யுனெஸ்கோவின் உலகப் பாரம்பர்ய அந்தஸ்துடனும் ஆசியாவின் மிக நீண்ட பல்சக்கர தண்டவாள அமைப்புடனும் நீலகிரி மலையில் நூற்றாண்டுகளைக் கடந்து தடதடத்துக் கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில்.
நீராவியில் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணிக்க உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை மற்றும் மலை ரயிலையே வாடகைக்கு எடுத்து பயணிக்கும் வசதியும் இருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 16 சுற்றுலா பயணிகள் ₹ 3,60,000 கட்டணம் செலுத்தி மலை ரயிலை ஒரு நாள் வாடகைக்கு எடுத்திருக்கின்றனர்.

நேற்று காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு மதியம் 1. 30 மணியளவில் குன்னுார் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். பழைமையான மலை ரயில் லோகோ பணிமணையை பார்வயைிட்டு நூற்றாண்டு பழைமை மிக்க நீராவி என்ஜின் இயக்கம் பற்றியும் கேட்டறிந்தனர். இந்த அனுபவம் குறித்து பகிர்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி கிறிஸ்ட்டர், "கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தோம். டார்ஜிலிங், சிம்லா ஆகிய பகுதிகளைக் கண்டு ரசித்து விட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறோம். நீராவி இன்ஜின் மூலம் நீலகிரி மலை ரயிலில் வந்தது புதிய அனுபவமாக இருந்தது. இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியான பயணம்" என்றார்.