Published:Updated:

இளவரசியின் வயது 175!

கொடைக்கானல்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடைக்கானல்

கொடைக்கானல் மலையின் மற்றொரு சிறப்பு, குறிஞ்சிப்பூ.

கொடைக்கானல் என்று எழுதும்போதே குளிர்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு, மற்ற ஆண்டுகள் என்றால் லட்சக்கணக்கான மக்கள் இந்நேரம் கொடைக்கானல் சுற்றுலாவுக்கு வண்டியேறியிருப்பார்கள். ஆனால் கொரோனா நம்மைக் கொடைக் கானலிலிருந்து தள்ளிவைத்திருக்கிறது. கொடைக்கானலை மிஸ்பண்ண இன்னொரு காரணமும் இருக்கிறது. இது கொடைக்கானலுக்கு 175வது ஆண்டு.

ஆங்கிலேயர்கள் முயற்சி எடுக்காவிட்டால், கொடைக்கானல் ஒரு சாதாரண மலைப்பகுதியாகவே இருந்திருக்கும். அதன் அழகிலும் சூழலிலும் மயங்கிய ஆங்கிலேயர்கள்தான் இந்த நகரை உருவாக்கினார்கள்.

பழநி மலைத்தொடரில் அமைந்துள்ளது கொடைக்கானல். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குள்ள மனிதர்களின் குகைகள், சேரர்போலப் பெருங்கால கல்திட்டைகள் இங்கு கிடைத்திருக்கின்றன. கொடைக்கானலின் தொல்குடிகள் பளியர் இன மக்கள். வனமகன்களான இவர்கள் இன்றுவரை, மலைத்தொடர் முழுவதும் பரவிக்கிடக் கிறார்கள். கல்பாசி, தேன், கடுக்காய், நெல்லி ஆகியவற்றைச் சேகரிப்பதுதான் இவர்களது தொழில். இன்றைக்கு இந்தத் தொழிலுடன் சேர்த்து, மலைவாழை, மிளகு உள்ளிட்ட சாகுபடிகளையும் செய்து வருகிறார்கள்.

இந்தியாவின் வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நேசித்த ஆங்கிலேயர்களால் சகித்துக்கொள்ள முடியாதது இந்திய வெப்பம். அதிலிருந்து விடுபட அவர்கள் தேர்ந்தெடுத்தது மலைவாசஸ்தலங்களை. ஒவ்வொரு பகுதியிலும் இருந்த மலைகளுக்குத் தங்கள் ஆட்களை அனுப்பி, தங்களுக்கு ஏற்ற பகுதிகளைத் தேடினார்கள். அப்படி அவர்கள் தேர்வு செய்த மலைதான் கொடைக்கானல். ஆங்கிலேயர்கள் அந்த மண்ணில் காலடி வைக்கும் வரை, கொடைக்கானல் என்ற பெயரோ, ஊரோ இல்லை. அது சோலைக்காடுகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி.

கொடைக்கானல்
கொடைக்கானல்

மலைவாசஸ்தலங்களைத் தேடி, நில அளவையாளர் லெப்டினென்ட் பி.எஸ். வார்ட் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் நீலகிரி, ஆனைமலை, ஏலமலை, பழநி மலைத்தொடர்ப் பகுதிகளில் தனது ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வில் வார்ட் கண்டுபிடித்த பகுதிதான் இன்றைய கொடைக்கானல். காடுகளின் ஊடாகச் செல்லும் ஒற்றையடிப் பாதைதான் மலைக்குச் செல்லும் வழி.

நட்சத்திர ஏரி
நட்சத்திர ஏரி

மலைப்பகுதியில் இருக்கும் பழங்குடி மக்கள் வனத்தில் சேகரிக்கும் பொருள்களை விற்பதற்காகப் பெரியகுளம் வருவார்கள். அதற்காக அவர்கள், வெள்ளகவி வழியாகக் கும்பக்கரை அடைந்து பெரியகுளம் செல்வார்கள். அந்தப் பாதையில் 1821-ம் ஆண்டு தனது ஆய்வைத் தொடங்கினார் வார்ட். கும்பக்கரைக்கு மேலே 7வது கிலோ மீட்டரில் இருக்கிறது வெள்ளகவி கிராமம். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆங்கிலேயர் காலடி பட்ட முதல் ஊர் இதுதான். பல்லக்கு மூலமாக வெள்ளகவி வந்த வார்ட், சிறிது ஓய்வுக்குப் பிறகு, டால்பின் நோஸ் வழியாக வட்டக்கானல் வந்தடைந்தார். அங்கு சோலைக்காடுகளாக இருந்த பாம்பார் பகுதி வார்ட் மனதைக் கவர்ந்தது. (தற்போது லிரில் பால்ஸ் என அழைக்கப்படும் பகுதி) அடர்காடுகள், இதமான குளிர் அவரை அங்கேயே தங்க வைத்தன. அந்தப் பகுதியில் கட்டடம் கட்டத் தொடங்கினார். விடுமுறை நாள் விடுதி (ஹாலிடே ஹோம்) என்ற பெயரில் கட்டப்பட்ட அந்தக் கட்டடம்தான் கொடைக்கானலில் உருவான முதல் கட்டடம். இன்றைக்கும் இதைப் பார்க்கலாம்.

