Published:Updated:

பாண்டா கரடி, பிரிட்டிஷ் மியூசியம், ஜப்பான் சுமோ- வீட்டுக்குள் இருந்தபடி உலகம் சுற்றலாம்!

வீட்டுக்குள் இருந்தபடி உலகம் சுற்றலாம்!
வீட்டுக்குள் இருந்தபடி உலகம் சுற்றலாம்!

விர்ச்சுவல் டிராவல் மூலம் வீட்டில் இருந்தே உலகைச் சுற்றி பயணம் செய்யுங்கள்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கிறோம். நோய்த்தொற்று, மரணம், பங்குச்சந்தை சரிவு என்ற செய்திகள் தொடர்ந்து மன அழுத்தத்தைத் தருகின்றன. வெளியே செல்லக் கூடாது, நண்பர்களைப் பார்க்கக் கூடாது எனும் கட்டுப்பாடுகள், விசில் வேலை செய்யாத குக்கராகவே நம்மை மாற்றிவிட்டன. இந்தச் சூழலிலிருந்து விடுபட ஒரு நல்ல வழி விர்ச்சுவல் டிராவல். அதாவது, இருக்கும் இடத்தில் இருந்தே நீங்கள் வெளிநாடுகளைச் சுற்றிப்பார்க்கலாம்.

விர்ச்சுவல் டிராவல்... எப்படித் தயாராவது?

விர்ச்சுவல் டிராவல் (பயணம்)
விர்ச்சுவல் டிராவல் (பயணம்)

இதற்கு தயிர் சாதம், புளியோதரை, சிப்ஸ் பாக்கெட், பெட்ரோல், டீசல், சினிமா டிக்கெட் எதுவும் தேவையில்லை. ஒரு மொபைல் அல்லது கம்ப்யூட்டர் போதும். VR (Virtual Reality) கருவி ஏதேனும் இருந்தால் இன்னும் சிறப்பு. மொபைல் என்றால் சில ஆப்களை இன்ஸ்டால் செய்ய நேரிடும். அதனால், மொபைலில் கொஞ்சம் மெமரி தேவை. அவ்வளவுதான்.

கூகுள் கலை மற்றும் கலாசாரம்

கூகுளின் கலை மற்றும் கலாசாரம் (artsandculture.google.com) இணையதளம் வழியாக உலகின் பல முக்கியமான அருங்காட்சியகங்களையும், தெரு ஓவியங்களையும், கலாசார முக்கியத்துவம் கொண்ட இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம். சுற்றிப்பார்க்கலாம் என்றால் உண்மையிலேயே உங்களைச் சுற்றி என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதைக்கூட பார்க்கலாம். எல்லாமே 360 டிகிரி கேமராவில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த இணையதளம் மூலம் 20 லட்சம் ஆண்டு பழைமையான ஆப்பிரிக்க கற்கால மனிதனின் கருவியை வைத்திருக்கும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கும் செல்லலாம், மர்மமான மாச்சுபிச்சு கோட்டையையும் சுற்றிவரலாம். சிட்னியின் ஆப்ரா ஹவுசிலும், இந்தியாவின் தாஜ்மகாலிலும்கூட வீட்டில் இருந்தபடியே சுற்றலாம்.

Google arts and culture
Google arts and culture
1640 முதல் இப்போது வரையிலான தாஜ்மகாலின் புகைப்படங்களை காணலாம்.
1640 முதல் இப்போது வரையிலான தாஜ்மகாலின் புகைப்படங்களை காணலாம்.

வெறும் டிராவல் என்ன... டைம் டிராவல்கூட பண்ணலாம். ஆண்டு வாரியாக ஒரு முக்கிய கலாசாரத் தளத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதில் இருக்கும். 1640 முதல் இப்போது வரையிலான தாஜ்மகாலின் புகைப்படங்களை இதில் நீங்கள் பார்க்கலாம்.

artsandculture.google.com

கூகுள் ஸ்ட்ரீட் வியூ

கூகுளின் கலை மற்றும் கலாசார இணையதளத்தில் இருக்கும் பெரும்பாலான இடங்கள் கூகுள் ஸ்டிரீட் வியூவில் பதிவு செய்யப்பட்டவைதாம். இருக்கும் இடத்தில் இருந்தே உலகைச் சுற்றிப்பார்க்க கூகுள் ஸ்டிரீட் போல சிம்பிளான, பவர்ஃபுல்லான செயலி எதுவுமே கிடையாது. ஒரு சின்ன ஸ்கிரிப்ட் கையில் இருந்தால் போதும்... வீட்டில் குடும்பத்தோடு உட்கார்ந்து நீங்கள் போக வேண்டிய, போக விரும்பிய இடங்களை எல்லாம் தேர்வு செய்து அந்த இடத்துக்குக் கூகுள் ஸ்டிரீட் வியூ மூலம் செல்லலாம்.

குழந்தைகளுக்கும் இந்த விர்ச்சுவல் பயணம் செம அனுபவமாக இருக்கும். உலகின் முன்னணி கால்பந்து மைதானம், அரிசோனாவின் கிராண்டு கேன்யான், ஹங்கேரியின் ஆரஞ்சு கூரை கொண்ட வீடுகள் எனப் பல இடங்களை இதில் சுற்றிப் பார்க்கலாம். பனி, மழை, வெயில் எதுவும் உங்களைத் தடுக்காது. இந்த கூகுள் ஸ்ட்ரீட்டின் சிறப்பே உங்களைச் சுற்றி எப்போதும் மனித நடமாட்டம் இருக்கும் என்பதுதான். எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் மக்களை இதில் பார்க்க முடியும். கூகுள் மேப் சென்று மெனுவில் `ஸ்டிரீட் வியூ’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும்.  VR ஹெட்செட் பாக்ஸ் இருந்தால் இன்னும் சிறப்பு. அப்படியே அந்த இடத்துக்குச் சென்றால் எப்படி இருக்குமோ, அந்த அனுபவத்தை VR நமக்கு கொடுக்கும். Google Earth VR மொபைல் ஆப் மூலம் எந்த இடத்துக்கும் எந்தக் காலத்துக்கும் பயணம் செய்யலாம்.

லூவர் அருங்காட்சியகம்

மீண்டும் ஒரு மியூசியமா என முகம் சொங்கிப் போகாதீர்கள். `டாவின்சி கோடு’ படத்தில் வருமே ஒரு பெரிய கண்ணாடியால் செய்யப்பட்ட முக்கோணம், அந்த இடம்தான் லூவர் அருங்காட்சியகம். பாரிஸ் நகரின் சாலைக்கே சென்று அந்தக் கண்ணாடி கட்டடத்தைப் பார்க்க வேண்டும் என்றால் கூகுள் ஸ்டிரீட் வியூ உதவும். ஆனால், மியூசியம் உள்ளே போக வேண்டும் என்றால் கீழே கொடுத்திருக்கும் லிங்கை க்ளிக் செய்து, இருக்கும் டூரில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். பழங்கால எகிப்து கலை பொக்கிஷங்களையும், அப்போலோ கேலரி எனப்படும் அழகான சீலிங்கையும் அதன் வரலாற்றைச் சொல்ல ஒரு டிஜிட்டல் கைடு உடன், இருக்கும் இடத்தில் இருந்தே ரசிக்கலாம்.

https://www.louvre.fr/en/visites-en-ligne

லூவர் அருங்காட்சியகம்
லூவர் அருங்காட்சியகம்

நியூயார்க் சென்ட்ரல் பார்க்

நியூயார்க் நகரின் நடுவில் 843 ஏக்கரில் ஒரு பார்க். இந்தியாவில் இவ்வளவு இடம் இருந்தால், ஐடி பார்க் கட்டுவார்களே தவிர மக்கள் நடமாடப் பூங்கா கட்டமாட்டார்கள். அதனால்தான் இந்த இடம் அமெரிக்காவின் முக்கியமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. சென்ட்ரல் பூங்கா பல வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இதை ஒரு பல்லுயிர்ப் பிரதேசம் என்றே சொல்லாம். இங்கே பலவிதமான பாறைகள், மரங்கள், 8 ஏரி மற்றும் குளங்கள் உள்ளன. படகு வீடு ஸ்டைலில் கஃபே கூட இங்கே இருக்கிறது. கீழே இருக்கும் இணையதளத்துக்குள் சென்றால் சென்ட்ரல் பார்க்கை டிஜிட்டலாகச் சுற்றிப் பார்க்கலாம். 72-வது நுழைவாயில் மூலம் சென்றால் ஒரு கைடும் கூட வருவார். இந்த விர்ச்சுவல் டூரில் சென்ட்ரல் பார்க்கை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் சிறப்பாக கிடைக்காது என்றாலும், ஊருக்கு நடுவில் ஒரு பெரிய பூங்கா இருந்தால் எப்படி இருக்கும் என்றாவது பார்க்கலாமே.

www.youvisit.com/tour/centralpark

Central park VR tour
Central park VR tour
Vikatan

உயிரியல் பூங்கா

சிம்பன்சி குரங்குகளுக்கு கொரோனா வரும் என்று சொல்லப்பட்டபோதே மிருகக்காட்சி சாலைகளை மூடத்தொடங்கிவிட்டார்கள். இப்போது அனைத்து உயிரியல் பூங்காக்களின் கதவுகளுக்கும் தாழிடப்பட்டு விட்டன. வருத்தப்படத் தேவையில்லை, இப்போதும் நீங்கள், இந்த இயற்கை பிரமாண்டங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் இருக்கும் செயினெ மவுன்டெயின் உயிரியல் பூங்கா (cheyenne Mountain Zoo) ஒட்டகச்சிவிங்கிகளின் கடைசி சொர்க்கம். கொரோனா பயம் எதுவும் இன்றி இந்த ஒட்டகச்சிவிங்கிகள் எவ்வளவு ஜாலியாக இருக்கின்றன என்பதைத் தினமும் 8 மணிநேரம் லைவ் கேமரா மூலம் காட்டுகிறார்கள். பெரிய ஜிராஃபி கூட்டம் முதல் சமீபத்தில் பறிந்த குழந்தை ஒட்டகச்சிவிங்கி `விவ்' வரை இங்கிருக்கும் உயிரினங்கள் என்ன செய்கின்றன என்பதைக் கவனிக்கலாம்.

cmzoo.org/animals/a-z/giraffe-cams/

இன்னும் வித்தியாசமாக எதாவது பார்க்க வேண்டுமா... ஆஸ்திரேலியா சாண்டியாகோ அருங்காட்சியகம் போகலாம். இவர்கள் அங்கு வாழும் பபூன்ஸ், பென்குயின், பாண்டா, கோலா மற்றும் பனி கரடி போன்ற மிருகங்களைக் குழந்தைகளுக்காக லைவ் கேமரா மூலமும், தனி வீடியோ பதிவுகளாகவும் காட்டுகிறார்கள். குண்டுக் குண்டான, கியூட்டான பாண்டா கரடிகள் மூங்கில் குச்சிகளை ஸ்நாக்ஸ் போல கொறிப்பதை பார்த்தாலே மனசுக்கு செம புத்துணர்ச்சி கிடைக்கும்.

இந்த உயிரியல் பூங்காக்கள் என்றில்லை, இன்னும் பல உயிரியல் பூங்காக்கள் இதுபோன்ற வசதிகளைத் தருகின்றன. அவற்றுக்கும் நீங்கள் வீட்டிலிருந்தே ட்ரிப் அடிக்கலாம்.

நீங்கள், ஓம் சாந்தி மனநிலையில் அமைதி விரும்பியாக இருந்தால் கலிஃபோர்னியாவின் மான்டேரே பே அக்வேரியம் போகலாம். வீட்டில் மீன் தொட்டி இல்லை எனக் கவலைப்படவே தேவையில்லை. வீட்டில் இருக்கும் அந்த ஸ்மார்ட் டிவியில் இந்த அக்வேரியத்தின் 10 லைவ் கேமராக்களையும் ஓடவிட்டால் கடற்கீரி, ஜெல்லிஃபிஷ் முதல் சுரா வரை ஒரு திகில், ஜாலி அனுபவம் கிடைக்கும். கே டிவியில் `சுறா' படம் பார்ப்பதற்கு இந்தச் சுறாவை பார்த்தாலாவது மனசுக்குக் குளிர்ச்சி கிடைக்கும்.

Greater palm springs
Greater palm springs

உலகம் சுற்ற!

விர்ச்சுவல் டிராவல் என்றால் இதுமட்டுமல்ல. greater palmsprings, gopro, thevibe போன்ற இணையதளங்களிலும் யூடியூபிலும் இருக்கும் அட்டகாசமான டிராவல் மற்றும் உணவு சம்பந்தமாக வீடியோக்களைக் கூட இந்தச் சமயத்தில் பார்த்து ரசிக்கலாம். வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும் என்ற உற்சாகமும் நம்பிக்கையும் கிடைப்பது மட்டுமல்ல... உங்கள் அடுத்த டிராவலில் இப்படி எல்லாம் செய்யலாமே என புது ஐடியா கூடக் கிடைக்கும். 

livebeaches.com சென்று வெளிநாடுகளில் இருக்கும் ஒவ்வொரு கடற்கரையின் அழகையும், virtualyosemite.org என்ற இணையதளம் சென்று யோசிமைட் தேசிய பூங்காவின் சிகரத்தில் நின்று 360 டிகிரியில் மலைகளையும் ரசிக்கலாம்.

VR Travel
VR Travel

பயணங்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பார்கள். பயணம் செல்ல முடியாமல் வீட்டுக்குள் இருக்கும் இந்தச் சூழலில் உலகைக் காண்பதற்கு டெக்னாலஜி உதவுகிறது. உங்கள் பயணத்துக்கு நீங்களே கதாசிரியர். மிருகங்களுக்குப் பெயர் வைத்து அது செய்யும் சேட்டைகளுக்கு டயலாக் கொடுத்து ஒவ்வொரு நாளும் அதைத் தொடர்ந்து வரலாம், கூகுள் ஸ்டிரீட் வியூவில் ஒரு மனிதரைப் பின்தொடர முயலலாம். வியூவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர் என்று கற்பனையில் ஒரு முழு டூர் பிளான் வைத்துக்கொண்டு, அதற்கென தனி நேரம் ஒதுக்கி ஜாலியாக உலகைச் சுற்றுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு