Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: அஜந்தா கலைதலம்: `படைப்பதும் மனிதனே; சிதைத்து மகிழ்வதும் மனிதனே...’| பகுதி 29

அஜந்தா
பிரீமியம் ஸ்டோரி
அஜந்தா ( க.பாலாஜி )

``என் மனதில் பத்மபாணியைக் காணும் ஆவல் மிகுந்தது. குகை எண் ஒன்றில் போதிசத்வர் பத்மபாணியாக, அதாவது கையில் தாமரை மலரைப் பிடித்தபடி நின்றிருக்கும் ஓவியத்தைக் கண்டேன். அதுநாள் வரை கற்பனையில் மட்டுமே கண்ட ஓவியம் அங்கு கண்முன்னே விரிந்திருந்தது.”

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: அஜந்தா கலைதலம்: `படைப்பதும் மனிதனே; சிதைத்து மகிழ்வதும் மனிதனே...’| பகுதி 29

``என் மனதில் பத்மபாணியைக் காணும் ஆவல் மிகுந்தது. குகை எண் ஒன்றில் போதிசத்வர் பத்மபாணியாக, அதாவது கையில் தாமரை மலரைப் பிடித்தபடி நின்றிருக்கும் ஓவியத்தைக் கண்டேன். அதுநாள் வரை கற்பனையில் மட்டுமே கண்ட ஓவியம் அங்கு கண்முன்னே விரிந்திருந்தது.”

அஜந்தா
பிரீமியம் ஸ்டோரி
அஜந்தா ( க.பாலாஜி )
"அங்கு ஒன்று மட்டும் நிரந்தரமாகக் குடிகொண்டிருந்தது. சிந்தனைகள் அகன்ற அமைதிநிலை. அசிந்தா. இறப்பின் வெவ்வேறு முகங்களை அங்கு கண்டேன். உடலுக்கு விலைமதிப்பு காற்றளவு மலிந்திருந்தது. பாவமன்னிப்பின் பாதையைத் தேர்வு செய்திருந்த எனது மனதை அப்போது வாழ்த்தினேன். வருங்காலத்தை முகமெனக்கொண்ட ஒருத்தியை அங்கு சந்தித்தேன். சிவந்து பழுத்துப்போன தலை மயிருடைய வேசை ஒருத்தியைச் சந்தித்தேன். என்னையே கொன்றுவிடத் துணிந்த என்னுடைய குழந்தைமையைச் சந்தித்தேன். வானுலகுக்கும் பாதாளத்துக்குமிடையே சஞ்சரித்துக்கொண்டிருந்த பார்வையாளன் ஒருவனின் சிரிப்பைக் கடந்து இந்தக் குகைகளை வந்தடைந்தபோது நிஜங்களும் பொய்களும் ஒருசேர மனதை ஆக்கிரமிப்பதை உணர்ந்தேன்.’’ - முரியல் ரூகெசர்.

இலக்கியத்தில் மேற்படிப்பு பயில்வதற்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்த நாள்கள் அவை. குடும்பத்தின் நலிந்த பொருளாதார சூழல் காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாமல் தனியார் வங்கியொன்று வளாக நேர்காணல் நடத்தியதில் தேர்வாகி வங்கிப் பணியில் சேர்ந்துவிட்டேன்.

அஜந்தா
அஜந்தா
க.பாலாஜி

கடன் அட்டை முறைகேடுகள், வங்கியின் வெளிநாட்டுக் கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் வரவு செலவுகளில் நிகழும் முறைகேடுகளைக் கண்டுபிடித்து, மேலிடத்துக்குத் தெரியப்படுத்துதல் ஆகியவை என் வேலையின் அம்சங்கள். கடனுக்கான வட்டித் தொகையை செலுத்தாதவர்களை அலைபேசியில் அழைத்து, அவர்களை அவமானப்படுத்த வேண்டும். இரண்டு மூன்று தவணைகளாகப் பணம் செலுத்தாதவர்களை மிரட்ட வேண்டும், கடுஞ்சொற்களால் காயப்படுத்த வேண்டும். இவை எதுவுமே என் குணத்துக்குப் பொருந்தாத செயல்களென்பதால் வங்கியில் பணிபுரிந்த அந்நாள்களில் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிறுநீரகக் கோளாறு மற்றும் முகமெங்கும் பருக்கள் அதிகரித்து எனது தோற்றமே முற்றிலுமாக மாறியிருந்தது.

இலக்கியம் படித்துவிட்டு வங்கிப்பணி, அதுவும் தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் டெலி காலர் பணி என் மன திடத்தைக் குலைத்துப்போட்டது. அந்நாள்களிலெல்லாம் புத்தக வாசிப்பு மட்டுமே என்னை மன அழுத்தத்திலிருந்து மீட்டது. உணவு இடைவேளை, தேநீர் இடைவேளைகளில் புத்தகம் வாசிப்பேன். யதார்த்த உலகிலிருந்து கனவுலகுக்குள் குதித்து ஆறுதல் தேடும் பயிற்சி அது.

கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' அந்நாள்களில் எனக்குப் பெருந்துணையாக இருந்த புத்தகங்களுள் ஒன்றெனலாம். பேருந்துப் பயணத்தின்போதும், ரயில் பயணங்களின்போதும், அலுவலக இளைப்பாறல் நேரங்களிலும் சிவகாமியின் சபதத்தை திறந்து வைத்துக்கொண்டு படிப்பேன். என்னைச் சுற்றியிருந்த உலகம் மிகவும் பரபரப்பாக இயங்கியதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தப்பித்துக்கொள்வதற்கு புத்தக வாசிப்பு எனக்கு உதவியது.

'சிவகாமியின் சபதம்' புதினத்தின் ஒரு பகுதியில் அஜந்தா ஓவியங்களின் வண்ணக் கோர்வையின் ரகசியத்தைப் பற்றி அறிந்துகொள்ள சிவகாமியின் தந்தையான ஆயனச் சிற்பி பரஞ்சோதி எனும் வீரனை விந்திய மலைப்பகுதிக்கு அனுப்பிவைப்பார். இன்றைய புதுக்கோட்டைப் பகுதிக்குட்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்களைக் குறித்தும், அவற்றுக்கும் அஜந்தா ஓவியங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையைப் பற்றியும் ஆயனச் சிற்பி விளக்கும் பகுதியைப் பலமுறைகள் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை அப்பகுதியை வாசிக்கும்போதும் மனம் பேருவகையடைவதை என்னால் உணர முடிந்தது.

அஜந்தா
அஜந்தா
க.பாலாஜி

"சிற்பம், சித்திரம், சங்கீதம், நடனம் ஆகிய அழகுக்கலைகள் எல்லாம் தமிழகத்தில் மேலோங்கியிருந்த நாள்களில் அக்கலைகளுள் முக்கியமாகச் சிற்பமும் சித்திரமும், விந்திய பர்வதத்திலிருந்து இலங்கை வரையில் ஏறக்குறைய ஒரேவிதமாகப் பரவியிருந்தன என்பதும், ஒரே பாணியில் அமைந்திருந்தன என்பதும் சரித்திரபூர்வமாகத் தெரியவருகின்றன. அஜந்தாவின் குகை மண்டபங்களிலும், தமிழகத்திலும் இப்போது சித்தன்னவாசல் என வழங்கும் சித்தர் வாச மலையிலும், இலங்கையிலுள்ள ஸ்ரீகிரி மலையிலும் ஒரேவிதமான சித்திரங்கள் - அழியா வர்ணங்களில் எழுதிய அற்புதக் கலைப்பண்பு வாய்ந்த சித்திரங்கள் - காணப்படுகின்றன" என்று தனது முன்னுரையில் எழுதியிருப்பார் கல்கி.

கற்பனையாக என் மனதின் அரியணையில் எழும்பியிருந்த அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை என்றேனும் நிஜத்தில் சென்று கண்டு வர வேண்டுமென்ற பெரும் விழைவு நிறைவேற ஒரு தசாப்தம் ஆனது. அஜந்தாவை அடைவதற்கான பாதையை என் வீட்டு வாசலிலிருந்து வரையத் தொடங்கினேன் என்றே கூற வேண்டும். எப்பாதையெல்லாம் என்னைப் பயணங்களில் ஈடுபடுத்துமோ அப்பாதைகளை மட்டுமே நான் தேர்ந்தெடுத்தேன். அதற்குப் பல அவமானங்கள், இழிசொற்கள், உறவு முறிவுகள் என விலை கொடுக்கவேண்டியிருந்தது. அவையெல்லாம் என் பயணங்கள் அளித்த நிறைவின் முன் பொருளற்றுப்போயின. நான் கூட்டில் அடங்குபவளல்ல என்று பழிப்பவர்களுக்கு நானளிக்கும் பதில் இதுதான்,

"உங்கள் கூடுகளின் அளவை கவனியுங்கள். அவை குறுகலானவை.

என் கூடு மிகப்பெரியது

அதன் எல்லைகள் உங்கள் பார்வைகளுக்கு அப்பாற்பட்டவை."

ஔரங்காபாதில் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் அமைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. அவ்விடுதியை இரண்டு இளைஞர்கள் நிர்வகித்துவந்தனர். இரட்டையர்கள் அவர்கள். அந்த விடுதியின் அமைப்பும் கண்ணாடி பிம்பம்போல் ஒரு பகுதியை மற்றொரு பகுதி பிரதிபலிப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சதுரத்தை இரண்டு முக்கோணங்களாக மாற்றியிருந்தது போன்ற அமைப்பு. அறைகளின் எதிர் கோணங்களை சேர்க்கும் மூலைவிட்டம்போல் கோடுகள் வரைந்து அவ்விடத்துக்கு முப்பரிணாமத் தோற்றத்தைக் கொடுத்திருந்தனர். அவர்கள் இருவரைத் தவிர வேறு உதவியாளர்கள் யாரும் அங்கில்லாததால் யாரிடம் உணவுக்கு ஆர்டர் கொடுத்தோம், யார் வந்து குளியலறையில் துவாலை மாற்றினார் என்பது புரியாமல் விழித்தோம். அது ஒரு சுவாரசிய விளையாட்டுபோலிருந்தது.

அஜந்தா
அஜந்தா
க.பாலாஜி

மறுநாள் அசிந்தா (அஜந்தா) மற்றும் எல்லோரா குகைகளுக்குச் செல்வதற்குத் தேவையான முன்னேற்பாட்டில் மும்முரமாக இருந்தேன். அறிவும் உடலும் ஒத்திசைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் மனம் மட்டும் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது. புனித போதிசத்வரான அவலோகிதேஷ்வர் பத்மபாணியாகவும் (தாமரை மலருடன் நிற்கும் ஓவியம்) வஜ்ரபாணியாகவும் (வயிராயுதத்துடன் நிற்கும் ஓவியம்) காட்சி தரும் ஓவியங்களை மனத்திரையில் பல முறை காட்சிப்படுத்திப் பார்த்துக்கொண்டேன்.

அஜந்தா, எல்லோரா குகைகளுக்கிடையே நூறு கிலோமீட்டர் தூரமிருந்ததால் முதல் நாள் அஜந்தா குகைகளை மட்டும் கண்டு வரலாமென முடிவு செய்தோம். தங்கும் விடுதியின் உரிமையாளர்களான அந்த இரட்டையர்கள் எங்களுக்கு முக்கியமான தகவல்கள் தந்துதவினர்.

"உங்க ரெண்டு பேருல யாருகிட்ட பேசுனோம், இப்ப யார்கிட்ட பேசிட்டிருக்கோம்னு தெரியாம குழப்பமா இருக்கு" என்றேன். "அஜந்தாவுக்கு போகிறீர்களல்லவா... அங்கு சிலைவடிவம் கொண்டுள்ள புத்தர்கள் அனைவருக்கும் ஒரே முகமிருப்பதைப் பார்ப்பீர்கள். கூர்ந்து கவனித்தால் மட்டுமே ஒரு புத்தருக்கும், இன்னொரு புத்தருக்குமான வேறுபாடு புரியும். எங்களையும் அவ்வாறே கூர்ந்து கவனித்தால் வேறுபாடு எளிதாகப் புரியும் என்றார் இரட்டையர்களில் ஒருவர்.

அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அஜந்தா நோக்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். நகரத்தின் எல்லைகளைக் கடந்த பிறகு நெடுஞ்சாலையின் இருபுறமும் பருத்தி வயல்கள் தென்பட்டன. முதிர்ந்த பருத்திக் காய்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. பருத்திக்காய்கள் வெடிக்கத் தொடங்கியிருந்தன. அவற்றிலிருந்து பருத்தி இழைகள் பறவைகளின் இறகுகள்போல் காற்றில் மிதந்து வந்தன. அவற்றைக் கைகளில் பிடித்து மீண்டும் காற்றில் ஊதி விளையாடினேன்.

"சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது."

பிரமிள் எழுதிய வரிகள் அப்போது நினைவுக்கு வந்தன. பறக்கும் தன்மையுடைய உயிரினங்கள் பறவைகள் என்றால், அப்போது நானும் பறவையின் இயல்பைப் பெற்றிருந்தேன். மனமானது காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து அஜந்தாவின் குகைச் சிற்பங்களில் சென்றமர்ந்தது. நான் உடலைச் சுமந்து அதன் பின் சென்றேன்.

சித்தன்னவாசல்
சித்தன்னவாசல்
க.பாலாஜி

அஜந்தாவைப் பற்றியும் எல்லோராவைப் பற்றியும் மானுட இனம் அழியும் வரையிலும் யாரேனும் ஒருவர் எழுதிக்கொண்டுதானிருப்பார். வர்ணித்துக்கொண்டுதானிருப்பார். நான் அஜந்தாவின் வரலாற்றைப் பற்றி எழுதப்போவதில்லை. அதற்குத் தேவையான தரவுகளும் சான்றுகளும் ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கானோர் வழங்கியிருக்கின்றனர். அசிந்தா (அஜந்தா) என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாட்டை மட்டுமே பதிவுசெய்ய எண்ணுகிறேன்.

வசந்த காலத்தின் முற்பகல் வேளையில் அஜந்தாவைச் சென்றடைந்தோம். அரசாங்க வழிகாட்டி ஒருவரைக் கட்டணம் செலுத்தி எங்களுடன் இணைத்துக்கொண்டோம். வரலாற்றை அறிவதில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவள் என்பதால் அவரை நானும், என்னை அவரும் கேள்விக்கணைகளால் துளைத்தோம். அஜந்தாவைச் சுற்றி எங்கள் பயணம் தொடங்குவதற்கு முன்பு டூரிஸ்ட் கைடுகளுக்கே உரிய நாடக பாணியில் அவர் எங்களை ஓரிடத்தில் நிற்கவைத்து "நீங்கள் கோடைக்காலத்தில் பிரவேசிப்பதை மறந்துவிடுங்கள். பருவ மழைக்காலம் தீவிரமடைந்திருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கீழே பள்ளத்தாக்கில் வகோரா நதி ஆர்ப்பரித்து பாய்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். சுற்றிலும் பசுமைப் போர்வை போர்த்திக்கொண்டு உயிரூறும் இம்மலைகளில் உளிகள் பாறைகளைச் செதுக்கும் ஓசை கேட்பதை உணருங்கள். எண்ணற்ற புத்த பிட்சுகள் நதியில் நீராடிவிட்டு படிகளேறி தங்களது விஹாரங்களுக்குச் செல்வதைக் காணுங்கள். ஆன்மாவின் ஓசையைக் கேளுங்கள்" என்று அவர் கூறியதைக் கேட்டதும் மனம் அவர் விரித்த கற்பனையெனும் பட்டுக் கம்பளத்தில் நடைபோடத் தொடங்கியது.

அஜந்தா
அஜந்தா
க.பாலாஜி

கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 30 குகைகளை ஆங்கிலேய ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பின்னரே அஜந்தா உலகத்தின் வெளிச்சத்துக்கு வந்தது. பெளத்த ஆன்மிக முறையைப் பின்பற்றி ஓவியங்களும் சிற்பங்களும் குகைகள் அனைத்திலும் செதுக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. இரண்டு வகையான குகை வடிவங்களை அங்கு காண முடிந்தது. 'சைத்ய க்ருஹா' எனப்படும் பெளத்த வழிபாட்டுத்தலங்களும், 'விஹாரா' எனப்படும் பிட்சுகள் தங்குமிடங்களும் முறையான இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன.

குகைகள் 9, 10, 26 மற்றும் 29 ஆகியவை கோயில்கள் மற்ற இருப்பத்தைந்து குகைகளும் விஹாரா வகையைச் சார்ந்தவை. விஹாராங்களை இணைக்கும் வழித்தடங்கள் மிகவும் பிற்காலத்திலேயே கட்டமைக்கப்பட்டன. தொடக்கத்தில் அவை தனித்தனியாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. நதியில் நீராடிவிட்டு, படியேறி வந்து தத்தமது விஹாரங்களில் புத்த பிட்சுகள் இளைப்பாறினர்.

அஜந்தா
அஜந்தா
க.பாலாஜி
அஜந்தா
அஜந்தா
க.பாலாஜி

விஹாரம் என்றழைக்கப்ட்ட ஒரு குகையினுள் பிரவேசித்தேன். சூரிய ஒளி குறைவாகவே பாய்ந்த அக்குகையினுள் வெளவால்களின் எச்சத்தின் நெடி தீவிரமாக வீசியது. குகையினுள் குளுமையாக இருந்தது. பாறைகள் செதுக்கப்பட்டு திண்ணை வடிவங்களாக மாற்றப்பட்டிருந்தன. ஒரு விஹாரத்துக்குள் இரண்டு கற்திண்ணைகள் எதிரெதிரே இருந்தன. குகையினுள்ளே அமைதி நிலவியது. கற்பனைக் காட்சிகளாக அங்கு பெளத்த துறவிகள் உறங்குவதைக் கண்டேன்.

பெளத்த மதத்தின் ஹீனாயன சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆரம்பகால பெளத்த தலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கி.பி 450 முதல் 650 வரையிலான காலத்தில் பெளத்தத்தின் மஹாயன முறைப்படி வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்பட்டன என்று எங்களது வழிகாட்டி தரவுகளைத் துல்லியமாக அளித்து விளக்கினார்.

அஜந்தா
அஜந்தா
க.பாலாஜி

என் மனதில் பத்மபாணியைக் காணும் ஆவல் மிகுந்தது. குகை எண் ஒன்றில் போதிசத்வர் பத்மபாணியாக அதாவது கையில் தாமரை மலரைப் பிடித்தபடி நின்றிருக்கும் ஓவியத்தைக் கண்டேன். அதுநாள் வரை கற்பனையில் மட்டுமே கண்ட ஓவியம் அங்கு கண்முன்னே விரிந்திருந்தது. ஓவியத்தின் பெரும்பான்மைப் பகுதி சிதிலமடைந்துவிட்டபோதிலும் போதிசத்வரின் முகமும் அந்தக் கண்கள் வெளிப்படுத்திய அமைதியும் காலத்தின் சாட்சியம்போல் தோன்றியது. ஓவியத்தை சுண்ணாம்பு மற்றும் அரக்குக் கலவைகொண்டு தீட்டிய பின் பல வண்ணக் கூழாங்கற்களைப் பொடியாக்கி வண்ணம் தீட்டினர். புனைவுகளில் வருவதுபோல் அவை மூலிகைகளின் வண்ணங்களோ மற்ற தாவரங்களின் குழைவுகளோ அல்ல. ரசாயனக் கலவையின் விளைவாகக் கிடைத்த வண்ணங்கள் அவை என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக எங்கள் வழிகாட்டி கூறினார்.

அஜந்தா
அஜந்தா
க.பாலாஜி

குகைகளின் கூரை முழுவதும் ஒவியங்களால் நிறைந்திருந்தன. அவை பெரும்பாலும் பெளத்த நன்னெறிக் கதைகளின் சித்திரங்களாக இருந்தன. பெரும்பாலும் அவை இரு பரிமாண ஓவியங்களாகவே இருந்ததால் அவற்றைப் புரிந்துகொள்வது எளிதாக இருந்தது.

அஜந்தா குகை சிற்பங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய தலமாக அறிவிக்கப்படும் முன்னர் வரை அவற்றைச் சுற்றுலாவாசிகள் கடுமையாகச் சிதைத்ததின் அடையாளங்கள் ஒவ்வொரு தூணிலும், ஒவ்வொரு சிற்பத்திலும் காண முடிந்தது. கலை வடிவங்களைப் படைப்பதும் மனிதன்தான். அவற்றைச் சிதைத்து மகிழ்வதும் அவனைப் போன்ற இன்னொரு மனிதன்தான் என்பதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைத்திலும் தனது முகத்தைக் காட்டிவிட எண்ணும் மனித மனத்தின் தவிப்பின் எழுச்சி கலை வடிவங்களென்றால், அதே கண்ணோட்டத்தின் வீழ்ச்சி அழிவுக்கான அவனது அத்தனை செயல்களும் என்று தோன்றியது.

அஜந்தா
அஜந்தா
க.பாலாஜி

26 - A என்று குறிப்பிடப்பட்டிருந்த குகையில் புத்தர் படுத்திருப்பது போன்ற சிலை வடிக்கப்பட்டிருந்தது. புத்தரின் இறுதி நாள்களை அது நினைவுப்படுத்துவதாக இருந்தது. புத்தர் படுத்திருக்க அவரைச் சுற்றி அவரின் சீடர்களும் பொதுமக்களும் அமர்ந்து தியானித்திருப்பதுபோல் வடிக்கப்பட்டிருந்த அச்சிலையின் மேல் செயற்கை விளக்குகளின் ஒளி படர்ந்தது. உலக வாழ்வின் மாயையிலிருந்து முழுவதுமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட புத்தரின் சமர்ப்பண மனநிலையை என்னால் அணுவினும் சிறிதளவு அப்போது உணர முடிந்தது.

துகளளவே கிடைக்கப் பெற்றாலும் அது கடவுள் துகள் என்கிற நிறைவோடு அஜந்தாவிலிருந்து புறப்பட்டேன்.

கல்லிலே கலைவண்ணம் காணும் ஆவலுடன் எல்லோரா பயணம் தொடரும்.