Published:Updated:

தவாங் நகரை அடைந்த ஓர் அற்புத இரவு! - Back பேக் 20

Back பேக்

வடகிழக்குப் பயணத்தில், நான் கவனித்த முக்கியமான ஓர் அம்சம், இங்குள்ள விடுதிகளில் தங்குவதற்கு முன்பணம் வாங்கப்படுவதே இல்லை. உணவும் தயாரிக்கிற விடுதியெனில் அறையை காலி செய்யும்போது, மொத்தமாகக் கணக்கிட்டு பணத்தை வாங்கிக்கொள்கின்றனர்.

தவாங் நகரை அடைந்த ஓர் அற்புத இரவு! - Back பேக் 20

வடகிழக்குப் பயணத்தில், நான் கவனித்த முக்கியமான ஓர் அம்சம், இங்குள்ள விடுதிகளில் தங்குவதற்கு முன்பணம் வாங்கப்படுவதே இல்லை. உணவும் தயாரிக்கிற விடுதியெனில் அறையை காலி செய்யும்போது, மொத்தமாகக் கணக்கிட்டு பணத்தை வாங்கிக்கொள்கின்றனர்.

Published:Updated:
Back பேக்

டாடா சுமோ வாகனம், தவாங் வந்து சேரும்போது மணி 9.30 ஆகியிருந்தது. தவாங் நகரம் நம்மை வரவேற்கும் ஆர்ச் முன்பு, வண்டி நின்றதும் இறங்கி வெளியே வந்தேன். என்னைப் போட்டுத்தாக்கி தலைகீழாகத் திருப்பியது அந்தக் குளிர். பனி பொழிந்துகொண்டிருந்த அவ்வேளையில், தட்பவெப்பநிலை மைனஸ் 3 டிகிரி ஆக இருந்தது. அந்நகரமே முற்றிலும் உறங்கியிருந்தது.

சாலையோர விளக்கின் ஒளியில் பார்த்தபோது பனி திரித்திரியாக விழுந்துகொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. நான் அணிந்திருந்த தெர்மல் வியர், ஜெர்க்கின் போன்ற அரண்களை நொறுக்கி ஊடுருவிய குளிர், சர்வ நாளங்களிலும் ரண பாய்ச்சலை நிகழ்த்தியது. சுமோவில் ஹீட்டர் போட்டிருந்ததால், தவாங் வந்து சேர்கிற வரையிலும் இந்தக் கடுங்குளிரை உணரவில்லை.

தவாங்
தவாங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதகதப்பான ஓர் அறையில், கம்பளிப் போர்வைக்குள் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டும் என்றிருந்தது. நானும், ஆஷுவும்தான் பயணிகள். சுமோவில் பயணித்த மற்றோரெல்லாம் இறங்கி அவர்களது இருப்பிடம் நோக்கிக் கிளம்பினர். சுமோவை நிறுத்திய இடத்துக்கு எதிரே இருந்த விடுதிக்கு டிரைவர், என்னையும் ஆஷுவையும் கூட்டிக்கொண்டு சென்றார்.

மேலே முதல் தளத்தில் இருந்த அந்த விடுதியின் நிர்வாகியான இளம்பெண், எங்களை வரவேற்று, அறைகளைக் காண்பித்தார். அவற்றில் கழிவறையுடன்கூடிய அறை ஒன்றைத் தேர்வு செய்தேன். அதன் வாடகை 500 ரூபாய் என்று சொன்னதும் அறையை எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டேன்.

ஆஷு எனது அறைக்கு எதிரே இருந்த அறையை, 400 ரூபாய் வாடகைக்கு எடுத்துக் கொண்டான். அந்த அறையில் கழிவறை இல்லை. பழைய மரக்கட்டில், அழுக்குத் தோய்ந்த கனத்த மெத்தை, ஒரு தலையணை, இரண்டு கம்பளிகள், வயதேறிய மர டீப்பாய். இவ்வளவுதான் அந்த அறை. மொசைக்கோ, டைல்ஸோ இல்லாத சாதாரண கான்கிரீட் தரைதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வடகிழக்குப் பயணத்தில், நான் கவனித்த முக்கியமான ஓர் அம்சம், இங்குள்ள விடுதிகளில் தங்குவதற்கு முன்பணம் வாங்கப்படுவதே இல்லை. உணவும் தயாரிக்கிற விடுதியெனில் அறையைக் காலி செய்யும்போது, மொத்தமாகக் கணக்கிட்டு பணத்தை வாங்கிக்கொள்கின்றனர். அந்தப் பெண்ணிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை காலையில் தருவதாகச் சொன்னேன்.

கைகளைத் தேய்த்துச் சூடேற்றியபடியே "கொடூரமான குளிர்" என்றேன். சமையலறைக்குச் சென்று அமரும்படி சொன்னாள். சுவரெங்கும் கருமை படிந்திருந்த அந்த சமையலறையின் நடுவே ஓர் அடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தகரத்தால் ஆன அந்த அடுப்பின் அடிப்பகுதியில் விறகைப் பற்ற வைத்து, மேற்புறம் பாத்திரத்தில் வெந்நீர் காயவைத்துக்கொண்டிருந்தனர். அந்த அறையை விட்டு வெளியே நீண்டிருந்த தகரக்குழாய் வழியாக புகை வெளியே சென்றுகொண்டிருந்தது. விறகு, அடுப்பின் வெப்பம் அறையை கதகதப்புடன் வைத்திருந்தது.

உள்ளே நுழைந்ததும் இடது புறமுள்ள மரப் பெஞ்சில் உட்கார்ந்ததும் ஆசுவாசமடைந்தாலும், உடலின் நடுக்கத்தில் இருந்து விடுபடவில்லை. அந்தப் பெண் உள்ளே வந்து அடுப்பை ஒட்டியிருந்த மர ஸ்டூலில் உட்கார்ந்தபடி, கையை முன் நீட்டிக் குளிர்காய்ந்தாள். அவள் பெயர் சோனம் கேனா. சிரித்துக் கொண்டே பேசுகிற துடுக்குத்தனம் நிரம்பிய பெண் அவள். இந்த விடுதி, அவளின் உறவுக்காரப் பெண்ணுக்குச் சொந்தமானது என்று சொன்னாள்.

தவாங்
தவாங்

குளிரை கிரகிக்கவே முடியாத சூழலில், ``எனக்கு ரம் வேண்டும்... இந்நேரத்தில் கடை இருக்குமா?" என்று கேட்டேன். வெளியே சென்றவள் குவாட்டர் ரம் பாட்டிலோடு வந்தாள். பரவசத்தோடு அதைப் பெற்றுக்கொண்டு நன்றி சொன்னேன். பாட்டிலின் விலை 50 ரூபாய்தான் என்றாலும் 30 ரூபாய் கூடுதலாக 80 ரூபாய் தர வேண்டும் என்றாள். ``உங்க ஊர்ல ப்ளாக்லயே 80 ரூபாய்தானா" என்று சிரிப்பு மேலெழ அவளிடம் கேட்டேன். ஆஷு மற்றும் சில சுமோ ஓட்டுநர்கள் உள்ளே வந்தனர். சுமோ ஓட்டுநர்கள், சோனத்திடம் இருந்து டம்ளர் பெற்று, ரம்மை ஊற்றிக் குடித்தனர்.

நான் ரம்மில் வெந்நீரைக் கலந்து ஆவி பறக்க ஒவ்வொரு மிடறாக தேநீர் போல பருகிக்கொண்டிருந்தேன். மிகக்கடுமையான குளிர் நிலவுகிற பகுதிகளில் பணிபுரிகிற ராணுவ வீரர்கள் அனைவரும், தினமும் 60 மில்லி ரம் அருந்தியே தீர வேண்டும் என்பது ராணுவ விதி. உடலை சூடேற்றி உடலின் தட்பவெப்பநிலையை சீராக்கும் வல்லமை ரம்முக்கு இருக்கிறது. இரண்டு சுற்று ரம் பருகிய பிறகுதான், உடலின் இறுக்கம் தளர்ந்திருந்தது. பேச்சே இயல்பாக வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுமோ ஓட்டுநர்கள், ரம் அருந்தியபடியே அவர்கள் மொழியில் சோனத்துடன் பேசிக்கொண்டு ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டிருந்தனர். கைகளை கக்கத்தில் புதைத்து உடலைக் குறுக்கி உட்கார்ந்திருந்த ஆஷுவிடம், ஒரு பெக் வேண்டுமா எனக்கேட்டேன். ஆஷு தன்னுடையை சமூகத்தின் வழித்தொடர்ச்சியான தன் குடும்ப மதிப்பீட்டின் பொருட்டு, எத்தகைய சூழலிலும் மது அருந்த மாட்டேன் என்று சொன்னான். நான் மூன்றாவது சுற்று ரம் அருந்திவிட்டு, அது தந்த ஆசுவாசத்தில் சமையலறையை விட்டு வெளியே வந்தேன்.

என் அறை இருந்த வரிசையின் முடிவில் இருந்த பால்கனிக்குச் சென்று பார்த்தேன். அந்த பிரதான சாலையில் இருபுறமும், கண்ணெட்டும் தொலைவு வரை, ஒரு மனிதத்தலையைக்கூட பார்க்க முடியவில்லை. எதிரே தெரிந்த விளக்கொளியில் பனி திரித்திரியாகக் கொட்டுவது வெள்ளை நிறத்தில் பால்கோவா விழுந்துகொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. இடது கையை நீட்டி நான்கைந்து பனித்துளிகளை வாங்கிய பிறகு கைகள் விரைக்க உள்ளே இழுத்துக்கொண்டேன்.

கொட்டும் பனி
கொட்டும் பனி

அந்தத் தனிமை எனக்குப் பிடித்திருந்தது. பயணச் சோர்வையெல்லாம் உதறிவிட்டு அங்கே கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் நின்றுகொண்டிருந்தேன். ஸூகு பள்ளத்தாக்கைப் பார்த்தபடி எப்படி நின்றிருந்தேனோ அதே போலதான். சில வேளைகளில் எதுவும் செய்யாமல், எதைப்பற்றியும் யோசிக்காமல் வெறுமனே இருப்பதுகூட நிறைவளிக்கக்கூடிய செயலாக இருக்கும்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு ரம்மின் தாக்கம் குறைந்து மீண்டும் கடுங்குளிர் என்னைத் தாக்க, சமையலறைக்கு ஓடிச்சென்றேன். சோனம் எங்களுக்கு ரொட்டி தயார் செய்துகொண்டிருந்தாள். நெருப்பில் வாட்டி எடுக்கப்படும் ரொட்டிகளுக்கே உரித்தான மென்மையோடு இல்லாமல் அது சற்றுக் கடினமாக இருந்தது. ஆஷு, பாம்டிலா செல்வது பற்றி டிரைவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

ரம்
ரம்

அருணாசலப் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் பாம்டிலாவும் ஒன்று. இங்கே பொதுப்போக்குவரத்து என்கிற ஒன்றே கிடையாது. எங்கு செல்ல வேண்டுமென்றாலும் வாடகைக்குக் கார் எடுத்துதான் செல்ல வேண்டும். பாம்டிலாவுக்கு குறைந்தபட்சம் 7,000 ரூபாய் வசூலிப்பார்கள் என்று ஒரு டிரைவர் சொன்னார். ஆஷுவின் பொருளாதார சூழலும் என்னை ஒத்திருந்தது.

இன்னும் இன்னும் எனத் திட்டத்தை விரித்தெடுத்துச் செல்வதற்கான நேரமும் பணமும் இல்லாத சூழலில், அது குறித்து விசாரிப்பது தவறில்லை. அங்கு செல்வதற்கான சாத்தியங்களைத் தேடுவது ஒவ்வாத செயல் என்றே எனக்குப் பட்டது. தவாங்கில் நடந்து செல்லும் தொலைவு வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஊரைச் சுற்றலாம் என்று மட்டும் சொன்னேன். கடைசி சுற்று ரம் அருந்தியபடியே ரொட்டிகள் சாப்பிட்டு விட்டுப் படுக்கச் சென்றேன்.

- திரிவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism