Published:Updated:

`சைக்கிளால் வாழ்க்கை மாறியது' - 400 நாட்கள்; 27 ஆயிரம் கி.மீ பயணம் - நம்பிக்கை விதைக்கும் நிஜக்கதை!

"என்னுடைய ஆசை, கனவு எல்லாம் மாரத்தான்தான். மாரத்தானில் என்னை மேலும் மெருகேற்றிக்கொள்ளத்தான், சைக்கிள் பக்கம் வந்தேன். ஆனால், சைக்கிள் என்னை விடாது பிடித்துக்கொண்டது."

தங்கவேல்
தங்கவேல்

மாசற்ற சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 400 நாள்களில், 27,046.7 கி.மீ தூரம் வரை சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார் கரூரைச் சேர்ந்த தங்கவேல். சிறு வயதிலிருந்தே சைக்கிள் பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தங்கவேல், சைக்கிள் மூலமாகப் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.

தங்கவேல்
தங்கவேல்

முயற்சியின் ஒரு கட்டமாக, 24 மணி நேரத்தில் ஓசூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணித்த தங்கவேலை, பயணத்தை முடித்திருந்த சில மணி நேரத்தில் அணுகிப் பேசினோம். 631.3 கி.மீ தூரத்தை சைக்கிளில் கடந்த களைப்பே இல்லாமல் கலகலப்பாகப் பேசினார்.

"அக்டோபர் 4-ம் தேதி மாலை 6.30-க்கு பயணத்தைத் தொடங்கினேன். வழியில் இடையிடையில் நல்ல மழை. சுமார் 5 மணி நேரம் மழையிலே பயணிக்க வேண்டியதாயிற்று. கிட்டத்தட்ட 24 மணி நேரம் 39 நிமிடம் 18 விநாடி கழித்து கன்னியாகுமரியை அடைந்தேன்."
தங்கவேல்

"ஓசூர் டைட்டன் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கரூர் மாவட்டம் ஆலத்தூர்தான் சொந்த ஊர். என்னுடைய ஆசை, கனவு எல்லாம் மாரத்தான்தான். நிறைய மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறேன். சிறுவயதிலிருந்தே சைக்கிள் பயணம் பிடித்தாலும், மாரத்தானில் என்னை மேலும் மெருகேற்றிக்கொள்ளத்தான், தற்போது சைக்கிள் பக்கம் வந்தேன். ஆனால், சைக்கிள் என்னை விடாது பிடித்துக்கொண்டது. இப்போது என் வாழ்க்கையையே சைக்கிள் மாற்றிவிட்டது.

சைக்கிளில் நீண்ட தூரப் பயணம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம், நான் நினைத்ததுபோல அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்கவில்லை. கடந்த ஒரு வருடமாக நான் இதற்காக என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டேன். ஒரு நாளைக்கு 50 கி.மீ சைக்கிள் பயணம் என 365 நாள்களும் மேற்கொண்டேன். அடுத்த சில நாள்களில் 100 கி.மீ, 200 கி.மீ எனப் பயிற்சியைக் கூட்டினேன்.

தங்கவேல்
தங்கவேல்

இந்த ஓராண்டு பயிற்சியை அர்த்தப்படுத்தும் வகையில் ஒரு நீண்டதூர பயணத்தைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் வந்தது. எங்கிருந்து எங்கு செல்லலாம் என்ற யோசனை வந்தபோது தமிழகத்தின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓசூர் முதல் கன்னியாகுமரி வரை எனத் தேர்வு செய்தேன்.

மாசற்ற சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும் என்பதை என்னுடைய பயணத்தின் முக்கியமான நோக்கமாக எடுத்துக்கொண்டு, நண்பர்களின் உதவியுடன், அக்டோபர் 4-ம் தேதி மாலை 6.30-க்கு பயணத்தைத் தொடங்கினேன். வழியில் இடையிடையில் நல்ல மழை. சுமார் 5 மணி நேரம் மழையியேலே பயணிக்க வேண்டியதாயிற்று. கிட்டத்தட்ட 24 மணி நேரம் 39 நிமிடம் 18 விநாடி கழித்து கன்னியாகுமரியை அடைந்தேன்.

தங்கவேல்
தங்கவேல்

இந்தப் பயணத்தில் தொடர்ச்சியாக 20 மணி நேரம் 13 நிமிடம் 28 விநாடிகள் சைக்கிள் ஓட்டியுள்ளேன். குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்துக்கு 31.2 கி.மீட்டரும், அதிக பட்சம் 62.6 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்த நான் கடந்து வந்த தூரம் 631.3 கி.மீ. தன்னுடைய முயற்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முடியும் என்ற நம்பிக்கை தற்போது கிடைத்துள்ளது.'

ரெட்டை பைக்ஸ்... சைஸ் 650 சிசி!

'கடந்த 400 நாள்களில் மட்டும் நான் சைக்கிள் மூலம் பயணித்த தூரம் 27,046.7 கி.மீ. பயணத்தில், கார்மின் ஜி.பி.எஸ் கடிகாரம் (Garmin) மூலமாக என்னோட டிராவலை கனெக்ட் செய்து, வேகம், இதயத்துடிப்பு, கி.மீ போன்றவற்றைத் தெரிந்துகொள்கிறேன். மேலும், என்னுடைய பயிற்சிக்காகவும் பயணத்துக்காகவும் நான் தேர்வு செய்தது MERIDA (Merida Ride 200) ரக சைக்கிள். தற்போது அடுத்த பயணத்துக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். போதிய அளவு நிதி கிடைத்ததும் விரைவில் பயணத்தைத் தொடங்குவேன்'.

Merida Ride 200
Merida Ride 200

மேலும் பேசிய அவர், "இந்தப் பயணத்தில் நான் சந்தித்த மனிதர்கள் எல்லாரும் என்னுடைய முயற்சியைப் பார்த்துப் பாராட்டி, உற்சாகப்படுத்தினாங்க. இயற்கையைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்தச் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன். காற்றை மாசுபடுத்தும் வகையிலான வாகனங்களை முடிந்த வரை தவிர்த்து சைக்கிள் பயன்பாட்டைக் கொண்டுவருவதன் மூலம் உடலையும் உலகையும் பாதுகாக்கலாம்" என்று மக்களுக்குக் குட்டியாக அட்வைஸ் கூறும் தங்கவேலின் அடுத்த சைக்கிள் பயணம் 'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி'யாம்.

Vikatan Infographics
Vikatan Infographics
பயணம். "நம்முடைய நினைவுகளை விட்டுச்செல்லும்போது புதிதாகத் தொடங்குகிறது; நினைவுகளை எடுத்துச் செல்லும்போது முடித்துக்கொள்கிறது."