Published:Updated:

கானாடுகாத்தான் போன வாரம்... கனடா இந்த வாரம்! | கிராமத்தானின் பயணம் - 21

Niagara, Canada
News
Niagara, Canada

இந்த இடம் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று கனடாவோ அமெரிக்காவோ இதுவரை வழக்கு போட்டு வாய்தா மேல் வாய்தா வாங்கவில்லை!

(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள 'drop down' மூலம் பாகம் 1-20 படிக்காதவர்கள் படிக்கலாம்)

நான் துபாய் வர முக்கிய காரணமான அத்தை குடும்பம் 2004-ம் ஆண்டில் கனடாவுக்கு குடி பெயர்ந்தது, மிசிசாகா (Missisauaga) என்ற இடத்தில். முதலில் நாங்கள் 2005-ல் ஒரு மாதம் சென்றோம். பின் என் குடும்பமும் எக்கச்சக்க வேலை மற்றும் செலவும் செய்து கனடா குடியுரிமை வாங்கி 2011-ல் டொரொன்டோவில் இறங்கி சட்டப்படி கனடாவின் 'நிரந்தர வசிப்பவர்கள்' (Permanent Residents-PR) ஆகினோம். படிப்புக்காக மகள்கள் UK செல்ல, கனடா மாயையும் குறைந்து, நாங்கள் கனடாவின் PR-ஐ அதிகாரபூர்வமாகத் திருப்பிக் கொடுத்துவிட்டோம். ஆனால், வாழ்க்கை அவ்வளவு சுலபமா? 2018-ல் மகள் கனடா சென்று படிக்கத் தீர்மானம் செய்ய, PR-ஐ திருப்பியது மடத்தனமாக தோன்றியது. இப்போது மகள் கனடாவில் (மீண்டும் PR ஆகி) இருக்க... வருடாந்தர பயணம் தவிர்க்கமுடியாததாகி விட்டது. சமீபத்தில் 2018 மற்றும் 2019-ல் சென்று வந்தோம். 2020/2021-ல் கொரோனா கொடுமை.

PR திருப்பித் தருவது புதிதில்லை. இதற்கு முன் ஆஸ்திரேலியா குடியுரிமை வாங்கி அதையும் திருப்பினோம். ஆஹா... வாழ்க்கை என்பது நிரந்தரக் கல்லூரி, தினமும் பாடம் கற்கிறோம். நீங்கள் நினைத்துப் ்பாருங்கள்... நாம் ஒரு காலத்தில் மிகவும் முக்கியம் என்று கருதிய சில விஷயங்கள் இப்போது சல்லிக் காசு பெறாத மாதிரி தோன்றும். நான் இந்த PR வாங்கும்போது அந்த நாட்டில் குடியேறி, மகள்களுக்கு நல்ல படிப்பை கொடுத்து, பெரிய வீடு வாங்கி, புல் தரையில் படுத்து என பல கனவு கண்டேன். PR கைக்கு வந்தவுடன், மனது சற்றே மாறி, ஒப்பீட்டில் துபாய் மேலோங்கியது. மனது சமாதானமாகி ஆஸ்திரேலியா மற்றும் கனடா PR திருப்பி, அடுத்த கனவான பாண்டியில் நல்ல இயற்கை சூழ வீடு, அதில் சொந்தங்கள் அடிக்கடி வந்துபோவதும் காட்சிகளாக ஓட இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு ஒப்பந்தக்காரர் இந்தியாவில் கட்டிடம் கட்டுவது உன்னைப்போன்ற 'எல்லோரையும் நம்பும்' ஆட்களுக்கு பெருத்த மன உளைச்சலை உருவாக்கும் என்று வெளிச்சம் போட்டு (தாமதம், பொய்கள், ஒப்பந்தத்தை மீறி பணம் என) காண்பிக்க, இப்போதைக்கும் கனவே. எல்லோரும் அப்படியில்லை என்றாலும், நம் அனுபவங்கள்தாம் நம்முடைய எண்ணங்களைத் திடப்படுத்துகின்றன. எனவே கனவு நீள்கிறது.

Kovil - Toronto, Canada
Kovil - Toronto, Canada

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீண்ட முன்னுரை. மன்னிக்கவும். கனடா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். சுருக்கமாக நானும் சொல்கிறேன். உலகத்திலேயே நிலப்பரப்பில் இரண்டாவது பெரிய நாடு கனடா. முதல் நாடு ரஷ்யா. கனடாவை போல இரு மடங்கு. கனடா, அமெரிக்கா மற்றும் சீனா எல்லாம் ஒரே சைஸ். ஏறக்குறைய ஒரு கோடி சதுர கிமீ. (10 Million Sq KM - Extra Large). இந்தியா இதில் மூன்றில் ஒரு பங்குதான், 33 லட்சம் சதுர கிமீ. கனடா மக்கள் தொகை சுமார் 4 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகை 33 கோடி. இந்தியா 135 கோடிக்கும் மேல். நேற்றுக்கூட என் உறவினருக்கு இந்தியாவில் குழந்தை பிறந்தது.

கனடாவின் அமைப்பால், (பூமத்தியரேகைக்கு மிகவும் வடக்கே) கனடாவின் வட பாகங்கள் எப்போதுமே குளிராக இருக்கும். தென் பாகங்கள் ஓரளவுக்கு குளிரும் மித வெப்பமும் சுழற்சியில் வரும். மொத்தம் 10 மாகாணங்கள். அதில் ஒன்டோரியோ, கியூபெக், எட்மன்டன், பிரிட்டிஷ் கொலம்பியா பெரியவை.

கனடாவை பற்றி சில வாக்கியங்களில் சொல்வதென்றால், இயற்கை அழகு நிறைந்த நாடு. மக்கள்தொகை நெருக்கம் (Density) குறைவு. டொரொன்டோ, மாண்ட்ரீல், வான்கூவர் போன்ற பெரிய நகரங்கள் விதிவிலக்கு. நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் நிறைய ஏரிகள், தேசிய பூங்காக்கள், மலைகள் உள்ளன. பனி பெய்யும்போது மட்டும் பொதுவாக சற்று சோர்வு ஏற்படும். எனக்கோ மிகவும் பிடிக்கும். நான் 4-5 வாரம்தான் இருப்பேன். எனவே எனக்கு புதுமை. அங்கேயே இருக்கும் மக்களுக்கு கொஞ்சம் அலுப்புதான் வரும்.

சுற்றிப் பார்க்க பல மாதங்கள் தேவைப்படும். நாங்கள் சில முறை சென்றிருந்தாலும், நூற்றில் ஒரு பங்குகூட பார்க்கவில்லை. இருக்கட்டும். பார்த்த இடங்களை பற்றி பேசுவோம். (அம்மா சொல்லுவார்கள், 'கனியிருப்ப, காய் கவர்ந்தற்று' என்று).

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
1100 அடி உயரத்தில் இந்த கண்ணாடி தளத்தில் நடந்துகொண்டே கீழே எறும்புகள் போலத் தென்படும் மனிதர்களைப் பார்க்கும்போது சற்றே பதற்றம் ஏற்படும். ஆனால், பயம் தேவையில்லை. ஏனெனில், இங்கே கண்ணாடி பதித்த கான்ட்ராக்டருக்கும் சென்னை விமான நிலைய கான்ட்ராக்டருக்கும் ஒரு தொடர்பும் இல்லையாம்!

