Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: கசோல் நாள்கள் - பார்வதி பள்ளத்தாக்கின் ரகசியங்கள்| பகுதி 40

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

கசோல் மலானா, தோஷ் இவ்விடங்கள் இமயமலையில் யூதர்களின் புகலிடமாக இருக்கின்றன. பல ஆண்டுகளாகவே அந்தப் பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்துவருவதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: கசோல் நாள்கள் - பார்வதி பள்ளத்தாக்கின் ரகசியங்கள்| பகுதி 40

கசோல் மலானா, தோஷ் இவ்விடங்கள் இமயமலையில் யூதர்களின் புகலிடமாக இருக்கின்றன. பல ஆண்டுகளாகவே அந்தப் பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்துவருவதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

இரவு நேரத்து நதியின் ஓசை மனதை ஆற்றுப்படுத்தும் வல்லமைகொண்டது. மணாலியிலிருந்து கசோல் செல்லும் பாதையில் ஒருபுறம் மலையும் மறுபுறம் பியாஸ் நதியும் எங்களை வழிநடத்தின. மணிகரன் செல்லும் சாலையை அடைந்ததும் நதியின் ஓசை முன்பைவிட இரைச்சலாக ஒலித்தது.

நெடுமலைகளின் பாறைகளினூடே பாய்ந்து வந்த பார்வதி நதியை அவ்வேளையில் ஓசை வடிவாகவே உணர முடிந்தது.

இரவு வானின் வெளிச்சம் நதி நீரில் பிரதிபலித்தாலும் பார்வதி நதியின் பராக்கிரமத்தைக் காண பகலவனின் வெளிச்சம் தேவைப்பட்டது. செவிகளுக்கு மட்டுமே காட்சியளித்த பார்வதி நதியின் வனப்பை மறுநாள் முழுமையாகக் கண்டுணரலாம் என்கிற ஆறுதலோடு நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதியைச் சென்றடைந்தோம்.

மின்விளக்குகளின் வெளிச்சத்தில் கசோல் ஜொலித்தது. பயணிகளின் சொர்க்கபூமியாக அறியப்படும் கசோல், அவ்விரவு நேரத்திலும் ஆரவாரம் பூண்டிருந்தது. பயணத்தின் அசதி உடலை ஆக்கிரமித்தது. மிதமான வெந்நீர்க் குளியல் உடற்தசைகளின் இறுக்கத்தை விடுவித்து விரைந்து உறங்க வழிவகுத்தது.

அதிகாலையில் துயிலெழும் வழக்கமுடையவள் என்பதால், எனது ஒரு நாளின் அளவு மற்றவர்களுடையதைவிட சற்று நீளமாக இருப்பதாக எனக்குத் தோன்றும். புலரியின் ஏகாந்தத்தில் எனது அகத்தினுடனான உரையாடலைப் பெரும்பாலும் அந்நேரங்களில் நான் தொடங்குவதுண்டு. உடன் வந்த மற்ற நண்பர்கள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தபடியால் அவர்களை அழைக்காமல் கதவை மெல்லத் திறந்துகொண்டு வெளியே வந்தேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

பார்வதி பள்ளத்தாக்கில் சற்றே உயர்வான மேட்டு நிலத்தில் எங்களது 'ஹோம் ஸ்டே' இருந்தது. அங்கிருந்து பார்த்தால் கசோல் மார்க்கெட்டில் மனிதர்கள் நடமாடுவது தெரிந்தது. அதிகாலை வேளை என்பதால் சுற்றுலா வந்தவர்கள் குறைவாகவே தென்பட்டனர். கசோல், மலானா ஆகிய பகுதிகளில் கஞ்சா (Cannabis) மற்றும் இதர போதை தரும் மூலிகைகள் எளிதாகக் கிடைக்குமென்பதால் உலகெங்கிலுமிருந்து பயணிகள் குறிப்பாக, இளைஞர்கள் அந்தப் பகுதிகளுக்குப் படையெடுப்பது வழக்கம். அதன் காரணமாகவே மணிகரன் நெடுஞ்சாலை முழுதும் காவல்துறையினர் வாகனங்களைச் சோதனை செய்த பின்னரே பயணத்தைத் தொடர அனுமதித்தனர். சட்டத்துக்குப் புறம்பான ஏராளமான வழிகளில் அங்கு போதைப்பொருள்கள் கிடைக்க அப்பகுதி விடுதி உரிமையாளர்கள் சிலரும், மற்றும் அவர்களின் ஏஜென்ட்டுகளும் உதவுகின்றனர்.

