Published:Updated:

2018-ல் மும்பை, 2019-ல் பெங்களூர், 2020-ல் சென்னையா? டாம்டாம் ஆய்வு சொல்வது என்ன? #Infographics

2020-ல் சென்னையா?

உலகிலேயே அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகரங்களின் பட்டியலில் தற்போது பெங்களூர் முதலிடத்தில் உள்ளது.

Published:Updated:

2018-ல் மும்பை, 2019-ல் பெங்களூர், 2020-ல் சென்னையா? டாம்டாம் ஆய்வு சொல்வது என்ன? #Infographics

உலகிலேயே அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகரங்களின் பட்டியலில் தற்போது பெங்களூர் முதலிடத்தில் உள்ளது.

2020-ல் சென்னையா?

அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் பல்வேறு தொடர் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனுடன் போக்குவரத்து நெரிசலும் சேர்ந்து கொண்டது. இந்தியப் பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, வாகன உற்பத்தி எனப் பல்வேறு புதிய தளங்களில் இந்தியா வளர்ச்சியடைந்து வந்தாலும், தொடர் போக்குவரத்து நெரிசலில் எந்த வித மாற்றத்தையும் இதுவரை காணவில்லை. கடந்த 5 வருடங்களில் வாகனங்களின் எண்ணிக்கையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெருகிவிட்டது.

Traffic  - Reference photo
Traffic - Reference photo

பரபரப்புடன் இயங்கும் நகரங்களில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி ஒவ்வொரு நாளும் துன்புறுகின்றனர் மக்கள். உதாரணமாக, சென்னையில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடமாக தேனாம்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், எல்டாம்ஸ் சாலை போன்ற இடங்களைக் கூறலாம். சமீபத்தில் எல்.ஐ.சி முதல் அண்ணா சாலை வரை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதுவரை பல்வேறு சாலைகளைப் பயன்படுத்தி வந்தவர்கள் தற்போது ஒரே சாலையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

அண்ணா சாலை
அண்ணா சாலை

பிராட்வே வழியாகக் கிண்டி செல்பவர்கள் தேனாம்பேட்டை, நந்தனம் சிக்னலில் குறைந்தபட்சம் 7 நிமிடங்களுக்கு மேல் சிக்னலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள், குழந்தைகள் பெண்கள் எனப் பலர் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக, காலை 9 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மோசமான நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ, மேம்பாலங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் அதை மக்கள் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.

Traffic  - Reference photo
Traffic - Reference photo

அண்ணாசாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதிய மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால், அந்தப் பகுதியில் மேம்பாலம் தொடர்பாக இதுவரை எந்த வித முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. போக்குவரத்து விதிமீறலுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டாலும், தினமும் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அரசு சார்பில், முறையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும்.

traffic
traffic

சமீபத்தில் டாம்டாம் வெளியிட்டுள்ள போக்குவரத்து அட்டவணை (Traffic Index 2019) அறிக்கையின்படி, உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடத்தில் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதலிடத்தில் இருப்பது பெங்களூர். இங்கு 71 சதவிகிதம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர் மக்கள் ஓர் ஆண்டுக்கு 243 மணி நேரம், அதாவது 10 நாள்கள் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் மட்டுமே சிக்கி, தங்கள் நேரத்தைக் கழிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் 2019 ஆகஸ்ட் 20-ம் தேதிதான் பெங்களூர் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகவும் மோசமான நாள் எனக் கூறப்பட்டுள்ளது.

Bengaluru traffic
Bengaluru traffic

ஓராண்டுக்கு, மும்பையில் 209 மணி நேரமும், புனேயில் 193 மணி நேரமும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்குகின்றனர். பெங்களூருவில் இரவு 8 மணிக்கு மேல் பயணித்தால், ஒரு வருடத்தில் ஐந்து மணி நேரத்தை மிச்சம் செய்யலாம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த மும்பை இந்த ஆண்டு நான்காவது இடத்தில் உள்ளது. மும்பையில் 65 சதவிகிதம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொடர்பாக டாம்டாம் (TomTom) கடந்த 9 வருடங்களாகத் தகவல்களை வெளியிட்டு வருகிறது.

2019-ம் ஆண்டுக்கான தகவல் எடுக்க இவர்கள் பயணித்த தூரம் 356,601,200,370 கி.மீ. அதாவது, இவ்வளவு தூரம் பயணிக்க 14 நாள்கள் ஆகும். இவ்வளவு தூரத்தில் சூரியனிலிருந்து நெப்டியூன் வரை 79 முறை பயணம் செய்யலாம்.
Traffic Index 2019
Vikatan Infographics
Vikatan Infographics

2019-ம் ஆண்டில், 6 கண்டங்கள் மற்றும் 57 நாடுகளில் உள்ள 416 நகரங்களில் எடுக்கப்பட்ட தகவலின்படி, முதலிடத்தில் பெங்களூரு 71 சதவிகிதம் போக்குவரத்து நெரிசலுடனும், இரண்டாவது இடத்தில் பிலிப்பைன்ஸின் மணிலாவும் (71%), மூன்றாவது இடத்தில் கொலம்பியாவின் பொகோட்டாவும் (68%) உள்ளது. அதேபோல் நான்காவது இடத்தில் மும்பை (65%) உள்ளது. 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, உலகம் முழுவதும் 63 நகரங்களில் போக்குவரத்து நெரிசலானது கணிசமாகக் குறைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 239 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் மோசமாக அதிகரித்துள்ளது. 2020-ல் இந்தப் பட்டியலில் சென்னை வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதே பல்வேறு அமைப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த உங்கள் அனுபவத்தை கமென்ட்டில் பகிரலாமே.