Published:Updated:

சில நாடுகளில் வலதுபுறம் செல்ல வேண்டும் என்ற சாலை விதி இருக்கின்றதே, ஏன்?| Doubt of Common Man

Right hand drive and Left hand drive

உண்மையில் இடது புறமாகச் செல்ல வேண்டும் என்ற சாலை விதி கொண்ட நாடுகளே குறைவு. வலது புறமாகச் செல்ல வேண்டும் என்ற சாலை விதிதான் உலகெங்கும் பல நாடுகளில் பின்பற்றப்படும் விதியாக இருந்து வருகிறது.

Published:Updated:

சில நாடுகளில் வலதுபுறம் செல்ல வேண்டும் என்ற சாலை விதி இருக்கின்றதே, ஏன்?| Doubt of Common Man

உண்மையில் இடது புறமாகச் செல்ல வேண்டும் என்ற சாலை விதி கொண்ட நாடுகளே குறைவு. வலது புறமாகச் செல்ல வேண்டும் என்ற சாலை விதிதான் உலகெங்கும் பல நாடுகளில் பின்பற்றப்படும் விதியாக இருந்து வருகிறது.

Right hand drive and Left hand drive
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் திருவேங்கடராஜ் என்ற வாசகர், "சாலையில் செல்லும்போது நம் நாட்டில் இடது புறமாகச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால், சில நாடுகளில் வலதுபுறமாக செல்லவேண்டும் என்பதுதான் சாலை விதி. ஏன் இந்த முரண்பாடு?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
doubt of common man
doubt of common man

இந்தியாவில் இடது புறமாகப் பயணம் செய்ய வேண்டும் என்ற விதியே பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. சில நாடுகளில் வாகனங்களில் பயணம் செய்யும் போது வலது புறமாகப் பயணம் செய்ய வேண்டும் எனக் கேள்விப்படும் போது வித்தியாசமாக இருந்திருக்கும். ஏன் இந்த முரண்பாடு இருக்கிறது என யோசித்திருக்கிறோமா? அப்படி ஒரு சந்தேகம் தான் நம் வாசகருக்கு எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார். அவருடைய கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள வரலாற்றைக் கொஞ்சம் அலசிப் பார்த்தோம்.

இடதுபுறமாகச் செல்லும் வாகனங்கள்
இடதுபுறமாகச் செல்லும் வாகனங்கள்
வலதுபுறமாகச் செல்லும் வாகனங்கள்
வலதுபுறமாகச் செல்லும் வாகனங்கள்

உண்மையில் இடது புறமாகச் செல்ல வேண்டும் என்ற சாலை விதி கொண்ட நாடுகள் குறைவே. வலது புறமாகச் செல்ல வேண்டும் என்ற சாலை விதிதான் உலகெங்கும் பல நாடுகளில் பின்பற்றப்படும் விதியாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 165 நாடுகள் வலது புறமாகச் செல்லும் சாலை விதிகளையே பின்பற்றி வருகின்றன. இந்திய உட்பட 75 நாடுகள் மட்டுமே இடது புறமாகச் செல்லும் சாலை விதிகளைப் பின்பற்றுகின்றன. நம் நாட்டில் இடது புறமாகச் செல்ல வேண்டும் என்ற சாலை விதி இருப்பதனால் பெரும்பாலான நாடுகளில் இடதுபுறமாகப் பயணம் செய்ய வேண்டும் என்ற சாலை விதி இருப்பதாக நாம் நினைக்கிறோம். மேலும், 1919-ல் இருந்து 1986-க்குள் 34 நாடுகள் இடதுபுறச் சாலை விதிகளில் இருந்து வலதுபுறச் சாலை விதிகளுக்கு மாறியிருக்கின்றன. வித்தியாசமாக, 2009-ல் சமோவா நாடு (Independent State of Samoa) வலதுபுறச் சாலை விதிகளில் இருந்து இடதுபுறச் சாலை விதிகளுக்கு மாறியிருக்கிறது.

ஏன் இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான சாலை விதிகள் இருக்கின்றன என்ற கேள்வி எழுவது இயல்புதான். இரண்டு விதமான சாலை விதிகள் மட்டுமே இருந்தாலும், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான விதியைக் கடைப்பிடிப்பதற்கு அந்தந்த நாடுகளுக்கு எனத் தனிப்பட்ட காரணங்களும் வரலாறும் இருக்கின்றன. தனிப்பட்ட காரணம் என்பதில் தனிப்பட்ட அரசியல் காரணங்களும் அடங்கும். இங்கிலாந்தில் சாலைப் போக்குவரத்து தொடங்கியதில் இருந்தே (குதிரை வண்டிகளைப் பயன்படுத்திய காலம் முதல்) அது இடதுபுறச் சாலை விதிகளைத்தான் கொண்டிருக்கிறது. மறுபக்கம் பிரான்சோ, வலதுபுறச் சாலை விதிகளைக் கொண்டிருந்தது. தற்போது இடதுபுறச் சாலை விதிகளைப் பின்பற்றும் நாடுகள் பலவும், ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தவை. அதேபோல் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் வலதுபுறச் சாலை விதிகளைப் பின்பற்றத் தொடங்கின. மேலும், 1765-லேயே சாலையில் பயணம் செய்பவர்கள் இடதுபுறம்தான் செல்ல வேண்டும் என London Bridge Act என்ற சட்டத்தையும் அமல்படுத்தியது இங்கிலாந்து.

சிகப்பு: வலதுபுறச் சாலை விதிகளைப் பின்பற்றும் நாடுகள் | நீலம்: இடதுபுறச் சாலை விதிகளைப் பின்பற்றும் நாடுகள்
சிகப்பு: வலதுபுறச் சாலை விதிகளைப் பின்பற்றும் நாடுகள் | நீலம்: இடதுபுறச் சாலை விதிகளைப் பின்பற்றும் நாடுகள்

பிரிட்டிஷ் ஆட்சியில் இடதுபுறச் சாலை விதிகள் கட்டாயமாக இருந்ததற்குச் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை பயணம் செய்பவர்கள் குதிரைகளில்தான் பயணம் செய்ய வேண்டும். மேலும், போரோ அல்லது சண்டையோ வந்துவிட்டால் வாட்களும் கேடயங்களும் கொண்டுதான் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலான மக்கள் தொகை வலது கையையே பிரதானமாகப் பயன்படுத்தி வந்தது என்பதால், எதிரிகளை எளிதாகத் தாக்குவதற்கு வலது கை தேவையாக இருந்தது. எனவே, இடது புறம் பயணம் செய்யும்போது வலது கையில் வாளேந்தி எளிதில் சண்டையிட முடிந்ததே இந்த சாலை விதிகளுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. மேலும் இடது கையில் லகானைப் பிடித்து குதிகை வண்டிகளை ஓட்டுவதற்கும் இது எளிதாக இருந்திருக்கிறது.

இங்கிலாந்து அதன் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த நாடுகளில் இடதுபுறச் சாலை விதிகளைக் கட்டாயமாக்கியிருந்தது. பிரிட்டிஷ் ஆளுமையை எதிர்க்க நினைத்த சில நாடுகள் பிரிட்டிஷ் பின்பற்றிய இடதுபுறச் சாலை விதிகளுக்கு எதிராக வலதுபுறச் சாலை விதிகளைப் பின்பற்றத் தொடங்கின. அமெரிக்கா வலதுபுறச் சாலை விதிகளைக் கொண்டிருப்பதற்கும் இதுவும் ஒரு காரணம். சிறிய நாடுகள் வேறு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும்போது, அந்த நாட்டின் சாலை விதிகளுக்கு மாற நிர்பந்திக்கப்பட்டன. மற்ற நாடுகளின் ஆதிக்கம் மட்டுமின்றி, தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் கூட சில நாடுகள் சாலை விதிகளை மாற்றியிருக்கின்றன.

ஸ்வீடன் மற்றும் நார்வே இடையே இடதுபுறச் சாலை விதியில் இருந்து வலதுபுறச் சாலை விதிகள் மாறுவதைக் குறிக்கும் அறிவிப்புப் பலகை
ஸ்வீடன் மற்றும் நார்வே இடையே இடதுபுறச் சாலை விதியில் இருந்து வலதுபுறச் சாலை விதிகள் மாறுவதைக் குறிக்கும் அறிவிப்புப் பலகை

முன்பு கூறியது போல் வலதுபுறச் சாலை விதிகளில் இருந்து இடது புறச் சாலை விதிகளுக்குக் கடந்த 2009-ல் மாறியது சமோவா. இதற்கு இடதுபுறச் சாலை விதிகளைக் கொண்ட ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து குறைவான விலையில் வாகனங்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பதுதான் காரணம்.

இதுபோல ஒவ்வொரு நாடும் வலதுபுறச் சாலை விதிகளையோ அல்லது இடதுபுறச் சாலை விதிகளையோ கொண்டிருப்பதற்குப் பல வரலாற்று, அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.

இதேபோல உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man