சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை இனிமேல் நீங்கள் வாட்ஸ்ஆப் மூலமே பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பிற மாவட்டங்களை விட மக்கள்தொகையும் அதிகம், போக்குவரத்து நெரிசலும் அதிகம். இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் உள்ளூர் ரயிலுக்கும், மெட்ரோ ரயிலுக்கும் பெரிய பங்கு உண்டு. தினமும் மெட்ரோவில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணிக்கிறார்கள்.

இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து நெரிசலை குறைத்தாலும், டிக்கெட் கவுண்டரில் கூட்ட நெரிசலை அதிகரிக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதற்கு மாற்றாக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது...
மெட்ரோ நிர்வாகத்தில் கட்டணம் செலுத்தி பயணிகள் அட்டை பெற்ற பின்பு, மாதம் முழுவதும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துக்கொள்ளலாம். இந்த அட்டையை மாதாமாதம் ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் CMRL என்ற ஆப்பின் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை நாம் ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ரோ நிர்வாகம் 83000 86000 என்ற எண்ணுக்கு புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை வாட்ஸ்ஆப் செய்து, UPI மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இப்படி பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் 'QR கோடாக' நம் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வந்துவிடும். அதை ஸ்கேன் செய்து நாம் பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும் இந்த வசதியை பயன்படுத்துபவர்களுக்கு கட்டணத்தில் 20% தள்ளுபடியும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.