சினிமா
Published:Updated:

“நெப்போலியனுடன் ஊர் சுற்றப் போகிறோம்!”

எபின்-லிபின் சகோதரர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
எபின்-லிபின் சகோதரர்கள்

E BULL JET

`உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், குளோரோபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்!' - லியோனார்ட் உல்ஃப்.
“நெப்போலியனுடன் ஊர் சுற்றப் போகிறோம்!”
“நெப்போலியனுடன் ஊர் சுற்றப் போகிறோம்!”

கடவுளின் தேசமான கேரளாவில் இன்றைய தேதியில் ‘E BULL JET’ எபின்-லிபின் சகோதரர்கள் தான் மாநிலமறிந்த யூடியூப் பிரபலங்கள். தினமும் இரவு 9 மணிக்கு டான் என்று வீடியோ அப்லோடு செய்யும் இந்தச் சகோதரர்களுக்கு எக்கச்சக்க ரசிகர் பட்டாளம். கல்லூரி விழாக்களுக்கு விருந்தினர்களாக அழைத்து உபசரிக்கிறார்கள். இளசுகள் இவர்களது சேனலை உல்டா பண்ணி வீடியோக்கள் போடுகிறார்கள். இந்த இரட்டையர்களின் ‘E BULL JET' என்ற சேனலுக்கு ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வரை இருக்கிறார்கள். துல்கர் சல்மான் போன்ற பிரபலங்களே இவர்களது ஷோவைப் பார்த்துவிட்டுத்தான் தூங்குகிறார்கள். அப்படி என்ன இந்தச் சேனலின் ஸ்பெஷல் என்கிறீர்களா?

‘நெப்போலியன்' என்ற ஒரு வேனை வைத்துக் கொண்டு இந்தியா முழுவதும் ஜிப்ஸி போல சுற்றுவதையும், போகும் வழியெங்கும் பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி தாங்கள் விளையாட்டாய்ப் பண்ணும் காரியங்களை எந்த நகாசு வேலையும் செய்யாமல் அப்படியே வீடியோவாகப் போடுவதையும் வாடிக்கையாக்கி யிருக்கிறார்கள் இந்த இரட்டையர்கள்.

“நெப்போலியனுடன் ஊர் சுற்றப் போகிறோம்!”

``கண்ணூர் பக்கத்துல ‘இருட்டி' தான் எங்களோட சொந்த ஊர். நான் எம்.பி.ஏ வரைக்கும் படிச்சேன். படிச்சது எதுவுமே மனசுல நிக்கல. ஆனா, சின்ன வயசுல ஸ்கூல்ல டூர் கூட்டிட்டுப் போனப்போ ஸ்கூல் பஸ்ல நான் பண்ணின சேட்டைகள்... அப்போ இருந்த உற்சாகம் எனக்குள்ள அப்படியே இருக்குது. ஒரு லாரி டிரைவரா ஆகணும், இந்தியா முழுவதும் சுத்தணும்னு கனவு கண்டேன். கிராமத்துல இருந்த ஒரு லாரி டிரைவரோட நட்பு கிடைச்சது. திடீர்னு ஒருநாள் அவரோட சேர்ந்து வீட்டுக்குத் தெரியாம புனே வரைக்கும் போயிட்டு வந்தேன். வீட்டுல செமையா அடி கிடைச்சது. வறுமையான குடும்பம்தான். ஆனா, லாரி டிரைவராக தடை போட்டுட்டாங்க. என் தம்பிக்கும் எனக்கும் ஒரே வயசுதான். நல்ல நண்பன்னு சொல்லலாம். அவனும் என்னைப்போலவேதான் யோசிப்பான். அவனுக்கு கார் மெக்கானிக் ஆகணும்னு ஆசை. நாங்க ரெட்டையர்கள் என்பதால் கிராமத்துல நாங்க அறிவிக்கப்படாத வி.ஐ.பிஸ். எங்ககூட நின்னு கேமரால போட்டோல்லாம் எடுப்பாங்க. புதுசா ஏதாச்சும் பண்ணி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கணும்னு நினைச்சிட்டே இருப்போம்!'' என்று அண்ணன் எபின் சொல்லிக் கொண்டே போக, இடைமறிக்கிறார் லிபின்.

``எபினும் நானும் காலேஜ் முடிச்சதும் வித்தியாசமா எதாச்சும் வேலை பண்ணணும்னு முடிவெடுத்தோம். ஒரு நல்ல ஓட்டல் ஆரம்பிக்கலாம்னு ஐடியா. ஆனா, பணத்துக்கு எங்க போறது..? சின்னதா இரவுநேர ரோட்டோர ஓட்டல் ஆரம்பிச்சோம். எபின் அதை நல்லா கவனிச்சிக்கிட்டான். நான் பகல்ல மெக்கானிக்கா இருந்தேன். இரண்டு பேருமே இரவு பகல் பாராம வேலை பார்த்தோம். அதுல கொஞ்சம் பணம் கிடைச்சது. அப்போதான் நான் வேலை பார்த்த மெக்கானிக் ஷாப்புக்கு ஒரு பழைய மாருதி வேன் விற்பனைக்கு வந்துச்சு. வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு அந்த வேனை விற்க ஆள் பார்த்துட்டு இருந்தார் ஓனர். நானும் எபினும் சேர்த்து வெச்சிருந்த காசைக் கொடுத்து அந்த வேனை வாங்கினோம். எக்ஸ்ட்ரா அஞ்சாயிரம் இருந்தது. அந்தக் காசுல வண்டியை நாங்களே ஒர்க்‌ஷாப்புல ரீ மாடல் பண்ணினோம். எங்க அதிர்ஷ்டம் அந்த வேன் நல்லாவே ஓட ஆரம்பிச்சது. கண்ணூர்ல இருந்து கொச்சிக்கு முதன்முதலா அந்த வேன்ல போய்ப் பார்த்தோம். எங்களுக்குச் சிறகு முளைச்ச மாதிரி இருந்தது. அதன்பிறகு அடிக்கடி வேன்ல கேரளா முழுக்கச் சுத்தி வந்தோம். 2019-ல Van life என்ற பெயரில் விளையாட்டா யூடியூப் சேனல் ஆரம்பிச்சோம். என்ன பேசுறது, எதை அப்லோடு பண்றதுன்னு தெரியாம சும்மா எதையாவது பேசி அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல `யார்டா இந்தக் கிறுக்கனுங்க?'ன்னு பார்க்க ஆரம்பிச்சாங்க. ஆனா, ‘E BULL JET'னு சேனல் பேர் மாத்தி எங்க வேனுக்கு நெப்போலியன்னு செல்லப் பேர் வெச்சு வீடியோல கூப்பிட ஆரம்பிச்சோம். நாங்க மூணு பேரு மாதிரி வேனையும் ஒரு உயிரா நினைச்சுப் பேச ஆரம்பிச்ச வீடியோக்கள் நல்லாவே போக ஆரம்பிச்சது. அப்புறமா முழு நேரமா வீடியோ பண்ணும் ‘Vlog'-ஐ வழக்கமாக்கிட்டோம். ஒருநாள் எங்களோட வீடியோ வரலைனா கமெண்ட்ல உரிமையா திட்ட ஆரம்பிச்சாங்க மக்கள். அதனால ‘அவங்களை விதம்விதமா என்டெர்டெய்ன் பண்ணின மாதிரியும் ஆச்சு, எங்க கனவை நிறைவேத்துன மாதிரியும் ஆச்சு’ன்னு ஊர் ஊரா சுற்ற ஆரம்பிச்சோம். இந்த இரண்டு வருஷத்துல எங்க சக்கரங்கள் சுழலாத நாள்கள் இல்லை. நாங்க கேரளாவைத் தாண்டிக் கிளம்ப ஆரம்பிச்சப்போ செம வரவேற்பு. இந்த இரண்டு வருஷத்துல இந்தியாவோட எல்லா மாநிலங்களையும் எங்க நெப்போலியன் தொட்டுருச்சு. எங்களோட வீடியோ பார்த்து ஃபேன் கிளப் ஆரம்பிச்சிட்டாங்க. சிலர் உரிமையா புது வேன் வாங்க உதவி பண்ணினாங்க. இப்போ பெரிய சைஸ் டிராவல் வேன் வாங்கிட்டோம். உள்ளே படுக்கை வசதி, சமையல் உபகரணங்கள்னு மினி வீடா நெப்போலியனை மாத்திட்டோம். கன்னியாகுமரில ஆரம்பிச்சு லே-லடாக் வரை போயிட்டு வந்துட்டோம்! வீட்டுலயும் பசங்க பொழைச்சிக்கிட்டாங்கன்னு கண்டுக்காம விட்டுட்டாங்க!'' என்று சிரிக்கிறார்.

“நெப்போலியனுடன் ஊர் சுற்றப் போகிறோம்!”
“நெப்போலியனுடன் ஊர் சுற்றப் போகிறோம்!”

``இந்தப் பயணங்களில் நிறைய சவால்கள் இருந்திருக்குமோ?'' என்று கேட்டால்,

‘‘வாழ்வின் விசித்திரத்தையும் சவாலையும் ஒன்றாகத்தான் எங்கள் பயணங்கள் தந்திருக்கு. நேஷனல் பெர்மிட் இருந்தாலும், எங்களுடைய கெட்-அப், நெப்போலியனோட முரட்டுத்தனமான லுக்கைப் பார்த்து சில மாநிலங்களில் போலீஸ் தடுத்து நிறுத்தி தீவிரவாதிகள்போல விசாரிப்பார்கள். சட்டீஸ்கரில் நிறைய உள்ளூர் போலீஸ் கெடுபிடி இருந்தது. நல்லவேளையாக யூடியூபைக் காட்டி சமாளிப்போம். ஆனால், இன்ப அதிர்ச்சியாக காஷ்மீரில் ராணுவ கேம்ப் பக்கத்தில் நின்ற எங்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள் நம் ராணுவத்தினர். அங்கே இருந்த மலையாளி ஆபீசர் ஒருத்தர் எங்களை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வச்சார். வாழ்நாளுக்கும் மறக்க முடியாத அனுபவம் அது.

லே-லடாக் பகுதிக்குப் போகும்போது கடுமையான பனிச்சுழலில் சிக்கி சாவின் விளிம்புவரை போயிட்டு வந்தோம். அதேபோல குஜராத்தின் கட்ச் பகுதியில் நெப்போலியன் பஞ்சராகி மண்ணில் புதைஞ்சு நின்னப்போ கடும் வெப்பத்தைச் சமாளித்து இரண்டு நாள்கள் வெறும் தண்ணீரும் பிஸ்கெட்டுமாய் சமாளித்து வண்டியை சரி பண்ணி மீண்டோம். கொரோனா காலகட்டத்தில் சில இடங்களில் எங்களைத் தனிமைப்படுத்திக்கச் சொன்னார்கள். நாங்களும் அப்படி ஒடிசா, மேற்கு வங்கத்தில் வாரக்கணக்கில் இருந்தோம். இப்படி நிறைய அனுபவங்கள் சவாலாக இருந்தது. எங்கள் பயணங்களில் ரொம்பவே உற்சாகத்தைத் தந்தது வடகிழக்கு மாநிலங்கள்தான். குறிப்பாக சிக்கிம் மக்கள் உபசரிப்பில் திக்குமுக்காட வைத்தார்கள். அப்புறம் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு! அதிலும் ராமேஸ்வரம், மதுரை மக்கள் ரொம்பவே அன்பாக எங்களை கவனித்துக் கொண்டார்கள்'' என்கிறார்கள் இந்த இரட்டையர்கள்.

‘‘அடுத்த திட்டம் என்ன?'' என்று கேட்டதும், ஒருமித்த குரலில் உடனே பதில் வந்து விழுகிறது.

‘‘உலகம் முழுக்க நெப்போலியனோடு சுற்றி வரணும்கிறதுதான் எங்கள் வாழ்க்கை லட்சியம். அதற்கு முன்னோட்டமாக நெப்போலியனோடு ஆசியக் கண்டம் முழுக்கப் பயணம் போக ரெடி ஆகிட்டிருக்கோம். விரைவில் அறிவிப்பு எங்கள் சேனலில் வரும்!''