Published:Updated:

திருச்சி ஹேங்அவுட்: குகைக்கோயில், நூற்றுக்கால் மண்டபம் - குன்றாண்டார்கோயில் அற்புதங்கள்

குன்றாண்டார்கோயில்
News
குன்றாண்டார்கோயில்

இங்குள்ள காலத்தால் பிற்பட்ட கல்வெட்டொன்று திருச்சிக்கும், தஞ்சாவூருக்கு இவ்வழியாகச் சென்ற வணிகப் பொருள்கள் மீது 16 ல் 1பங்கு பணம் வரியாகக் கோயில் பராமரிப்பிற்காக வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

திருச்சியிலிருந்து 27கி.மீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது குன்றாண்டார் கோயில். (குன்று ஆண்டார் கோயில்) காலப்போக்கில் மறுவி குன்னாண்டார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளின் படி இந்த ஊர் திருக்குன்றக்குடி என்றும் குறிக்கப்படுகிறது. இந்தக் கோயில் 7 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த, இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்த குகைக்கோயில். பல்லவரின் கீழ் சிற்றரசர்களாக ஆண்டு வந்த முத்தரையர்களால் கட்டப்பட்டிருக்கிறது.

குன்றாண்டார்கோயில்
குன்றாண்டார்கோயில்

இங்குள்ள சிவபெருமான் பர்வதகிரீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பாள் உமையாம்பிகையாகப் போற்றப்படுகிறார். குன்றின் உச்சியில் முருகப்பெருமான் கோயில் அமைந்திருக்கிறது. இது காலத்தால் பிற்பட்டதாகும்.

குகைக்கோயில் கருவறையின் வெளிப்பக்கம் உள்ள சிறிய மண்டபத்தின் தெற்கு சுவரில் வலம்புரி விநாயகரின் சிற்பம் குடையப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் சிவன், பார்வதி இணையரின் அமர்ந்த நிலைக் கோலம் புடைப்புச் சிற்பமாகக் குடையப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கருவறையின் உள்ளே தாய்ப்பாறையில் குடையப்பட்ட லிங்கம், 'பர்வதகிரீஸ்வர்' என்ற பெயரில் போற்றப்படுகிறார். குடவரையின் வெளிப்புறத்தில் சிறிய அளவிலான குடவரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பிற்காலச் சிற்பங்கள் உள்ளன.

இங்குள்ள அம்மன் சந்நிதி காலத்தால் பிற்பட்டதாகும். அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறக் காணிக்கையாக மஞ்சளை அளிக்கின்றனர். இங்குள்ள கல் தொட்டி ஒன்றில் பக்தர்கள் மஞ்சளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

குன்றாண்டார்கோயில்
குன்றாண்டார்கோயில்

காணிக்கையாகச் செலுத்தப்படும் மஞ்சளை இவ்வூர் மக்கள் யாரும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை என்பது தான் ஆச்சர்யம்.

குகைக்கோயிலுக்கு முன்னால் உள்ள மண்டபங்கள் முத்தரையர்களால் கட்டப்பட்டதற்கான விபரங்கள் இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து நமக்குத் தெரியவருகிறது. போத்தரையன் மண்டபம், ஆடல் மண்டபம் என இங்குள்ள மண்டபங்கள் கலை நயத்துடன் காட்சியளிக்கிறது. இங்கு அழகிய மண்டபமாகக் காட்சியளிக்கும் நூற்றுக்கால் மண்டபம் மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நூற்றுக்கால் மண்டபத்தில் தேர் போன்ற அமைப்பில், சக்கரங்களுடன் கூடிய ஒரு ரதத்தை இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்று அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தில் உள்ள சிலைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இங்குள்ள பூதகணங்கள் இந்தத் தேரினை, மண்டபத்தைத் தாங்கிப் பிடிப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு உள்ள தூண்கள் முழுவதும் சுவாமிகளின் குறுஞ்சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், சிறப்புமிக்க மண்டபம் பராமரிப்பின்றி காணப்படுவது தான் வேதனை அளிக்கிறது.

மண்டபம்
மண்டபம்

இங்குள்ள மண்டபத்தில் கோயிலுக்கு தானம் வழங்கியவர்களின் சில கல்வெட்டுகளும் தென்படுகின்றன. அதோடு, குடைவரைக் கோயில் முழுவதும் சாளுக்கியச் சோழர், பிற்கால பாண்டியர், விஜய நகர மன்னர் ஆகியோரின் கல்வெட்டுகள் என ஏராளமான கல்வெட்டுகள் இங்குக் காணக்கிடைக்கின்றன.

இங்கு 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைக் காண முடியும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இப்பகுதியை ஆண்டு வந்த பல்லவராயர்கள் இக்கோயிலுக்குக் கொடைகள் பல அளித்துள்ளனர். காலத்தால் பிற்பட்ட கல்வெட்டொன்று திருச்சிக்கும், தஞ்சாவூருக்கு இவ்வழியாகச் சென்ற வணிகப் பொருள்கள் மீது 16 ல் 1 பங்கு பணம் வரியாகக் கோயில் பராமரிப்பிற்காக வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

அழகிய குன்றின் உச்சியில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கிறார். வள்ளி தெய்வானை சமேதராக சண்முகக் கடவுளாக இங்கு முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். குன்றின் உச்சியில் முருகப்பெருமானுக்கு எதிரே பிரமாண்ட கல் விளக்கு ஒன்று இருக்கிறது. இங்கு கார்த்திகைத் தீபத் திருநாளின் போது பிரமாண்ட கல் விளக்கில் பக்தர்கள் கொண்டுவரும் எண்ணெய்யை ஊற்றி விளக்கேற்றுகிறார்கள். இந்த தீபத்தைத் தரிசிப்பது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் போதும் இங்கு மக்கள் குவிகின்றனர்.

இந்த அழகிய குகைக்கோயிலில் எங்குப் பார்த்தாலும் கல்வெட்டுக்களாகக் காணப்படுகின்றன.

முருகப்பெருமான் கோயில்
முருகப்பெருமான் கோயில்

குகைக்கோயில், அழகிய மண்டபங்கள், எங்குப் பார்த்தாலும் கல்வெட்டுகள் என அற்புதங்கள் பல கொட்டிக்கிடக்கும் குன்றாண்டார் கோயிலுக்குச் சுற்றுலாப் பயணிகளும், ஆன்மிக அன்பர்களும் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய மிக முக்கியமான இடம்.

எப்படிச் செல்வது?

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருச்சியிலிருந்து 27 கி.மீ தொலைவில் கீரனுக்கு அருகே அமைந்திருக்கிறது குன்றாண்டார் கோயில். புதுக்கோட்டையிலிருந்து 25கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்தும் பேருந்து வசதி இருக்கிறது. பெரும்பாலும், சுற்றுலா வருபவர்கள் தங்களது சொந்த வாகனத்தில் வந்து செல்வது நலம்.