'ரேவ் பார்ட்டி' எனும் இரவுக் கொண்டாட்டங்கள் அங்கு பிரசித்தம்.

கொண்டாட்டங்கள் முடிந்து பின்னிரவு கடந்து உறங்கச் செல்பவர்கள் மறுநாள் மதிய வேளைக்குப் பிறகே துயிலெழுவார்கள். மாலை வேளைகளில் மட்டுமே கூட்ட நெரிசலாகக் காணப்படும் கசோல், அதிகாலை வேளைகளில் அப்பழுக்கற்ற அமைதியோடு என்னை வரவேற்றது.

தேநீர்க் கடையில் வரையப்பட்டிருந்த ஓவியம்.Yin Yan தத்துவம்
தேநீர்க் கடையில் வரையப்பட்டிருந்த ஓவியம்.Yin Yan தத்துவம்

உணவகங்கள் பெரும்பாலும் மூடியிருந்தன. தேநீர்க் கடைகள் சில திறந்திருந்தன. அதிகாலையின் முதல் தேநீர் ரத்தநாளங்களில் கலந்ததும் மனம் புத்துணர்வுகொண்டு தேடல் வேட்கை மிகுந்தது. "பார்வதி நதியை எங்கிருந்து பார்த்தால் அதன் முழுமையை உணர முடியும்?" என்று கேட்டேன் தேநீர்க் கடையில் சமோசா தயாரித்துக்கொண்டிருந்த பெண்மணியிடம். சற்று நேரம் யோசித்தவர் "வழக்கமாக எல்லோரும் வலப்புறச் சாலையில் ட்ரெக்கிங் பகுதியையொட்டி ஓடையாகத் தாவிவரும் பார்வதியைக் காணவே விரும்புவர். நீங்கள் அதன் முழுமையைக் காண விழைகிறீர்களல்லவா... சாலையின் இடப்புறம் திரும்பி குறுகிய இரும்புப் பாலம் ஒன்றை க்கடந்து மலையில் சில நிமிட ஏற்றத்துக்குப் பிறகு ஓரிடத்தில் பெரும் ஓசை கேட்கும் திசை நோக்கிப் பயணியுங்கள். நீங்கள் விரும்பும் காட்சி அங்கு கிடைக்கும்" என்றார். அந்தப் பெண்மணியைச் சற்றுக் கூர்ந்து கவனித்தேன். நான் கேட்ட கேள்வியின் முக்கியத்துவத்தை அவர் அப்படியே உள்வாங்கியிருந்தார். அந்நாளுக்கான வியாபாரத் தேவைகளை கவனித்தவாறே அவர் எனக்கு வழிகாட்டியவிதம் அவரது ஆன்மாவின் தேடலை பிரதிபலித்தது.

அவரிடம் மீண்டுமொரு முறை வழியை துல்லியமாகக் கேட்டறிந்துகொண்டேன். நண்பர்கள் யாருமில்லாததால் வழியை உள்ளங்கையில் குறித்துக்கொண்டேன். நான் திசையறிந்து பயணிப்பவளல்ல, அடையாளங்களைப் பின்பற்றுபவள். "சஹால் என்றொரு கிராமத்தை சென்றடையும் வரை மலையேறுங்கள். பார்வதி நதியின் அழகு புலப்படும்" என்று இறுதியாக கூறிச் சென்றார் அந்தப் பெண்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

திட்டமிடாத பயணம் என்பதால் அலைபேசியையும் பணத்தையும் விடுதியிலேயே விட்டு வந்திருந்தேன். நூறு ரூபாய் அளவே கையில் பணமிருந்தது. அந்தப் பெண் காட்டிய திசையில் நடக்கத் தொடங்கினேன்.

`மினி இஸ்ரேலுக்கு உங்களை வரவேற்கிறோம்’ என்கிற பலகைகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கின.

கசோல் மலானா, தோஷ் இவ்விடங்கள் இமயமலையில் யூதர்களின் புகலிடமாக இருக்கின்றன. பல ஆண்டுகளாகவே அப்பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்துவருவதாக உள்ளூர்வாசிகள் கூறினர். பயணத்தினூடே யூதர்கள் வாழும் பகுதிகளையும் கண்டு வர வேண்டுமென்கிற ஆர்வம் துளிர்த்தது. அங்கு ட்ரெக்கிங் ஏஜென்ஸி வைத்திருந்த ஒருவரிடம் யூதர்களின் வசிப்பிடம் குறித்து விசாரித்தேன். அவர் இடப்புற மலைச் சிகரத்தை நோக்கிக் கைகளை உயர்த்தினார். ``இந்த மலை முழுதும் அவர்கள் அநேகம் பேர் வாழ்கின்றனர்’’ என்றார். ``அவர்களுடைய புனிதத் தலமான 'சபாத்’ (Chabad) என்கிற ஆலயமும் இங்கிருக்கிறது. அதை நிர்வகிப்பவர் 'ரபீ' என்றழைக்கப்படுகிறார்’’ என்றார்.

'ரபீ' என்கிற சொல்லை கேட்டதும் மனம் பரவசமடைந்தது. திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டு பகுதிகளில் இயேசு கிறிஸ்து 'ரபீ' என்றே அழைக்கப்படுகிறார். நிக்கோலஸ் நோட்டோவிட்ச் எழுதிய 'The Unknown life of Jesus Christ' என்கிற புத்தகத்தை கல்லூரிக் காலத்தில் வாசித்த நினைவு வந்தது. அதில் இயேசு கிறிஸ்து தனிமை தேடி பயணித்தபோதெல்லாம் அவர் மலைகளையே தேர்வுசெய்தார். அவரின் தவ வாழ்வுக்கு மலைகளே அடைக்கலமளித்தன. அதிலும் குறிப்பாக வணிகர்கள் சிலரோடு சேர்ந்து அவர் இமயமலைப் பகுதி வரை வந்து, இங்கிருந்த எஸ்ஸெனிஸ் துறவிகளுடன் சில காலம் வசித்ததாகக் கூறப்படுகிறது. தனது பன்னிரண்டாவது வயதில் ஜெருசலேமைவிட்டு மறையும் அவர், பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தே மீண்டும் தோன்றுகிறார். மறைவு வாழ்க்கை வாழ்ந்த அக்காலத்தில் ஞான மார்க்கத்தில்

பல்வேறு இடங்களை சுற்றித்திரிந்த அவர் இமயமலைப் பகுதியிலும் வாழ்ந்ததற்கான சான்றுகள்

அடங்கிய கையெழுப் பிரதிகள் லடாக் பகுதியில் ஒரு மடாலயத்திலிருந்து கண்டறியப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நிஜமெது, புனைவெது என்று பகுத்தறியும் முன்னரே மனதில் கற்பனைக் குதிரை பலவாறு சிந்திக்கலாயிற்று. அவருடன் பயணித்த யூத வணிகர்கள் இங்கேயே தங்கியிருக்கக்கூடுமோ, அவர்களுடைய வம்சாவளியினர்தான் இன்றும் அங்கு வசிக்கிறார்களோ என்று பலவித சிந்தனைகள் மனதைத் துளைத்தன.

அந்நாளின் பிற்பகல் வேளையில் யூதர்களின் சபாத் ஆலயத்தைக் கண்டு வரலாமென்று நினைத்திருந்தேன். ``ஆனால் அது சாத்தியமில்லை’’ என்றார் ட்ரெக்கிங் ஏஜென்ட். ``யூதர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் இந்தியர்கள் நுழைவதை அவர்கள் அனுமதிப்பதில்லை’’ என்றார். ``நம் நாட்டுக்குள் வந்து நமக்கே அனுமதி இல்லை என்பார்களா?’’ என்றேன். "அது அப்படியல்ல சகோதரி. நாடு, பிராந்தியங்கள் என்கிற எல்லைகளை வகுக்கும் முன்னமே மனிதர்கள் வெவ்வேறு இனக்குழுக்களாக இமயமலைப் பகுதிகளில் வாழ்ந்துவந்திருக்கின்றனர்.

யூதர்கள் இங்கு வசிப்பதும் அப்படியானதொரு வரலாற்று நீட்சிதான்.

அதவுமல்லாமல் இங்கு பயணம் வரும் நம் இந்திய இளைஞர்கள் சிலர் போதைவசமான பின் அயல்நாட்டுப் பெண்களை தகாத முறையில் பாலியல் சீண்டல் செய்வதுண்டு. அத்தகைய அத்துமீறல்களிலிருந்து தப்பிக்கவே அவர்கள் ஒதுங்கி வாழ்கின்றனர்’’ என்றார். யூதர்களின் வசிப்பிடத்தைக் காண விரும்பிய ஆவல் நிறைவேறாமல்போனது ஏமாற்றமாக இருந்தது. அதைக் கண்ட ட்ரெக்கிங் ஏஜென்ட் "இங்கு நிறைய இஸ்ரேலிய உணவகங்கள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் அங்கு உணவருந்தச் செல்லலாம். புதியதோர் அனுபவமாக அது உங்களுக்கு அமையும்" என்றார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தேநீர்க் கடைப் பெண் வழிகாட்டிய பாதையில் முன்னேறினேன்.

முதலில் இரும்புப் பாலமொன்றைக் கடந்து, மறுபுறம் செல்லவேண்டியிருந்தது. பாலத்தைக் கடந்ததும் மலையேற்றம் தொடங்கியது. வழியை மறித்துக்கொண்டு வரிசையில் நின்றிருந்தன சில குதிரைகள். அவற்றின் முதுகில் தொங்கிய பைகளில் செங்கற்களைச் சுமையேற்றினான் குதிரைக்காரன். அனைத்தும் இளம் வயது குதிரைகள். ஊட்டச்சத்துக் குறைவால் அவை மெலிந்து, சோகை பிடித்தவைபோல் சோர்ந்து நின்றிருந்தன. அருகில் செங்கற்குவியல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. என் பயணம் தடைப்பட்டது. குதிரைகள் முன்னேறிச் சென்றாலொழிய எனது பயணம் தொடர வாய்ப்பில்லை என்று தோன்றியது.

குதிரைக்காரனும் அவனது குதிரைகள்போலவே நலிவுற்றிருந்தான். சட்டைப்பையிலிருந்து பொடித்த இலை உருண்டை ஒன்றை எடுத்து கீழுதட்டின் உட்பகுதியில் அழுத்தினான். தொடர்ந்து செங்கற்களை குதிரைகளின் முதுகில் சுமையேற்றினான். அனைத்துக் குதிரைகளின் முதுகுகளிலும் செங்கல் சுமையேற்றிவிட்டு அவற்றை முன்னேறிச் செல்லுமாறு ஓசையெழுப்பினான். வரிசையின் முதலில் நின்றிருந்த குதிரை பலவீனத்தினால் சோர்ந்திருந்தது. அது தலைகுனிந்தே நின்றிருந்தது.

சுமையின் அழுத்தத்தால் அதன் வாயிலிருந்து எச்சில் நுரைத்து கொட்டியது.

பின்னால் நின்ற குதிரைகள் சுமையின் அழுத்தத்தால் கனைக்கத் தொடங்கின. அவற்றின் சப்தத்தைக் கேட்டு குதிரைக்காரன் வேகமாக முதல் குதிரையினருகே சென்றான். அதன் பையிலிருந்து ஒரு செங்கல்லை எடுத்து அதன் கழுத்துப் பகுதியில் பலங்கொண்டு குத்தினான். குதிரை வலியில் கனைத்துத் துடித்தது. வேகமாக மலையேறத் தொடங்கியது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நான் குதிரைக்காரனிடம் "நீங்கள் செய்தது பெரும் தவறு. வாயில்லா ஜீவனை இப்படியா துன்புறுத்துவது?" என்றேன். அவன் என்னை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தான்.

``இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள ஏழு லோடு செங்கல்லை சஹால் கிராமத்துல கொண்டு சேர்க்கணும். பெரிய ஹோட்டல் கட்டப்போறாங்க அங்கே. இதுதான் முதல் லோடு. இன்னும் ஆறு முறை மலையேறி இறங்கணும்" என்று கூறினான்.

"அந்தக் குதிரையை மட்டும் விட்டுறலாம். செத்துறப்போகுது வலியில. மற்ற குதிரைகள் தெம்புடன் காணப்படுகின்றன" என்றேன்.

"சாவு வந்தா சாகட்டும். அதற்கு வருந்தவா முடியும்... மரணம் ஒண்ணும் நிகழக்கூடாததல்ல, அனைவரும் அதைக் கண்டு அஞ்சுவதற்கு. பிறப்புபோல் இறப்பும் நிகழும் அவ்வளவுதான். நானும் அந்தக் குதிரையும் நாம எல்லாரும் ஒண்ணுதான்" என்று கூறிவிட்டு குதிரைகளைப் பின்தொடர்ந்தான்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

அன்று அதிகாலை மட்டுமே நான் மூன்று வெவ்வேறுவிதமான வழிகாட்டிகளைச் சந்தித்துவிட்டேன். ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் எனக்குச் சில உண்மைகளை எடுத்துரைத்தனர்.

பார்வதி நதியைக் கண்டு வரலாமென்று தொடங்கிய பயணம் சில வழிகாட்டிகளுடனான உரையாடலால் அன்று நிகழாமல் போனது. மறுநாள் காலை மீண்டும் பயணத்தைத் தொடரலாம் என்றெண்ணி விடுதிக்குத் திரும்பினேன். விடிந்து பல மணி நேரமாகியும் விடுதிக்குத் திரும்பாத என்னைத் தேடிக்கொண்டு நண்பர்கள் உள்ளுர்வாசிகளின் துணையுடன் விடுதியைவிட்டு வெளியே வந்தனர். நான் திரும்பியதைக் கண்டு நிம்மதியடைந்தனர்.

"தனியொருத்தியாகப் பயணிக்க வேண்டாமென்று எத்தனை முறை வலியுறுத்தினாலும் நீ புரிந்துகொள்வதில்லை. அசம்பாவிதங்கள் நேராமலிருந்தால் சரி" என்று கடிந்துகொண்டார் நண்பர். நான் சேகரித்துவந்த தகவல்களை அவர்களிடம் கூறினேன். "இவ்வளவு செய்திகள் சேகரித்துக்கொண்டு வந்தாயா?" என்று ஆர்வத்துடன் கேட்டனர்.

"இன்று நமது மதிய உணவு இஸ்ரேலிய உணவகத்தில். வாருங்கள் போவோம்" என்று அனைவரையும் என் பயணத்தில் இணைத்துக்கொண்டேன்.

பார்வதி நதியை அடையவேண்டிய வேட்கையும், யூதர்களின் குடியிருப்புப் பகுதியின் ரகசியங்களைக் கண்டு வந்த ஆவல் மிகுந்த பயணம் தொடரும்...