Published:Updated:

கன் ஹில் பாய்ண்ட், கெம்டி ஃபால்ஸ், சர் ஜார்ஜ் எவரஸ்ட் வீடு- சிலிர்ப்பூட்டும் டெல்லி டூ டேராடூன் பயணம்!

டேராடூன்
டேராடூன்

ஆட்களே இல்லாத குறுகிய பாதை, ஒரு உச்சிக்குக் கொண்டு போய்விட்டது. மலைகளினூடாகப் போகும் சாலைகள் மலையின் சிறுகுடலும் பெருங்குடலுமாகத் தெரிந்தன. வாகனங்களோ செரிக்கப்போகும் உணவுகளாக மெல்லிசாகத் தெரிந்தன. டெல்லி டூ டேராடூன் பயணம் உண்மையிலேயே மனதை இதமாக்கும் பயணம்தான்!

டெல்லி டுடேராடூன் பயணக் கட்டுரையின் முதல்பாகத்தைப் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்! 

`` `96' படம் பார்த்தவுடனே டிக்கெட் போட்டேன்” - முசோரி... டோராடூன் டைரிக்குறிப்பு! #Travelogue

இது என் சோலோ பயணத்தின் இரண்டாம் பகுதி. இரண்டு நாள் முசோரியில் சுற்றிவிட்டு மீண்டும் டெல்லி திரும்பும் முடிவில் தங்கியிருந்தேன். குளிர் தாலாட்டு பாடித் தூங்கவைக்க, காலை 8.30 மணிக்குச் சாவகாசமாக எழுந்து அறையின் திரைச்சீலையை விளக்கினால் பச்சை பசேல் மலைவெளிகள். அன்றைய காலை, பாகுபாட்டோடு அடித்த வெயில், ஈரப்பதம் நிறைந்த காற்று, கையில் தேநீர், காதில் இளையராஜா, கண்களுக்கு இதமான மலையின் காட்சி என ரம்மியமாக இருந்தது.

குளிரின் காரணமாக முகம் மட்டும் கழுவிக்கொண்டு எங்கே போகிறோம் என்ற திட்டம் எதுவும் இல்லாமல் மால் ரோடு சாலையில் நடந்தேன். சுற்றிப்பார்க்க `கன் ஹில் பாயின்ட்’ என்ற இடம் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்து பார்த்தால் முசோரி மலைக்கு டேராடூனிலிருந்து வரக்கூடிய பாதை அழகாகத் தெரியுமாம். போகும் வழியில் ஒரு நாற்காலியும் டேபிளும், டீ வைக்கும் பாத்திரமும் சில முட்டைகளும், மேகி பாக்கெட்டுகளும் வைத்திருந்த ஒரு கடையைப் பார்த்தேன்.

பெரிதாக அந்தக் கடைக்கும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. கடைக்காரர் அழகாக பிரட் ஆம்லெட் போடுவதைப் பார்த்ததும் `ஏக் பிரட் ஆம்லெட் தேதோ’ என்றுவிட்டு கை தானாக வீடியோ எடுக்கச் சென்றது. இரண்டு முட்டைகளை ஒரு பாத்திரத்தினுள் ஊற்றி, கண்களுக்கே தெரியாத அளவுக்கு வெங்காயம் நறுக்கி, அதிகமும் இல்லாமல் குறைவும் இல்லாமல் பெப்பரை தூவி, தோசைக் கல்லை முன்னும் பின்னுமாக தீயில் காட்டி, கல்லைக் காய வைத்து அச்சூட்டில் தெரிக்க எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்த முட்டையைக் கல்லில் ஊற்றி, வெளிப்புறம் அழகாக வெந்தபின் அதில் பிரட்டை வைத்து மடித்து என்னிடம் நீட்டினார். ப்ரட் ஆம்லெட்டை முடித்த பிறகு `கன் ஹில் பாயின்டு’க்கு கூகுளாண்டவர் என்னை வழி நடத்திச் சென்றார்.

முட்டை கடை
முட்டை கடை

ஏதோ ஒரு பாதையில் மலையை ஏற, ஆட்களே இல்லாத குறுகிய பாதை, ஓர் உச்சிக்குக் கொண்டு போய்விட்டது. மலைகளினூடாகப் போகும் சாலைகள் மலையின் சிறுகுடலும் பெருங்குடலுமாகத் தெரிந்தன. வாகனங்களோ செரிக்கப்போகும் உணவுகளாக மெல்லிசாகத் தெரிந்தன. `கன் ஹில் பாயின்ட்’ அவ்வளவுதான். சூரியன் உச்சிக்கு வந்து மதியம் என்பதைச் சொல்லியது. முசோரிக்கு அருகே கெம்டி என்ற ஊரில் ஒரு நீர்வீழ்ச்சி இருப்பதாகச் சொன்னார்கள். போகலாமா, வேண்டாமா என்று யோசித்தபோதுதான் நினைவுக்கு வந்ததது. `அனல் மேலே பனித்துளி’ பாடலில் சூர்யா குளிக்கும் நீர்வீழ்ச்சி அது.

கெம்டி பஸ் தேடிச்சென்றால், ஒன்றுமே இல்லை. ஒரு ஜீப் மட்டுமே நின்றுகொண்டிருந்தது. அவரிடம் `கெம்டி ஃபால்ஸ் போகணும்’ என்றதற்கு `நான் அங்கதான் போறேன் ஏறிக்கோங்க’ என்று அழைத்தார். அவர் கெம்டி ஃபால்ஸ் மற்றும் அதைச் சுற்றி இருக்கக்கூடிய கடைகளுக்குக் காய்கறி மற்றும் சிலிண்டர் சப்ளை செய்பவர். நான் ஏறிக்கொண்ட பின் என்னோடு சேர்த்து இன்னும் மூன்று பேர் ஏறினார்கள். அப்பா, அம்மா, ஒரு குழந்தை. டெல்லியிலிருந்து தன் குட்டி மகனின் பிறந்தநாளைக் கொண்டாட வந்திருக்கின்றனர் என்பது பள்ளம் மேடுகளில் ஜீப் பயணித்தபோது நடந்த உரையாடல் மூலம் தெரிந்தது.

ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பின் கெம்டி ஃபால்ஸ்... பலே கூட்டம். அந்த நீர்வீழ்ச்சி நான்காகப் பிரிந்து அடுக்கு அடுக்காக இருந்தது, கீழே உள்ள அடுக்கில் கூட்டமாகவும் மேலே போகப்போகக் கூட்டம் குறைந்தும் காணப்பட்டது. மேலே கடைசியாக உள்ள நான்காவது அடுக்குக்கு (சூர்யா குளித்த அதே அடுக்கு) சென்றபோது 6 பேர் மட்டுமே இருந்தார்கள், அதில் ஒரு ஜோடி மற்றும் ஒரு நண்பர்கள் குழு. கூட்டமான டூரிஸ்ட் ஸ்பாட் என்ற மனக் கசப்பு இருந்தது. `தண்ணில முங்கி எந்திரி... எல்லாம் சரியா போயிரும்’ என்று என் அப்பா எப்போதோ புத்தர் கணக்காகச் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வர, தண்ணீருக்கு நடுவில் ஒரு பாறையில் சென்று அமர்ந்தேன்.

5 நிமிடத்தில் நண்பர்கள் குழு எஸ்கேப். தண்ணீர் கொட்டும் சத்தம் மட்டுமே காதில் ஒலித்தது. மனக்கசப்பு மண்ணாங்கட்டி கசப்பெல்லாம் காற்றில் பறந்துபோனது. அமைதியின் ஆழத்தை உணர்ந்தவாறு அங்கிருந்து திரும்பினேன். மதிய உணவை முடித்து அதே ஜீப்பில் ஏறி புறப்பட்டபோது மணி மாலை 4.00. ஜீப்காரர் முதலில் எங்களை முசோரியில் விடுவதாகக் கூறினார். பின் என் மேல் இறக்கப்பட்டாரோ என்னவோ ‘வாங்க உங்களை ஒரு அருமையான இடத்துக்கு கூட்டிப் போறேன்’ என்றார். நம்பிக்கையின் ஸ்டீயரிங் வலுவாகப் பிடிக்கப்பட்டது.

டேராடூன்
டேராடூன்

ஜீப் தவிர எந்த வாகனமும் செல்ல முடியாத கரடுமுரடான சாலை வழியாக ஒரு காட்டுப் பகுதிக்குக் கூட்டிச் சென்றார். பெரிதாக ஏதோ காத்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. 30 நிமிடம் கழித்து ஜீப் நின்றது. ஒரு மலையின் விளிம்பு, அங்கே பாதி இடிந்து போன கட்டடம், சுற்றியும் மலைகள். ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், மெல்லச் சூரியன் இறங்கிக்கொண்டிருந்தது, ரசிக்கும்படியான குளிர். விளிம்பில் நின்று பார்த்தால் ஒன்றின் பின் ஒன்றாக ஒட்டி ஒட்டிக் கட்டியணைத்தபடி இருந்த மலைகள், மலைகளுக்கு நடுவில் சூரியன் அஸ்தமனமாகிக்கொண்டிருந்தது.

மயிலிறகாய் வருடும் பாடல்கள் அத்தனையும் அந்தக் காட்சிக்கு சமர்ப்பணம். சில செல்ஃபியும், சிறு சிறு ஹைக்கூ கவிதைகளும் என 1 மணி நேரம் ஓடியது. பாதி இடிந்த அந்தக் கட்டடம் `சர் ஜார்ஜ் எவரஸ்ட்’ என்பவர் 1833-ம் ஆண்டு இந்தியாவில் சர்வே எடுக்க வந்தபோது அவருக்காகக் கட்டப்பட்ட வீடு. அவரின் ஆராய்ச்சிக் கூடமாகவும் அது செயல்பட்டதாம். ஆட்கள் அதிகம் வராத அந்த இடத்திலும் ஒரு பாட்டி டீக்கடை வைத்திருந்தார். ஆயாக்கள் நிலாவிலேயே வடை சுடுபவர்கள் ஆயிற்றே! அவர் தினமும் 3 கிலோமீட்டர் மலையேறி வந்து இங்கு கடை நடத்துபவராம். 10 வருடங்களுக்கு மேலாக இருக்கும் கடை. அவரிடம் ஒரு மேகியும் ஒரு காஃபியும் சொல்லி அமர்ந்தேன். நேரம் 6 மணியை நெருங்கிக்கொண்டிருக்க குளிர் அதிகமாகிக்கொண்டிருந்தது. வானம் சிவந்து வெட்கத்தை அன்பாகப் பரிசளித்தது. மீண்டும் முசோரி திரும்பினோம். ஜீப் அண்ணன், தன் சேவைகளுக்கு 200 ரூபாய் வாங்கிக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்றாம் நாள் இரவுக்குப் பங்கர் கட்டில்கள் தேடிக் கிடைக்கவில்லை. மலிவு விலையில் பிடித்த ரூம் ஒன்றில் `மச்சர்’ என்கிற புதிய வார்த்தையைக் கற்றுக்கொண்டு கொசுவர்த்தி கேட்டேன். அந்த நாளின் நினைவுகளும் அனுபவங்களும் என்னை நிம்மதியாக 10 மணிநேரம் கனவுகளோடு உறங்க வைத்தன.

அடுத்த நாள் காலை, முசோரியில் ஒரு ரெஸ்டாரன்ட்டில் வந்தமர்ந்தேன். `என்னப்பா தம்பி சாப்பிடுற’ என்று தமிழ் குரல் கேட்டது. அடுத்த வார்த்தை எல்லோருக்கும் பழக்கப்பட்டதுதான். `நீங்க தமிழா?’ அண்ணாச்சியின் பெயர் நினைவில்லை. ஆனால், அவர் இந்தக் கடையில் 17 வருடங்களாக வேலை செய்கிறார் என்றும், சொந்த ஊர் மதுரை என்றும் சொன்னார். அன்று காலை மெனுவில் இல்லாத `மதுரை ஊத்தப்பம்’ அன்பாலும் தமிழாலும் கிடைத்தது.

பனி மூடிய இமாலய மலைகள் பார்க்க `லால் டிப்பா’ போங்க என்ற மதுரை அண்ணனிடம் டாக்சி ஸ்டாண்டுக்கு வழி கேட்டு கிளம்பினேன். 2 கி.மீ நடந்து சென்று விசாரித்தால் 1,000 ரூபாயாம். அன்று இரவு 10 மணிக்கு டேராடூனிலிருந்து டெல்லிக்கு ரயில் புக் செய்திருந்தேன். சரி இப்போதே டேராடூன் போய்விடலாமா என்று யோசித்துவிட்டு இறுதியாக ஊருக்குள் ஒரு நடை போடலாம் என்று நகர்ந்தேன்.

வழியில் தென்பட்ட சாமானியர்
வழியில் தென்பட்ட சாமானியர்

ஒரு வீதியினுள் நடக்க, ஏற்றமான சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இரண்டு பெண்கள் அமர்ந்து ஊர்க்கதையெல்லாம் சிரித்து சிரித்து அசைபோட்டுக்கொண்டிருந்தனர். அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்துவிட்டு அதை அவர்களிடம் காண்பித்து, `நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க பாருங்க’ என்று இந்தியில் சொல்ல, வெட்கப்பட்டுச் சிரித்து `தம்பி எப்படி எடுத்துருக்கான் பாரு’ என்றார்கள். என்னைப் பற்றி விசாரித்துவிட்டு, `தம்பி, எங்க வீடு இங்கதான் இருக்கு... வா சாப்பிட்டுப் போகலாம்’ என்றார்கள். அவர்கள் கேட்டதே என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விடைபெற்றுக்கொண்டு, மேலும் அந்த மேடான சாலையில் நடக்கத் தொடங்கினேன். கடை ஒன்றில் 10 வயதுடைய குட்டிப் பெண்கள் கடையை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களைப் புகைப்படம் எடுக்கப்போனபோது ஒருத்தி வெட்கப்பட்டுத் திரும்பிவிட்டாள். அவள் திரும்பும்போது நான் போட்டோ எடுக்கலாம் என்று காத்திருந்தேன், நான் போட்டோ எடுப்பதைப் பார்த்ததும் மீண்டும் திரும்பிவிட்டாள். நான் கிளம்பலாம் என்று முடிவெடுத்த பின் ஒரு குரல், ``என் கடைல க்ளவுஸ் வாங்குங்க நான் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறேன்” என்று. அதே குட்டிப் பெண்.

``உன் பேர் என்ன?’'

``ராணி.’'

``அழகான பேரு, யார் வச்சா.?'

``அப்பா வச்சாரு, இந்தாங்க சாக்ஸும் க்ளவுஸும் வாங்கிக்கோங்க.'’

அந்த சாக்ஸும் க்ளவுஸும் 1 வயதுக் குழந்தை அணிவது.

``உங்க குழந்தைக்கு வாங்கிட்டுப் போய் குடுங்க.’'

``எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.'’

``உண்மையாவா சொல்றீங்க, ஆனா உங்கள பாத்தா பெரிய ஆள் மாறி இருக்கே.'’

``எனக்கு 20 வயசுதான் ஆவுது, என் அக்காக்கு குழந்தை இருக்கு நான் அவங்களுக்கு வாங்கிக்கவா.'’

``சரி, நீங்க எந்த ஊரு?'’

``நான் தமிழ்நாட்டில் இருந்து வர்றேன், ஏன் கேக்குற?’'

``தமிழ்நாடு எங்க இருக்கு?’'

``இந்தியா மேப்ல கீழே இருக்கும்ல, அதான் தமிழ்நாடு.'’

அவளுக்குக் கண்டிப்பாகத் தமிழ்நாடு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. நான் சாக்ஸும் க்ளவுஸும் வாங்கியபின் போட்டோ எடுக்க அனுமதித்தாள் ராணி.

ராணி
ராணி

பொம்மைக் கடையில் தன் குழந்தையையே பொம்மைகளுக்கு நடுவில் பொம்மையைப்போல் அமரவைத்திருந்த அப்பா; தினமும் தான் செருப்பு தைக்கும் காசில்தான் குடும்பம் ஓடுது என்று தீராத சோகத்தில் மூழ்கியிருந்த செருப்பு தைக்கும் அண்ணன்; ஜெர்கின் விற்கும் டோலு-போலு அண்ணன் தம்பிகள்; காய்ச்சல் என்று சொல்லி ஸ்கூல் லீவ் போட்டுட்டு சாலையில் விளையாடிக்கொண்டிருந்த சின்ன பெண்கள்; தாத்தாவைக் கைப்பிடித்து மேட்டைக் கடக்க உதவி செய்த சிறுவன்; என் கேமராவை பிடுங்கி குரங்கு சேட்டைச் செய்த அண்ணன் தங்கை; பள்ளிக்குச் செல்கிற வயது வராமல் இன்னும் வீட்டின் வராண்டாவே உலகமாக வாழும் சிறுவர்கள்; தனது சைக்கிளை உடைத்ததால் கல்லெறிந்து வன்மம் காட்டிய 13 வயது சிறுவன்; தடுப்பூசி போட ஃபுல் மேக்கப்பில் போன அம்மாவும் குழந்தையும்... எனக் கடைத்தெருவின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு ரகம்.

தன் சிறுவயதில் அப்பா இங்கு சயின்டிஸ்ட்டாக இருந்ததாகவும், தான் இங்குதான் பிறந்து வளர்ந்து விளையாடித் திரிந்ததாகவும் தற்போது இடமே முழுதாக மாறிவிட்டது எனவும் `இன்க்ரிடிபிள் இந்தியா’ போஸ்டர் வாங்கிக்கொண்டிருந்த அமெரிக்க தம்பதி கென்னும் அவரின் மனைவி கேரோலும் சொன்னார்கள். பல கதைகள் கேட்டுக்கொண்டே 4 கிலோ மீட்டர் நடந்துவந்துவிட்டேன்.

ஒரு டீக்கடையில் அமர்ந்தேன். அது டேராடூனுக்கு செல்லக்கூடிய பஸ் நிற்கும் ஸ்டாப். தேநீர் குடித்துக்கொண்டே எனது இடது பக்கம் பார்த்தேன், மலை உச்சிக்கு சில வண்டிகள் ஏறிக்கொண்டிருந்தன. கடைக்காரரிடம் விசாரித்ததில் 'அப்படியே 10 நிமிஷம் நடந்தா லால் டிப்பா வரும்' என்றார்.

டிராவல் பேக்கை கடையிலே வைத்துவிட்டு ’லா லா லா சர்வைவா’ என்று பாட்டை போட்டுக்கொண்டு லால் டப்பாவுக்கு நடந்தேன். ஒரு கி.மீ நடந்திருப்பேன் என்னைக் கடந்து நிறைய ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் செல்ல, ஒருவரிடம் நான் லிப்ட் கேட்க அவர் நிறுத்தினார். பைக் உரையாடலின்போது, நான் தமிழ்நாடு என்று சொன்னதும், அதே வார்த்தைகள். `நீங்க தமிழா?’ அவர் டேராடூனில் விவசாயம் படித்துக்கொண்டிருக்கிறார். கல்லூரி நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பைக் ட்ரிப் வந்திருக்கிறார்கள். அவரும் என் சொந்த ஊரான திருப்பூர் என்பது மட்டுமல்ல, என் வீட்டின் அருகில்தான் அவரும் வசிக்கிறார். எதேச்சையான சம்பங்கள் மலைகள் போல் சூழ்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

லால் டிப்பாவில் இமாலய மலைகள் இருந்தன... ஆனால், பனியால் மூடாமல் பாறையாகத்தான் இருந்தன. என்னதான் முசோரியின் ஊர் முழுக்கவும் மேகி இருந்தாலும், அந்த உச்சியில் டோல்மா ஆன்ட்டி செய்து கொடுத்த மேகியை மறக்க முடியாது. இதுவரை சாப்பிட்டதிலேயே சிறந்த மேகி அதுதான். சூரியன் நடந்து சென்றாலே குளிரடிக்கும் மானுட தடயம் இல்லாத சாலையில், காற்றில் கையை விரித்து நடந்தேன். மணி 5. 7 மணி, டேராடூனுக்கு கடைசி பஸ். இரவு 10 மணி என் டெல்லி ரயில்.

மலையில் இருந்து கீழே இறங்க ஊரே விழாக்கோலத்தில் இருந்தது. அன்று தசரா ஊர்வலம். `ராவணனை எரித்தல்’ என்றில்லாமல் அங்குள்ள மக்கள் தசராவை பழங்கால மரபுப்படி கொண்டாடி வருகின்றனர். இந்தப் பழங்கால மரபு இளைய தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதால் கொண்டாட்டம் உயிர்ப்புடன் நடக்கின்றது. மலைவாழ் மக்களின் தெய்வங்களை குழந்தைகளாக அலங்கரித்துக்கொண்டாடி வழிபட்டனர். அதே நேரத்தில் சிவனும் பார்வதியும் பஞ்சாபி இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். ஊர்வலத்தின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் ஹனுமான் வேஷம் போட்டுக்கொண்டு இருவர் உற்சாகமாக, நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தனர்.

ரூர்கியைச் சேர்ந்த தாகூர் சந்திரபான், ஹனுமான் வேஷத்தில் நடனமாடிக்கொண்டே எல்லாரையும் அடிப்பதுபோல் பயமுறுத்தி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திக்கொண்டிருந்தார். கடந்த 50 ஆண்டுகளாக ஹனுமான் பாத்திரத்தில் இவர் நடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்தச் சடங்கு இன்னும் பல தசாப்தம் கடந்தும் நடத்தப்படும் என மக்களால் நம்பப்படுகிறது.

வரும் வழியில் ராணி எனக்கு ‘ஹாய்’ சொன்னாள், அவள் அப்பாவிடம் என்னை ‘இந்த அண்ணா வெளிநாட்டுல இருந்து நம்மூர்க்கு வந்திருக்காங்க’ என்று அறிமுகப்படுத்தினாள். அவளுக்குத் தமிழ்நாடு இந்தியாவில் இருப்பது இன்னும் தெரியவில்லை. மாலை 6 மணிக்கு, பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தேன். மலையின் கீழே இறங்கும் சாலையைப் பார்த்தால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை டிராஃபிக். `இந்த டிராஃபிக் எப்போ கலைந்து எப்போ பஸ் வந்து’ என அடிவயிறு கலக்க ஆரம்பித்தது. ஒரு மணி நேரமாக எந்த வாகனமும் நகரவே இல்லை... ரயிலை விட்டுவிடுவோம் என்கிற பயம் தொற்றியது. ஒரு டாக்சி ட்ரைவரிடம் போய், `என்னைச் சீக்கிரம் கீழே இறக்கி விடுங்கள், எக்ஸ்ட்ரா அமவுன்ட் தருகிறேன்’ என்றேன். 600 ரூபாய் கேட்டார். தலையசைக்க, காரில் ஏறி அமர்ந்து கொஞ்சமாகக் காரை நகர்த்தி மெயின் ரோட்டில் செல்லாமல் ஏதேதோ மலை கிராமத்துக்குள் சென்று என்னை 9.30-க்கு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்.

random photos during travel
random photos during travel

மூன்று நாள் அனுபவங்களை அசைபோட்டுக்கொண்டே ரயில் ஏறி டெல்லி வந்தடைந்தேன். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் ஒரு புள்ளியில் பயணம் செய்வதற்கான உந்துதல் கிடைக்கிறது. எனக்கு 'ஃலைப் ஆஃப் ராம்' பாடல் இருந்தது போல.

சோலோ பயணங்களுக்கு வரைமுறை இல்லை. சும்மா தெருவில் நடக்கலாம்; படத்துக்குப் போகலாம்; அந்நியர்களிடம் பேசலாம்; தூங்கலாம்; பிடித்ததைச் செய்யலாம்; புவி போகும் போக்கில் இயற்கையோடு கைகோத்து நடக்கலாம்; ஊட்டியோ லடாக்கோ பக்கத்து தெருவோ பயணத்தை இனிதே ஆரம்பியுங்கள், வாழுங்கள். வாழா உங்கள் வாழ்வை வாழ!

அடுத்த கட்டுரைக்கு