சென்னை நகரத்தின் அழகிய முகம்: பார்த்து ரசிக்க வேண்டிய 10 இடங்கள்| மெட்ராஸ் கொண்டாட்டம்

சிங்காரச் சென்னையின் அழகு, அந்திசாயும் வேளையிலும், அதிகாலையிலும்தான் தெரியும். சென்னையை வெறுப்பவர்கள் கூட, பைக்கில் ஒருமுறை இவ்விரு வேளைகளில் பயணித்தால் போதும், ஆயுள் உள்ளவரை அவர்கள் சென்னையைக் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள்.
சென்னை மக்கள், கெத்தாக காலரைத் தூக்கிக்கொண்டு, `நாங்க சென்னை வாசிடா...' என்று சொல்வதற்கு மெரினா, சென்ட்ரல் ரயில் நிலையம், எல்.ஐ.சி. கட்டடம் போன்ற சிக்னேச்சர் இடங்கள் மட்டுமல்ல காரணம். அதையும் தாண்டி அவ்வளவாகத் தெரியாத அழகான பல இடங்கள் சென்னைக்குள்ளும், சென்னையைச் சுற்றியும் அமைந்திருக்கின்றன.

பியூட்டிபுல் புரோக்கன் பிரிட்ஜ் - அடையாறு!
எங்கேயோ பார்த்திருக்கிறேனே...' எனத் தலையைச் சொறிய வைக்கிறதா இந்தப் படம். யெஸ்! நம் தமிழ் சினிமாவில் ஐ லவ் யூ சொல்லும் காட்சியோ, அதிரடி சண்டைக் காட்சியோ, ஆளரவமில்லாத இந்த உடைந்த பாலம்தான் ஆப்டான லொக்கேஷன். சென்னை பட்டினப்பாக்கத்தில், அடையாற்றின் முகத்துவாரத்தில் இருக்கும் இந்தப் பாலத்தை ‘புரோக்கன் பிரிட்ஜ்’ என்றே அழைக்கிறார்கள். அந்தக் காலத்தில் ஹீரோ சென்னை வந்துவிட்டார் என்பதற்கு அடையாளமாய் காட்டப்படும் சென்ட்ரல் ஸ்டேஷன், எல்.ஐ.சி பில்டிங் வரிசையில் இப்போது இந்த அரைப் பாலமும் அட்மிஷன் வாங்கியிருக்கிறது.
சென்னை சாந்தோம் பீச்சையும் பெசன்நகர் ஏலியட்ஸ் பீச்சையும் இடையே ஓடும் அடையாறு பிரிக்கிறது. அந்த இரண்டு பகுதிகளையும் சேர்ப்பதற்காக 1967-ம் ஆண்டில் கட்டப்பட்ட பாலம்தான் இது. பத்து வருடம் பயன்பாட்டில் இருந்த இந்தப் பாலம், 1977-ம் ஆண்டு அடித்த பெரும் புயலில் ஆற்று வெள்ள பெருக்கெடுத்த போது, உடைந்துபோனது. அதன் பிறகு இந்தப் பாலம் சீரமைக்கப்படவே இல்லை. இதை உடைந்த பாலமாக இல்லாமல், முழுப் பாலமாகப் பார்க்க விரும்பினால், இப்போதும் ஒரு வாய்ப்பு இருக்கிறது!. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த, ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் வரும் ‘கடலோரம் வாங்கிய காற்று...’ பாட்டு வீடியோவை யூடியூபில் பாருங்கள். அதில் இந்தப் பாலத்தின் மொத்த அழகையும் பிரமாண்டத்தையும் பார்க்க முடியும். அழகான கடல் காற்றோடு, அமைதியான லொக்கேஷனை விரும்புபவர்கள் இப்போதே கிளம்புங்கள் புரோக்கன் பிரிட்ஜூக்கு..!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
சர்ஃபிங் கடற்கரை - கோவளம்!
மெரினா, பெசன்நகர் மாதிரியான சென்னை கடற்கரைகள் தராத அமைதியை, ஆனந்தத்தையும் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத ஈ.சி.ஆர் கடற்கரைகள் வழங்குகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது கோவளம் கடற்கரை. சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவில், தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக இது அறியப்பட்டாலும், ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருப்பதால், கடற்கரைப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இது மாறியிருக்கிறது.
மேலும், இங்கு சர்ஃபிங் விளையாட்டு மிகப் பிரபலம். உள்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களையும் ஈர்க்கக் கூடிய விளையாட்டாகக் கோவளம் சர்ஃபிங் மாறியிருக்கிறது. இந்த விளையாட்டினாலேயே இந்தக் கடற்கரையை எல்லோரும் சர்ஃபிங் கடற்கரை என இப்போது அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ‘தாஜ் பிஷர்மேன் கோவ்’ என்று அழைக்கப்படும் டச்சுக் கோட்டை (தற்போது சுற்றுலா விடுதியாகச் செயல்பட்டு வருகிறது), 5-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ பேரரசர்களால் கட்டப்பட்ட கோயில்கள் என வியப்பில் ஆழ்த்தக் கூடிய இடங்களும் இங்கு அதிகம். இங்கு சுற்றிப் பார்க்க அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலமே ஏற்றது. ஏனெனில் இது கோவளத்தின் குளிர்காலமாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளிக்கரணை பறவைகள் வியூ பாயின்ட்!
சென்னையின் வியத்தகு இடங்களின் பட்டியலில் வெகு சமீபத்தில் சேர்ந்திருக்கிறது இந்த இடம். ஒருகாலத்தில் தென் சென்னையின் மத்திய கைலாஷ் பகுதியில் ஆரம்பித்து மேடவாக்கம் வரை சுமார் 5,000 ஹெக்டர் பரப்பளவு வரை பரந்து விரிந்து காணப்பட்டது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்குப் பிறகு, தற்போது சுமார் 647 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சதுப்பு நிலம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று சதுப்பு நிலங்களில், மிக முக்கியமானதாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கருதப்படுகிறது. இதைச் சென்னைக்கு இயற்கை வழங்கிய கொடை என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது இந்த இடம் மனிதர்களுக்கு அல்லாமல், பறவைகளுக்கானதாக மாறியிருக்கிறது. ஏனெனில், கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட பறவைகள் இந்தச் சதுப்பு நிலத்திற்கு விஜயம் செய்திருப்பதாகச் செய்திகள் பதிவாகியிருக்கின்றன. பஞ்சு போலச் செயல்பட்டு, மழைக்காலங்களில் நீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு, நிலத்தடி நீர்மட்டத்தை எப்போதும் தக்கவைத்திருப்பதுதான் சதுப்பு நிலங்களின் பணியாக இருக்கிறது. இதனால் இந்த நிலம் பல்லுயிர்ப் பெட்டகமாக விளங்குகிறது.
அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். சிங்காரச் சென்னையின் அழகு, அந்திசாயும் வேளையிலும், அதிகாலையிலும்தான் தெரியும். சென்னையை வெறுப்பவர்கள் கூட, பைக்கில் ஒருமுறை இவ்விரு வேளைகளில் பயணித்தால் போதும், ஆயுள் உள்ளவரை அவர்கள் சென்னையைக் கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள்.
இங்கு அமைக்கப்பட்டிருக்கும் பறவைகள் வியூ பாயின்டிலிருந்து, இங்கு வந்து போகும் பல்லாயிரக்கணக்கான பறவைகளை காண முடியும் என்பதால் சென்னை வாசிகள் தினந்தோறும் இந்த இடத்துக்கு வந்து செல்கிறார்கள். பறவை காதலர்களின் சொர்க்க பூமியாகவே இந்த இடம் மாறியிருக்கிறது. பறவை இனங்களில் முக்கியமான ஆற்று உள்ளான் (Marsh Sandpiper), பச்சைக் காலி (Green Sandpiper), பொறி உள்ளான் (Wood Sandpiper), பவளக் காலி (Common Redshank) போன்றவையும், நீலத் தாழைக் கோழி (Purple Moorhen), தாழைக் கோழி (Common Moorhen), நாமக் கோழி (Common Coot), நீலவால் இலைக் கோழி (Pheasant-tailed Jacana) போன் பறவை இங்கேயே இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வருகின்றன. அழிந்து வரும் பறவை இனமான கூழைக் கடாவை (Grey Pelican) இங்கே பார்க்க முடியும். நன்னீர் மீன்களை மட்டுமே உண்டு வாழும் விரால் அடிப்பானும் (Osprey) இங்கே காணப்படுகின்றது. சென்னைக்குள்ளாகவே இந்த வியூபாயின்ட் இருப்பதால், இங்குச் செல்வதற்கு பைக் கார் கூட தேவையில்லை சைக்கிள் இருந்தாலே போதும்.

மெட்ராஸ் அருங்காட்சியகம் - எழும்பூர்!
கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் மற்றும் இன்னும் பலவற்றின் தலைசிறந்த களஞ்சியமாக விளங்கும் மெட்ராஸ் அருங்காட்சியகம் எல்லோரும் காண வேண்டிய இடங்களில் மிகவும் முக்கியமானது. ஆனால், சென்னை எங்கிலும், பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும், திரையரங்குகளும் வந்துவிட்டதால் இதுமாதிரியான பொக்கிஷ இடங்களை பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வதில்லை. 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், 16.25 ஏக்கர் நிலப்பகுதி முழுவதும் பரவி, தெற்காசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியமாக திகழ்கிறது. சென்னை எழும்பூரில் அமைத்துள்ள இதன் வளாகத்தில் 46 காட்சியகங்கள் கொண்ட ஆறு கட்டடங்கள் உள்ளன.
பிரதான கட்டடத்தில், கடந்த காலத்திலிருந்து கலைப்பொருள்கள் மற்றும் சிற்பங்களைக் காணலாம். அழகிய சிற்பங்கள், ஆயுதங்கள், ஆர்மர், தென்னிந்திய இசைக்கருவிகள், கற்கால நகைகள் எனத் தனிப் பிரிவுகள் இருக்கின்றன. வெண்கலத் தொகுப்பு, நாணயவியல் மற்றும் இரசாயன பாதுகாப்புக் காட்சியகங்கள் உள்ளன. இப்படி இங்கிருக்கும் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அனைவரும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையேனும் காணவேண்டிய அறிவுப் புதையல்தான் இந்த அருங்காட்சியகம்.

சென்னையில் ராஜஸ்தான் 'சோக்கி தானி' - தண்டலம்!
ராஜஸ்தான் மாநில கிராமங்களை பின்னணியாகக் கொண்ட உல்லாசப் போக்கிடம்தான் சோக்கி தானி. 'சோக்கி தானி' என்ற வார்த்தைக்குப் பொருள் அழகிய கிராமம் என்பதாகும். சென்னைக்குப் புறநகரின் இருக்கும் தண்டலத்தில் சோக்கி தானி கிராமம் அமைந்திருக்கிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை கிராமம் காண்போரை வியக்க வைப்பதாக இருக்கிறது. ஒரு மாலைப் பொழுதை அவரவர் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ இந்த அழகிய கிராமத்துக்கு வந்து கொண்டாடலாம்.
இதனுள் நுழையும் போது, ராஜஸ்தானில் இருக்கும் கிராமத்துக்குள் நுழையும் அதே உணர்வு. ஏனெனில் இதன் தோற்றம், வீடுகளின் அமைப்பு என எல்லாமே ராஜஸ்தான் மாடலில் இருக்கிறது. உள்ளே நுழையும் ஒவ்வொருவரையும், ராஜஸ்தான் முறையில் திலகமிட்டு, அதில் அரிசி பதித்து வரவேற்கின்றனர். சிற்றுண்டி மற்றும் பானங்கள், ராஜஸ்தான் நடனங்கள், நாட்டுப்புற இசை, ஒட்டகச் சவாரி, இரவு ராஜஸ்தானிய உணவு என உள்நுழையும் ஒவ்வொருவரையும் இச்சூழல் ராஜஸ்தானியாகவே மாற்றிவிடும். மாட்டு வண்டி, குதிரை வண்டி, ஒட்டக வண்டியில் இந்த கிராமத்தைச் சுற்றிருவதற்காகவே இங்கே படையெடுக்கலாம். நகர்ப்புறங்களில் வளரும் பிள்ளைகளுக்கு கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதை அறிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இங்கே ஒரு ராஜஸ்தான் கிராமம் எப்படி இருக்கும் என்பதை நிச்சயமாக உணர முடியும்.

மீன்பிடித் துறைமுகம் - காசிமேடு!
சென்னை துறைமுகத்தை நாம் ஒவ்வொருவருமே சுற்றிப்பார்க்க வேண்டும். ஆனால் பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால், அதற்கான வாய்ப்புகள் ஒருசிலருக்கு மட்டுமே வாய்க்கும். ஆனால் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் எல்லோரும் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்தும் கூட, சென்னை துறைமுகத்தின் ஒரு பகுதியை கண்டு ரசிக்கலாம். சென்னையில் மீன் பிடிப்பதை பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது?, என நீங்கள் நினைத்தால், உங்களுக்குத்தான் அங்கே ஆச்சர்யங்கள் அதிகமாகக் காத்திருக்கின்றன. வகை வகையான மீன்களை, மீனவர்கள் அள்ளி வீசுவதைப் பார்த்தாலே வாயடைத்துப் போய்விடுவீர்கள்.
தமிழகத்தில் சுமார் 11 லட்சம் மீனவர்கள் வசித்து வருகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். அவர்களில் வடசென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர். இங்குள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 1000-க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட ஃபைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் தினமும் கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றன. கடல் காற்றை வாங்கிக் கொண்டே, படகுகள் கடலுக்குள் போவதையும், வெளியேறுவதையும் கண்குளிர பார்த்துக்கொண்டே காசிமேட்டில் அமர்ந்திருக்கலாம்.

திகைக்க வைக்கும் தியோசபிகல் சொசைட்டி - அடையாறு!
இயற்கை ஆர்வலர்களின் சொர்க்க பூமி என்றால்... அது அடையாறு ஏரியாவில் இருக்கும் இந்த தியோசபிகல் சொசைட்டிதான். சுமார் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதன் அமைப்பு காண்போரை ஆச்சர்யப்பட வைக்கும். பலரும் கேள்விப்படாத இடமாக இருக்கும் இந்தக் காடு, 1875-ம் ஆண்டு அன்னிபெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்டது.
பசுமையான மரக்காடுகள், பல வகையான தாவரங்கள், பழைமையான கட்டடங்கள், கோயில்கள், வித்தியாசமான பறவைகள் மற்றும் பல விலங்கினங்கள் என அனைத்தையும் ஆரவாரமில்லாமல் அமைதியாகக் கண்டு களிக்க இந்த இடம் பொருத்தமானதாக இருக்கும். இங்கு இருக்கும் 450 ஆண்டுகள் பழைமையான ஆலமரம்தான் இந்த இடத்தின் ஸ்பெஷல். இம்மரத்தின் விழுதுகள் சுமார் 63,000 சதுர அடி அளவில் பரந்து விரிந்துள்ளது. இம்மரத்தின் மொத்தப் பரப்பளவு 59,500 சதுர அடி. 1989-ம் ஆண்டின் மிகப்பெரிய புயல் காற்றில் பாதிக்கப்பட்ட போதும் இம்மரம் அதிசயிக்கத்தக்க வகையில் அழியாமல் தப்பியது. இந்த மரத்தைப் பார்ப்பதற்காகவேனும் ஒருமுறை தியோசபிகல் சொசைட்டிக்குப் போய்வாருங்கள்.

அழகான புலிகாட் ஏரி - பழவேற்காடு!
சென்னையின் சிறு கடலோர நகரம்தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. இங்குள்ள புலிகாட் ஏரி கொண்டாட்டத்தின் உறைவிடமாக இருக்கிறது. குட்டித்தீவு போன்ற இதன் அமைப்பு, இங்கு வருபவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இந்த ஏரிக்கு வரும் பல்வேறு வகையான பறவைகளின் காரணமாக, பறவைகளைக் கவனிப்பது இங்கு வருபவர்களின் விருப்பமான பொழுதுபோக்கு. இங்கிருக்கும் கட்டடங்கள் மற்றும் வடிவமைப்புகளான தேவாலயங்கள், பழைமையான கட்டடங்கள் மற்றும் கல்லறைகள் டச்சுக் கலையின் தாக்கத்திற்குட்பட்டு, டச்சு நாட்டுப் பாணியிலேயே இருப்பதை இன்றும் காணலாம்.
சென்னை நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பழவேற்காட்டை இந்தச் சாலை வழியாக எளிதில் அடைய முடியும். இங்கு வருடம் முழுவதும் செல்ல முடியுமென்றாலும், சுட்டெரிக்கும் கோடைக்காலங்களிலும் மற்றும் அதீதமான மழைப்பொழிவு காலநிலைகளிலும் போகாமலிருப்பது நல்லது.