இந்த இடத்தின் குளுமை காரணமாக நீண்ட காலமாக அங்கு தங்கிவிட்டார் வார்ட். அவர் அனுப்பிய செய்தியைத் தொடர்ந்து, வெயிலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இங்கு வரத்தொடங் கினார்கள் ஆங்கிலேய அதிகாரிகள். தொல்குடிகள் இல்லாமல் சமவெளிப் பகுதி மக்கள் இங்கு குடியேறிய நாள் 1845-ம் ஆண்டு மே 26-ம் தேதி. இந்தத் தேதியையே கொடைக்கானல் நகரம் பிறந்த தினமாகக் கொடைக்கானல் நகராட்சி கொண்டாடி வருகிறது. அதிகாரிகளைத் தொடர்ந்து, கிருத்துவ மிஷினரிகள் வந்தார்கள். சர்ச் அமைக்கும் பணியைத் தொடங்கினார்கள். அங்கு வந்த சில ஆங்கிலேயர்களுக்கு அந்த இடத்தை விட்டுச் செல்ல மனமில்லை. அதனால் தனியாக வீடுகட்டி வசிக்கத் தொடங்கினார்கள். அவர்களது குழந்தைகளுக்காகப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தது ஊர். அப்போதைய மதுரை கலெக்டர் சர்வேர் லெவின்ஸ் தனது ஓய்வுக் காலத்தை இங்கு கழித்தார். அப்போது, ஜான் டேப் என்பவருடன் இணைந்து அவர் உருவாக்கியதுதான், தற்போதைய கொடைக்கானலின் நட்சத்திர ஏரி.

கொடைக்கானல்
கொடைக்கானல்

குடியிருப்புகள், பள்ளிகள் உருவானதும் வேலைக்காக இந்தியர்களை அழைத்துச் சென்றார்கள். 1860-ம் ஆண்டு கொடைக்கானல் என்ற பெயரை அரசுப் பதிவேடுகளில் பதிவு செய்தது ஆங்கிலேய அரசு. அதன் பிறகு, இங்குள்ள தட்பவெப்பம் பற்றிக் கேள்விப்பட்ட பலரும் இங்கு வரத்தொடங்கினார்கள். சாலைகள் அமைக்கப்பட்டன.

ஒரு காலத்தில் கால்நடையாகக் காட்டுக்குள் நடந்து வந்துகொண்டிருந்த கொடைக்கானலுக்கு கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் வந்து சென்ற வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகம்.

 இளவரசியின் வயது 175!

1872-ம் ஆண்டு அரசுப் பொறியாளரான லெப்டினன்ட் கோக்கர் என்பவர் மலைப்பகுதியில் நடந்துகொண்டே சமவெளியைப் பார்ப்பதற்காக ஒரு பாதையை உருவாக்கினார். அதுதான் கோக்கர்ஸ் வாக். ஆங்கிலேயர்களால் பிசாசுகளின் சமையலறை (டெவில்ஸ் கிச்சன்) என்று அழைக்கப்பட்ட பகுதிதான் தற்போதைய குணா குகை. 1900-ம் ஆண்டு வன அலுவலர் எச்.டி.பிரையண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் இப்போதைய பிரையண்ட் பூங்கா. வெள்ளகவி வழியாக வரும்போது டால்பின் மூக்குபோல ஒரு இடத்தில் பாறை நீட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினார்கள். அதுதான் டால்பின் நோஸ். இப்படிக் கொடைக்கானலில் உள்ள முக்கியமான இடங்களைக் கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அதேபோல காபி, அவகேடோ, பிளம்ஸ், ஏலக்காய், செளசெள, கேரட் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகள், ஆப்பிள் மரங்கள் எனப் பல்வேறு வகையான தாவரங்களையும் அவர்கள்தான் அறிமுகம் செய்தார்கள்.

கொடைக்கானல் மலையின் மற்றொரு சிறப்பு, குறிஞ்சிப்பூ. 12 ஆண்டுகளுக்கொரு முறை மலரும் குறிஞ்சி கடந்த 2018-ம் ஆண்டு மலர்ந்தது. இங்கேயுள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலும் புகழ்பெற்றது. ஏப்ரல், மே மாதம் என்றாலே களைகட்டும் கொடைக்கானல் அதே குளிரோடு ஆட்கள் இல்லாமல் ஏங்கிக்கிடக்கிறது.

அடுத்த வருஷம் பார்க்கலாம் இளவரசி!