Published:Updated:

`முதுகில் தொற்றிக்கொண்ட `வேதாளம்'; நாகாலாந்து பயணத்தில் குபீர் அனுபவம்!' - Back பேக் - 4

Back பேக்

நாகாலாந்தில் நான் ரசித்த முதல் மங்கோலிய முகம் அவளுடையதுதான். இந்த ஈர்ப்பை வேறெதுவாகவும் பொருட்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இது மிக இயல்பானது. அவள் பெயரைக் கேட்டேன். அவள் சொன்ன பெயர் நினைவில் நிற்கவேயில்லை.

`முதுகில் தொற்றிக்கொண்ட `வேதாளம்'; நாகாலாந்து பயணத்தில் குபீர் அனுபவம்!' - Back பேக் - 4

நாகாலாந்தில் நான் ரசித்த முதல் மங்கோலிய முகம் அவளுடையதுதான். இந்த ஈர்ப்பை வேறெதுவாகவும் பொருட்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இது மிக இயல்பானது. அவள் பெயரைக் கேட்டேன். அவள் சொன்ன பெயர் நினைவில் நிற்கவேயில்லை.

Published:Updated:
Back பேக்

திமாபூரிலிருந்து கோஹிமா 70 கிலோ மீட்டர். கோஹிமா மலைப்பாதையில் ஏற ஆரம்பித்ததுமே சாலை ஓரத்தில் மலையைக் குடைந்துகொண்டிருந்தார்கள். பெரும்பாறைகள் உடைக்கப்பட்டு பல துண்டுகளாக விழுந்து கிடந்தன. ஜேசிபி இயந்திரம் சுரண்டியதன் தடமாகக் கோடுகள் விழுந்திருந்தன. அதைப் பார்த்ததும் சாலை விரிவாக்கப்பணி என்று நினைத்தேன். பிறகு விசாரித்தபோது, திமாபூர் - கோஹிமா இடையிலான ரயில்வே திட்டப்பணிகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். நாகாலாந்தின் மிகப்பெரும் கனவுத்திட்டங்களுள் இதுவும் ஒன்று. 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே இத்திட்டத்துக்கான வரைவு உருவாக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடிகளின் வாழ்வுரிமை மற்றும் இயற்கை வளத்தைப் பாதுகாத்தல் என்கிற அடிப்படையில் இந்திய அரசின் எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதானாலும் பல்வேறான நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆகவேதான், இந்தியாவின் மற்ற மாநிலங்களைப்போல சிறப்பு அந்தஸ்து பெற்ற வட கிழக்கு மாநிலங்களில் இந்திய அரசால் அவ்வளவு எளிதாக நுழைய முடியாத சூழல் நிலவியது. கடந்த பத்தாண்டுகளில் இச்சூழல் மாற்றம் கண்டிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் மிகப்பெரும் சுற்றுலாத் தளமாக மாற்றும் நோக்கோடு பா.ஜ.க அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. என்னுடைய கேள்வியெல்லாம் இந்த மாற்றத்தை அம்மக்கள் எவ்விதம் எதிர்கொள்கிறார்கள் என்பதாகத்தான் இருந்தது.

Kohima
Kohima
Photo by Suraj Jadhav on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

7 மணிக்கு நான் கோஹிமாவை அடைந்தபோது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைப்போல 90 சதவிகித கடைகள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த வெகு சொச்ச கடைகளிலும் அடைக்கப்படுவதற்கான எத்தனிப்பு தெரிந்தது. மக்கள் நடமாட்டமும் மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. 4 டிகிரி குளிரில் கோஹிமா பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அந்நகரைச் சூழ்ந்திருந்த இருள் மற்றும் அமைதி எனக்குள் பதற்றத்தை உண்டாக்கியது. எந்த ஊருக்குச் சென்றாலும் தங்கும் விடுதியை முன்பதிவு செய்துவிட்டுச் செல்கிறவனல்ல நான். அந்த ஊருக்குச் சென்றதும் நான்கைந்து விடுதிகளில் விசாரித்து அவற்றுள் சிறந்ததும் வாடகை குறைந்ததுமான விடுதியைத் தேர்வுசெய்து தங்குவேன். நான்கைந்து வாய்ப்புகள் நம் முன் இருக்கையில் பேரம் பேசி விடுதி வாடகையைக் குறைக்க முடியும். இப்படியாகத்தான் என் பயணங்கள் இருந்திருக்கின்றன. கோஹிமா நகரின் முடக்கம் நான் எதிர்பார்த்திராதது. தங்கும் விடுதி, உணவகம் இவையிரண்டும் அத்தியாவசியம். ஆனால், அவை கிடைக்கப்பெறுமா என்பதே கேள்வியாக இருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து நகரின் மையப்பகுதியை நோக்கிச் சென்றேன். அது மலைப்பகுதியில் உள்ள நகரம் என்பதால் சமதளமே இல்லாமல் ஏற்ற இறக்கங்களால் ஆகியிருந்தது. மேட்டுப்பகுதியில் நான் ஏறிச் சென்றேன். மூன்று சாலைகள் கூடும் அந்த ஜங்ஷன்தான் கோஹிமா நகரின் இதயப்பகுதி. அங்கே பெட்டிக்கடைகள் திறந்திருந்தன. சாலை ஓரத்தில் சிறு வியாபாரிகள் உணவு விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் ஆறுதல் அடைந்தேன். அந்த மும்முனைச் சந்திப்பையொட்டியே இடது புறத்தில் ஓர் தங்கும் விடுதியின் பலகையைப் பார்த்தேன். என்னவாயினும் அங்கு தங்கி விடுவதெனச் சென்றேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உரிமையாளரால் கைவிடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதைப் போல இருந்தது அக்கட்டடம். அதன் படியேறி முதல் தளத்துக்குச் சென்று விடுதி நிர்வாகியிடம் விசாரித்தபோது 500 ரூபாய் வாடகை சொன்னார். பேரம் பேசுவதற்கான சூழல் இல்லை என்பதால் ஒப்புக்கொண்டேன். அட்டாச்டு பாத்ரூம் கிடையாது என்று சொன்னார். மறுத்துப் பேசும் சூழலில் நான் இல்லை. அன்றைய இரவைத் தூங்கிக் கழிக்க ஓர் இடம் கிடைத்தால் போதும் என்கிற நிலையில் எந்தக் கேள்வியும் இன்றி 500 ரூபாய் கொடுத்து அறையை வாடகைக்கு எடுத்தேன். பதிவு செய்து விட்டுச் சென்று பார்க்கையில் அந்த அறை அவ்வளவு விகாரமாக இருந்தது. பச்சை பெயின்ட் அடிக்கப்பட்ட சுவரில், சிவப்பு நிறத்தில் ஏதேதோ எழுதப்பட்டு அது அடிக்கப்பட்டிருந்தது. பேக் பேக்கை கழற்றி வைத்துவிட்டு உணவு தேடும் பொருட்டு லாட்ஜிலிருந்து வெளியே வந்தேன். கடைகள் மொத்தமும் அடைக்கப்பட்ட அச்சாலையின் ஓரத்தில் இரண்டு பெண்கள் உணவு விற்றுக்கொண்டிருந்தனர். சிறிய அடுப்பில் வெந்நீர் கொதிக்க அதன் ஆவியில் மோமோக்கள் வேகவைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அறை
அறை

இறால் போன்ற ஓர் இறைச்சியும் நூடுல்ஸும் கலந்த ஓர் உணவை பிளாஸ்டிக் கவரில் பேக் செய்து வைத்திருந்தனர். அது என்ன இறைச்சி என்று கேட்டேன். அவர்கள் சொன்னது புரியவில்லை. எதுவாக இருந்தால் என்ன? மக்கள் சாப்பிடுகிற உணவுதானே என அந்த பாக்கெட்டையும், 5 மோமோக்களையும் பார்சல் வாங்கிக் கொண்டு விடுதியை நோக்கி நகர்ந்தேன். திடீரென வேதாளம் போல ஏதோ ஒன்று என் முதுகில் தொற்றிக்கொண்டதும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஓர் இளைஞன் நல்ல குடிபோதையில் என் முதுகில் ஏறியிருந்தான். ``டேய்... இறங்குடா" என்று என் உடலை உதறி அவனை விலக்கிவிட்டு நடந்தேன். அவன் மீண்டும் மீண்டும் என்னை இறுக்கப்பிடிப்பதுமாக இருந்தான். ஒரு கையில் உணவுப் பொட்டலமும் இன்னொரு கையில் போனும் இருந்ததால் கை முட்டியைக் கொண்டு அவனைத் தள்ளி விட்டு நகர்ந்தேன். அவன் மீது எனக்குக் கோபமே வரவில்லை, மாறாக சிரிப்புதான் வந்தது. குடி ஒரு மனிதனை எத்தகைய கீழ்மைக்கும் இழுத்துச் செல்லும். என்னை நகரவே விடாமல் அவன் கொடுத்த தொந்தரவு தாளாமல் ஓர் அறை விட்டால் அடங்கிவிடுவான் என்கிற முடிவுக்கு வந்தேன். அப்போது அவ்வழியாக வந்த இன்னொரு நாகாமி அவன் சட்டையைப் பிடித்து இழுத்து அறைந்தான். எதிரே இருந்த சந்துக்குள் அவனை இழுத்துச் சென்று அடி வெளுத்தான். எனக்கு பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த நாள் காலை எழுந்தபோது வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் குளிர் குறையவே இல்லை. ஜெர்க்கினைக் கழற்றவே முடியாத அளவில் 5 டிகிரி குளிர் அடித்துக் கொண்டிருந்தது. குளிப்பதற்கு வெந்நீர் வேண்டும் என விடுதி நிர்வாகியிடம் கேட்டதற்கு குடிக்க வேண்டுமானால் தருகிறேன் குளிப்பதற்கெல்லாம் தர முடியாது என்று சொன்னார். அந்தக் குளிரில் பச்சைத்தண்ணீரில் குளிப்பதை கற்பனைக்குக்கூட இட்டுச்செல்ல முடியவில்லை. குளிர்ப்பிரதேசத்தில் வெந்நீர் தராமலும் ஓர் விடுதி இருக்கக்கூடுமா என்று வெறுப்பாக இருந்தது. அன்றைக்கே அந்த ஊரிலிருந்து கிளம்பிவிடலாம் என்றுகூடத் தோன்றியது. அடுத்தகட்ட திட்டம் குறித்த யோசனைக்குக்கூட செல்ல முடியாத அளவுக்கு சலிப்புற்றிருந்தேன். குளித்து 3 நாள்கள் ஆகியிருந்த நிலையில் உடலும் மனதும் அசௌகர்யத்தை உணர்ந்தது. விடுதியை விட்டு வெளியே சாலைக்கு வந்து வெயிலுக்கு முகத்தைக் கொடுத்தபடி கொஞ்ச நேரம் நின்றேன். கொஞ்ச தூரம் சுற்றி வரலாம் என்று கிளம்பி இரண்டு கிலோ மீட்டர் தூரம் அந்நகரைச் சுற்றி வந்தேன். எங்கும் ஜெர்கின் அணிந்த மனிதர்கள். சீருடை நிறத்திலேயே ஸ்வெட்டர் அணிந்து கான்வென்ட் செல்லும் மாணவர்கள். அந்தக் குளிரிலும் முழங்காலளவிலான பாவாடை அணிந்து செல்லும் மாணவிகள் என அனைத்துக் காட்சிகளும் எனக்கு ஊட்டியை நினைவுறுத்தின. அந்தக் காலை நடை என்னை சலிப்பிலிருந்து வெளிக்கொண்டு வந்தது.

Dzükou Valley Trek, Kohima, Nagaland, India
Dzükou Valley Trek, Kohima, Nagaland, India
Photo by Varun Nambiar on Unsplash

விடுதியைக் காலி செய்ய 12 மணி வரை நேரம் இருந்தது. அதற்குள் வேறொரு நல்ல விடுதியைத் தேடிப்பிடித்து விடலாம் என்கிற யோசனைக்குள் வந்து தேட ஆரம்பித்தேன். அந்த மும்முனைச் சந்திப்பின் வலது புறத்தில் இறங்கும் சாலையிலேயே கொஞ்ச தூரம் சென்றதும் ஓர் விடுதியைப் பார்த்தேன். எளிமையாகவும் தூய்மையாகவும் இருந்த அவ்விடுதியின் அறையைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்து விட்டது. அறைக்குள் இல்லையென்றாலும் அறைக்கு எதிரிலேயே கழிவறை இருந்தது. 800 ரூபாய் வாடகை சொன்னார்கள். முந்தைய விடுதியோடு ஒப்பிடுகையில் இதற்கு தாராளமாகக் கொடுக்கலாம் என்று தோன்ற அறையை பதிவு செய்தேன். உணவகத்துடனான அவ்விடுதியில் அந்த அறையைவிட என்னை மிகவும் கவர்ந்தது அங்கு பணிபுரியும் ஓர் நாகாமி பெண். அவள்தான் என்னை அழைத்துச் சென்று அறையைக் காண்பித்தாள். வாடகை விபரங்களையும் சொன்னாள். அவள் முகத்தில் நிலை கொண்டிருந்த மென்சிரிப்பும், அவளின் அணுகுமுறையும் என்னை ஈர்த்தது. நாகாலாந்தில் நான் ரசித்த முதல் மங்கோலிய முகம் அவளுடையதுதான். இந்த ஈர்ப்பை வேறெதுவாகவும் பொருட்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இது மிக இயல்பானது. அவள் பெயரைக் கேட்டேன். அவள் சொன்ன பெயர் நினைவில் நிற்கவேயில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism