தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தீரா உலா: பாறை பாடியது!

லெபனான்
பிரீமியம் ஸ்டோரி
News
லெபனான்

காயத்ரி சித்தார்த்

லெபனானை கலீல் ஜிப்ரானின் கவிதையின்றி வேறெப்படி நினைவுகூர முடியும்? லெபனானைத் தன் காதலியைப் போல நேசித்திருந்த கவிஞர் அவர். ஓவியர், எழுத்தாளர், தத்துவ ஆசிரியர் என்று அவருக்கு வேறு முகங்களும் உண்டு. இந்தியாவின் முப்பெரும் கவிஞர்களான இக்பால், தாகூர், பாரதியார் ஆகியோரின் சமகாலத்தவர். கல்லூரிக் காலத்திலேயே நூலகத்தில் ஜிப்ரானின் ‘பொன்மணிப்புதையல்’, ‘முறிந்த சிறகுகள்’ ஆகியவற்றை வாசித்து பித்தாகித் திரிந்திருக்கிறேன். நூலகப் புத்தகத்தில் அடிக்கோடிட முடியாதென்பதால் அவர் மேற்கோள்களை டைரியொன்றில் எழுதிவைத்து செல்லுமிடமெல்லாம் சுமந்துகொண்டு அலைந்திருக்கிறேன். அப்போது எவரேனும் என்னிடம் வந்து, `குழந்தாய்! இக்கவிஞன் பிறந்த மண்ணில் நீயும் பாதம் பதிப்பாய்... அவன் நேசித்த லெபனீயப் பனிமலைகளின் முன்னால் விழிவிரித்து வியந்து நிற்பாய்' என்று ஆரூடம் சொல்லியிருந்தால்கூட சத்தியமாக நம்பியிருக்க மாட்டேன்.

லெபனான்
லெபனான்

திருமணத்துக்குப்பின் 2009-ம் ஆண்டு பிப்ரவரி ஏழாம் தேதிதான், முதன்முதலாக என் புகுந்தநாடான குவைத்துக்குள், `மணமகளே மருமகளே வா வா' என்ற பாடல் மனத்துக்குள் ஒலிக்க வலதுகால் எடுத்துவைத்து நுழைந்தேன். அதற்கு முன்பே டிசம்பரில் தேனிலவுக்காக சிங்கப்பூர், மலேசியா சென்று வந்திருந்தோம். அதன்பின் 2013-ம் வருடம் பிப்ரவரியில்தான் லெபனான் சென்றோம். இவ்வரிசையில் முதல் மூன்று நாடுகளை விட்டுவிட்டு நான் நேரடியாக லெபனானைப் பற்றிப் பேசத் தொடங்கியதற்கு, அது இன்றளவும் என் மனத்துக்கு மிகவும் அணுக்கமான நாடாகவும் மறக்கவியலாத பயணமாகவும் அமைந்திருப்பதே காரணம்.

என் கணவர் சித்துதான் லெபனானைத் தேர்ந்தெடுத்தார். அமுதினி அப்போது இரண்டரை வயதுக் குழந்தை. கீர்த்தினி பிறக்கவில்லை. அமுதினி அப்போது குருவிகள் கொத்தித் தின்பதைப்போல தேர்ந்து தேர்ந்து உண்பாள். வாழைப்பழம், வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு, பால், ரசம் சாதம், பருப்பு சாதம் என்று அவளுடைய உணவுப்பட்டியல் அப்போது விரல்விட்டு எண்ணிவிடக் கூடியது. இவளைத் தூக்கிக்கொண்டு இந்திய வாடையில்லாத ஓர் அந்நிய தேசத்துக்குப் போவதற்காக ஏராளமான முஸ்தீபுகள் செய்ய வேண்டியிருந்தன. பயணத்துக்காக இரண்டு பெரிய பெட்டிகளை நிரப்பி மூடியிருந்தேன். ஒன்றில் என்னுடையதும் சித்துவுடையதும். அதற்குச் சமமான மற்றொன்றில் முழுவதும் இரண்டு வயதுக் குழந்தைக்கான பொருள்கள்!

ஐந்து நாள் பயணம்தாம். குழந்தையென்பதால் முன்னெச்சரிக்கையாக நாளுக்கு நான்கு உடைகள், ஸ்வெட்டர்கள், குல்லாக்கள், கையுறை, காலுறை, போர்வைகள், துண்டுகள், அவளைப் பிரிய விரும்பாத பொம்மைகள், டயப்பர்கள், பால் பவுடர், சளி, காய்ச்சல், தொண்டைவலி போன்றவற்றை எதிர் கொள்ளத்தயாராக மருந்துகள், தெர்மாமீட்டர், பேண்ட் எய்டுகள், களிம்புகள் அடங்கிய முதலுதவிப்பெட்டி, செருப்பு - ஷூ வகையறாக்கள், தேவைப்படுமோ என நீச்சல் உடைகள், ஹேர் டிரையர், ஃப்ளாஸ்க், தண்ணீர் பாட்டில், பால் கரைக்க டம்ளர்கள், சோப்பு, ஷாம்பூ, க்ரீம், பிஸ்கட்டுகள் - சாக்லேட்டுகள்... இப்படி நிரப்பியதில் பெட்டி வெடித்துவிடுவதுபோல மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது.

லெபனான்
லெபனான்

எத்தனை எடுத்த பின்னும், எடுக்க மறந்த ஒன்று போய்ச்சேர்ந்த பின்னால் நினைவுக்கு வருவதுதானே சிறந்த பயணத்தின் இலக்கணம். அப்படி நான் எடுக்க மறந்த ஒன்று குடை. லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இறங்கி நாங்கள் தங்கவேண்டிய ஹோட்டலுக்குப் போய்ச் சேருவதற்குள்ளாக அந்தி மயங்கி இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. மணியென்னவோ மாலை 4:00 தான் ஆகியிருந்தது. கருமேகங்கள் சூழ்ந்துகொண்டதால் ஊரே திடீரென விளக்கணைத்தாற்போல இருண்டு விட்டது. பெருமழைக்கான அத்தனை முகாந்திரங்களையும் வானம் செய்து கொண்டிருந்தது. ஹோட்டலில் பெட்டிகளை இறக்கிவைக்கும்போது, வெளியே கிளம்பி மழைக்குள் மாட்டிக்கொள்வோமா, பயணக் களைப்பில் ‘அப்பாடா’வென ஓய்வெடுத்துக் கொள்வோமா எனப் பெரும் குழப்ப மாயிருந்தது.

நாங்கள் தங்கியிருந்த 35 Rooms ஹோட்டலைப் பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும்.

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான் நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புதான்
கலீல் ஜிப்ரான்

`35 Rooms' என்பதுதான் அதன் பெயரே! அறை முன்பதிவு செய்வதற்காக இணையத்தில் அதன் புகைப்படங்களைப் பார்க்கும்போதே அங்கிருக்கும் அத்தனை அறைகளிலும் தங்கிச் செல்ல வேண்டும் போல ஆவலாகி விட்டது. அத்தனை அழகுடன் ரசனையுடன் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்ட, மிகுந்தோ குறைந்தோ இடர்செய்யாத கச்சிதமான அறைகள். ஒவ்வோர் அறையிலும் படுக்கையின் பின்னால் வரையப்பட்டிருக்கும் சுவரோவியம் அவ்வளவு அழகு. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையின் சுவரில் பச்சைப் பசுங்கொடிகள் ஓவியமாகப் படர்ந்திருந்தன. அது கொடுத்த புத்துணர்வில் பெட்டிகளைப் போட்டுவிட்டு உடனேயே கிளம்பிவிட்டோம்.

Pegeon Rocks என்றோர் இடம். எப்போதோ வந்த பூகம்பத்தில் உடைந்து சிதறியவை போக, தப்பிப் பிழைத்து கடலுக்குள் எஞ்சி நிற்கும் ஜோடிப் பாறைகளுக்குத்தான் அந்தப் பெயர். ஒழுங்கற்ற இரண்டு பாறைகளில் அலைகளும் உப்புக் காற்றும் வரைந்திருக்கும் குழந்தைத் தனமான கிறுக்கல்களைக் காணத்தான் அங்கே அத்தனை மக்கள் தினந்தோறும் குழுமி நிற்கிறார்கள்.

`ஒழுங்கு என்பது நாம் அறிந்த வரிசை முறையையும் தர்க்கத்தையும் கொண்டது. ஒழுங்கின்மை என்று நாம் சொல்வது நமக்குத் தெரியாத ஒழுங்கை' என்று ஜெயமோகன் எப்போதோ எழுதியிருந்தார். காலை முதல் மாலை வரை வகுக்கப்பட்ட, திட்டமிட்ட ஒழுங்குகளுக்குள் வரையறைக்குள் வாழ்ந்து பழகிவிட்ட மனிதர்கள், ஒழுங்கின்மையிலும் அற்புதமான அழகு இருக்கிறதென்பதை இதைப் போன்ற தருணங்களில்தாம் உணர்கிறார்கள்.

 காயத்ரி சித்தார்த் குடும்பம்
காயத்ரி சித்தார்த் குடும்பம்

நீலத்தூரிகை கொண்டு கடலும் வானும் வரைந்த ஓவியன், மறதியாக அதே தூரிகையில் ஆரஞ்சு வண்ணத்தைத் தொட்டெடுத்து வரைந்ததுபோல, வண்ணக் கலவையாக அங்கே தினமும் சூரிய அஸ்தமனம் நிகழ்கிறது. அந்நிகழ்வுக்கு இதம்கூட்டுவதுபோல குளிர்க்காற்றும் மழைச்சாரலும் மனத்தை நனைக்கின்றன. அவ்வனுபவத்தில் திளைத்து நிற்கும் மனிதர்கள் மெய்ம்மறந்து, தாம் நிற்கும் நிலம்மறந்து, அக்கணத்தின் இன்பத்திலூறி `How romantic!' என்று திருவாய் மலர்கிறார்கள்.

நாங்களும் அதைத்தான் செய்தோம். மழை வருவதற்குள் போய்விட வேண்டுமென நாங்கள் கிளம்ப, நாங்கள் செல்வதற்குள் வந்து விட வேண்டுமென மழைத்தூறல் தொடங்க, சரியாக இருவரும் Pegeon Rock-ல் சந்தித்துக் கொண்டோம். குடையை மறந்துவிட்டதால், அருகிலிருந்த காபி ஷாப்பில் நின்றபடி மழையை ரசித்து, மழை வழிவிட்டதும் கடலையும் அலையையும் பெய்ரூட்டின் கடற்புற நுழைவாயிலென தன்னைத் தானே செதுக்கிக்கொண்டிருக்கும் பாறையை ரசித்து களைத்துத் திரும்பினோம்.

வாருங்கள் ரசிப்போம்!