முதலில் எனக்கு பிடித்த இடம் பற்றி. மிசிசாகா. நிறைய இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் வாழும் புறநகர் பகுதி இந்த இடம். அழகான சாலைகள். நெரிசல் குறைவு. வீட்டில் இருந்து இடது பக்கம் திரும்பினால் 20 வீடுகள் தள்ளி லாங்கோஸ் (Longo's) என்ற பல்பொருள் அங்காடி. வலது பக்கம் திரும்பினால் 30 வீடுகள் தள்ளி லாப்லாஸ் (Loblaws) என்ற பல்பொருள் அங்காடி. இந்த இரண்டில் என் விருப்பம் லாப்லாஸ். வீட்டிலிருந்து நடைபாதை வழியாகவே சென்று லாப்லாஸ் உள்ளே ஒரு இன்ச் விடாமல் சுற்றிப்பார்த்துவிட்டு வாங்கி வரச்சொன்ன பாலோ, தயிரோ வாங்கி வீடு வந்து சேருவேன். சமயத்தில் அந்த முதிய சர்தார் வீட்டு வெளியில் உட்கார்ந்து இருப்பார். ஒரு புன்முறுவல் மட்டுமே. மனதுக்குள் என்ன எண்ண ஓட்டங்களோ? ஒரு வேளை பஞ்சாபின் கிராமங்களை நினைத்து ஏக்கமோ? இல்லை யார் இந்த புதுமுகம், அப்பப்ப தலை காட்டுகிறதே, ஏதேனும் வேவு பார்க்கிறாரோ? எதுவாகினும் அந்த புன்னகை நல்ல திரை. அந்த மிதமான வெ்யிலில், பரபரப்பே இல்லாமல் சுற்றிலும் பசுமை சூழ 30-45 நிமிட நடை என் மனதுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். கொஞ்சம் திமிர் பிடித்தால், மனைவி சொல்லியும் கேட்காமல் தூரமுள்ள ஓர் இந்திய கடைக்கு வாகனம் எடுக்காமல் நடந்தே சென்று கொத்தமல்லி, மிளகாய்த்தூள் போன்ற இந்திய சமாசாரங்களை வாங்கி வருவேன். கூடவே என் வேலைக்கு நானே வெகுமதி அளிக்கும்விதமாக 'குல்ஃபி' வாங்கி நடக்கும்போதே 'அப்படியே சாப்பிடலாம்' மாதிரி சாப்பிடுவேன். அப்புறம் அந்த எரின் மில்ஸ் டவுன் சென்டர் (Erin Mills Town Center) வணிக வளாகம். வால்மார்ட் அங்குதான். பல்க் பார்ன் (Bulk Barn) என்ற கனடாவுக்கே உரித்தான 'அண்ணாச்சி' கடை. உணவுப் பொருட்கள் (அரிசி, கோதுமை, பருப்பு சமாசாரங்கள் கனடாவுக்கு ஏற்றமாதிரி) பல்கில் கிடைக்கும்.

மொத்தத்தில் மிசிசாகா எனக்கு பிடித்த பரிச்சயமான இடம். அத்தை மாமா வீடு என் வீடு போலத்தான் (ஒரு பேச்சுக்கு சொன்னேன். வீடு அவர்கள் பேரில்தான் உள்ளது!). அடிக்கடி அத்தையின் வேலை நிமித்தம் ப்ராம்ப்டன் (சர்தார்ஜிகள் 20%), ஸ்கர்பர்ரோவ் (தமிழர்கள் அதிகம். கோவில்கள் உண்டு), ஹாமில்டன் என்று ஓட்டுநர் வேலை பார்ப்பேன். அவ்வப்போது பெய்த பனியை ஓரம்கட்டும் வேலையையும் அனுபவித்து செய்வேன். ஆகவே மிசிசாகா மற்றும் சுற்றுப்புற ஊர்கள் கொஞ்சம் அத்துப்படி.

Costco என்று ஒரு கடை உள்ளது. எனக்கு தலைசுத்தும். அவ்வளவு பெரிய கடை அவ்வளவு கூட்டம். உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அத்தைக்கு அந்த கடைக்கு செல்வது அல்வா சாப்பிடுவது மாதிரி. அவர்கள் சுற்றி சுற்றி ஷாப்பிங் செய்ய, நான் வெளியே அமர்ந்து 'ஹாட் டாக்' (Hot Dog - சுடு நாய்?) சாப்பிட்டுக்கொண்டே ஏன் இந்த மக்கள் நாளையே கடை மூடுவது போல வண்டி வண்டியாக வாங்கிச் செல்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முயற்சிப்பேன். தோல்விதான்.

அடுத்து டொரொன்டோ. பெரிய நகரம். மிசிசாகாவில் இருந்து டொரொன்டோ செல்ல 401 என்ற பிரதான சாலை. 35 கிமீ. 90 நிமிடம் ஆகலாம். எப்போதும் வாகனங்கள் வால் பிடித்த மாதிரி; நமக்கு பைத்தியம் பிடித்த மாதிரி... மிக கவனம் வேண்டும். டொரொன்டோ நகரத்தினுள்ளும் சற்றே கவனம் வேண்டும். ஒரே நல்ல விஷயம், அந்த நெரிசலிலும் ஒலிப்பான்கள் மௌன விரதம். ஒரு முறை சென்ற போது, நிறைய குழி தோண்டி வழி மாற்றம் செய்து நம்ம ஊர் தொலைபேசி துறையையும் சாலை துறையையும் ஞாபகப்படுத்தினார்கள். டொரொன்டோவிலுள்ள சி என் டவர் (Canadian National (CN) Tower) பார்க்கவேண்டிய இடம். இந்த கோபுரம் (tower) தொலைதொடர்பு காரணங்களுக்காக நிறுவப்பட்டாலும், இதன் மேல்பகுதியில் பார்வையாளர் பகுதி உள்ளது. கூடவே கடை கன்னி உணவு விடுதிகளும் உண்டு. இந்த பார்வையாளர் பகுதியின் தளம் கண்ணாடியால் ஆனது. ஆகவே நீங்கள் 330 மீட்டர் (1100அடி) உயரத்தில் இந்த கண்ணாடி தளத்தில் நடந்துகொண்டே கீழே எறும்புகள் போலத் தென்படும் மனிதர்களைப் பார்க்கும்போது சற்றே பதற்றம் ஏற்படும். ஆனால், பயம் தேவையில்லை. ஏனெனில், இங்கே கண்ணாடி பதித்த கான்ட்ராக்டருக்கும் சென்னை விமான நிலைய கான்ட்ராக்டருக்கும் ஒரு தொடர்பும் இல்லையாம்!

அடுத்து நயாகரா பற்றி பார்ப்போம். மிசிசாகாவில் இருந்து ஹாமில்டன் வழியாக 100 கிமீ-தான். இது அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்திற்கும் கனடாவின் ஒன்டோரியோ மாகாணத்திற்கும் இடையில் நயாகரா பிளவு/பள்ளத்தாக்கு (Gorge) என்ற இடத்தில் மூன்று நீர் நீர்வீழ்ச்சிகள் கொண்ட இடம். அப்போ இந்த இடத்துக்கான 'பட்டா' யார் கையில் என்ற கேள்வி சில பேருக்கு வரலாம். இது ஒரு நல்ல கேள்வி. ஆனால், பதில் என்னிடம் இல்லை. ஒன்று சொல்ல முடியும், இந்த இடம் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று கனடாவோ அமெரிக்காவோ இதுவரை வழக்கு போட்டு வாய்தா மேல் வாய்தா வாங்கவில்லை என நினைக்கிறேன். நமக்கு என்ன, சுற்றுலா பயணி. வந்தோமா பார்த்தோமா ரசித்தோமா என்று இருக்கவேண்டும்!

நாங்கள் அமெரிக்காவின் பக்கம் மற்றும் கனடாவின் பக்கம் என் இரு நாட்டிலிருந்தும் பார்த்திருக்கிறோம். நயாகரா அவ்வளவு பிரமாண்டம் மற்றும் அழகு. சிலுசிலுவென்று எந்நேரமும் ஒரு சாரல் அடிக்க, சோவென்ற சத்தத்தினூடே அந்த நீர்வீழ்ச்சியை பார்ப்பது சிலிர்ப்பான அனுபவம். கொஞ்சம் தைரியம் இருந்தால் நல்ல பிளாஸ்டிக்கால் ஆன மழை உடை (Rain Coat) போட்டு, படகில் வீழ்ச்சியின் மிக அருகில் கொண்டு சென்று காட்டுவார்கள். பார்த்தோம். ஏப்ரல் - அக்டோபர் மாதங்கள் சிறந்த மாதங்கள், இங்கு செல்ல. நிறைய சுற்றுலா பயணிகள் வருவார்கள். நாங்கள் சென்றபோது பட்டுப்புடவை கட்டி நம்ம அம்மாக்கள், மாமிகள் நிறைய இருந்தார்கள். நிச்சயமாக கனடா வரும் முன் பனகல் பார்க் (T Nagar) சென்றிருப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரண்டு முக்கியான இடங்கள் பார்த்தாயிற்று. அடுத்து பார்க்க வேண்டிய இடங்கள் ஆட்வா (Ottawa) மன்ட்ரியால் (Montreal), கியூபெக் நகரம் (Quebec City) மற்றும் வான்கூவர் (Vancouver).

ஆட்வா கனடாவின் தலைநகரம். மிசிசாகாவில் இருந்து 470 கிமீ. 5-6 மணிநேரம். சாலைகளில் எப்போதும் ராட்சத ட்ரக்குகள். ஆகவே, ராஜாவை இசைக்கவிட்டு கண்களை சாலைமேல் வைக்கவேண்டும். மிக அழகான ஊர். இங்குதான் இவர்களின் பார்லிமென்ட் உள்ளது. அருங்காட்சியகங்கள் நிறைய உள்ளன. இவை மூலம் கனடாவின் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்திருக்கலாம், அமெரிக்கா மற்றும் கனடா இரண்டுமே வந்தேறிகளின் நாடுகள் (Land of Immigrants). பூர்வகுடி மக்கள், அரசு சலுகைகள் அளித்தாலும், விளிம்பு நிலையில் உள்ளார்கள் என்றே தோன்றுகிறது.

ஆட்வாவில் பார்க்கவேண்டிய மற்றொரு இடம், ரீடுயு நீர்வழித்தடம். 1800-களின் ஆரம்பக்கட்டத்தில் எங்கே அமெரிக்கா தாக்கிவிடுமோ என்று பயந்து பிரிட்டானியர்கள் (அப்போது கனடா இவர்கள் வசம்) ஒரு பாதுகாப்புக்காக 220 கிமீ கால்வாயை ஆறு வருடங்களில் நிர்மாணித்து உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். நில அமைப்பு ஏற்ற தாழ்வுகள் கொண்டதால், ஏறக்குறைய 45 இடங்களில் ஒவ்வொரு முறை ஏறவேண்டி வரும்போது நீரை தடுத்து உயரே ஏற்றி அதன் ஊடாகவே படகையும் ஏற்றி பின் திறந்து படகை செலுத்தி பார்க்கவே ஆச்சரியப்படுத்தும். இன்றும் கையால் அந்த மதகுகளை (Gates) இயக்குவதைப் பார்க்கலாம்.

இங்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற உணவகத்தில் அருமையான உணவு கிடைத்தது.

Houses in Sarnia, Ontorio, Canada
Houses in Sarnia, Ontorio, Canada

அங்கிருந்து வண்டியை நேராக 200 கிமீ, மன்ட்ரியால். Mount Royal என்பதின் பிரெஞ்சு வடிவம் Montreal. இங்கே எப்படி பிரெஞ்சு? சுமார் 600-700 ஆண்டுகளுக்கு முன், இந்த கியூபெக் பிராந்தியம் பிரெஞ்சின் கையில் வந்தது. அப்போது பூர்வகுடி மக்கள் (Aborigins) அந்த இடத்தை கனடா (Kanada, என்றால் Village) என்றழைக்க அது கனடா (Canada) என்று மாறி (நியூ பிரான்ஸ் என்றும் அழைக்கப்பட்டது) பின்னர் பிரெஞ்சும் பிரிட்டானியர்களும் 'வாய்க்கால் வரப்பு' சண்டையில் இந்த இடம் பிரிட்டானியர்கள் கைக்கு மாறியது. அதற்குள் நிறைய பிரெஞ்சு மக்கள் இங்கே குடியேற, அவர்களின் மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன. எனவே, கியூபெக் பொறுத்தவரை இன்றும் அலுவல் மொழி பிரெஞ்சு. அவ்வப்போது தனிநாடு கோரிக்கை தலைதூக்கும்.

மன்ட்ரியால் மிக அழகான ஊர். நிறைய சுற்றுலாத் தலங்கள். புராதன மன்ட்ரியால் சுற்றுலா பயணிகள் மொய்க்கும் இடம். நிறைய அழகிய குறுகிய சாலைகள், சாலை ஓர இசை கலைஞர்கள் மற்றும் உண்ணும் இடங்கள். மற்றும் சில கேளிக்கைகள். நாங்கள் ஜிப்-லைன் (Zip - Line) சவாரி செய்தோம். ஏதாவது நடந்தால் தகவல் சொல்ல மற்றவர் இருப்பார் என்று, ஒருவர் பின் ஒருவராகவே சவாரி செய்தோம். கொஞ்சம் பயம், பின் தைரியம் அதற்குள் சவாரி முடிந்து அந்த ஜிப்-லைன் டிக் பண்ணியாயிற்று. வானத்தில் இருந்து குதிக்கும் Sky - Dive இன்னும் பாக்கி. அப்புறம் சாப்பாடு. டேஞ்சூர் (Tanjore) என்ற தமிழ் உணவு விடுதியை தேடி சுற்றி சுற்றி கடைசியில் மூடும்போது சென்று தோசை சாப்பிட்டது நன்றாக நினைவுள்ளது. சட்னியில் உப்பு அதிகம், மற்றவை மிக சிறப்பு. மகிழ்ச்சி.

அடுத்து கியூபெக் சிட்டி. 250 கிமீ. இயற்கை அன்னை மிகவும் ரசித்து உருவாக்கிய நகரம் என்று தோன்றியது. செயின்ட் லாரன்ஸ் நதிக்கரையோரம். அந்தக் கரையோரமே பரபரப்பேயில்லாமல் ஊர்ந்து சென்று அழகை பருகி, அங்குள்ள கலைநயமிக்க தேவாலயங்கள் பார்த்து 900 கிமீ ஒரே நாளில் ஒட்டி டொரோண்டோ வந்து சேர்ந்தோம்.

ஏறக்குறைய ஒரு வாரம். விடுதிகள், சாலை பயணம் மற்றும் எண்ணற்ற இயற்கை காட்சிகள், ஆண்டவனின் படைப்புகள், மனிதனின் சாதனைகள் எல்லாம் பார்த்து படைத்தவனுக்கும், பெற்றோருக்கும் நன்றி சொல்லி அத்தை வீடு (என் வீடு மாதிரிதான் :-)) வந்து சேர்ந்தோம். என்னதான் சொல்லுங்கள், பயணம் முடிந்து வந்து வீட்டில் சாம்பார் சாதம், வறுத்த வடாம் சாப்பிட்டு, அப்படியே கட்டிலில் மல்லாக்க சாய்ந்து விட்டத்தை பார்த்து தூக்கத்தில் வீழ்வது சுகமோ சுகம். அத்தை சமையல் எப்போதுமே அருமை. அதைவிட அவர்களின் மனோதிடமும் எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளிப்பதும் எனக்கு நிறையவே வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொடுத்தது. என் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள், அண்ணன்கள், அக்கா, தம்பி அடுத்து என் வாழ்க்கையில் ரொம்பவே நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் அத்தை முதன்மையானவர். சொல்லப்போனால் அவர்கள் என் அத்தை இல்லை. என் மனைவியின் அத்தை. 30 வருட சொந்தம், பலமான சொந்தம்.

Backyard of my (My Aunt’s ) house, Canada
Backyard of my (My Aunt’s ) house, Canada

இப்போது நான் எல்லா பயணங்களையும் முடித்து விட்டத்தை பார்த்து ஓய்வு எடுக்கும்போது, எல்லாவற்றையும் ஓரம் தள்ளி, என்ன இன்னும் வான்கூவர் பார்க்கலையா வாடா இப்பவே என்று என் நண்பன் சொல்லும்போது சற்றே மனது உடையும். என் அத்தை மகன், என்னது நீங்கள் இன்னும் வினிப்பெக் மற்றும் பான்ஃப் பார்க்கவில்லையென்றால் எல்லாமே வேஸ்ட் என சொல்லும்போது மனது முழுதும் உடையும். இந்த மக்களே இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி...

'சரிப்பா இதோ கிளம்பி வரேன்' என்று சொல்லி வான்கூவர் சென்றோம். தூரம் அதிகம். நேரம் குறைவு. விமானம்தான். அழகிய பெரிய நகரம். பெரிய நகருக்கே உரித்த போதை மற்றும் தெருவோர மக்கள் சற்றே அதிகம். பசிபிக் சமுத்திரத்தின் நீழ்ச்சியான ஜார்ஜியா ஜலசந்தி கரை ஓரம் அமைந்துள்ள வான்கூவர் பார்க்க பரவசமூட்டும். நண்பன் நாள் முழுக்க சுற்றி காட்டி அங்குள்ள அழகான வீடுகளையும் காட்டி கூடவே விலையையும் சொல்லி, இந்த முறை நேரமில்லை, அடுத்த முறை நிச்சயம் ரெண்டு இடம் வாங்கி போடலாம், என்று நகையாடி சரவணபவனில் ஒரு பிடி பிடித்தோம். அடுத்த நாள், படகில் சென்று திமிங்கலங்களை (Humpback Whale) பார்த்தோம். ராட்சத அளவில் அவ்வளவு பெரிய ஜீவன்கள் அடிக்கடி மேலே வந்து தண்ணியை பீச்சி அடித்து சுவாசக்காற்றை உள்ளிழுத்து குட்டிக்கரணம் அடித்து சுற்றிவருவதை பார்ப்பது ஒரு புதிய அனுபவம். மூன்றாவது நாள் 'தொங்கும் பாலம்' அமைந்துள்ள பூங்காவில் (Capilano Suspension Bridge Park) செலவழித்தோம்.

அப்ப நாம இன்னைக்கு விமானத்தைப் பிடித்த மாதிரிதான் என்று மனைவியை பார்க்க, 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்பதற்கு பதிலாக, மனைவி என்னை கழற்றிவிட்டு தனியாக செல்ல தயாராக உள்ளதாகச் சொன்னார். என்ன கொடுமை சார் இது!

சரி, அடுத்தமுறை வின்னிபெக் மற்றும் பான்ஃப் பார்க்கவேண்டும். கேல்கரி (Calgary) நான் பார்த்துவிட்டேன், அலுவல் பயணத்தில். சுற்றி வெள்ளை பனி, மழை, மழை மேலும் மழை போல தோன்றியது. மனைவிக்கு சரிவராது.

இப்போது அடுத்த வேலை, அமெரிக்கா செல்லவேண்டும். கனடாவில் இருந்து அமெரிக்கா செல்லும்போது, அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் உங்களை கனடாவிலேயே நோண்டுவார்கள். குடியுரிமை சோதனைகள் இங்கேயே முடித்துவிடுவதால் அமெரிக்காவில் இறங்கியவுடன் நேராக பெட்டியை எடுக்க (Baggage Corousel) போய் விடலாம். கனடா, அயர்லாந்து, கரீபியன் மற்றும் அபுதாபி மட்டுமே தற்போது இந்த முறையை பின்பற்றுகின்றன. ஏன் மற்றவர்கள்? தெரியவில்லை மக்களே.

எல்லாம் ஒரு சம்பிரதாயம்தானே. என்ன வித்தியாசம் என நினைத்து விமான நிலையம் சென்று என் முகத்தை அந்த அமெரிக்க பெண் அலுவலரிடம் காட்டினேன். மனைவி அடுத்த கவுண்டர் மூலம் அனுமதிப்பிக்கப்பட்டு நான் நிறுத்தப்பட்டேன். சந்தேக ரேகையை பார்க்க முடிந்தது. 'அடப்பாவிகளா நான் ஒண்ணுமே தெரியாத டம்மி பீஸ்' என்று சொல்ல முயற்சித்தேன். 'மன்னிக்கவும், நோ டாக்கிங், நோ மொபைல் போன். கம் வித் மீ' என்று ஓர் அறைக்குள் தள்ளி, இங்கேயே அமருங்கள், மேலதிகாரி நேரம் கிடைக்கும்போது உங்களை “கவனிப்பார்” என்று சொல்லி கதவை மூடிவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனாலும், ரொம்பவே நல்லவனுங்கோ. மனைவியை கூடவே உட்கார வைத்தார்கள். விமானம் இன்னும் 90 நிமிடத்தில் என்று சொன்ன மாத்திரத்தில், அது உங்கள் பிரச்னை என்று என்னை வாயடக்கினார்கள். அந்த அறையில் எங்களுக்கு முன்பே இரண்டு பெண்கள் பலியாடுகள் கணக்காய் அமர்ந்திருந்தார்கள். 45 நிமிடமாகக் காத்திருப்பதாக மெல்லிய குரலில் சொன்னார்கள். 'அப்ப நாம இன்னைக்கு விமானத்தைப் பிடித்த மாதிரிதான்' என்று மனைவியை பார்க்க, 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்பதற்கு பதிலாக, மனைவி என்னை கழற்றிவிட்டு தனியாக செல்ல தயாராக உள்ளதாக சொன்னார். என்ன கொடுமை சார் இது. இருக்கட்டும். கடைசியில் என்ன ஆயிற்று என்று அடுத்த வாரம் சொல்கிறேன்!

- சங்கர் வெங்கடேசன்

(shankarven@gmail.com)