ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

குடகு மலைக்குப் பட்ஜெட் டூர்!

குடகு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
குடகு மலை

வழக்கமாக நண்பர்கள் பயணத் திட்டம் போட்டால்… செம சுவாரஸ்யமாக இருக்கும். இடம் மாறும்; நண்பர்கள் மாறுவார்கள்; வாகனம் மாறும். ஆனால் பயணத் திட்டம் மட்டும் மாறவே மாறாது. (அதாவது, ப்ளான் போய்க்கிட்டே இருக்கும்!)

வழக்கமாக நண்பர்கள் பயணத் திட்டம் போட்டால்… செம சுவாரஸ்யமாக இருக்கும். இடம் மாறும்; நண்பர்கள் மாறுவார்கள்; வாகனம் மாறும். ஆனால் பயணத் திட்டம் மட்டும் மாறவே மாறாது. (அதாவது, ப்ளான் போய்க்கிட்டே இருக்கும்!) அப்படித்தான் நமது வாசகர்களான நீலகண்டன், ஹாரிஃப் குழுவினரின் பயணமும்.

‘‘இந்த மாதம் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் பகுதிக்கு காம்பென்சேட்டாக எங்கள் பயண அனுபவத்தைச் சொல்கிறோம்’’ என்றார்கள் கோரஸாக. ஆலப்புழா, மசினகுடி, ஊட்டி, பந்திப்பூர் என்று ஏகப்பட்ட இடங்கள் தேர்வாகி, அப்புறம் எலிமினேட் ஆகி, ஒருவழியாக கடைசியில் பொதுப் போக்குவரத்தில் கர்நாடக மாநிலம் கூர்க் போய் வந்த கதையைச் சொன்னார்கள். நீலகண்டன் பேச ஆரம்பித்தார்.

‘‘கூர்க் என்று முடிவானதிலிருந்தே எங்களுக்குப் பயண உற்சாகம் தொற்றிக் கொண்டது. காலை 4.30 மணிக்கு பெங்களூரு; 9.15 மணிக்கு மைசூரு. சுடச் சுட டீ! கூர்க்தான் முடிவாச்சு; ஆனால், எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணணும்ங்கிற பழக்கம் எங்களுக்கு இல்லை. (!) தங்குவதற்கு ரயில் நிலையம் போய்த்தான் ரூமே தேடினோம்.

குடகு மலைக்குப் பட்ஜெட் டூர்!

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் போட்டோ மாட்டிய ஒரு ஆட்டோக்கார அண்ணாச்சி வலிய வந்து உதவினார். ‘‘இது அப்பு சார் வாங்கிக் கொடுத்தது!’’ என்று புளகாங்கிதம் அடைந்தார். அவர் உபயத்தில் ஒரு குட்டி ரூமில் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு, கூர்க் பயணம். பஸ்லதான் பாஸ்! 303–ம் நம்பர் பஸ் என்றார்கள். எங்கள் யாருக்கும் கன்னடம் தெரியாது. ஆனால், மடிக்கேரிங்கிற வார்த்தை மட்டும் புரிந்தது. முட்டி மோதி, ஜன்னல் சீட் பிடித்தே விட்டோம். ‘டூர் போற மாதிரியே இல்லை’ என்று திட்டு வாங்கினேன் நண்பர்களிடம்.

பேருந்து மெதுவாக ஒரு மலை மீது ஏற தொடங்கியது. ‘விலங்குகள் நடமாடும் பகுதி’. பருவநிலை சற்று மாறியது. பார்க்கும் இடமெல்லாம் காபித் தோட்டம். ஜன்னலோரத்தில் லேசாக பனிச்சாறல் அடித்தது.

குடகு மலைக்குப் பட்ஜெட் டூர்!

கடல் மட்டத்திலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் கூர்க் அமைந்துள்ளது என்றார்கள். மடிக்கேரி பேருந்து நிலையம் நல்ல வரவேற்பு கொடுத்தது. அடுத்து என்ன, ரூம் தேடும் படலம்தான்! ஒரு விலை மலிவான காட்டேஜில் தஞ்சம்.

ஒரு வழியாக இரவு உணவை முடித்துக் கொண்டு, இரவு விடிய விடிய மழையோடு நன்றாகக் கழிந்தது. தலைக்காவேரிக்குத் திட்டம். மறுநாள் காலை பாகமண்டலாவுக்கு பஸ். ஒருவருக்கு 50 ரூபாய் டிக்கெட். ஒன்றரை மணி நேரப் பயணம் - 36 கிமீ கழித்து பாகமண்டலா அடைந்தோம். பாகமண்டலாவில் இருந்து 9 கிமீதான் தலைக்காவேரி. பிறகு ஆட்டோ பயணம்.

ஆளுக்கு 5 ரூபாய் கட்டணம் தலைக்காவேரி நுழைவு வாயிலுக்கு. பிரம்மா குண்டலா என்னும் ஒரு சதுர வடிவத் தொட்டி (தீர்த்தவாரி) காவேரி நதியின் பிறப்பிடமாகும். இதுதான் தலைக்காவேரி. விநாயகருக்கும் அகத்தியருக்கும் இங்கு கோயில்கள் உள்ளன. காவிரியின் பிறப்பிடம் என்பதால் தலைக்காவேரி. ரம்மியமாக இருந்தது.

3
3

அடுத்தது, திரிவேணி சங்கமம். காவிரி மேலே இருந்து கீழே வந்து – கனகே, சுஜ்யோதி என்ற இரண்டு ஆறுகளுடன் கலக்கிறது. இந்த இடம்தான் திரிவேணி சங்கமம். மழைக் காலத்தில் இதன் அனுபவம் வேறு மாதிரி இருக்கும் என்றார்கள். இங்குள்ள பாகுண்டேஸ்வர கோவில்… அடடா! சிவன் கோவில் என்று நுழைந்தால்… வேறு ஒரு பெரிய வரலாறு சொன்னார்கள்.

மறுபடியும் மடிக்கேரி. ரூம் ஸ்டே. மறுநாள் காலை கூர்க் கோட்டை.

அதற்கு முன்பு ராஜா சீட் என்றொரு இடம் பார்க்க, எங்கள் விடுதி ஊழியர்கள் பரிந்துரைத்தார்கள். மடிக்கேரியில் இருந்து 15 கிமீ. தொடர்ச்சியான மலைத்தொடர்கள், பசுமையான பள்ளத்தாக்குகள்…வாவ்! நீங்கள் கூர்க் போனால், மடிக்கேரியில் இருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும் ராஜா சீட்டில் சூரிய உதய செல்ஃபி எடுக்க மறக்காதீர்கள். இங்கேதான் குடகு அரசர்கள் ராணிகளுடன் சூரிய உதயம் பார்ப்பார்களாம். இங்குள்ள அரண்மனைக்குப் போனால்… 1800களுக்குப் போகலாம். பக்கத்தில் குடகுமலையை ஆண்ட ராஜா இலிங்கராஜேந்திராவால் கட்டப்பட்ட, ஓம்காரேஸ்வர் கோவில் அற்புதம். இந்த லிங்கம் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதாம். கூர்க் கோட்டையையும் மறக்காதீர்கள்.

குடகு மலைக்குப் பட்ஜெட் டூர்!

அடுத்து மண்டல்பட்டி ட்ரெக்கிங். மடிக்கேரியில் இருந்து ஜீப் வாடகைக்குக் கிடைக்கிறது. பட்ஜெட் பார்ட்டிகளாச்சே.. ஆட்டோவில் ஏறி காசை மிச்சப்படுத்தினோம். ஆனால், எங்கள் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகி விட்டது. குறிப்பிட்ட தூரம் வரைதான் ஆட்டோ செல்ல முடியும்; பிறகு கட்டாயம் ஜீப் சவாரிதான் என்று மெயின் வியூபாய்ன்ட்டில் இறக்கி விட்டார்கள். ‘கரகாட்டக்காரன்’ செந்தில்கள் மாதிரி அப்பாவியாக மூஞ்சியை வைத்துக் கொண்டோம். இந்த முறை எங்கள் ராஜதந்திரம் வீணாகவில்லை. ஆட்டோக்காரர் பரிதாபப்பட்டிருக்க வேண்டும். ‘போனா போகட்டும்’ என்று அபே நீர்வீழ்ச்சி வரை கூட்டிப் போனார். அருவிக்குப் படிக்கட்டுப் பயணம் சூப்பர்.

கிட்டத்தட்ட 50 அடி முதல் 70 அடி உயரத்திலிருந்து அருவி விழுந்து கொண்டிருந்தது. குளிப்பதற்கு அனுமதி இல்லை என்று எங்களை ஏமாற்றி விட்டார்கள்.

குடகு மலைக்குப் பட்ஜெட் டூர்!

அடுத்து, மண்டல்பட்டி. அங்கிருந்து ஜீப் சவாரி. ஆளுக்கு 200 ரூபாய். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதுபோல் இருந்தது பயணம். 2,000 ரூபாய்கூடக் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டோம். அத்தனை த்ரில்லிங்! வியூ பாயின்ட் வேற லெவல்!

அப்படியே கோட்டே அபே நீர்வீழ்ச்சி சென்றோம். அருவியின் அருகில் சென்று பார்க்க மட்டுமே அனுமதி. ஆனால், அதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தது அருவி அமைந்திருந்த இடம். இதில் கிளைமேட் வேறு சுகமான இம்சை கூட்டியது. அருவியோரம் இருந்த டீக் கடையில் டீ குடிப்பதுபோல் ஸ்டேட்டஸ் போட்டால்… அவ்வளவுதான் வியூஸ் அள்ளும்!

மறுபடியும் மடிக்கேரி ரூம். அடுத்தது, மைசூருக்குத் திட்டம். பேய் உலவும் நேரத்தில் மைசூருக்குப் பஸ் பிடித்தோம். அதே ரூம் தேடும் படலம். காலை மைசூர் அரண்மனையில் செல்ஃபி. இதுவரை 28 மன்னர்கள் வாழ்ந்த, சுமார் 600 ஆண்டுகள் பழைமையான இந்த மைசூர் அரண்மனையைப் பற்றி நான் கேட்டதைச் சொல்வதைவிட, விக்கிப்பீடியாவில் படித்தால் பிரமிப்பாக இருக்கும்.

குடகு மலைக்குப் பட்ஜெட் டூர்!

சுற்றிப் பார்ப்பதற்கே பசியெடுத்து விட்டது. அசைவ விரும்பிகளுக்கு ‘லட்சுமண் மெஸ்’ சூப்பர் சாய்ஸ். மத்தியான உணவு செமத்தியான உணவாக இருந்தது.

அடுத்து, கிருட்டிணராச சாகர் அணைக்கட்டு. பஸ் ஸ்டாண்டில் இருந்து அதே 303–ம் நம்பர் பஸ். இங்கே பிருந்தாவன் பூங்கா, படகுச் சவாரி, வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட அணைக்கட்டு என செல்ஃபிக்கு ஏற்ற இடம். ஏமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் அணையுடன் காவிரியுடன் இணைகின்றன. குடும்ப டூர் ப்ளான் செய்தால் இங்கே வரலாம்.

குடகு மலைக்குப் பட்ஜெட் டூர்!

கர்நாடகாவை விட்டு வர மனசே இல்லை. இன்னும் நிறைய இடம் இருப்பதாகச் சொன்னார்கள். பிரிய மனமில்லாமல் ரயிலேறி, சென்னை வந்தபோது, ‘‘அர்ஜென்ட் கான்ஃபரென்ஸ் @ 12.30Pm’ என்று என் மேனேஜரிடம் இருந்து மெசேஜ்.

கான்ஃபரென்ஸ் ரூமில் குடகுமலைதான் மனது முழுதும் குடைந்து எடுத்தது. அடுத்து ஆலப்புழாவில் ஆட்டம் போட திட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறோம்!’’ என்றார் நீலகண்டன்.