ஓடைக் குளியல்… அந்துப்பூச்சி… நண்டு பிடித்தல்… வேலூருக்குப் பக்கத்தில் அற்புத டூரிஸ்ட் ஸ்பாட்!

கிரேட் எஸ்கேப்: டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (எலெக்ட்ரிக்)

புயல் மழை அடித்த நேரம், வெறும் 200 கிமீ மட்டுமே ஓடிய நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஒன்று கிண்ணென நம் அலுவலகத்தில் நின்றிருந்தது. அது, புது மாடலான நெக்ஸான் EV Max. ரெகுலர் நெக்ஸானைவிட அப்டேட் செய்யப்பட்ட 40.5kWh பேட்டரி. எக்ஸ்ட்ரா ரேஞ்ச் தரும் என்பது சிறப்பு. நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் பாகிஸ்தான், இமயமலை எல்லாம் போய் பலர் கின்னஸ் சாதனை செய்திருந்தாலும், நாம் கின்னஸ் சாதனையெல்லாம் செய்யப் பிறக்கவில்லையே! ஜஸ்ட் சார்ஜிங்குக்கு அலையாமல் ஜாலியாக ஊர் சுற்றினால் போதும். எலெக்ட்ரிக் கார் என்பதால், பாண்டிச்சேரிக்குத்தான் திட்டம் தீட்டியிருந்தோம்; ஆனால், புயல் நம்மைக் கடக்கும்போது, நாம் புயலைக் கடக்க விரும்பவில்லை. எனவே, நெக்ஸானை வேலூருக்குத் திருப்பினோம். ‘‘இங்க அமிர்தி பூங்கானு ஒரு மிருகக் காட்சி சாலை இருக்கு; செம க்ளைமேட் வேற!’’ என்று நம்மை ஆசை மூட்டியதே வேலூரைச் சேர்ந்த நமது வாசகர் ஆஷிஷ் கண்ணா.
மோ.வி பற்றி, கிரேட் எஸ்கேப் பற்றி, கார்கள் பற்றி அக்குவேறு ஆணி வேராகப் பேசிக் கொண்டே வேலூரில் நெக்ஸானில் ஏறிக் கொண்டார் ஆஷிஷ் கண்ணா. அமிர்திக்குச் சத்தமில்லாமல் ஒரு பயணம்!
சென்னையில் இருந்து ஒன்டே ஸ்பாட் ஆகவே அமிர்தி பூங்காவை செலெக்ட் செய்து கொள்ளலாம். ஆனால், நமது திட்டம் அது இல்லை. அமிர்தியில் செமயான க்ளைமேட் என்றார்கள். இருந்து தங்கிப் பார்க்க ஸ்கெட்ச் போட்டோம்.
சென்னையில் இருந்து கிளம்பும்போதே மழை. மழையில் எலெக்ட்ரிக் வாகனம் ஓட்டப் பலருக்குப் பயம் இருப்பது உண்மைதான். ஆனால் நெக்ஸானில் பயமே ஏற்படவில்லை. ICE இன்ஜின் கார் மாதிரி கெத்து காட்டியது.
வேலூர் வரை 2 டோல்கேட்கள் இருந்தன. பூந்தமல்லியில் ஒரு நல்ல சைவ உணவகத்தில் குறைவாகச் சாப்பிட்டுக் கொண்டோம். மதியம் ஆம்பூர் பிரியாணி சாப்பிடத் திட்டம் தீட்டியிருந்தோம். நம் புகைப்பட நிபுணர் கவலை கொண்டார். ‘அண்ணே, நாமதான் ஆம்பூர் வரையும் போகலையே’ என்றார்.


வேலூர் வரைதான் பயணம்; மதியம் ஆம்பூர் பிரியாணிப் பிரியர்களுக்குச் சில சாய்ஸ்கள் உண்டு. நம்ம வீடு, வேலூர் கிச்சன், ஸ்டார் பிரியாணி – போன்ற உணவகங்களில், அதே ஆம்பூர் டேஸ்ட்டுடன் நாக்கில் ஒட்டிக் கொள்ளும் அளவு சீரக சம்பா பிரியாணி கிடைக்கும்.
‘கைதி’ கார்த்தி மாதிரி மூவரும் ‘நம்ம வீடு’ எனும் ஓட்டலில் வெளுத்துக் கட்டினோம். என்ன, கொஞ்சம் காஸ்ட்லி! வேலூர் ஸ்பெஷல் ‘தவா சிக்கன்’ இன்னும் அவாவைத் தூண்டியது.
அமிர்தியில் இருட்டும் வரை என்ஜாய் பண்ணுவதற்குப் பெரிதாக இல்லை. அதேபோல், அமிர்தி பக்கத்தில் ரூம்களும் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அதனால், வேலூரிலேயே தங்கல். பிக்கல் பிடுங்கல் இல்லாத ஒரு ஓட்டலில் இரவுத் தங்கல்.
மறுநாள் அதிகாலையிலேயே கிளம்ப நினைத்துக் கொஞ்சம் தாமதமாகத்தான் அமிர்திக்கு நெக்ஸானைக் கிளப்பினோம். 28% சார்ஜிங் இருந்ததாகச் சொல்லியது நெக்ஸானின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர். 72 கிமீ வரை போகலாம்.
ஆனால் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து சுமார் 45 கிமீ அமிர்திக்குப் போக வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், அமிர்தி ரிட்டர்னில் பாதி வழி வேண்டுமானால் வரலாம். இத்தனைக்கும் நெக்ஸானில் எக்கோ மோடு, சிட்டி மோடு என்று பயந்து பயந்துதான் காரோட்டினேன்.
சட்டென Tata Power EZ எனும் மொபைல் ஆப்பை இன்ஸ்டால் செய்து, செக் செய்தோம். பக்கத்தில் எம்ஜி நிறுவன ஷோரூமில் சார்ஜிங் பாயின்ட் காட்டியது. காரின் VIN (Vehicle Identification Number) –ஐப் பதிவு செய்து, ஆப் மூலம்தான் பேமென்ட் செய்ய வேண்டும். 800 ரூபாய்க்கு 90% சார்ஜ் ஏறியிருந்தது. 45 நிமிடம் ஆகியிருந்தது. அந்த பிரேக் டைமில் புத்திசாலித்தனமாக பிரேக்ஃபாஸ்ட்டை ஃபாஸ்ட்டாக முடித்துக் கொண்டோம்.
அப்புறமென்ன… பயத்தை ஒத்தி வைத்துவிட்டு, ‘எட்றா வண்டியை’ என்று ஒரு மிதி. ஸ்போர்ட் மோடில் ஓட்டுவதற்கு நெக்ஸான் இத்தனை ஜாலியாகவா இருக்கும்! அமிர்தியெல்லாம் பத்தவில்லை. விட்டால் பெங்களூர் போய்விடும்போல… அப்படியொரு ஸ்போர்ட்டினெஸ் – ஸ்போர்ட் மோடில்.
அமிர்தி போகும் வழியெங்கும் பாதை கலந்து கட்டி போதை ஏற்றியது. முதலில் ‘பாரதிராஜா’ படத்தில் வருவதுபோன்ற கிராம லொக்கேஷன், பச்சைப் பசேல் நெல்/கரும்புக் காடுகள், ஒற்றையடிப் பாதை, மண் பாதை என்று நிஜமாகவே சொக்கிப் போனது மனது. ‘மலைப் பாதை மட்டும் மிஸ்ஸிங்’ என்று நினைத்திருந்த வேளையில்… ‘இந்தாங்க புடிங்க’ என்று கிழக்குத் தொடர்ச்சி மலை, பெருகரம் நீட்டி வேறு வரவேற்றது.
அமிர்தியில் ஆறு மற்றும் அருவி உண்டென்று கேள்விப்பட்டோம். ‘அதுதானே… மலை இல்லாமல் அருவி எப்படி’ என்று வாக்குவாதம் செய்தபடி கிளம்பினோம்.
நிறைய இடங்களில் போர்டே இல்லை. கூகுளும், சில நல்ல கிராமத்து உள்ளங்களும்தான் பாதை காட்டி உதவினார்கள். நல்லவேளையாக – கட்டக் கடைசியாக ஒன்றிரண்டு கார்னரிங்குகளில் மட்டும் ‘அமிர்தி பூங்கா’ என்று சைன் போர்டு இருந்தது.
செக்போஸ்ட் வந்தது. என்ட்ரன்ஸே மிரட்டலாக இருந்தது. பொள்ளாச்சியின் டாப் ஸ்லிப், கேரளாவின் பரம்பிக்குளம் போன்ற பகுதிகளின் என்ட்ரன்ஸ் மாதிரி த்ரில்லிங்காக இருந்தது. ஆனால், ஆளுக்கு 10 ரூபாய்தான் கட்டணம் வசூலித்தார்கள். கார், கேமராவுக்குத் தனி. ரொம்பவெல்லாம் இல்லை. பட்ஜெட் கட்டணம்தான். அந்த த்ரில்லிங் பூங்காவுக்குள் போனால், காலியாகிப் போனது. ஆம், ‘சிறு மிருகக் காட்சி சாலை’ என்று அங்கங்கே எழுதி, போர்டு மாட்டியிருந்தார்கள்.
‘ரன்’ படத்தில் விவேக் சொல்வாரே… ‘செங்கல்பட்டுனு சொல்லும்போதே மைல்டா டவுட்டு வந்துச்சுடா’ என்று. அதுபோல், சிறு மிருகக்காட்சி சாலை எனும்போதே சந்தேகம் வரத்தான் செய்தது. ஆனாலும் இந்தளவு குறு மிருகங்கள் மட்டும்தான் இருக்கும் என்று நினைக்கவில்லை.
மிருகக்காட்சி சாலை நுழைவுவாயில், போகும் பாதை எல்லாமே ரசனையாக இருந்தது. கூட, க்ளைமேட் வேறு. புயல் வருவதற்கு முன்பான அழகான இருளும்; மழை நேரக் குளிரும் இருக்குமே… அடடா! அப்படியாரு ஜிவ் சூழலில், மிருகக்காட்சி சாலை முழுக்க சிங்கம், புலி, கரடி என்று வனவிலங்குகளின் படங்களும், காடுகள் பற்றிய விழிப்புணர்வு வாசகங்களும் ஏதோ ஒரு இன்பச் சூழலை மனமெல்லாம் நிறைத்திருந்தது.
‘‘சரியான சீஸன்லதான் வந்திருக்கீங்க; குளிக்கன்னா குளிச்சுட்டுப் போங்க! ஆனா அருவிக்குப் போக முடியாது… ரேஞ்சர்கிட்ட பெர்மிஷன் வாங்கணும்… 1.5 கிமீட்டர் நடக்கணும்.. ஓகேவா… இந்தாங்க!’’ என்று சூடாய் மிளகாய் பஜ்ஜி/டீ குடுத்தார் கடைக்கார அக்கா.
நாங்கள் ஏற்கெனவே ரேஞ்சரிடம் அனுமதி வாங்கியிருந்தோம். ‘கூட வேணா கார்டு யாரையாச்சும் கூட்டிட்டுப் போங்க; தனியாகப் போக அனுமதி இல்லை’ என்று சொல்லியிருந்தார். ஆனால், பொதுநலன் கருதி ஃபால்ஸ் ட்ரெக்கிங்கை கேன்சல் செய்திருந்தோம். உள்ளேயே ‘அருவிக்குச் செல்லும் வழி’ என்று போர்டு மாட்டியிருந்தார்கள். நீங்கள் அமிர்திக்குத் திட்டம் போட்டிருந்தால்… ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை நல்ல சீஸன். அதிலும் டிசம்பர் உகந்தது. ஆஹா, அந்தச் சில்னெஸ்ஸுக்காகவே அமிர்தி வரலாம் போல!

ஜவ்வாது மலைத் தொடரின் ட்ரெக்கிங்கை மிஸ் செய்திருந்தாலும், பூங்காவுக்கு வெளியே அதன் ஜில்னெஸ் மிச்சமிருந்தது. சில பல ஏக்கர்களில் அற்புதமாக இருந்தது பூங்கா. ஆனால், சிறு மிருகங்களுக்கே பஞ்சமாக இருந்தது. நாம் போன போது கூட்டமும் அவ்வளவாக இல்லை; பராமரிப்பும் பெரிதாக இல்லை. ஆனால், பராமரிப்பு நடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.
மான்கள் மட்டும்தான் மொத்தமாகப் பார்த்தோம். சில பாம்புகள் பாம்புகளை கண்ணாடிப் பெட்டிக்குள் சுருண்டு படுத்திருந்தன. மலைப்பாம்பு செக்ஷினில் பிராய்லர் கோழிகளை உலவ விட்டிருந்தார்கள். அநேகமாக லஞ்ச் டைம் முடிந்திருக்க வேண்டும். கோழிகளைக் கண்டுகொள்ளவே இல்லை மலைப்பாம்பார். முள்ளம்பன்றியின் முள்களை க்ளோஸ் அப்பாகப் பார்த்தபோது, நமக்குப் புல்லரித்தது. பெரிய அன்னப் பறவைகள், கூழைக்கடா எனும் Pelican பறவை இனங்களின் குறும்புத்தனத்தை நன்கு ரசித்தோம். குள்ளநரிக் கூண்டு காலியாக இருந்தது. மயிலினங்கள் வெளியேயே உலவிக் கொண்டிருந்தன. முதலைகள் கொஞ்சூண்டு இருந்தன.
குழந்தைகள் என்ஜாய் செய்ய பூங்கா இருந்தது. குழந்தைகள்தான் இல்லை. ஆனால், வீக் எண்டில் நல்ல கூட்டம் வரும் என்றார்கள். அத்தனை ஏக்கர்களில் சில சிறு மிருகங்களை மட்டும் பார்த்து, நறுக் என்று முடிந்துவிட்டது டூர். அப்படித்தான் நினைத்திருந்தோம்.
ஆனால், அதற்குப் பிறகுதான் ரியல் டூரே இருந்தது. மிளகாய் பஜ்ஜிக்கார அக்கா சொன்னது நினைவுக்கு வர… ‘ஓ குளிக்கலாமே’ என்று நெக்ஸானை அப்படியே பூங்காவின் பின்புறமாக இறங்கிய சரிவில் இறக்கினோம். என்ட்ரன்ஸில் கொடுத்த வெறித்தனத்துக்கு இங்கேதான் வேலை கிடைத்தது. நிஜமாகவே ஒரு அடர்ந்த வனத்துக்குள் போவதுபோல் இருந்தது.
இறங்கிய அடுத்த சில மீட்டர்களிலேயே இரண்டு பக்கமும் ஓடை நீர். தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள் வாண்டுகள் சிலர். ‘‘இன்னைக்கு ரசத்துக்கு இது ஓகேடா’’ என்று கிளம்பிய சில வாண்டுகளைப் பிடித்தோம். பக்கெட்டுக்குள் எட்டிப் பார்த்தால்… அத்தனையும் நண்டுகள். ‘‘வாரா வாரம் நண்டு ரசம்… நண்டுக் குழம்பு/ரசம் வெச்சுடுவோம்ணே’’ என்று வெள்ளந்தியாகச் சொன்னான் ஒரு நண்டுப் பையன்.

வாண்டுகளிடம் நண்டு பிடிக்க பெரிய தொழில்நுட்பமெல்லாம் இல்லை. ஒரு பெரிய கம்பின் ஓரத்தில் கோழிக் குடலைச் சுற்றி விட்டு… ஓடும் தண்ணீருக்குள் விட்டால்… ஒரே நேரத்தில் லபக்கென பல நண்டுகள் குடலில் ஒட்டிக் கொள்கின்றன. பார்ப்பதற்கு ஜாலியாக இருந்தது. நாங்களும் சில நண்டு பிடி வீரர்களாய் மாறினோம் கொஞ்ச நேரம்.
ஆள் அரவமே இல்லாத மலைச்சாலை தொடங்கியது. இரண்டு பக்கமும் ஒரே ஒரு கார் மட்டுமே போகக் கூடிய ஒற்றையடிப் பாதையில் நெக்ஸான் போய்க் கொண்டிருந்தது. இது மாதிரி நேரங்களில் பவர் விண்டோக்களைக் கப்சிப் என இறக்கிவிட்டால்… ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். போகும் வழியெங்கும் ஓடையோ, நதியோ நீரோ சிம்பொனிச் சத்தம் மீட்டிக் கொண்டே இருந்தது.
குளிப்பதற்கு இங்குதான் என்றில்லை; வலது / இடது என்று எது பிடிக்கிறதோ… அங்கே ஓர் ஓரமாக வண்டியை பார்க் செய்து கொள்ள வேண்டியதுதான்.
உள்ளூர்க்காரர்கள் சிலரிடம் ஐடியா கேட்டால் நல்ல பலன் கிடைக்கும். இடது பக்கம் ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு… வலது பக்கம் இறங்கினால்… அடடா! புளியஞ்சோலை, தடா போன்ற ட்ரெக்கிங் ஏரியாக்கள் நினைவுக்கு வந்தன. சும்மா 200 மீட்டர்தான் இறங்கியிருப்போம். போகிற போக்கில் இயற்கையின் அழகு தெறித்தது.
ஓடையில் கால் நனைத்து… தலை சிலுப்பி… செல்ஃபி எடுத்து என்று என்ஜாய் செய்தோம். நீச்சல் அடித்துக் குளிக்கவும் தனியாக குளம்போன்று இயற்கை ஒன்றை அமைத்திருந்தது. உள்ளூர்ப் புள்ளிங்கோக்கள் சிலர் டைவ் அடித்து என்ஜாய் செய்து கொண்டிருந்தார்கள்.
சில மலை ஏரியாக்களில் அட்டைப் பூச்சிகள் தொந்தரவு இருக்கும். ஆனால், இங்கே அட்டைப் பூச்சிகள் பெரிதாகத் தென்படவில்லை. அதனால் தைரியமாகக் குளிக்கலாம். ‘‘வாவ்… அண்ணே.. ஹாக்மாத்!’’ என்று உணர்ச்சிவசப்பட்டார். HawkMoth என்பது ஒரு பூச்சி வகை. பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. வனங்களில் மட்டுமே இது இருக்கும் என்றார் ஆஷிஷ். சட்டெனப் புகைப்படம் எடுத்து, நமது புகைப்பட நிபுணர் கூகுள் லென்ஸில் சோதனை போட்டார். நிஜம்தான். தமிழில் பருந்து அந்துப்பூச்சி என்கிறார்கள் இதை. தேனீக்களுக்கு இணையானதாம் இது. வனங்களுக்கு இது அவசியமான ஒன்று. ட்ரெக்கிங் போகும்போது அந்துப்பூச்சியை அந்தர் ஆக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இங்கே குடும்பமாகவும் சிலர் ட்ரெக்கிங் வருவதையும் பார்க்க முடிந்தது. கைக்குழந்தையுடன் ட்ரெக்கிங் போய்க் கொண்டிருந்த ஒரு பெண்மணி, வாரா வாரம் இங்கு வந்து இயற்கையை ரசிப்பதாகச் சொன்னார். என்ன, இந்தக் காட்டில் சமைத்துச் சாப்பிட மட்டும் அனுமதி இல்லை. அதேபோல், இங்கே உணவுக்கும் பெரிதாகக் கடைகள் இருக்காது.. மிளகாய் பஜ்ஜி அக்கா கடையை விட்டால் வேறு ஆப்ஷன் இல்லை.
பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு வழியாக கால் நனைத்து, குளித்துவிட்டு, மனமில்லாமல் மறுபடியும் மேலேறினோம். வயிறு காலியாக இருந்தது; ஆனால், அமிர்தியின் அழகு மனதை நிறைத்திருந்தது.
அமிர்திக்குப் போறீங்களா?
வேலூரில் இருந்து 25 கிமீ தொலைவில் இருக்கிறது அமிர்தி பூங்கா. என்ட்ரி மிரட்டலாக இருந்தாலும், உள்ளே பெரிதாக விலங்குகள் இல்லை. ஆம், இது சிறு மிருகக்காட்சி சாலை என்று போர்டே வைத்திருக்கிறார்கள். நரி, முதலை, அன்னப் பறவைகள், மயில்கள், மான்கள், பாம்புகள், கழுகுகள் என்று லிமிட்டெடாக என்ஜாய் பண்ணலாம். குழந்தைகளுடன் என்ஜாய் பண்ண அற்புதமான இடம். அமிர்திக்குப் போகும்போது மதிய உணவு பார்சல் வாங்கிச் சென்று விடுவது நல்லது. பூங்கா நுழைவுவாயிலில் ஒரே ஒரு கடைதான் உண்டு. இங்கே அருவி இருந்தாலும், ட்ரெக்கிங்குக்குத் தடா! ஆனால், பார்க்கின் பின் பக்கம் கீழே இறங்கினால்… குளிப்பதற்கு ஓடை, நதி என்று தடா ரேஞ்சில் என்ஜாய் பண்ண அற்புதமாக இருக்கிறது. ஊர்ச் சிறுவர்கள் நண்டு பிடிப்பது சூப்பர் என்ஜாய்மென்ட். சென்னையில் இருந்து ஒன்டே டூரிஸமாக என்ஜாய் பண்ணலாம் அமிர்தி பூங்காவை. 2 நாட்கள் என்றால், வேலூரில் தங்குவது நல்லது.
வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!