கலைத்தாகம் தீர்க்கும் தக்ஷின சித்ரா - கிழக்கு கடற்கரைச் சாலை!
சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள, எம்.ஜி.எம் டிஸ்ஸி வேர்ல்டு அருகில் அமைந்திருக்கிறது தக்ஷின சித்ரா. இந்த மாதிரி ஒரு இடம் இருப்பது பெரும்பாலான சென்னை வாசிகளுக்கே தெரியாது. திராவிடக் கட்டடக்கலை, பழந்தமிழர் நாகரிகம், தென்னிந்திய கலாசாரம், தற்போது அரிதாகி அழிந்து வரும் தமிழக நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், பிலாக் பிரின்டிங், தென்னிந்தியாவை ஆண்ட மன்னர்கள் வரலாறு இவற்றையெல்லாம் சென்னையில் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள விரும்பினால், தாராளமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ‘தக்ஷின சித்ரா ஹெரிடேஜ் மியூசியத்துக்கு’ ஒருமுறை சென்று திரும்புவது நல்லது. அளவு கடந்த கலை தாகம் கொண்டவர்களுக்கு, தீனி போடும் இடமாக இது நிச்சயமாக இருக்கும்.
தக்ஷின சித்ராவில் தென்னக மாநிலங்கள் அனைத்திலிருந்தும் குறிப்பிட்ட இன மக்களின் வீடு கட்டும் முறைகள் பற்றி விளக்க கட்டடங்களுடன் மாதிரிகள் உள்ளன. அவை அனைத்துமே விஸ்தாரமான தனி வீடுகள். பார்ப்பதற்கு ஒவ்வொன்றும் ஒரு பிரமாண்டமாக இருக்கின்றன. தக்ஷின சித்ரா சென்னையில் இருப்பவர்கள் மட்டுமல்ல சென்னைக்கு டூர் வருகிறவர்களும் கண்டிப்பாக காண வேண்டிய ஓர் இடம்.

ஆளை மயக்கும் 'சட்ராஸ்' - சதுரங்கப்பட்டினம்!
கருஞ்சாம்பல் வானத்தின்கீழ் சிதிலமடைந்த கோட்டையின் புறத்தோற்றம், கோட்டைச் சுவரோரம் மேயும் ஆடுகள், சிதிலமைந்த கோட்டையின் அருகே தென்னைமரங்கள், அதனருகே சில நவீனக் கட்டடங்கள் என சென்னைக்குப் புறநகரில் இருக்கும் சதுரங்கப்பட்டினம் கோட்டையின் அழகிய காட்சிகள் ஆளையே மயக்கும். சென்னை-பாண்டிச்சேரி மாமல்லபுரம் வழியாகச் செல்லும் வழியில் கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினம் அமைந்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றான இந்தக் கோட்டையை டச்சு மக்கள் ஆங்கிலத்தில் 'சட்ராஸ்' என அழைத்து வந்திருக்கின்றனர்.
முந்நூறு வருடங்கள் பழைமையான இந்தக் கோட்டையைப் பதினேழாம் நூற்றாண்டில் டச்சு ஆட்சியாளர்கள் சமையல் எண்ணெய், முத்துகள் ஏற்றுமதிக்காகவும் மற்றும் மிக மிருதுவான ஆடைகளை நெசவு செய்யும் மையமாகவும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சட்ராஸ் கோட்டையில் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட சில கல்லறைகளும் இருக்கின்றன. மழைக்காலத்தில், சென்னையில் ஒரு ஷார்ட் விசிட் அடிக்க சட்ராஸ் நல்ல சாய்ஸ்.