Published:Updated:

வெயில்... மழை.. ஆறிப்போன ஆம்பூர் பிரியாணி... புத்தர் சிலை... பெல்லம் குகை...

பைக் ரைடு
பிரீமியம் ஸ்டோரி
பைக் ரைடு

ஆந்திரா கந்திக்கோட்டாவுக்கு பைக் ரைடு!

வெயில்... மழை.. ஆறிப்போன ஆம்பூர் பிரியாணி... புத்தர் சிலை... பெல்லம் குகை...

ஆந்திரா கந்திக்கோட்டாவுக்கு பைக் ரைடு!

Published:Updated:
பைக் ரைடு
பிரீமியம் ஸ்டோரி
பைக் ரைடு
வெயில்... மழை.. ஆறிப்போன ஆம்பூர் பிரியாணி... 
புத்தர் சிலை...  பெல்லம் குகை...

மோட்டார் விகடன் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான கோவையைச் சேர்ந்த ரைடர்ஸ் ஆஃப் மெட்டல் பேர்டு (RMB) குழுவினர், தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையின் போது ஆந்திராவில் உள்ள கந்திக்கோட்டாவுக்குச் சென்று வந்துள்ளனர். அவர்களின் பயண அனுபவங்கள் குறித்து RMB -ன் தலைமை ஒருங்கிணைப்பாளர் டோனி ராஜ் நம்மிடம் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்.

``இந்த வருட ஆரம்பத்தில் வட கிழக்கு மாநிலங்களுக்குக் குழுவில் சிலர் 45 நாட்கள் பைக் ட்ரிப் சென்று வந்தோம். திரும்பி வந்ததில் இருந்து மற்றவர்கள் எப்போ அடுத்து ரைடு என நச்சரித்துக் கொண்டே இருந்தனர். அவர்களுக்குச் சொல்லி வைத்தாற்போல், தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி நீண்ட வார இறுதி வந்தது. நான் இதற்கு முன்பே இரண்டு முறை தனியாக கந்திக்கோட்டா சென்றுள்ளதால், குழுவையும் கூட்டிச் செல்ல நீண்ட நாள் ஆசை.

உடனே ப்ளான் போட ஆரம்பித்தபோது, கூகுள் மேப் கோவையிலிருந்து 650 கிமீ காட்டியது. கந்திக்கோட்டாவுக்கு மிக அருகில்தான் பெல்லம் குகைகள் இருப்பதால், அதையும் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டோம். குழுவைக் கூட்டிக் கொண்டு ஒரே நாளில் 650 கிமீ கடினம் என்பதால், முதல் நாள் இரவு தங்குவதற்கு, ஹார்ஸ்லி ஹில்ஸைத் தேர்ந்தெடுத்தோம். ``அண்ணே, ஹார்ஸ்லி ஹில்ஸ் போற வழியில் ஆம்பூர்-ல பிரியாணி சாப்பிட்டுப் போலாம்ணே’’ என உணவுப் பிரியரான விஜய் சொல்ல, இப்படித்தான் 650 கிமீ திட்டம், 750 கிமீ ஆனது.

திட்டத்தை வாட்ஸ்ஆப் குரூப்பில் தெரிவித்தோம். 15 பேர் பெயர் கொடுத்தனர். `கண்ணுங்களா, 3 நாளில் 1500 கிமீ ஓட்ட வேண்டும்’ என்றதும் ``வீட்ல சாமி கும்பிடணும்’’ என 5 பேர் கழன்று கொண்டனர். `சரி ரைட்டு’ என நின்ஜா 650, BMW 310GS, FZ25, MT15, NS200 ஆகிய 5 பைக்கில் 8 பேர் கோவையில் இருந்து கிளம்பினோம். சேலம் வரை வெயில் பொளந்ததால், சேலத்தைத் தாண்டி கம்பங்கூழ் மற்றும் நீர் மோர்க்கு நிறுத்தினோம். கிருஷ்ணகிரியை அடையும்போது, கிட்டத்தட்ட எல்லா பைக்கிலும் பெட்ரோல் ரிசர்வுக்கு வந்து பிளிங்க் ஆக, பெட்ரோல் அடித்தோம்.

வானத்தைக் கறு கறு மேகங்கள் சூழ்ந்திருக்க, மழைக்கு முன் ஆம்பூரை அடைய வேண்டும் என முடிவெடுத்தோம். ஆனால், மழை எங்களை முந்திக் கொண்டது. ஓரமாக நிறுத்தி ஒரு வீட்டுத் திண்ணையில் ஒடுங்கி நிற்பதற்குள் நனைந்து விட்டோம். மணி மூன்றரையைக் கடக்க, ஒரு பக்கம் பசி வயிற்றைக் கிள்ள, `முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு?’ என ரெயின் வியரை அணிந்து கொண்டு, ஆம்பூர் நோக்கிப் புறப்பட்டோம். ஆம்பூரை அடைந்தபோது, எல்லா ஹோட்டலிலும் டேபிள் மேல் சேர்களை அடுக்கிக் கொண்டிருந்தனர். கடைசியாக, ஒரு ஹோட்டலில் ஆறிப்போன ஆம்பூர் பிரியாணியை ரைடர்கள் ஒரு பிடி பிடித்தனர்.

