Published:Updated:

திருச்சி ஊர்ப் பெருமை - `பொடி, வெங்காயம்' கலந்து தரும் சந்துக்கடை சமோசா!

சமோசா

ரொம்பவே சிறிய தள்ளுவண்டிக் கடை, அருகிலேயே சின்னக் கடையில் சமோசா தயாராகிக்கொண்டே இருக்கிறது.

திருச்சி ஊர்ப் பெருமை - `பொடி, வெங்காயம்' கலந்து தரும் சந்துக்கடை சமோசா!

ரொம்பவே சிறிய தள்ளுவண்டிக் கடை, அருகிலேயே சின்னக் கடையில் சமோசா தயாராகிக்கொண்டே இருக்கிறது.

Published:Updated:
சமோசா

கொட்டித் தீர்க்கும் மழையில், டீயும், கூடவே சுட சுட மிளகாய் பஜ்ஜியும், சமோசாவும் சாப்பிட சொர்க்கமாக இருக்கும் என்பது மக்கள் பலருக்குமான கருத்து. அதிலும் திருச்சியில் இருப்பவர்களுக்கோ மழையானாலும் சரி, வெயிலானலும் சரி, மாலை நேரத்தில் வாய்க்கு ருசியாகக் கொறித்தடியே கூடிப் பேச என யோசிக்கையில் சந்துக்கடையில் உள்ள ரவி சமோசாக் கடை பச்சென்று மனதில் வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த அளவிற்கு சந்துக்கடையின் இந்த சமோசாக் கடை 25 வருடங்களுக்கு மேலாக அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அப்படியான சமோசாவின் சுவையை உணராமல், அந்தக் கடையைப் பார்க்காமல் நமது மனம் ஒப்புக்கொள்ளுமா? கண்டிப்பாக முடியாது என்பதால், ஒரு மாலை நேரமாகப் பார்த்து சந்துக்கடைக்கு வண்டியை விட்டோம்.

சமோசா கடை
சமோசா கடை

ரொம்பவே சிறிய தள்ளுவண்டிக் கடை, அருகிலேயே சின்னக் கடையில் சமோசா தயாராகிக்கொண்டே இருக்கிறது. நாம் சென்று வண்டியை நிறுத்திவிட்டு சமோசாவையும், மிளகாய் பஜ்ஜியையும் ஆர்டர் செய்தோம். சிறிய தட்டில் மூன்று சமோசாவையும், மிளகாய் பஜ்ஜியையும் பாதியாக வெட்டி, வீட்டிலேயே தயார் செய்து எடுத்து வரப்படும் மல்லி, மிளகு, சீரகம் கலந்த பொடியையும், வெங்காயத்தையும் சேர்த்துக் கொடுக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமோசாவிற்கு சாஸ் தொட்டுச் சாப்பிட்டுப் பழகிய நமக்கு பொடியும், வெங்காயமும் வித்தியாசமாகப் பட, ஆர்வத்துடன் சாப்பிட ஆரம்பித்தோம், பொடியின் சுவையும், சூடான சமோசாவும் சில நாள்களாகவே வெயிலைப் பார்க்காத, கூடவே தூறலில் நனைந்திருந்த நம்மை அப்படியே சொர்க்கத்துக்கு இழுத்துச் சென்றது. கூடவே மிளகாய் பஜ்ஜியும். காரசாரமாக வேற லெவலில் இருந்தது. கண்டிப்பாக இங்கே வருபவர்கள் ஒன்றிரண்டு சமோசாக்களை மட்டும் சாப்பிட்டுச் செல்ல முடியாது, அவ்வளவு சுவை. காய்கறிகளும் அந்த மசாலாவும் நம்மால் வேறு எங்கும் சாப்பிட்டிருக்க முடியாது, அவ்வளவு ப்ரெஷ். மேலே மொறுமொறுவென சாப்பிட சாப்பிட போதும் எனச் சொல்லவே முடியாது. நாம் சென்ற நேரத்தில் மேகம் தனது வேலையை ( மழை பொழிவதை ) சற்று நிறுத்தி வைத்திருந்ததால், நம்மால் இன்னும் ஆசுவாசமாகச் சாப்பிட முடிந்தது. தொடர்ந்து மக்களின் கூட்டமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. தினசரி பணியாளர்கள், இளைஞர்கள் என பலரும் இந்தக் கடையின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். தொடர்ந்து சமோசா சாப்பிட்டு, அதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு, கடையின் உரிமையாளரிடம் பேசினோம்.

சமோசா கடை
சமோசா கடை

தன் கடை குறித்தும், எப்படி திருச்சி மக்களுக்குப் பரிச்சயமான ஒரு கடையாக தனது சமோசாக் கடை மாறியது என்பது குறித்தும் உரிமையாளர் ரவி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்,

”என்னோட சொந்த ஊர் வேதாரண்யம்ங்க, சின்ன வயசுலயே என் அப்பா அம்மா இறந்துட்டாங்க, அதுக்கப்புறம் பிழைப்புக்காக திருச்சிக்கு வந்தேன், திருச்சிக்கு வந்த ஆரம்பத்துல ஒரு ஹோட்டல்ல வேலை பாத்துட்டிருந்தேன். அங்கதான் சமோசா போடறது மத்த வேலைகளெல்லாம் கத்துக்கிட்டேன். அதுக்கப்பறம் சின்னதா எதுனா கடை வைக்கலாம்னு ஆரம்பத்துல, பேல்பூரி, பிஸ்கட்னு சின்னச் சின்னதா விற்பனை செஞ்சிட்டு வந்தேன். ஆனா பெருசா அதுல எந்த வருமானமும் கிடைக்கல. வாடிக்கையாளர்களும் பெரிசா கிடைக்கல. நானும் என் நண்பர் ஆறுமுகமும் சேர்ந்து 1996-ல இந்த சமோசாக் கடைய ஆரம்பிச்சோம். அப்போதிருந்து சமோசாவுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமா வர ஆரம்பிச்சிட்டாங்க.

அதுக்கு காரணமா நாங்க நினைக்குறது டெய்லி பிரெஷ்ஷா நாங்க வாங்கி, அதிகமா சேர்க்குற காய்கறியும், ஒரு முறை பயன்படுத்துற எண்ணெயை மறுமுறை பயன்படுத்தாம இருக்குறதுதான்னும் நினைக்குறேன். இதுக்காகவே தேடித் தேடி நானே போய் நேரடியா காய்கறிகளை வாங்கிட்டு வருவேன், அதும் பிரெஷ்ஷாதான் வாங்குவேன், கூடவே மைதாவும் ரொம்ப குவாலிட்டியாதான் வாங்குவேன். இதுக்காக காலையில ஆறு மணிக்கு ஆரம்பிக்கிற வேலை அன்னிக்கு நைட் வரை நடந்துட்டே இருக்கும். காலையில 11 மணில இருந்து சமோசா, காலிபிளவர் சில்லி, மிளகா பஜ்ஜி எல்லாமே கிடைக்க ஆரம்பிச்சிடும். மக்களும் வந்துட்டே இருப்பாங்க, ஒரு நாளைக்கு 2000-த்துல இருந்து 3000 சமோசா வரைக்கும் வித்திடும்’’ என்றார். சமோசாவுடன் பொடி கொடுப்பதைப் பற்றிக் கேட்க, ”என் மனைவி சொன்னா ஐடியாதான் அது, காலிபிளவர்க்கு கொடுக்குற மாதிரி சமோசாக்கும் பொடியும்,வெங்காயமும் கொடுக்கலாம்னு. அப்படித்தான் கொடுக்க ஆரம்பிச்சோம், மக்களுக்கும் பிடிக்க ஆரம்பிச்சதால தேடி வர ஆரம்பிச்சாங்க. வெளியூர்ல இருந்தெல்லாம் நம்ம கடையைத் தேடி வந்து சாபிடுறாங்க" என்றார்.

திருச்சி ஊர்ப் பெருமை - `பொடி, வெங்காயம்' கலந்து தரும் சந்துக்கடை சமோசா!

தொடர்ந்து கடையின் வாடிக்கையாளரான கணேசனிடம் பேசினோம்,

”எங்க வீடு பீமநகர்கிட்ட இருக்குதுங்க, ஆனா சந்துக்கடைகிட்ட தான் எங்களுக்கு வேலை இருக்கும், அதுனால் வேலை முடிச்சி போறப்ப எல்லாம் இங்க வந்து சாப்பிட்டுட்டு, பிள்ளைங்களுக்கும் வாங்கிட்டுப் போவேன். இல்லைன்னாலும் அவங்களே கேப்பாங்க. நல்லாருக்கும், ரொம்ப காரமாலாம் இருக்காது, நல்ல டேஸ்ட்டாவே இருக்கும். எப்பவும் கூட்டமாதான் இருக்கும் இந்தக் கடை. ஆனாலும், சூடாத்தான் தருவாங்க எப்போதும். கடைல இருக்கவங்களும் நல்லா பேசுவாங்க, அதான் அடிக்கடி வந்திடுறது இங்க!" என்றார்.

பொடி
பொடி

ஆரம்பத்தில் தானும், தன் நண்பனும் மட்டுமே சேர்ந்து ஆரம்பிச்ச கடையாக இருந்தாலும் இப்போ ஏழு பேர் வரை பணி புரிகின்றனர். சுத்தம், தரம், உடன் வேலை செய்யும் பணியாளர்கள் என எல்லாமே சரியாக இருப்பதால்தான் தன்னால் இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது என ரவி கூறுகிறார்.

மலைக்கோட்டைக்குப் பயணிக்கும் அன்பர்களே, சந்துக்கடை சமோசாவை மிஸ் பண்ணிடாதீங்க.