Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `மகாராஜா தரிசனம்’ | பகுதி 6

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( மாதிரி படம் )

பபூலின் உடல்மொழியில் எந்த மாற்றமும் தெரியவில்லை. கார் ஸ்டீயரிங்கை இறுகப் பற்றியபடி தீர்க்கமான பார்வையை நாலாபுறமும் செலுத்தியபடி அமர்ந்திருந்தார்.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `மகாராஜா தரிசனம்’ | பகுதி 6

பபூலின் உடல்மொழியில் எந்த மாற்றமும் தெரியவில்லை. கார் ஸ்டீயரிங்கை இறுகப் பற்றியபடி தீர்க்கமான பார்வையை நாலாபுறமும் செலுத்தியபடி அமர்ந்திருந்தார்.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( மாதிரி படம் )
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

பயணக் கட்டுரைகளை வாசிக்கும்போதெல்லாம் ஓர் எண்ணம் எனக்குத் தோன்றுவதுண்டு. மனிதர்கள் ஏன் பயணங்களை இடங்களோடு மட்டுமே தொடர்புப்படுத்தி எழுதுகிறார்கள்... பயணங்கள் மனிதர்களைப் பற்றியவை அல்லவா... கடலும் மலையும்; அருவியும் நதியும் வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் வெவ்வேறு அர்த்தங்களில் புலப்படுகின்றபோது பயணக் குறிப்புகள் ஏன் இடங்களை மட்டுமே வரைவதாக இருக்க வேண்டும்?

``சாமர்செட் மாம் (Somerset Maugham) தன் பயணங்களின்போது சந்தித்த மனிதர்களைப் பற்றியே எழுதினார்.

மாப்பசான், செக்கோவ் போன்றவர்களும் யதார்த்தமான மனிதர்களைப் பற்றியே எழுதினர். நானும் அவ்வாறு செய்கிறேன். என் கதைகளை மனிதர்கள் அலங்கரிக்கின்றனர். விதிகளால் செம்மைப்படுத்தப்படாத நேர்மையான மனிதர்களே என் கதைகளின் அணிகலன்கள். அவ்வாறல்லாத மனிதர்களைப் பற்றி நான் எழுதுவதில்லை. தன் வாழ்வின் சாதனைகளைப் பற்றியே பேசி மகிழும் மனிதர்கள் என்னை ஈர்ப்பதில்லை. அவர்களுக்கு என் கதைகளில் நான் இடம் தருவதுமில்லை."

- ரஸ்கின் பாண்ட்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் நாகா மக்களின் ஹார்ன்பில் திருவிழாவுக்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்தோம். 10 நாள் பயணமாக குவஹாத்தியிலிருந்து மேகாலயா, சோஹ்ரா (சிரபுஞ்சி), மாலின்னாங், வங்கதேச எல்லை வரை சென்றுவிட்டு, அதன் பிறகு கோஹிமா செல்லலாம் என்று திட்டம். குஜராத்தி நண்பர் ஒருவரும் தன் குடும்பத்தோடு எங்களுடன் வருவதாகக் கூறினார்.

ஹார்ன்பில் திருவிழாவை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் 'அச்சி-லா சேங்.’ 'லா' எனும் விகுதி நாகா இனக்குழுக்களில் பெண்பாலைக் குறிக்கும் பெயர். உருவ அமைப்பில் அவர் ஜப்பானிய கெய்ஷா கலைஞர்போலிருந்தார். தனது சிறிய கண்களுக்கு அஞ்சனம் தீட்டி நீளமான தோற்றமளித்திருந்தார். ஆசிரியர் என்றதும், நம் மனதில் தோன்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த குணாதிசயங்கள் ஏதுமின்றி மாணவர்களுடன் தோழமையுடன் பழகினார். அதுவே அவரை அணுகிப் பழக என்னைத் தூண்டியது எனலாம்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நான் அந்தப் பள்ளியில் ஆங்கிலம் பயிற்றுவித்தேன். அவர் சமூகவியல் பயிற்றுவித்தார். ஒருமுறை அவர் மாணவர்களைத் திரட்டி விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை நடத்தினார். அமுர் ஃபால்கன் (Amur Falcon) எனும் பறவையினம் சைபீரியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பனிக்காலத்தில் வலசை போகுமாம். அதன் வலசைப் பயணத்தின்போது, நாகாலந்தின் பங்க்தி மற்றும் தீமாபூர் நீர்த்தேக்கப் பகுதிகளில் சில நாள்கள் இளைப்பாறிவிட்டு அரபிக் கடலை ஒரே மூச்சில் கடந்து தென்னாப்பிரிக்காவை சென்றடையுமாம். 2015-ம் ஆண்டில் வலசைவந்த அமுர் ஃபால்கன் பறவைகளை உணவுத் தேவைக்காகவும் விற்பனைக்காகவும் உள்ளூர் வேடர்கள் லட்சக்கணக்கில் வேட்டையாடினர். அந்தச் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையை நாகாலந்து பக்கம் திருப்பியது. அரசாங்கமும் சமூக ஆர்வலர்களும் மேற்கொண்ட விழிப்புணர்வு முயற்சிகளால் அந்தப் பறவைகள் தொடர்ந்து வேட்டையாடப்படுவது பெருமளவில் குறைந்தது.

அந்த மாதிரியான ஒரு முயற்சியைத்தான் அச்சி-லா, பள்ளி மாணவர்களைத் திரட்டி நடத்தினார். அவருடன் இணைந்து பல விழிப்புணர்வு வீதி நாடகங்கள் தயாரித்தோம். சுற்றுவட்டார மக்களிடையே அந்தப் பறவைகள் நம் நிலங்களைக் கடந்து செல்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தோம். அச்சி-லா என் நண்பரானார். பள்ளி முடிந்து ஓய்வு நேரங்களில் அவரும் நானும் அமர்ந்து கதைப்பது வழக்கம். நான் பேசுவதும் அவர் கேட்பதுமாக எங்களிடையே ஒரு புரிதல் இருந்தது. அவர் நாகா மொழியில் பாடல்கள் பாடுவது வழக்கம். அவற்றின் பொருள் விளங்கவில்லையென்றாலும் இசைக் கோர்வையை ரசித்தபடி அமர்ந்திருப்பேன். ஒருமுறை அவர் சோகமான உணர்வை வெளிப்படுத்தும் இசையில் பாடினார். ஏனென்று கேட்டதற்கு `காதல் தோல்வி’ என்றார். யாரோ ஒரு வடமொழிக்கார வனத்துறை அதிகாரியை அச்சி-லா காதலித்ததாகவும், ஆனால் அவர் டிரைபல் பெண்ணை மணமுடிக்க இயலாதென்றும், வேண்டுமென்றால் காலம் முழுவதும் துணையாக மட்டும் வைத்திருப்பதாகவும் கூறியதால் அச்சி-லா வருத்தத்துடன் அவருடனான ஐந்து வருட உறவை முடித்துக்கொண்டார்.

காதலுக்குத் திருமணம் தேவையில்லைதான். ஆனால் அந்த விதிமுறையை அவர் தன்னைக் கேட்டு முடிவு செய்யவில்லை

என்னும் வருத்தத்தால் மட்டுமே அவரைப் பிரிந்ததாக அச்சி-லா கூறியபோது அவரது குரல் சில நொடிகள் தழுதழுத்தது.

அவரைத் தேற்றும் பொருட்டு அவருக்கு அமுர் ஃபால்கன் பறவைகளின் பயணத்தை நினைவுபடுத்தினேன். `இளைப்பாறுதல் வாய்க்கப் பெறவில்லையென்றாலும் இலக்குகள் பொய்ப்பதில்லை. உங்கள் வாழ்வுக்குப் பொருள் சேர்க்கும் இலக்கை நோக்கிப் பயணியுங்கள்; வலசை போகும் பறவையைப்போல்’ என்றேன். இயற்கையை அதனருகிலிருந்து காணும் மனிதன், பொறுமையையும் உள திட்பத்தையும் பரிசாகப் பெறுகிறான். அதற்குப் பிறகு அவனை எந்தப் பெருந்துயரும் சோர்வடையச் செய்வதில்லை.

எங்களுடைய இரண்டு வார பயணத்துக்கும் கார் ஓட்டுநராக பபூல் எனும் இளைஞர் வந்திருந்தார். அதிகபட்சம் 18 முதல் 20 வயதிருக்கும் அவருக்கு. ஆளும் தோற்றமும் என விடலைப் பருவத்தின் அடையாளங்களோடு பபூல் இருந்தார். அவரை நம்பிப் பயணிப்பது சரிதானா எனும் ஐயம் எல்லோர் மனதிலும் தோன்றவே செய்தது. அதிலும் குறிப்பாக, எங்களுடன் வந்திருந்த குஜராத்தி நண்பரின் மனைவிக்கு பபூலின் தோற்றம் நம்பிக்கையளிப்பதாகத் தெரியவில்லை. அவருக்கு ஏதோவோர் அறிவுரை வழங்கியபடியே வந்தார். பயணத்துக்குத் தயாராகும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவிதத்தில் வேறுபடுகிறான். சிலர் தங்களது சுக செளகரியங்களுக்கு எவ்விதக் குறைவும் நிகழ்ந்துவிடக் கூடாதென்பதில் கவனமாக இருப்பர். மற்ற சிலர் எது குறித்தும் பெரிதாக யோசிக்காமல் அந்தப் பயணம் தனக்கு வழங்கப்போகும் ஆச்சர்யங்களைப் பெற்றுக்கொள்ள ஆவலாக இருப்பர். அந்த வகையில் இரண்டுவிதமான மனிதர்களையும் கொண்ட பயணமாக அது அமைந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நெடுந்தூரப் பயணங்களை இன்னும் நீளச்செய்யும் சில தடங்கல்கள் எப்போதும் ஏற்படுவதுண்டு. அது வானிலை மாற்றமாக இருக்கலாம், எல்லைப் பகுதிகளில் பிஎஸ்எஃப் (BSF) நடத்தும் சோதனையாக இருக்கலாம் அல்லது வனவிலங்குகள் கடந்து செல்லும் பாதைகளாக இருக்கலாம். அப்போது காத்திருப்பதைத் தவிர வேறு எந்த வழியுமிருக்காது. குவஹாத்தியின் மலை இறக்க நிலப்பகுதிகளில் கரும்பு நெல் வயல்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது பபூல் திடீரென பெரும் சப்தத்துடன் பிரேக் பிடித்து காரை நிறுத்தினார். குஜராத்தி தோழி அதிர்ச்சியில் உறைந்தார். ``தம்பி உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியுமா தெரியாதா?" என்று கடிந்துகொண்டார். பபூல் எங்கள் அனைவரையும் பார்த்து சைகையால் சன்னமான குரலில் ``மகாராஜா கடந்து செல்வார்போல் தெரிகிறது. உங்களிடம் உணவுப் பொட்டலங்களிருந்தால் அவற்றை வெளியே வீசிவிடுங்கள். சிறிது நேரம் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருங்கள், மொபைல்போன்கள் பயன்படுத்தாதீர்கள்" என்று எங்களை எச்சரித்தார். துறுதுறுப்பான வாலிபனாக மட்டுமே அதுவரை நாங்கள் பார்த்த பபூலிடம் அனுபவ நிதானமும், சூழலைக் கையாளும் பக்குவமும் அப்போது வெளிப்பட்டன.

அவர் கூறுவதைப் பின்பற்றுவதென்று முடிவு செய்து உணவுப் பொட்டலங்களை எடுத்து வெளியே வீசினோம். குஜராத்தி மக்கள் தங்கள் உணவுப் பழக்கங்களுக்காகப் பெயர் பெற்றவர்கள். பத்து நாள்களுக்குத் தேவையான நொறுக்குத்தீனியைத் தயாரித்து எடுத்து வந்திருந்தார் நண்பர். அதை வீசியெறியும்போது அவர் மனம் கலங்கினார். ``கண்டிப்பா வெளியே போடத்தான் வேண்டுமா?" என்று எரிச்சலாக பபூலிடம் கேட்டார். ``ஆம்" என்பதுபோல் தலையசைக்க மட்டுமே செய்தார் பபூல்.

``உயிரோட இருக்கணுமா, வேண்டாமா" என்றார் சிறிது நேரம் கழித்து. ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் காத்திருந்தும் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை.

தொலைவிலிருந்து முரசொலிபோல் ஓர் ஓசை மட்டும் கேட்டபடி இருந்தது. பபூலின் உடல்மொழியில் எந்த மாற்றமும் தெரியவில்லை. கார் ஸ்டீயரிங்கை இறுகப் பற்றியபடி தீர்க்கமான பார்வையை நாலாபுறமும் செலுத்தியபடி அமர்ந்திருந்தார். அவரது எச்சரிக்கை உணர்வு என்னுள் அச்சத்தையும் பதற்றத்தையும் ஒரேசேரத் தோற்றுவித்தது. பபூல் பார்வையால் என்னைத் தேற்றினார். நெடுநேரமாகிவிட்டதால், எனது தோழிக்கு மீண்டும் அசெளகரியம் தொற்றிக்கொண்டது. ``இந்தப் பையனோட போக்கே சரியில்லை. இவனுக்கு ஒண்ணும் தெரியாதுபோல. அதுதான் என்னென்னமோ சொல்லி நம்மை பயமுறுத்துகிறான்" என்று புலம்பினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வயற்பரப்பில் சலசலப்பு கூடுவது போலிருந்தது. நான் பபூலை மட்டும் பார்த்திருந்தேன். அவரது கவனம் பன்மடங்கு அதிகரித்திருந்தது. சில நொடிகளிலெல்லாம் மகாராஜா தரிசனம் கிடைத்தது. உண்மையில் அவை மகாராஜாக்கள். பச்சை வயல்களைக் கடந்து செல்லும் யானைக் கூட்டமொன்று வெளிப்பட்டது. கற்பனைக் கதைகளில் மட்டுமே கண்டிருந்த யானைக் கூட்டத்தை முதன்முறையாக அப்போதுதான் நேரில் பார்த்தேன். பயத்தையும் மீறிய ஒரு பரவசம் மனதை நிறைத்தது. கூரிய தந்தங்களுடன் ஆண் யானைகள் சிலவும், அவற்றின் இணைகளும், குட்டிகளுமாக அவை வயல்களில் உணவருந்திக்கொண்டிருந்தன. நாங்கள் அனைவரும் அமைதியாகிவிட்டோம். அவை கடந்து செல்லும் வரை அவற்றைத் தொந்தரவு செய்யாமல் காத்திருப்பதென்று பபூல் முடிவெடுத்திருந்தார். நாங்கள் அவருக்குக் கட்டுப்பட்டோம். பெரும்பாலும் கூட்டமாக வரும் யானைகள் யாரையும் தாக்குவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கூட்டத்திலிருந்து வழிதவறிய யானைகளே ஆபத்தானவை. கலவரமான அந்தச் சூழலிலும் மனம் இப்படியெல்லாம் யோசித்துப் பார்த்து ஆசுவாசமடைந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

யானைகள் சாலையைக் கடந்து மறுபுறம் சென்றபடியிருந்தன. கூட்டத்திலிருந்து ஒரு யானை மட்டும் மெல்ல நடந்து எங்கள் வாகனம் நோக்கி வந்தது. பபூல் கார் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டார். அவரது கைகள் ஸ்டீயரிங்கை மெல்ல திருப்புவதைக் கண்டேன். யானை நெருங்கவும் அவர் அதைக் கடந்து சென்றுவிட முயன்றார். யானை தனது துதிக்கையினால் கார் கண்ணாடிகளை வருடியது.

யானையின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தால் புத்தி பேதலித்து மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடும் என்று சிறு வயதில் யாரோ கூறியது நினைவுக்கு வந்தது.

ஆனால் அப்போது ஜன்னலோரமாக அமர்ந்திருந்த என்னை யானை பார்த்தது. நானும் அதன் கண்களைச் சந்தித்தேன். எவ்வித உணர்வும் வெளிப்படுத்தாத ஒரு சலனமற்ற பார்வையை வெளிப்படுத்தினேன். அந்தச் சில மணித் துளிகள் ஒரு தவநிலை போலிருந்தது.

பபூல், காரின் வேகத்தை கூட்டியதும் சூழலில் பதற்றம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. யானைகளைக் கடந்துவிட்டோம், இனி அவற்றால் ஆபத்து ஏதுமில்லை என்பது உறுதியானதும் காரின் பின்புறக் கண்ணாடி வழியாக அவற்றை ஒரு முறை கண்கள் விரித்துப் பார்த்துக்கொண்டேன். ஒவியங்களிலும் புகைப்படங்களிலும் மட்டுமே காணக் கிடைக்கும் எழில்மிகு காட்சி அது. யானைகள் ஒன்றையொன்று வழிநடத்திச் சென்றன. பச்சை வயல்களில் தென்றல் அலை அலையாகப் படர்ந்தது. மேற்கே சூரியன் மலைகளுக்குப் பின் மறைந்துகொண்டிருந்தான்.

அன்றிரவு, தங்கும் விடுதியில் உணவருந்தி முடித்த பின்னர் பபூல் தன் காரிலேயே உறங்கிக்கொள்வதாகக் கூறி புறப்படத் தயாரானார். அதற்கு முன்னர் எங்களை அழைத்து, ``நாளை விடியலில் கிளம்பவேண்டியிருக்கும், அதனால் சீக்கிரம் உறங்கச் செல்லுங்கள். பயணத்தில் நாட்டமுடையவர்கள் நேர விரயம் செய்வதில்லை" என்றார். மனதில் ஆர்வம் மேலிட,

``நாளைக்கு எங்கே போறோம் பபூல்?" என்றேன்.

``அதை நாளைக்குச் சொல்றேன். நிச்சயமா உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தரும் இடமாகவே இருக்கும்" என்று புன்முறுவலுடன் விடைபெற்றார் பபூல்.

பூடகமில்லாமல் பேசிப் பழகும் மனிதர்கள் சில நேரங்களில் கதாநாயகர்களாகிவிடுகின்றனர்.

ஆச்சர்யங்களுக்காகக் காத்திருக்கும் பயணம் தொடரும்.

(தொடரும்...)