ஒரு வழியாக இரவு ஹார்ஸ்லி ஹில்ஸ்-ஐ அடைந்தபோதுதான், நாங்கள் புக் செய்திருந்த ஹோம் ஸ்டே - எந்த வசதியும் இல்லாத மூன்று பாழடைந்த பத்துக்குப் பத்துக்கு ரூம்கள் எனத் தெரிய வந்தது. வேறு ஸ்டேவில் தங்கிக் கொள்ளலாம் என நினைத்து அட்வான்ஸ் பணத்தைக் கேட்டால் `வாய்ப்பில்லை ராஜா’ என்று சீமான் மாதிரி கைவிரித்தார்கள். நள்ளிரவு நேரம், ரைடர்களும் டயர்டாக இருந்ததால், வேறு வழியில்லாமல் அங்கேயே தங்கினோம்.

வெயில்... மழை.. ஆறிப்போன ஆம்பூர் பிரியாணி... 
புத்தர் சிலை...  பெல்லம் குகை...
வெயில்... மழை.. ஆறிப்போன ஆம்பூர் பிரியாணி... 
புத்தர் சிலை...  பெல்லம் குகை...
வெயில்... மழை.. ஆறிப்போன ஆம்பூர் பிரியாணி... 
புத்தர் சிலை...  பெல்லம் குகை...

மறுநாள் காலை, முதல் வேலையாக அங்கிருந்து கிளம்பி பெல்லம் குகை நோக்கிச் சென்றோம். குகையின் நுழைவு வாயிலில் பெரிய புத்தர் சிலை எங்களை வரவேற்றது. `முந்தைய இரவு விடுதி ஏமாற்று வேலையும் கடந்து போகும்’ என்று ஜோக் அடித்துச் சிரித்துக் கொண்டோம்.

அந்த ஏரியாவே மிகப் பெரிய பொட்டல் காடாக இருந்தது. அப்போது எங்களுக்குத் தெரியவே இல்லை. அந்த இடம் முழுக்க நாங்கள் அடியில் சுற்றிப் பார்க்கப் போகிறோம் என்று. லோக்கல் மக்களைக் கேட்டபோது, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கையாக உருவானதாகச் சொன்னார்கள். உள்ளே நுழைந்ததும் கும்மிருட்டு. ஆங்காங்கே சோடியம் வேப்பர் லேம்புகளும், பல வண்ணங்களில் மாறி மாறி எரியும் LED விளக்குகளையும் பொருத்தியிருந்தனர்.

காற்றோட்டத்திற்கு மேலே இருந்து, சென்ட்ரல் AC போல உள்ளே காற்றை அனுப்பும் சிஸ்டம் இருந்தது. அதன் முன்னால் நின்று காற்று வாங்கிவிட்டு போட்டோஷூட் எடுத்தோம். அதைத் தாண்டி உள்ளே சென்று பார்த்தபோது, ஆழமான குளம் போல ஓர் இடம் இருந்தது. பீதியாகித் திரும்பினால், ஒவ்வொரு இடத்திலும் தெலுங்கில் போர்டு வைத்திருந்தனர். இது வந்த வழி, அது பாதாளக் கிணறு என `புலிகேசி’ காமெடி எல்லாம் நடத்தி, ஒரு வழியாக வெளியே வந்தோம்.

`ஐம்மலமடுகு’ என்ற ஊரில் இரவு உணவருந்தி விட்டு, மறுபடியும் கந்திக்கோட்டாவில் அந்த பத்துக்குப் பத்து ரூம் நோக்கிப் புறப்பட்டோம். ஐம்மலமடுகு டவுன் என்பதால் அனைத்து வசதிகளும் இருப்பதோடு, அங்கிருந்து கந்திக்கோட்டா அரைமணிநேரம்தான் என்பதால், குடும்பத்துடன் வருபவர்கள் அங்கேயே ரூம் எடுத்துக் கொள்ளலாம்.

மறுநாள் காலை பழங்காலக் கோட்டையைத் தாண்டி அவசரமாக சன்ரைஸ் வியூ பாய்ன்ட் நோக்கிச் சென்றோம். ட்ரெக்கிங் இல்லையென்றாலும், சிறு சிறு பாறைகளைத் தாண்டி வியூ பாயின்ட்டை அடைந்து நாம் கண்ட காட்சியை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். கண்களுக்கு விருந்து வைத்துவிட்டு, சூரியன் மேலே எழும்பிய சரியான நேரத்தில் போட்டோ ஷூட் எடுத்தோம்.

ஒவ்வொரு சன்ரைஸுக்கும், சன் செட்டுக்கும் தனியாக ஒரு அழகியல் உண்டு. எனவே பயணம் செய்யுங்கள் பாஸ், லைஃப் நல்லா இருக்கும்!’’ என முடித்தார் டோனி.

புது இடங்களைத் தேடிப் போவதை நீங்களும் நிறுத்தாதீங்க ரைடர்ஸ் ஆப் மெட்டல் பேர்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism