Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: வரலாற்றில் சுவாரஸ்ய இடைச்செருகல்கள் |தேவகிரி (எ) தெளலதாபாத் கோட்டை | பகுதி 30

நாடோடிச் சித்திரங்கள் | தேவகிரி கோட்டை
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் | தேவகிரி கோட்டை

``அவள், மலைகள் தாண்டி, அகழியின் முதலைகளிடமிருந்து தப்பித்து, மற்றவர் பார்வையிலிருந்தும் தப்பித்து கோட்டை உச்சியின் நிலவறையில் அவனுக்காகக் காத்திருந்தாள்...”

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: வரலாற்றில் சுவாரஸ்ய இடைச்செருகல்கள் |தேவகிரி (எ) தெளலதாபாத் கோட்டை | பகுதி 30

``அவள், மலைகள் தாண்டி, அகழியின் முதலைகளிடமிருந்து தப்பித்து, மற்றவர் பார்வையிலிருந்தும் தப்பித்து கோட்டை உச்சியின் நிலவறையில் அவனுக்காகக் காத்திருந்தாள்...”

நாடோடிச் சித்திரங்கள் | தேவகிரி கோட்டை
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் | தேவகிரி கோட்டை
வரலாறு என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனைவுக் கதைகளே.
- நெப்போலியன் போனபார்ட்

மகாராஷ்டிரா பள்ளியில் பணியாற்றிய சில நாள்களில் ராஜ்யஶ்ரீ என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ஜல்காவ் மாவட்டத்தின் புசாவல் பகுதியைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் அவர். மகாராஷ்டிரா என்றால் மும்பை, புனே, கோவா ஆகிய இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களைப் பற்றி பெயரளவில்கூட தெரிந்திராததால், ராஜ்யஶ்ரீயின் நட்பின் மூலம் மகாராஷ்டிரா மாநில மக்களின் வாழ்வியல் குறித்து ஆழ்ந்து அறிந்துகொள்ள முடிந்தது.

ஒருமுறை பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்களிடம் சோழர்களின் அடையாளமான தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமான வல்லமை குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே கடந்து சென்ற ராஜ்யஶ்ரீ என்னை இடைமறித்து, "உங்கள் சோழர், பாண்டியர்களுக்கு சற்றும் சளைத்தவரல்லர் எங்கள் சத்ரபதி சிவாஜி. அவர் பெயரை உச்சரித்தால் பிறந்த குழந்தைகூட கைகளில் வாளேந்தி போர்க்களம் செல்லத் துணியும்" என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் என்னை இடைமறித்து அவ்வாறு கூற வேண்டியதன் அவசியம் என்ன என்று சற்று நேரம் ஆராய்ந்து பார்த்தேன். மனிதன், தன் வரலாற்றைக் குறித்தும், முன்னோர்கள் குறித்தும் பெருமிதம்கொள்வதையே பெரும்பாலும் விரும்புகிறான். மனித வரலாற்றுக்குப் பல முகங்கள் உண்டு. அவற்றில் சில கொடூரமான முகங்களுமுண்டு.

மனிதன், தான் விரும்பியவாறு வரலாற்றை வனையும்போது வரலாற்றில் அவனது முன்னோர்கள் இழைத்த அதே பிழையை தானும் வருங்காலத்தில் இழைப்பான் என்பது திண்ணம்.

ராஜ்யஶ்ரீயிடம் இதைப் பற்றிப் பேசியபோது அவர் சிரித்தார். "யார் இவ்வளவு யோசிக்கப்போகிறார்கள்... நமக்குத் தேவை அடையாளங்கள். வரலாறு அதை வாரி வழங்குகிறது. அதைச் சூடிக்கொள்கிறோம், அவ்வளவுதான்" என்றார்.

தேவகிரி கோட்டை
தேவகிரி கோட்டை

'அடையாளம்' எனும் சொல்லை அடைப்புக்குறிக்குள் எழுதிப் பார்த்தேன். அவை அச்சொல்லின் தலைக் கொம்புகளாக மாறுவதுபோல் கற்பனையாகத் தோன்றியது. வரலாற்றைத் திரித்து கூறும்போது அங்கு உண்மை அழிந்துபோகிறது. நான் படித்த கான்வென்ட் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் ஆங்கிலேயர்களைப் பெருமைப்படுத்தும்விதமாக வரலாற்று பாடங்கள் இயற்றப்பட்டிருந்தன. ஏன், எதற்கு என்ற கேள்விகளில்லாமல் அவற்றை உண்மையென்று நம்பிப் படித்த நாள்களுமுண்டு. என் சிந்தனையைத் தூண்டிய ராஜ்யஶ்ரீயை என்னுடன் ஒளரங்காபாத் வருமாறு அழைத்தேன். "உங்கள் ஊரின் கதைகளை நீங்கள் கூறி கேட்க விழைகிறேன்" என்றேன். புசாவலில் தனது பிறந்த வீட்டுக்குச் செல்வதால், ஒரு நாள் மட்டும் எங்களுடன் செலவிடுவதற்குச் சம்மதித்தார் ராஜ்யஶ்ரீ. அஜந்தா பயணம் கொடுத்த பரவசத்துக்குச் சற்றும் குறையாமலிருந்தது தேவகிரி கோட்டை மற்றும் எல்லோரா பயணம்.

மறுநாள் காலை நாங்கள் தங்கும் விடுதிக்கு தனது காரில் வந்து சேர்ந்தார் ராஜ்யஶ்ரீ. மராட்டியப் பெண்களுக்கே உரிய பெண்மை மீறாத அறிவும் அழகும் சரிவிகிதத்தில் அமைந்திருந்த பெண் அவர். அவரின் நெடிய கருங்கூந்தலை பராமரித்து, பாதுகாக்க அவருடைய தாயார் மாதமிருமுறை புனே வந்து செல்வாராம். அவரின் குரலின் செருக்கு எனக்குப் பிடித்திருந்தது. அவரின் கூந்தலைப்போலவே அடர்த்தியான செருக்கு அது.

ஒளரங்கபாத்திலிருந்து எல்லோரா செல்லும் வழியில் சில கிலோமீட்டர் தொலைவில் தேவகிரி மலைமீது பிரமாண்டமாக நிற்கும் தேவகிரி( தியோகிரி) கோட்டையைப் பார்த்துவிட்டு எல்லோராவுக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தினார் ராஜ்யஶ்ரீ. மனம் முழுதும் எல்லோரா பற்றிய எண்ணங்கள் நிறைந்திருந்ததால் வேறெந்த இடத்துக்கும் செல்ல ஆவல் இல்லாதிருந்தது. அதை அவரிடம் வெளிப்படுத்தவும் செய்தேன். ராஜ்யஶ்ரீ விடாப்பிடியாகப் பேசினார்.

தேவகிரி கோட்டை
தேவகிரி கோட்டை

``இடைக்கால இந்திய வரலாற்றின் முக்கியமான தடயங்களை சுமந்திருக்கும் தேவகிரி எனும் தெளலதாபாத் கோட்டையை நீங்கள் நிச்சயம் காண வேண்டும். அஜந்தா எல்லோராவுக்கு ஒப்பான சரித்திரச் சான்றுகள் பலவற்றைத் தாங்கி நிற்கும் கோட்டை அது என்பதை நீங்கள் அங்கு உணர்வீர்கள்" என்றார்.

எங்கள் பயணம் தெளலதாபாத் கோட்டையை நோக்கித் தொடர்ந்தது. யாதவ வம்சத்தினரால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட்ட தேவகிரி கோட்டை அவர்களுக்குப் பிறகு டெல்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது. சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் முதன்மை அடிமைத் தளபதி மாலிக் கஃபூரின் நேரடி மேற்பார்வையில், இந்தக் கோட்டை சுல்தான்கள் தென்னிந்தியாவைக் கைப்பற்ற மேற்கொண்ட உத்திகளின் தரைத்தளமாக இருந்ததெனலாம். துக்ளக் வம்சத்தினரின் ஆட்சியில் முகம்மது பின் துக்ளக், இந்தியாவின் தலைநகரையே டெல்லியிலிருந்து தெளலதாபாத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.

ஒரு நாட்டை அதன் மத்தியப் பகுதியிலிருந்து ஆள வேண்டும் என்ற வேடிக்கையான சட்டமொன்றை இயற்றி, டெல்லி சுல்தானேட் பகுதி மக்களையும், அரசு அலுவலகங்களையும் தெளலத்தாபாத்துக்கு இடம்பெயருமாறு உத்தரவிட்டார். பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியிலிருந்து தெளலதாபாத்துக்கு இடம்பெயர்ந்தனர். கோடைக்காலத்தின் வெம்மை தாளாததால் சில மாதங்களிலேயே மீண்டும் டெல்லிக்கு திரும்பி அதையே தலைநகராக அறிவித்தார் துக்ளக். இந்திய வரலாற்றின் வேடிக்கையான அரசராக துக்ளக் இன்றும் அறியப்படுகிறார்.

தேவகிரி கோட்டை
தேவகிரி கோட்டை

காலை உணவாக மராட்டிய சிறப்புணவான வடாபாவ் மற்றும் தாபேலி சாப்பிட்டோம். "நன்றாகச் சாப்பிடுங்கள், கோட்டையைச் சுற்றி வர சக்தி வேண்டுமல்லவா... ராட்சதக் கோட்டை இது" என்றார் ராஜ்யஶ்ரீ.

கோட்டையை அடிவாரத்திலிருந்து பார்த்தபோதே அவர் கூறியது உண்மை என்று புரிந்தது. "இன்று முழுவதும் இங்கேயே கழிந்துவிடும் போலிருக்கிறதே... எல்லோரா போக முடியாதா?" என்றேன். "வரலாறும் கலையும் உங்களுக்கு ஆர்வமானவையென்றால் தேவகிரி கோட்டை உங்களுக்காகப் பல கதைகளை வைத்திருக்கிறது. அவற்றில் சில நானுமறிவேன். அதை உங்களுக்குக் கூறுவேன்" என்று கண்கள் சிமிட்டினார் ராஜ்யஶ்ரீ. அவர் கூறுவதற்கு மறுப்பு கூற விடாத அழைப்பை அந்தப் பார்வை வெளிப்படுத்தியது.

தேவகிரி கோட்டையின் நுழைவாயிலே கோட்டையின் வெளியேறும் வழியுமாகும். மற்ற கோட்டைகள்போல் திசைக்கொரு வாசல் இங்கு கிடையாது. கோட்டையை முற்றுக்கையிடும் பகைவர்கள் வேளியேறும் வழி நோக்கி கோட்டையினுள்ளே முன்னேறிச் செல்லும்போது அவர்களை எதிர்த்து அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உத்தி அது. அதேபோல் எதிரிகளை திசைதிருப்பும் வண்ணமாக கோட்டையின் இடப்புறம் வேளியேறும் வழி இருப்பதுபோல் ஓர் அமைப்பு இருக்கிறது. அவ்வாயிலின் வழி செல்பவர்கள் முதலைகள் நிரம்பிய அகழியில் விழுந்து மடிந்துவிடுவர்.

கோட்டையின் உச்சியை அடைவதற்கு ஓர் உலோக பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவு குறுகலான பாலம் அது. அப்படி ஒன்றன் பின் ஒன்றாக வருபவர்களைக் கோட்டை உச்சியிலிருந்து அம்புகள் எய்திக் கொல்வதும், அகழியில் விழச்செய்து கொல்வதும் போர்முறைகளாகக் கடைப்பிடிக்கப்பட்டன. ராஜ்யஶ்ரீ விளக்கிய அத்தனை விஷயங்களும் காட்சிகளாக கண்முன் விரிந்தன.

கருணை, அன்பு, மன்னிப்பு போன்ற உணர்வுகளுக்கு அக்காலங்களில் என்ன பொருள் இருந்திருக்கும் என்று சிந்திக்கலானேன். மனிதனை, மனிதன் கொன்றழிப்பதற்காக எத்தனை வழி வகைகளைச் சிந்தித்து, அவற்றைச் சாத்தியப்படுத்தியிருக்கிறான் என்று நினைத்துப் பார்க்கும்போது உடல் சில்லிடுவதை உணர முடிந்தது. `பயத்தால் மட்டுமே உலகை ஆள முடியும்’ என்று எத்தனை மன்னர்கள் முழங்கிச் சென்றிருக்கின்றனர்... பயம் மட்டுமே நம்மைக் காப்பாற்றும் சிறந்த ஆயுதம் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

தேவகிரி கோட்டை
தேவகிரி கோட்டை

கோட்டையில் ஆங்காங்கே திறந்தவெளி அரங்குகள், யானைகள் நீரருந்தும் கிணறுகள், சாந்த் மினார் என்கிற அழகிய ஸ்தூபி என்று பலவகையான கலைநயமிக்க இடங்கள் நிறைந்திருந்தன. டெல்லியிலுள்ள குதூப் மினாரின் அழகில் மயங்கிய பாஹ்மனி அரசர் தனது ஆட்சிக்காலத்தில் அதேபோல் தெளலதாபாத்தில் ஒன்று இருக்க வேண்டுமென்று விரும்பி சாந்த் மினாரை நிறுவினாராம். கடந்த சில வருடங்களாக அங்கு நிகழும் தொடர் தற்கொலைகளால் அவ்விடம் சுற்றுலாவாசிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராஜ்யஶ்ரீ கூறிய வரலாற்றுக் கதைகளை கேட்டபடியே கோட்டையின் உச்சியை அடைந்தோம். பாதை செங்குத்தாக மாறியது. மேற்கொண்டு நடப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. மூச்சிரைத்தபடி படியேறிய என்னிடம் ராஜ்யஶ்ரீ ``மனந்தளராமல் வாங்க... இவ்விடத்தில் நிகழ்ந்தேறிய அமர காதல் கதை ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். இழந்த சக்தியெல்லாம் மீண்டும் கிடைத்தது போன்ற உணர்வு எனக்கு. ``மனிதர்களைக் கொலை செய்யும் பாறைக் கோட்டையில் காதல் கதையா?" என்று ஆர்வமாகக் கேட்டேன்.

கோட்டையின் உச்சியில் படிக்கட்டுகளில் இடைவெளி அதிகரித்தன. செங்குத்தான இருண்டு வளைந்த வழிகள் அவை. ஒரு வழியில் நுழைந்தால், எவ்வழியில் வெளியேறுவது என்று அறியா வண்ணம் பரமபத வளைவுகள்போல் அவ்விடம் இருந்தது. அங்கு ஒரு நிலவறைபோல் தோற்றம்கொண்ட அறை இருந்தது. அது முக்கோண வடிவிலிருந்தது. காற்றுப்புக முடியாத இருண்டுபோன அவ்வறைக்குள் நுழைந்ததுமே உடல் வியர்த்து மூச்சு முட்டியது. ``இங்குதான் ஒரு பெண், கோட்டையில் காவல் தொழில் செய்துவந்த தன் காதலுனுக்காக ஒவ்வோர் இரவும் வந்து காத்திருந்தாளாம்."

``அவள் பெயர் என்ன?’’ என்றேன் ஆர்வத்தோடு.

``ஏன்... பெயர் அவ்வளவு முக்கியமா?"

``ஆம். எனக்கு முக்கியம். நான் மனிதர்களை அவர்களது முகங்களைக்கூட மறந்துவிடுவேன் ஆனால் அவர்களுது பெயர்கள் மனதில் நிலைத்து நிற்பவை அல்லவா" என்றேன்.

தேவகிரி கோட்டை
தேவகிரி கோட்டை

"சரி. அந்தப் பெண்ணின் பெயரை உங்கள் பெயரென்றே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் பெயரைச் சூட்டிக் கொள்கிறேன்" என்று சிரித்தார் ராஜ்யஶ்ரீ.

``கற்பனைக் கதைக்குள் நாம் புகுந்து விளையாடலாம்" என்றார்.

பல மாதங்களாகியும் வீடு திரும்பாத தன் காதலனைக் காணும் ஆவலில் பல தூரம் பயணித்துவந்த அவள், மலைகள் தாண்டி , அகழியின் முதலைகளிடமிருந்து தப்பித்து, மற்றவர் பார்வையிலிருந்தும் தப்பித்து கோட்டை உச்சியின் நிலவறையில் அவனுக்காகக் காத்திருந்தாள். வியர்வையில் குளித்த அவளது உடல் வாசத்தை ஒருவாறு முகர்ந்துணர்ந்த அவளது காதலன், அவளைத் தேடி கோட்டை முழுதும் பித்துப் பிடித்தவன்போல் தேடியலைந்து பின்பு நிலவறையில் அவள் ஒளிந்திருப்பதைக் காண்கிறான்.

மூச்சுவிட முடியாமல் வியர்வையில் நனைந்திருந்த அவளை அள்ளியணைத்து கோட்டை மதில்கள் அதிரும்படி முத்தமிட்டுப் புணர்ந்தான். அவர்கள் ரகசியமாக சந்திப்பது குறித்த செய்தியறிந்ததும், அரசன் அவனுக்கு பகைவர்களின் ஒற்றன் என்று தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தான். அவன் மரணிக்கப்போகிறான் என்பதைக் கேள்வியுற்ற காதலி, அன்றிரவும் அவனைச் சந்திக்க வந்தாள். அவனும் அவளுடன் அளவாவி வழியனுப்ப ஆயத்தமானான். "நிலவறைவிட்டு வெளியே வா, காற்று வீசுமிடத்தில் அமர்வோம்" என்றான்.

"நீ நிலவறைக்குள் வா. நான் ஆடைகளைத் துறந்துவிட்டேன்" என்றாள் அவள்.

காதலனுக்கு அவளது அழைப்பின் செய்தி புரிந்துவிட்டது. அவர்களிருவரும் காற்றுப் புக முடியாத அந்நிலவறையில் கூடிக்களித்தனர், கூடி மயங்கினர், கூடி மடிந்தனர்.

"அவர்களிருவரின் ஆன்மாக்கள் இங்கு உலவுவதாகச் சிலர் கூறுவர். அதனாலேயே இந்த உயரம் வரை பெரும்பாலும் யாரும் வருவதில்லை" என்றார் ராஜ்யஶ்ரீ.

"நாம் ஏன் இங்கு வந்தோம்?" என்றேன்.

"நீங்கள் இந்த நிலவறையைப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது" என்றார்.

"ஏன் அப்படித் தோன்றியது உங்களுக்கு?"

"நீங்கள் என்றாவது இந்தக் காதல்போல் ஒரு நிலையடையும்போது இவ்விடத்தை நினைவுபடுத்தி எழுதுவீர்கள் அல்லவா... அதற்காகத்தான்" என்றார் ராஜ்ய ஶ்ரீ.

"அந்தக் காதல்போல் ஒரு காதல் வாய்க்கும் நாளில் நிச்சயம் எழுதுவேன்" என்று மனதோடு கூறிக் கொண்டேன்.

இன்று அதை எழுதிவிட்டேன்.

மராட்டிய நில வரலாற்றுப் பயணங்கள் தொடரும்...