத்தால் கருமை கூடியிருந்த அத்தார்ச் சாலையில் விலகிச்செல்லும் பனிமூட்டத்தைக் கடந்து சுமோ பயணப்பட்டுக் கொண்டிருந்தது. 9 மணிக்கெல்லாம் தவாங் அடிவாரத்தில் உள்ள ஓர் உணவகத்தில் காலை உணவுக்காக வண்டியை நிறுத்தினர். தகர மேற்கூரை கொண்ட அந்த உணவகத்தின் மேலே பனி பெருந்திரளாய் படர்ந்து பரவிக்கொண்டிருந்தது. நான் காணவிருக்கிற பனிப்பொழிவுக்கு சிறு முன்னோட்டமாக அதனைப் பார்த்தேன். உணவகத்துக்குச் சென்று ஆர்டர் சொன்னேன். ஆம், அதே ரொட்டியும், சப்ஜியும்தான்.

திரிவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism