Published:Updated:

நாகாமிப் பெண்ணின் நினைவுகளும் அவள் கொடுத்த ஜெல்லியும் Back பேக் - 14

Back பேக்

வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. உச்சபட்ச வலிக்கு வேண்டுமானால் அதைப் பயன்படுத்தலாமே தவிர, இது போன்ற வலிகளுக்கு உடலைப் பழக்கப்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம். ``வலியை உணரவே விரும்புகிறேன்" என்று மட்டும் அவளிடம் சொன்னேன்.

நாகாமிப் பெண்ணின் நினைவுகளும் அவள் கொடுத்த ஜெல்லியும் Back பேக் - 14

வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. உச்சபட்ச வலிக்கு வேண்டுமானால் அதைப் பயன்படுத்தலாமே தவிர, இது போன்ற வலிகளுக்கு உடலைப் பழக்கப்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம். ``வலியை உணரவே விரும்புகிறேன்" என்று மட்டும் அவளிடம் சொன்னேன்.

Published:Updated:
Back பேக்

மலையேற்றம் கடினமானது... அதுவே இறங்குவது எளிதானது என்றாலும் சவாலானது. ஜக்காமா பாதை ஒழுங்கமைக்கப்பட்ட பாதையன்று. சீரான இடைவெளியில் படிகள் இருக்காது. சில இடங்களில் சரிவு இருக்கும். ஒவ்வோர் அடியையும் மிகக் கவனமாக எடுத்து வைக்க வேண்டியிருக்கும். அஸ்ஸாம் மாணவர்கள் 8 பேர் மற்றும் வழிகாட்டியுடன் நானும் ஜக்காமா பாதை கற்படிகளில் இறங்க ஆரம்பித்தேன். இறங்குவதற்கு குறைந்தபட்சமாக 4 மணி நேரம் ஆகும் என வழிகாட்டி சொன்னார். மலையேற்றத்துக்கு எந்த விதத்திலும் பொருத்தமற்ற எனது ஷூ இடர ஆரம்பித்ததுமே பற்றுதலுக்காய் மரத் தடிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேடிக்கொண்டே வந்தேன்.

மலையேறுபவர்கள் மரத்தடியின் பற்றுதலில் ஏறிவிட்டு, பின்னர் அதை வீசிச் சென்று விடுவர். அப்படியாக இருந்த இரண்டு தடிகளை எடுத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தேன். அத்தடிகளை ஊன்றி இறங்குவது மிக எளிதாக இருந்ததால் என்னால் வேகமாக இறங்க முடிந்தது. அம்மாணவர்களை வேகமாகக் கடந்து முன் வந்தேன். அஸ்ஸாம் மாணவி ஒருத்தி, ``பனிச்சறுக்கில் போவதைப்போல சென்றுகொண்டிருக்கிறீர்கள்" என்று சொன்னாள். நான் திரும்பி லேசாகப் புன்னகைத்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறங்குவதில் உள்ள முக்கிய சவால் நம்மை அழுத்தித் தள்ளுகிற விசைதான். உடல் அந்த விசையில் இயங்குகையில் உடனடியாக அவ்விசையைக் குறைப்பதும், நிறுத்துவதும் சாத்தியமற்றது. சீரற்ற பாதையில் அதன் விளைவு இன்னும் மோசமாக இருக்கும். இரு கைகளிலும் வைத்திருந்த மரத்தடிகளை ஊன்றி அந்த விசையைக் கட்டுப்படுத்தினேன். அப்பாதையிலும் ஆங்காங்கே ஈரப்பதம் இருந்தது. வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக நினைத்தேன்.

கொஞ்ச நேரத்தில் அது நடந்தேவிட்டது. முதல் ஆளாக நான் சென்றுகொண்டிருந்தேன் 100 மீட்டர் இடைவெளியில் அம்மாணவர்களும் வழிகாட்டியும் பின்னால் வந்து கொண்டிருந்தனர். நான் செல்போனில் வீடியோ எடுத்தபடி சென்றுகொண்டிருந்ததால் கவனத்தின் பிடி தளர்ந்தது. ஈரப்பதமாய் இருந்த சறுக்கலான பகுதியில் கால் வழுக்கி விழுந்தேன். உட்கார்ந்த நிலையிலேயே விழுந்ததால் நான் விழுந்தது அவர்களுக்குத் தெரியவில்லை. பலத்த அடி எதுவும் இல்லை. எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு எழுந்தது. துயர்மிகு தருணங்களை எல்லாம் இவ்விதமே எதிர்கொண்டு பழகிவிட்டேன். பேன்ட்டின் பின்புறத்தில் ஈர மண் அப்பிவிட்டதுதான் கொஞ்சம் கவலையாக இருந்தது.

மலையேற்றம்
மலையேற்றம்

நான் விழுந்த இடம் கொஞ்சம் அபாயகரமான பகுதி. உட்கார்ந்த நிலையில் இறங்க வேண்டிய பகுதி அது. நான் விழுந்த இடத்திலிருந்து எழுந்து இடக்கையில் உள்ள தடியை கீழே ஊன்றியபடி நின்றிருந்தேன். அஸ்ஸாம் மாணவர்களைப் பார்த்து கவனமாக இறங்கும்படி எச்சரித்தேன். மாணவிகளே முதலில் வந்தனர். அவர்களுக்கு அச்சறுக்கலில் எப்படி இறங்குவதெனத் தெரியவில்லை. ``வழுக்கிவிடும் போலிருக்கே" என்றனர். ``நிச்சயமாக வழுக்கும்" என்று சொல்லிவிட்டு அவர்களை உட்கார்ந்து இறங்கும்படி சொன்னேன். இடக்கையில் இருந்த தடியை ஆழமாக ஊன்றியபடி வலது கையை நீட்டி அவர்களை இறக்கிவிட்டேன். கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்ததும், ``நல்ல வேளையாக வழுக்கவில்லை" என்றாள் ஒரு மாணவி. ``நான் வழுக்கி விழுந்தேன்" என்று சொன்னேன். அவள் `sad' என்று மட்டும் சொன்னாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு மணி நேரத்தைக் கடந்திருந்தபடியால் சோர்வை உணர முடிந்தது. வழியில் ஒரு திண்டைக் கண்டதும் சற்று ஓய்வெடுத்தோம். திண்டில் உட்கார்ந்து காலை நீட்டியபோதுதான் கால் வலியை உணர ஆரம்பித்தேன். இதற்கு முன்பாகவே எனக்கு மலையேற்ற அனுபவங்கள் உண்டு. என் சொந்த ஊருக்கு அருகே சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள கெம்பத்தராயன்கிரி என்கிற மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறேன். ஒற்றையடிப்பாதை வழியே 7 மலைகளைக் கடந்துதான் அந்த மலை உச்சியை அடைய முடியும்.

அங்குள்ள கற்தூணை வழிபடுவதற்காக ஆண்டுக்கொரு முறை மக்கள் செல்வது வழக்கம். அங்கு சென்று விட்டு வந்த பிறகு, இரண்டு நாள்களுக்கு நடக்கவே முடியாது அவதிக்குள்ளாகி யிருக்கிறேன். பின்னர், அது பழகிவிட்டது. நிச்சயம் அடுத்த இரண்டு நாள்களுக்கு இதன் தாக்கத்தை எதிர்கொள்ளப்போவது உறுதியானது. ஓர் அஸ்ஸாம் மாணவியிடம் இதைச் சொன்னேன். அவள், ``நான் பெயின் கில்லர் வாங்கி வைத்திருக்கிறேன்" என்று சொன்னாள். என்னைத் தவிர எல்லோரும் முறையாகத் திட்டமிட்டுப் பயணம் செய்கிறார்கள் என்று தோன்றியது.

இறங்கும்போது....
இறங்கும்போது....

வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. உச்சபட்ச வலிக்கு வேண்டுமானால் அதைப் பயன்படுத்தலாமே தவிர, இது போன்ற வலிகளுக்கு உடலைப் பழக்கப்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம். "வலியை உணரவே விரும்புகிறேன்" என்று மட்டும் அவளிடம் சொன்னேன். மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். அப்பாதை முழுவதுமே மரங்கள் புடைசூழ நிழற்பகுதியாக இருந்தது. அதனுள் வெளிச்சம் பரவியிருந்தது. ஆங்காங்கே துண்டு துண்டாக மரங்களின் இடைவெளியில் சூரிய ஒளி உட்புகுந்திருந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு தகரக்கொட்டகையை அடைந்தோம். அதற்குள் எதுவுமே இல்லாமல் பைக் ஸ்டாண்ட் போல் இருந்தது. சிமென்ட் தரை கூட இல்லாமல் மண் தரையாக இருந்தது. அங்கே நெருப்பு மூட்டியதற்கான தடங்கள் இருந்தன. அது நாகாலாந்து சுற்றுலாத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட ஓய்வறை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்தே நாகாலாந்து சுற்றுலாத்துறையைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவின் முக்கியச் சுற்றுலாத்தலங்களின் பட்டியலில் நாகாலாந்து எந்த மூலையில் இருக்கிறதென்றே தெரியாது. நாகாலாந்தின் மிகமுக்கிய சுற்றுலாத்தலமான ஸூகு பள்ளத்தாக்கு செல்கிற வழியில் அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வறை ஒரு தகரக்கொட்டகைதான்.

மதிய வேளையை நெருங்கிவிட்டதால் பசிக்க ஆரம்பித்தது. கொண்டு வந்திருந்த தண்ணீரைக் குடித்து பசியை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன். அசாம் மாணவர்கள் கோஹிமா செல்லும் வழியில் உள்ள ஒரு ரிசார்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் கிளம்பும் திட்டத்தில் இருந்தார்கள். பயணத்தின் மீதான ஈடுபாட்டினைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாது. அவ்வப்போது சலிப்புக்குள்ளாக வேண்டி வரும். அப்படியான ஒரு சலிப்பு எல்லோருக்குள்ளும் ஏற்பட்டிருந்ததை உணர முடிந்தது. சீக்கிரம் ஜக்காமாவுக்குச் சென்றால் போதும் என்கிற மனநிலையே எங்களை வியாபித்திருந்தது. ஜக்காமாவை நெருங்கியபோது சமதளப்பரப்புக்கு வந்திருந்தோம். அங்கிருந்து வேகமாக நடக்க ஆரம்பித்தோம். அடிவாரத்தில் உள்ள ஜக்காமாவை அடைந்தபோது மணி இரண்டைத் தாண்டியிருந்தது.

ஜெல்லி
ஜெல்லி

அடிவாரத்தில் அஸ்ஸாம் மாணவர்களை அழைத்துச் செல்ல தயாராக இருந்த வேனில் என்னையும் ஏறிக்கொள்ளச் சொல்லி பிரதான சாலைக்கு வந்ததும் கோஹிமாவுக்குச் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் என்னை இறக்கிவிட்டனர். அவர்களிடமிருந்து விடைபெற்று கோஹிமாவுக்கு வந்தேன். நான் தங்கியிருந்த விடுதியில் வரவேற்பறையில் மேலாளர் பூபு இருந்தார். எனக்கான கணக்கை முடிக்கச் சொல்லிக் கேட்டேன். கொஞ்ச நேரம் காத்திருக்கும்படி பூபு சொன்னார். உள்ளே உணவு விடுதிக்குச் சென்று உட்கார்ந்தபோது அந்த நாகாமிப்பெண் வந்தாள்.

``பயணம் எப்படி இருந்தது" என்றாள்.

``ரொம்பவே நன்றாக இருந்தது."

``இன்றைக்கு கோஹிமாவிலிருந்து புறப்படுகிறீர்களா?"

``ஆம்."

``அடுத்து?"

``திமாபூரிலிருந்து கவுஹாத்திக்கு ரயில் முன்பதிவு செய்திருக்கிறேன்... அங்கிருந்து ஷில்லாங் போகப்போகிறேன்."

``சிறப்பு" என்றபடியே பிளாஸ்டிக் பாக்கெட் ஒன்றை எனக்குத் தந்தாள்.

``என்ன இது?"

``ஜெல்லி"

``கோஹிமாவிலிருந்து உன் நினைவாக இந்த ஜெல்லியை எடுத்துச் செல்கிறேன்" என்றேன்.

அவள் புன்னகைத்தாள். அத்தோடு அக்கதை நிறைவுற்றது. நான் பில் தொகையைச் செலுத்திவிட்டு கோஹிமாவிலிருந்து விடைபெற்று திமாபூருக்குச் சென்றேன்.

- திரிவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism