Published:Updated:

தடையை மீறி ட்ரெக்கிங்... மீண்டும் சர்ச்சையில் குரங்கணி... கண்டுகொள்ளாத கேரளா!

குரங்கணி மலை
குரங்கணி மலை

குரங்கணி மலைப்பகுதியில் ஆபத்தான ட்ரெக்கிங் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கினோம்.

குரங்கணியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம், கேரளாவின் கொழுக்குமலைக்கு ட்ரெக்கிங் சென்றுவிட்டு குரங்கணி மலை வழியாகத் திரும்பும்போது, காட்டுத்தீயின் பிடியில் சிக்கி பலர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தமிழ்நாட்டு எல்லைப் பகுதியில் ட்ரெக்கிங் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது வனத்துறை.

பலியானவர்கள் சென்ற ட்ரெக்கிங் பாதை அனுமதி இல்லாத தடைசெய்யப்பட்ட பாதை என்பதால், இது போன்ற சட்டவிரோத ட்ரெக்கிங் பாதைகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தியது வனத்துறை. இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழுக்குமலை சென்ற சிலர், தமிழக எல்லையில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ஆபத்தான ட்ரெக்கிங் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கினோம்.

குரங்கணி தீ விபத்து
குரங்கணி தீ விபத்து
கொழுக்குமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மிகவும் ஆபத்தான இடங்களுக்கு ட்ரெக்கிங் செல்கின்றனர்.
கொழுக்குமலை தேயிலை தோட்ட நிர்வாகம்

கொழுக்குமலை

கொழுக்குமலை டீ எஸ்டேட், பல சிறப்புகளைக் கொண்டது. உலகின் மிக உயரத்தில், தேயிலை விளையக்கூடிய இடமாக கொழுக்குமலை உள்ளது. எந்தவித ரசாயன உரமும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் தேயிலை விளையக்கூடிய இந்த இடத்தில், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதனாலேயே சுற்றுலாப் பயணிகள் பலர், கொழுக்குமலைக்குச் செல்கின்றனர். கொழுக்குமலைக்குச் செல்ல வேண்டும் என்றால், தேனி மாவட்டம் போடி மெட்டைக் கடந்து, கேரளாவின் சூரியநெல்லி வழியாகச் செல்லலாம். இந்தப் பாதை அனைவரும் அறிந்த ஜீப் பாதை என்பதால், ட்ரெக்கிங் பிரியர்கள் பலரும் விரும்புவது குரங்கணி மலைப் பாதையைத்தான்.

தமிழக வனப்பகுதியில் ஆபத்தான ட்ரெக்கிங் செல்பவர்கள்
தமிழக வனப்பகுதியில் ஆபத்தான ட்ரெக்கிங் செல்பவர்கள்

போடி அருகே உள்ள குரங்கணி மலை மீது ஏறி, மலை உச்சியில் உள்ள கொழுக்குமலையை அடையலாம். இந்தப் பாதையில்தான் 2018-ம் ஆண்டு காட்டுத்தீ பலரை பலிகொண்டது. இப்பாதையானது, குரங்கணி, முதுவாக்குடி, கொட்டகுடி ஆகிய மலைக்கிராம மக்கள் கொழுக்குமலை தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் செல்ல பயன்படுத்தக்கூடிய பாதை. இதை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், இப்பாதையை வணிக நோக்கோடு அணுகிய சில ட்ரெக்கிங் கூட்டம், இப்பாதையில் ட்ரெக்கிங் சென்றுகொண்டிருந்தனர். வனத்துறையும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான், காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. சட்டவிரோத பாதையும் நிரந்தரமாக மூடப்பட்டது. இந்தநிலையில் கேரளா வழியாகக் கொழுக்குமலை செல்லும் சில ட்ரெக்கிங் கூட்டம், கேரள எல்லையைக் கடந்து, குரங்கணி மலைப்பகுதியில் உள்ள மீசைப்புலி மலை, திப்பட்டா ஆகிய இடங்களுக்கு ஆபத்தான முறையில் ட்ரெக்கிங் செல்வதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இடுக்கி மாவட்டக் கலெக்டருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து, இச்சம்பங்களைத் தடுக்க கேட்டிருந்தோம். ஆனால், அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
தேனி மாவட்ட வன அலுவலர் கெளதம்

தேயிலைத் தோட்ட நிர்வாகம் புகார்

கொழுக்குமலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர், கடந்த 6-ம் தேதி, தேனி மாவட்டக் கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் புகார் கடிதம் கொடுத்தனர். அதில், ``கொழுக்குமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மிகவும் ஆபத்தான இடங்களுக்கு ட்ரெக்கிங் செல்கின்றனர். சில ஜீப் டிரைவர்கள், இது போன்ற ஆபத்தான இடங்களுக்கு ட்ரெக்கிங் என்ற பெயரில் அழைத்துச் செல்கின்றனர். காட்டுத்தீ அபாயம் இருப்பதால், அவர்களை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்” எனப் புகார் கொடுத்தனர்.

ஆபத்தான இடத்தில் நின்று போட்டோ எடுக்கும் நபர்
ஆபத்தான இடத்தில் நின்று போட்டோ எடுக்கும் நபர்
1 யானை, 4 காட்டுப்பன்றிகள், 2 கீரிகள், 1 பாம்பு, சில காகங்கள்... நீலகிரியில் கருகிசாக யார் காரணம்?

ஆபத்தான இடங்களில் ட்ரெக்கிங்... கண்டுகொள்ளாத கேரளா!

தமிழக வனப்பகுதியில் காட்டுத்தீ அபாயம் இருப்பதால், ட்ரெக்கிங் செல்ல கடந்த 15-ம் தேதி தடை விதித்தது வனத்துறை. இதை மீறும் விதமாக, கொழுக்குமலை வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள், மீசைப்புலி மலை, திப்பட்டா ஆகிய பகுதிகளுக்கு ட்ரெக்கிங் செல்வதாகவும் இப்பகுதி தமிழக எல்லையில் இருப்பதால், கேரள வனத்துறை, சுற்றுலாப் பயணிகளைத் தடுப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. அப்பகுதிகளில் ஆள் உயர போதைப்புற்கள் வளர்ந்திருப்பதாலும், கீழே 1,000 அடி பள்ளம் இருப்பதாலும் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் ஆபத்தில் சிக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து பத்திரிகையாளர்கள், தேனி மாவட்ட வன அலுவலர் கெளதமிடம் கேட்டபோது, ``இடுக்கி மாவட்ட கலெக்டருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து, இச்சம்பங்களைத் தடுக்கக் கேட்டிருந்தோம். ஆனால், அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. தமிழக அரசுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறோம். விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த உயிர் பறிபோகும் முன் நடவடிக்கை தேவை.

அடுத்த கட்டுரைக்கு