ஜம்முவின் பிரசித்திபெற்ற ரகுநாத் மந்திர் இருக்கும் ரகுநாத் பஜார் சாலையில் அவ்வருடத்தின் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதழ் ஒன்று எங்களனைவருக்கும் கிடைத்தது.
அதுவரை ஹோலி பண்டிகையை வண்ணம் பூசி விளையாடும் ஒரு கேளிக்கை விழாவாக மட்டுமே அறிந்திருந்த எனக்கு அவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியையும், ஹோலி பண்டிகை மட்டும் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளதன் காரணம் என்னவென்று அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையுமென்று தோன்றியதால் அவ்விழாவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தேன். என்னைவிட ஆர்வமாகத் தயாரானாள் எனது தோழி மாதவி.
மாதவியின் உடல்வாகும் கருங்கூந்தல் நீளமும் எங்கள் நட்பு வட்டத்தில் அவளுக்கென்று நிறைய அபிமானிகளைப் பெற்றுத் தந்திருந்தது. ஒரு சாயலில், "அன்புள்ள மான்விழியே, ஆசையில் ஓர் கடிதம்" எனும் பாடலில் நடித்த நடிகை ஜமுனாபோல் இருந்தாள் மாதவி. என்னைவிட வயதில் சில வருடங்களே மூத்தவள். அவளைவிட பதினைந்து வயது மூத்தவரான முறைமாமன் யோகானந்த் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு ஜம்முவுக்கு அப்போதுதான் இடமாற்றலாகி வந்திருந்தாள். வட இந்தியாவில் அதிக வருடங்கள் வசித்த அனுபவத்தால் அவளுக்கு ஹோலி பண்டிகை பற்றிய அதிக பரிச்சயம் இருந்தது.
அழைப்பிதழ் கிடைத்த நாளிலிருந்தே அவளது உற்சாகம் கரைபுரண்டோடத் தொடங்கியது. என்னைப்போலவே அவளும் ஒரு தென்னிந்தியப் பெண். அப்படியிருக்க, அவளது எதிர்பார்ப்பும் ஆர்வமும் அளவுக்கதிகமாக இருந்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
"ஷாலு, மென்மையான வெளிர் நிற ஷிஃபான் சேலை அல்லது சுடிதார் அணிந்துகொள்ளுங்கள், ஹோலிக்கு இங்கு பெண்கள் அப்படித்தான் அணிவார்கள். நாமும் அப்படி அணிந்துகொள்வோம்."மாதவி
அவள் கூறிய ஆடைத்தேர்வைவிட அவளது உடலிலும் உள்ளத்திலும் குடிகொண்ட உற்சாகத் ததும்பல்தான் என்னை அதிகம் ஆச்சர்யப்படுத்தியது. "எப்படிப் பார்த்தாலும் அது நம் பகுதி பண்டிகையல்லவே... பின்பு ஏன் இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறீர்கள்?" என்றேன்.
அவள், "உங்களுக்கென்ன தெரியும், அங்கு வந்து பாருங்கள்... ஆண்களும் பெண்களும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைத்து எப்படி விளையாடி மகிழ்கின்றனர் என்று புரியும். அன்று ஒரு தினம் மட்டும் எதுவும் தவறில்லை தெரியுமா?" என்றாள். தனக்கு வஞ்சிக்கப்பட்ட ஏதோவொரு சுதந்திரம் அங்கு கிடைக்கப்போவதை எண்ணி அகமகிழ்ந்திருந்த மாதவியைப் பார்க்கச் சற்று அச்சமாகவும் இருந்தது. அவளுடன் சேர்ந்து விழாவில் கலந்துகொண்டால் என்னையும் அவளது இன்பப் பெருங்கடலில் மூழ்கடித்துவிடுவாளோ என்று அஞ்சினேன். இயல்பில் நானும் கொண்டாட்ட விரும்பிதான் என்றாலும் எனது நட்பு வட்டத்தை கவனமாகத் தேர்வுசெய்து கொண்டாடுபவள். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்களென்று வரும்போது நானொரு தொட்டாச்சிணுங்கியாக மாறிவிடுவதுண்டு.

எனது ஆர்வமின்மை மாதவியை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குல்வந்தி தேவி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த காமேஷ்வர் பிரசாத் ஆகியோரின் குடும்பத்துடன் இணைந்து ஹோலி திருவிழாவுக்குத் தயாரானாள்.
காமேஷ்வர் பிரசாத், மாதவியின் முதன்மை அபிமானி. என்மீதும் அவரின் காமக்கணைகள் அவ்வபோது பாய்ந்ததுண்டு. அவருக்குப் பணி ஓய்வு சில மாதங்களில் வரவிருந்தது. இருப்பினும், அவரின் கலையார்வத்துக்கும் பெண் விருப்பத்துக்கும் குறைவிருக்கவில்லை. அவரால் யாருக்கும் எந்தத் தீங்கும் நேராது. அவர் ஒரு கலாரசிகர் அவ்வளவே.
"தென்னிந்தியப் பெண்களின் நீள விழிகளுக்கும், கருங்கூந்தலுக்கும், அறிவு கூர்மைக்கும் எனது செல்வங்களையெல்லாம் எழுதிவைக்கவும் நான் தயார்" என்று உணர்ச்சிவசப்படும் பெரியவர் அவர். அவர் பேசுவதில் காமம் கொப்பளித்தாலும், அது விரசமாக ஒருபோதும் தோன்றியதில்லை. அவர் பெண்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தார். கவிதை பாடுவதிலும், உணவு சமைப்பதிலும் அதிக ஆர்வம்கொண்டவர். ஹோலி பண்டிகைக்கு முன்தினம் அவரது வீட்டில் 'ஹோலிகா தஹன்' நடைபெறுவதால் எங்களை அன்புடன் அழைத்திருந்தார் காமேஷ்வர். "அவசியம் வாங்க, உங்களுக்கு என் கைகளால் தயாரித்த சுவையான போஜ்புரி மால்புவா பரிமாறுவேன். கூடவே ஹோலி பண்டிகையைப் பற்றிய சுவையான கதைகளும் இலவசம்" என்று கண்களில் ரசனை சொட்டச் சொட்டக் கூறினார். அவரின் அழைப்பை மறுப்பதென்பது எந்தவொரு பெண்ணுக்கும் இயலாத காரியம்.

ஹோலி பண்டிகைக்கு முந்தைய தினம் காமேஷ்வர் பிரசாத் வீட்டில் அனைவரும் கூடினோம். அவர் வீட்டு வாசலில் ஆளுயர அளவில் விறகுக் கட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. பிரகலாதனின் அத்தையான ஹோலிகா அவனைத் தீயிலிட்டு அழிக்கும் முயற்சியில் தோற்று, தானே அத்தீயில் எரிந்து சாம்பலாகிவிடுவாள். அசுரர்களை அழித்து, தேவர்கள் வெற்றி பெறும் மற்றொரு புராணக் கதையைக் கூறி முடித்தார் காமேஷ்வர்.
கதை முடிந்ததும் அனைவரும் கற்பனையாக ஹோலிகாவை அழிக்க முற்பட்டனர்."உங்கள் புராணவ் சடங்குகள் அனைத்திலும் ஏதாவதொரு வகையில் பெண் பலியிடப்பட வேண்டுமென்பது நியதியா?" என்றேன். "அவள் அரக்கி, அதனால் அழிந்தாள்" என்றனர் சுற்றியிருந்தவர்கள் அனைவரும். அவர்களில் பெண்களும் இருந்தனர். "சரி... அந்த அரக்கியின் தோற்றத்தை உங்கள் புராணங்கள் விளக்கியிருக்குமே... அதையும் கூறுங்கள்" என்றேன். உடனே காமேஷ்வர் பிரசாத், அரக்கியின் தோற்றத்தை நாடக பாணியில் விளக்கத் தொடங்கினர். "அவள் கருத்த உருவம் கொண்டவள், கைகால்களில் ரோமங்கள் மிகுந்திருந்தன. பெரிய கண்கள், பெரிய மார்பகங்கள் எனப் பார்க்கவே பயங்கரமாக இருந்தாள் ஹோலிகா" என்றார். நான் அவரை இடைமறித்தேன்.

``எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள்... நீங்கள் கூறும் சாயலில்தான் எங்கள் பெண்கள் இருப்பர், அப்படியென்றால், நாங்கள்தான் அந்த அசுரர்களா?" என்றேன். காமேஷ்வர் உட்பட அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். "இல்லை... அப்படியல்ல, இது முன்னோர்கள் வழிவந்த கதை. அவர்கள் அப்படித்தான் வர்ணித்திருக்கிறார்கள்" என்று வேகமாக மறுத்தார் காமேஷ்வர்.
"கதைகளின் வடிவில் ஓரினம், மற்றோர் இனத்தின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை மறைமுகமாக வெளிப்படுத்தும் செயலை உங்கள் முன்னோர்கள் தொடர்ந்து செய்திருக்கின்றனர். அக்கதைகளின் குறைகளை நீக்கிவிட்டு வருங்காலத்துக்கு கூற முயலுங்கள், இனங்களிடையே இணக்கம் பிறக்கும்" என்றேன். அங்கு அசெளகரியமான சூழல் நிலவியது. அதை யாரும் விரும்பவில்லை என்பது புரிந்தது. குறிப்பாக, பெண்கள். கொண்டாட்ட மனநிலையில் மூழ்கியிருந்தவர்களின் கவனத்தைச் சிந்தனையின்பால் திருப்பியதை அவர்கள் விரும்பவில்லை. காமேஷ்வர் பிரசாத் நிலைமையை சகஜப்படுத்தினார்.
அனைவருக்கும் சூடான போஜ்புரி மால்புவா பறிமாறப்பட்டது. கோதுமை மாவில் சீனியும் வாழைப்பழங்களும் பிசைந்து அதனுடன் உலர் திராட்சை, முந்திரி, சோம்பு, பாதாம் இவற்றையும் அரைத்து சுத்தமான நெய்யில் பொரித்தெடுத்த அப்பம் போன்ற தின்பண்டம் அது. அதன் ருசியில் நாங்கள் அதுவரை பேசிய அனைத்து தர்க்கவாதப் பேச்சுகளும் மறந்து போயின. என் மனதிலும் கொண்டாட்ட உணர்வு கூடியது. "சரி வேறு கதைகள் கூறுங்கள்" என்று காமேஷ்வரைத் தூண்டினேன்.
காமேஷ்வர் மீண்டும் உற்சாகத்துடன் அனைவரையும் கைதட்டி அழைத்தார். "ஹோலியின் ராசலீலை தெரியுமா உங்களுக்கு?" என்று தொடங்கினார். அனைவரும் ஆனந்த கோஷமிட்டனர்.
``கோபியர்களின் நாயகனான கிருஷ்ணனுக்கு ராதையின் மீது மட்டும் அலாதியான காதலிருந்தது. தனது கருமையான நிறத்தால் ராதை தன்னை ஏற்காமல் போய்விடுவாளோ என்று கலங்கினான் கிருஷ்ணன். அவனது கலக்கத்தைப் போக்க எண்ணிய அவனுடைய தாய் யசோதை, கிருஷ்ணனின் முகத்தில் சிவப்பு நிற சாயத்தைப் பூசி அனுப்புகிறாள். `இப்போது உன் நிறம் மாறிவிட்டது. ராதை உன்னை நிச்சயம் ஏற்பாள்’ என்கிறாள் யசோதா.
சிவப்பாக, அழகாக மாறிய கிருஷ்ணனுடன் ராதை புரியும் ராசலீலை கொண்டாட்டமே ஹோலி கொண்டாட்டம். ராதைக்கு பச்சை நிறம் பூசுகிறான் கிருஷ்ணன். அது வளமையின் அறிகுறி. கிருஷ்ணனின் சிவப்பு நிறம் காதலின் அறிகுறி."
கவித்துவமாகக் கதை கூறிய காமேஷ்வரின் குரலும், முகபாவங்களும் அங்கிருந்த அனைவரையும் ஒருவித பரவசக் கிளர்ச்சியில் ஆழ்த்தின.
பெண்களின் உடல்மொழி தளர்ந்தது, தங்களது முக்காடுகளை அகற்றி, கூந்தல் அவிழ்த்து, ஆடைகள் தளர்த்தி ஒருவர்மீது ஒருவர் சாய்ந்துகொண்டும், வேறு சிலர் தமது தோழிகளின் மடியில் படுத்துக்கொண்டும் காமேஷ்வரின் கதைகளை ரசித்து மகிழ்ந்தனர்.
காமேஷ்வர் பிரசாத்திடம் கலைநயம் மிகுந்திருந்தது. கலை அமைதி தரும் என்பதை அவர் முழுமையாக நம்பினார். அமைதியிழந்து தவிக்கும் மனங்களை ஆற்றுப்படுத்தும் சக்தி கலை வடிவங்களுக்கு மட்டுமே உண்டு என்பதை அவரிடமிருந்தே புரிந்துகொள்ள முடிந்தது. சிறு வயதில் படித்த `The Pied Piper’ கதை நினைவுக்கு வந்தது. ஊரில் சுற்றித்திரிந்த எலிகளையெல்லாம் தனது குழலிசையால் மயக்கி, தன்னைப் பின்தொடரச் செய்து ஊருக்கு வெளியே கொண்டு சென்று விடுவான் Pied Piper. அவன் குழலிசைக்கு அந்த மகிமை இருந்தது. காமேஷ்வர் Pied Piper-போல் தெரிந்தார்.

அன்று நாங்களனைவரும் உறங்கச் செல்லும்போது நேரம் நள்ளிரவைக் கடந்துவிட்டிருந்தது. மறுநாள் விழா குறித்த பரவச எணணங்கள் எங்கள் உறக்கத்தின் அளவை பாதித்தன.
மறுநாள் காலையில் கதிரவன்கூட வானத்தில் தனது கிரணங்களால் சில கூடுதல் வண்ணங்கள் தீட்டியிருந்தான். ஆண்கள், பெண்கள் என அனைவரும் தத்தமது வேலைகளில் மும்முரமாக இருந்தனர். வண்ணங்கள் குழைத்த நீரானது பெரிய மரக்கலன்களில் நிரப்பப்பட்டது. அது தவிர பல வண்ணப் பொடிகள் சிறு சிறு கிண்ணங்களில் நிரப்பப்பட்டு, அந்த மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. பெண்களும் குழந்தைகளும் தம்மை அலங்கரித்துக்கொண்டு தயாராகினர். எனது கண்கள் மாதவியைத் தேடின. அதோ அவள், அனைவரோடும் கூடிக் களிக்கத் தயாராகிவிட்டிருந்தாள். அவள் கூறியதுபோலவே வெளிர் மஞ்சள் நிறத்தில் ஷிஃபான் சேலை ஒன்று அணிந்திருந்தாள். அவளது உடல் சிற்ப வேலைப்பாட்டின் நேர்த்தியோடு நடமாடும் கலைக்கோயில் போலிருந்தாள். யோகானந்த் தூரத்தில் தன் நண்பர்களுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரது கவனம் முழுமையாக மாதவி மீதே இருந்தது. அவள் என்னவெல்லாம் செய்கிறாள் என்று செய்தித்தாள் வாசிக்கும் கவனத்தோடு அவளை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த ஒரு நாள் மட்டும் எதுவும் தவறில்லை என்பதை மாதவி மட்டும்தான் உண்மையாகப் புரிந்துகொண்டதுபோலிருந்தது.
கடந்த இரவு தாமதமாக உறங்கியதால், என்னால் விடியற்காலை எழ முடியாமற் போனது. வெளியில் பாட்டும் பேச்சும் கூத்தும் களைகட்டத் தொடங்கி வெகுநேரமான பின்னரே என்னால் இயங்க முடிந்தது. அதற்குள்ளாகவே முதற்சில சுற்றுகள் ஹோலி விளையாடி முடித்திருந்தனர் நண்பர்கள். தேநீர் இடைவேளைக்காக அனைவரும் மைதானத்தின் நடுவே கூடினோம். கறுப்பு நிறத்தில் அரக்கு நிறக் கோடுகள் வரைந்து, அதில் கண்ணாடி வேலைப்பாடு செய்திருந்த பருத்திப் புடவை ஒன்றை நான் அணிந்திருந்தேன்.

"இன்று கறுப்பு நிற ஆடை அணியக் கூடாது ஷாலு. அது நிறங்களைப் பிரதிபலிக்காது. வெளிர் நிறங்கள்தான் மற்ற நிறங்களைப் பிரதிபலிக்கும்" என்றாள் குல்வந்தி தேவி.
"வெண்மை பிரதிபலிக்கும். உண்மைதான். ஆனால் கருமை அனைத்து நிறங்களையும் உள்வாங்கும். நிறங்களின் சங்கமத்தில் விளைவதே கருமை. நான் சரியாகத்தான் அணிந்திருக்கிறேன் குல்வந்தி, வாருங்கள் தேநீர் அருந்துவோம்" என்றேன்.
தேநீர் இடைவேளை முடிந்ததும் நானும் ஹோலி விளையாட்டில் கலந்துகொண்டேன். "ராதே..." என்று ஆண்கள் கூச்சலிட்டபடி அனைத்துப் பெண்களுக்கும் வண்ணம் பூசினர். பெண்களும் பதிலுக்கு ``கிருஷ்ணா..." என்று கூச்சலிட்டு வண்ணங்கள் வானில் தெறிக்க அங்குமிங்கும் ஓடினர்.
மாதவியின் பரவசமும், சிரிப்பும், சந்தோஷமும் அவள் முகத்தின் செளந்தர்யத்தை பன்மடங்கு கூட்டியிருந்தது. இவ்வளவு சந்தோஷம் அவளுக்குள்தான் புதைந்திருந்ததா என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான். சிறிதளவு சோர்வோ அயர்ச்சியோ அவளிடம் தென்படவேயில்லை. மறுபுறம் குல்வந்தி தேவியும் மற்ற சில பெண்களும் வண்ணங்கள் குழைத்த நீரில் தடிமனான சாக்குத்துணிகளை நனைத்துப் பிழிந்தெடுத்து, சாட்டைபோல் சுழற்றி அங்கிருந்த ஆண்களின் முதுகுகளில் ஓங்கி அடித்தனர். எதிர்பாராத நேரத்தில் தாக்கப்பட்டு, முதுகில் வலியால் துடித்த ஆண்களின் களியாட்ட வெறி மேலும் அதிகரித்து அவர்கள் பெண்களை விரட்டத் தொடங்கினர். குல்வந்தி தன் கணவர் விகாஸின் முதுகில் தொடர்ந்து அடித்துக்கொண்டே விரட்டினாள். ஒரு கட்டத்துக்கு மேல் ஓடாமல் நின்றுவிட்டார் விகாஸ். குல்வந்தியைப் பார்த்துத் திரும்பிய விகாஸ், இரண்டு கைகளாலும் குலவ்ந்தியைத் தூக்கி தோள் மேல் போட்டுக்கொண்டு வேகமாக நடந்தார். குல்வந்தி ஆனந்தத்தில் பெருங்கூச்சலிட்டாள். நாங்களனைவரும் விகாஸ் என்ன செய்யப்போகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கையான வண்ண நீர்க்குளத்தில் அவளை அமிழ்த்தினார். அங்கு ஒரு களியாட்டம் அரங்கேறியது. நண்பர்களில் சிலர் தத்தமது துணையோடு நீரில் இறங்கினர். அவ்விடமே வண்ணக்கோலம் பூண்டது. சிரிப்பும், கேளிக்கையும், காமமும், காதலும் காற்றில் புத்துயிர் பாய்ச்சின.

நானும், மற்ற சில நண்பர்களும் அளவோடு விளையாடிவிட்டு, தண்ணீர் கலவை விளையாட்டைத் தவிர்த்துவிட்டு ஓரிடத்தில் கூடி பாடல்கள் பாடியபடி மகிழ்ந்திருந்தோம். சரும ஒவ்வாமை ஏற்படுமென்பதால் நான் நீர் விளையாட்டுகளில் ஈடுபடவில்லை. நீரில் குழைத்த வண்ணங்கள் சருமத்தை இறுகப் பற்றி பல நாள்களுக்கு அழியாமல் அப்படியே இருந்துவிடும்.
பிற்பகல் கடந்து மாலை சாயத் தொடங்கியிருந்தது. பகல் முழுதும் விளையாடிக் களைத்தவர்கள் சற்று இளைப்பாறினர். மூப்பின் அவதியால் காமேஷ்வர் பிரசாத் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் சென்றார். ``என்ன காமேஷ்வர், பரவசநிலை தாளவில்லையா?" என்று அவரை அனைவரும் பகடி செய்தனர். வெட்கத்தில் கூனிக் குறுகினார் காமேஷ்வர். இத்தகைய இரட்டை அர்த்த நகைச்சுவைகளுக்கு அந்நேரத்தில் குறைவிருக்கவில்லை. ஒருவரையொருவர் கேலி செய்து தூண்டுவதும், அதற்கு பதிலளிக்கும்விதமாக ஒருவர் மற்றவர் மேல் வண்ணம் பூசி நாணச்செய்வதும் என்று நாள் முழுதும் கிளர்ச்சியாட்டங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.
விழா முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் பெரிய குடுவைகளில் மஞ்சள் நிறத்தில் பால் எடுத்து வந்து அனைவருக்கும் பறிமாறினர். பாங் ( Bhang) எனப்படும் போதை தரும் இலைகளை அரைத்து, அதனுடன் உலர்பழங்கள், ஏலக்காய், ரோஜா இதழ்கள், குறுமிளகு, சோம்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து தயாரிக்கப்படும் பானம் அது. சிவராத்திரி மற்றும் ஹோலி நேரங்களில் இந்த பானம் வெகு பிரசித்தம்.

மாதவி, குல்வந்தி, மற்ற அனைவரும் Bhang அருந்தினர். நானும் அருந்தினேன். ரோஜா இதழ்களின் நறுமணத்தில் மிளகின் காரம் மற்றும் கேனபிஸ் இலையின் பசுமணத்தின் மயக்கம் ரத்த நாளங்களில் கலந்து பாயத் தொடங்கியது.
வசந்த கால மாலை வேளையில் இயல்பிலேயே காற்றில் பூக்களின் வாசம் மிகுந்திருந்தது. சோமபானத்தின் மயக்கம் அம்மாலை வேளையின் தன்மையை மேலும் அழகாக்கியது. அதுவரையில் அமைதி காத்த என் மனம், கிளர்ந்தெழத் தொடங்கியது. குழலிசைக்கும் கலைஞர்களின் விரல்கள் குழலுடன் சரசம் புரியத் தொடங்கின. அங்கு கூடியிருந்த அனைவரும் அடுத்தகட்ட ஆரவாரத்துக்குத் தயாராகினர். பாங் என்கிற சோமபானம் என் கை கால்களுக்கு இனம்புரியாததொரு உத்வேகத்தை அளித்திருந்தது. நான் அருகிலிருந்த கல்தூணில் சாய்ந்து அமர்ந்தேன். உடலும் மனமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தன.
கால்களில் சுமை கூடுவதுபோலிருந்ததால் நான் அசைவற்று அத்தூணைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தேன். அப்போது பின்னாலிருந்து ஒரு கை என் கழுத்தின் பின்புறப் பகுதியில் அழுந்தியது. தண்டுவடத்தில் மின்சாரம் பாய்ந்தது போன்ற சிலிர்ப்பொன்று தோன்றியது.
``நல்ல எழுத்தை வாசிக்கும்போது தண்டுவடத்தின் நுனியில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை உங்களால் உணர முடியும்"
என்ற விளாடிமிர் நபகோவின் வரிகள் நினைவுக்கு வந்தன. அதே போன்றதொரு சிலிர்ப்பு அப்போது என்னுள் ஏற்பட்டது. அந்த விரல்கள் யாருடையவை என்று அறிந்துகொள்ளும் முன்னமே அவ்வுருவம் கண்களிலிருந்து மறைந்துவிட்டது. அது ஆணா பெண்ணா என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. சோமபானத்தின் தாக்கம் பார்வையை மறைத்துவிட்டது. விரல்களின் அழுத்தம் மட்டுமே என்னுடலை ஆக்கிரமித்துச் சென்றது.

நான் முதலில் என் கூந்தல் களைந்தேன். சேலைத் தலைப்பை கவனமாக இடையைச் சுற்றி இறுக்கினேன். என்னை நிலைகுலையச் செய்த அவ்விரல்களைக் கூட்டத்தில் தேடியலைந்தேன். வழியெங்கும் மனித முகங்கள், வண்ணங்களால் முகமூடியிட்ட முகங்கள் யார் எவரென்று அறிந்துகொள்ள முடியாத வண்ணம் மாயம் புரிந்தன. நடனமும் பாட்டும் களைகட்டின. நானும் அவர்களுடன் சேர்ந்து ஆடினேன். வியர்வையால் உடல் நனைந்தபோதும் என் நடனம் ஓயவில்லை. என்னைத் தீண்டிச் சென்ற அவ்விரல்களைத் தேடியபடி நடனமாடினேன். மாதவியும் குல்வந்தியும் என்னுடன் இணைந்துகொண்டனர். அங்கிருந்தோர் அனைவரும் திகைப்புறும் வண்ணம் நாங்கள் மூவரும் அங்கு களிநடம் புரிந்தோம். காமேஷ்வர் பிரசாத் புகைப்படங்கள் எடுத்தார். நான் அயராது தேடினேன். என் பரவசம் அவ்விரல்களை என்னருகில் கொண்டு வந்து சேர்க்காதா என்ற ஏக்கத்தில் ஆடினேன்.
நான் வானைப் பார்த்து ஆடினேன். அதன் சிவப்பைப் பருகியபடி ஆடினேன். அப்போது சட்டென்று என் இடையை வருடியணைத்துச் சென்றன அதே விரல்கள். மீண்டும் என்னுள் சிலிர்ப்பின் அதிர்வலைகள் படர்ந்தன. அது யாரென்று அறிந்து கொள்ளும் முன்னமே மீண்டும் அவ்வுருவத்தைத் தொலைத்துவிட்டேன். நான் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்தேன். காதல் பெருக்கெடுத்து அது வலியாக மாறத் தொடங்கியது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. கண்ணீர் பெருக்கெடுத்தது. யாருடைய விரல்களாக இருக்கக்கூடும் அவை. பெண்ணுடலை மிகச்சரியான முறையில் கையாளத் தெரிந்த அந்த ஆண் விரல்கள் எவை என்று அங்கலாய்த்தேன். அவ்வெண்ணம் உடனே அகன்றது. இல்லை ஒரு பெண்ணால் மட்டுமே ஒரு பெண்ணுடலின் மென்மையை உணர முடியும். அது நிச்சயமாக ஒரு பெண்ணின் விரல்களாகவே இருக்க முடியுமென்று தீர்மானித்து, அங்குள்ள பெண்களின் முகங்களை அவ்விரல்களோடு பொருத்திப் பார்த்தேன். மாதவி, குல்வந்தி, மற்ற பெண்களின் முகங்கள் ஒவ்வொன்றாக மனத்தில் நிறுத்திப் பார்த்தேன். யாருடைய முகமும் உருவமும் அவ்விரல்களுடன் பொருந்தவில்லை. நிதானமிழந்த நான் கூட்டத்திலிருந்து விலகி வந்துவிட்டேன். சோமபானத்தின் பிடி இறுகியது. மீண்டும் தூண் ஒன்றைப் பிடித்து அதில் சாய்ந்து கொண்டேன். வானின் சிவப்பு கூடி அது கருநீலமாக மாறத் தொடங்கியது. அயர்ந்து உறங்கி விட்டேன். யாரும் என்னை தடுக்கவில்லை. மயக்கத்தின் பிடியில் பற்பல கனவுகள் கண்டேன். உறக்கம்போலிருந்தாலும் அகத்தினுள் விழித்தேயிருந்தேன். கற்பனை மனிதர்கள் கனவெங்கும் உலவினர்.
சிறு பிராயந்தொட்டு நான் பழகிய மனிதர்கள் கனவில் என்னுடன் விளையாடினர். அவரவர் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அனுபவங்களுக்கு ஏற்றாற்போல் வண்ணங்களை ஏந்திவந்து என் மீது பூசினர். சிலர் மஞ்சள் எனும் நட்பு நிறம் பூசினர். மேலும் சிலர் பசுமையின் பச்சையைப் பூசினர். சிலர் நம்பிக்கையின் நீலம் பூசினர். சிலர் துரோகமெனும் ஊதா நிறம் பூசினர்.
நான் அனைவருக்கும் என் முகம் காட்டிப் படுத்திருந்தேன். அது அகத்தின் முகம். அப்போது கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு உருவம் என்னை நெருங்கியது. தோற்றத்தில் கருமையான நிறங்கொண்ட ஆண் அவனென்று தெரிந்தது. அவன் கைகள் ஆழ்ந்த சிவப்பு வண்ணம்கொண்டிருந்தன. அவ்விரல்களால் அவன் என் முகத்துக்கு செந்நிறம் பூசினான். ஆனால் அவ்விரல்களில் ஆண்மையின் கடினம் சிறிதுமில்லை. வெள்ளரிப் பிஞ்சின் இளமையையும், தளிர் வெண்டையின் தன்மையையும் அவ்விரல்களில் உணர முடிந்தது. அவனது விரல்களில் மட்டும் பெண்தன்மை மிகுந்திருந்தது. அவனது தீண்டலில் ஓர் அழுத்தம் தெரிந்தது. ஆனால் அது சற்றும் வலியுண்டாக்கவில்லை.

"நீ யார், உன் விரல்களின் தன்மையை அறிய முடியவில்லையே... இவ்விரல்கள் யாருடையவை... உன்னுடலின் வலிமை விரல்களில் தெரியவில்லையே... நீ நிஜமாலுமே மனிதன்தானா அல்லது கந்தர்வனா?" என்றேன்.
அவன் குரலில் ஆண்மை மட்டுமே ஒலித்தது. "விரல்களின் முகவரி அறிய விரும்புகிறாயல்லவா... இவை கதைகள் எழுதுபவனின் விரல்கள். இலக்கியம் வடிக்கும் உளிகள் என்று நினைத்துக்கொள். அவை ஆண், பெண் என்ற இருமைகளுக்குள் அடங்காது. ஆணாகவும் நானே எழுதுவேன், பெண்ணாகவும் நானே எழுதுவேன். அதனால் என் விரல்களும் அக்குணம் தரித்துக்கொண்டன" என்று கூறினான்.
உறக்கம் சட்டென்று கலைந்தது. உடல் முழுதும் வியர்வையால் நனைந்திருந்தது. கனவில் அவ்விரல்களையுடைய மனித முகம் தெளிவாகத் தெரிந்தது. துயிலெழுந்த பின் மீண்டும் மறந்து போனது. ஆனால் அப்போது முன்பிருந்த அங்கலாய்ப்பு நீங்கி மனம் தெளிவடைந்திருந்தது. அவ்விரல்கள் யாருடையவையாக இருக்கக்கூடும் என்று புரிந்தது. எழுதுபவனின், எழுதுபவளின் விரல்கள் அவை.
ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்கள முடிந்து அனைவரும் தத்தமது அன்றாடத்துக்குத் திரும்பினோம். மாதவி யோகானந்துக்குச் சேவைபுரியும் மனைவியாக, குல்வந்தி குடும்பநலன் பேணும் இல்லத்தரசியாகத் தத்தமது இயல்புகளுக்குள் ஒடுங்கினர்.
என் மனத்தில் வண்ணங்களின் நடனம் முடிய சில நாள்கள் ஆகின. எதனுடைய தாக்கத்திலிருந்தும் நான் எளிதில் விடுபடுவளல்ல என்பதாலேயே, யாதொரு தீவிரத்துக்கு என்னை ஒப்புக்கொடுக்கும் முன்பு பலமுறை யோசித்துக்கொள்வதுண்டு. எனக்கு செந்நிறம் பூசிய அவ்விரல்களின் வடிவமும், அவை விளக்கிச் சென்ற உண்மையும் என் வாழ்வுக்கு நிரந்தர சிவப்பொன்றைப் பரிசளித்துவிட்டது.
வாழ்வுக்கு வண்ணங்கள் தீட்டும் பயணங்கள் தொடரும்...