Published:Updated:

ஜம்மு டு கன்னியாகுமரி, 3500 கி.மீ சைக்கிள் பயணம்! - மெர்சல் செய்யும் ஈரோடு இளைஞர்

சைக்கிளிஸ்ட் விக்னேஷ்
சைக்கிளிஸ்ட் விக்னேஷ்

படிச்சோம், வேலைக்குப் போய் சம்பாதிச்சோம் என்பதைத் தாண்டி இந்த உலகத்தில் தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு பிரதர். அப்படியான தேடலில் ஆரம்பித்ததுதான் இந்த 3,500 கி.மீ சைக்கிள் பயணம்.

புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் பற்றிய விவாதம் உலகம் எங்கும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்குத் தீர்வுகளில் ஒன்றாக முன் வைக்கப்படுவது, வாகனப் பயன்பாட்டை முடிந்தளவு குறைப்பது. இதனால், சைக்கிளில் பயணிக்கச் சொல்லும் இயற்கை ஆர்வலர்கள் பலர் உண்டு. இன்னொரு பக்கம், உடல் ஆரோக்கியத்துக்காக சைக்கிளைப் பயன்படுத்தச் சொல்பவர்களும் உண்டு. ஆனால், ஒரு இளைஞர் ஜம்முவிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் செல்கிறார். யார் அவர்... எதற்காக இந்தப் பயணம்?

ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ், அவ்வப்போது சைக்கிளில், நீண்ட பயணத்துக்குக் கிளம்பிவிடுவார். பெங்களூரு, கன்னியாகுமரி, சென்னை எனப் பல இடங்களுக்கு சைக்கிளில் சென்று அலுத்தவர், அடுத்த ஒரு பெரும் பயணத்தில் பிஸியாக இருக்கிறார். `தமிழ்நாட்டுக்குள்ளயே சைக்கிள் ஓட்டி போரடிச்சிடுச்சி! அதான், அப்படியே வட நாட்டுப் பக்கம் போயிட்டு வருவோமேன்னு’ எனச் சிரித்துக்கொண்டே சொல்லும் விக்னேஷின் பயண தூரம் நம்மை மலைக்க வைக்கிறது. ஆம்! ஜம்முவிலிருந்து கன்னியாகுமரி வரை 3,500 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

தன்னுடைய ஆசைக்கான பயணமாக அல்லாமல், `சைக்கிள் ஓட்டுவதன் அவசியம்’ `சூழல் மாசுபாடு’ `போக்குவரத்து நெரிசல்’ போன்றவற்றை குறித்து வழிநெடுகிலும் சந்திக்கும் மனிதர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை ஈரோட்டிலிருந்து ரயிலில் சைக்கிளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டவர், இரண்டரை நாள் பயணத்துக்குப் பிறகு, ஆகஸ்ட் 26-ம் தேதி மதியம் ஜம்முவுக்குச் சென்றிருக்கிறார்.

பாதுகாப்பு படை வீரருடன் விக்னேஷ் மற்றும் அவரது சைக்கிள்
பாதுகாப்பு படை வீரருடன் விக்னேஷ் மற்றும் அவரது சைக்கிள்

ஒன்றரை நாள் ஓய்வுக்குப் பிறகு 28-ம் தேதி காலை ஜம்முவில் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தவர், 40 நாள்களுக்கும் மேலாக பயணித்து பெங்களூருவை நெருங்கியிருக்கிறார். வரும் வழியிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது, பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைச் சந்திப்பது, பிற மாநிலத்தவருடன் உரையாடுவது என... இந்த சைக்கிள் பயணத்தை ரசனையாக மேற்கொண்டு வருகிறார் இளைஞர் விக்னேஷ்.

குழந்தைகளை சந்தித்த போது
குழந்தைகளை சந்தித்த போது

விக்‌னேஷைத் தொடர்புகொண்டேன், ``சாதனைக்காக இந்த சைக்கிள் பயணத்தை நான் செய்யல. அடிக்கடி சைக்கிளை எடுத்துட்டு எங்கயாவது போறது என் இயல்புதான். `ஏன் ஒரு பெரிய லாங் டிராவல் பண்ணக்கூடாது’ன்னு மனசுல தோணுச்சி. அதுமட்டுமில்லாம, என்னோட உடல் மற்றும் மன வலிமையைப் பரிசோதிக்கிற ஒரு முயற்சியாக இதைச் செய்யணும்னு நினைச்சேன். படிச்சோம், வேலைக்குப் போய் சம்பாதிச்சோம் என்பதைத் தாண்டி இந்த உலகத்தில் தெரிந்துகொள்ள விஷயங்கள் நிறைய இருக்கு! அப்படியான தேடலில் ஆரம்பித்ததுதான் இந்த 3,500 கி.மீ சைக்கிள் பயணம்” என பேச்சிலேயே எனர்ஜியைக் கொட்டினார்.

தொடர்ந்து, ``வட இந்திய மாநிலங்களில் சைக்கிளில் பயணம் செய்வது சாதாரண விஷயமல்ல என, நிறைய பேர் எச்சரித்தார்கள். நானே கூட, ஒரு சமயத்தில் `ஓவரா ரிஸ்க் எடுக்குறோமோ’ன்னு நினைச்சேன். ஆனா, என் பயணத்தில சந்தித்த மனிதர்கள், கிடைச்ச உணவு எல்லாம் கூடுதலாக உற்சாகப்படுத்துச்சு. ஜம்முவிலிருந்து கன்னியாகுமரிக்கான 3,500 கி.மீட்டரைக் கடக்க 50 நாள் பயணத்தைத் திட்டமிட்டேன்.

சைக்கிளிஸ்ட் விக்னேஷ்
சைக்கிளிஸ்ட் விக்னேஷ்

அந்தவகையில், வழியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது, மனிதர்களைச் சந்திப்பது, உணவுக்கான நேரம் போக தினமும் 70 கி.மீ சைக்கிள் ஓட்ட வேண்டும். வட மாநிலங்களில் கடுமையான வெயில் வேறு. கூடவே சைக்கிள் மிதித்ததில் கால் வலி ஒருபக்கம். சைக்கிள்ல 20 கி.மீ ஸ்பீடுல போறப்ப, சுற்றிலும் உள்ள இயற்கை அழகை ரசிச்சி ஓட்டலாம். பைக், கார்ல போனா இதை ரசிக்க முடியாது. பயணம் என்பது பயணிப்பது மட்டுமல்ல பிரதர். பயணத்தின் நினைவுகளை உருவாக்குவதும்தான்.”

``ஆரம்பத்துல வட இந்திய சாப்பாடு எனக்கு ஒத்துக்கலை. அதுக்கப்புறம் சந்திக்கிற நண்பர்கள் வீட்டுல சாப்பாடு, கோயில் சாப்பாடுன்னு பெருசா செலவு ஏற்படலை. வழியில் சந்தித்த நண்பர்கள் இரவு நேரத்தில் அடைக்கலம் கொடுத்தார்கள். தண்ணீர் மாற்றி, மாற்றி குடிச்சது உடல்நிலையை கொஞ்சம் பதம் பார்த்தது.

சைக்கிளிஸ்டுகளுடன் விக்னேஷ்
சைக்கிளிஸ்டுகளுடன் விக்னேஷ்

இங்கிலீஸை வெச்சி சமாளிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா, முடியல. இந்தி தெரியாம கொஞ்சம் திணறிட்டேன். இந்தப் பிரச்னைகளை எல்லாம் தாண்டி, `நான் 3,500 கி.மீ சைக்கிள்ல பயணிக்கிறப்ப, ஏன் உங்களால தினமும் ஒரு அரைமணி நேரம் சைக்கிளிங் செய்ய முடியாதா’ன்னு சந்திப்பவர்களிடம் கேட்கிறேன். `இன்னைக்கு ஒரு ஆளுக்கு தனி கார் யூஸ் பண்றாங்க. கடுமையான போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு ஏற்படுது. அப்படியிருக்க சைக்கிளிங் செய்வது நம்முடைய உடலுக்கு மட்டுமல்ல, சூழலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்’ன்னு வழிநெடுகிலும் சந்திக்கும் மனிதர்களிடம் பேசிட்டு வர்றேன். நம்மால முடிஞ்சதை ஒரு சின்ன விஷயத்தை செஞ்சா, அது சமூகத்துக்கு ஒரு பயனைக் கொடுக்கும் பிரதர்” என்றார்.

பயணம் சிறக்க வாழ்த்துகள் விக்னேஷ்!

அடுத்த கட்டுரைக்கு