Published:Updated:

`11,482 அடி உயரம்!’ - 10வது முறையாக லடாக் சென்ற `டிராவல் ப்ளாக்கர்’ யோகேஷ் சர்க்கார் மரணம்!

11 ஆண்டுகளாகப் பல இதழ்களிலும், இணையத்திலும் பயணக் கட்டுரைகள் எழுதிவந்த எழுத்தாளரும், புகைப்படக்காரருமான யோகேஷ் லடாக்கில் நேற்று இறந்துவிட்டார்.

யோகேஷ் சர்க்கார்
யோகேஷ் சர்க்கார் ( Yogesh Sarkar )

பயணம்... அதிலும் இமயமலைப் பயணம் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டவர்கள் யோகேஷ் சர்க்காரின் எழுத்துகளை தெரிந்தோ, தெரியாமலோ நிச்சயம் படித்திருப்பார்கள். டெல்லியைச் சேர்ந்த யோகேஷ் இதுவரை 9 முறை லடாக் பயணம் சென்றிருக்கிறார். இமாசல பிரதேசம், காஷ்மீர், பூடான், லடாக் போன்ற இடங்களுக்கு எப்படிச் செல்வது, அதற்கான முன்னேற்பாடுகள் என்னென்ன என்பது உட்பட பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பயணம் செய்பவர்களுக்காக BMCTouring என்ற இன்டர்நெட் ஃபோரம் ஒன்றையும் நடத்திவந்தார். சமீபத்தில் `லவ் இன் லடாக்' என்ற `கிண்டில்' புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை 10-வது முறையாக லே, லடாக் பயணத்தைத் தொடங்கிய யோகேஷ், புறப்படுவதற்கு முந்தைய நாள் சிறிய உடல்நிலை பிரச்னைகள் இருப்பதாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார். இருந்தும் டெல்லியிலிருந்து லே-வுக்கு விமானத்தில் பயணித்தவர் லே நகரத்தில், மலையேற்றத்தின்போது ஏற்படும் அக்யூட் மவுன்டெயின் சிக்னஸ் (Acute mountain sickness -,AMS) எனும் உடல்நலப் பிரச்னையால் உயிர் இழந்துவிட்டார்.

லடாக்கின் தலைநகரம் லே. இது இமயமலையில் 11,482 அடி உயரத்தில் இருக்கிறது. மிக உயரமான இடம் என்பதால் இங்கே ஆக்ஸிஜன் குறைவாகவே இருக்கும். கடும் பனி இருப்பதால் கடல்மட்டத்தில் இருந்து செல்பவர்களுக்கு அக்யூட் மவுன்டெயின் சிக்னஸ் (AMS) என்ற உடல் உபாதை வருவது சகஜம். லடாக் செல்லும் பயணிகளில் 45 சதவிகிதம் பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என அங்கிருக்கும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

பெரும்பாலும் தலைவலி, வயிற்றுக் கோளாறு, மயக்கத்தோடு நின்றுவிடும் இந்தச் சிக்கல், சில சமயங்களில் கோமா வரை கொண்டுசெல்லும். சிலர் யோகேஷ்போல மரணித்தும் இருக்கிறார்கள். அதிலும் புகைபிடிப்பவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.